சனல் 4 கதை! புரிவோருக்கும் புரியாதாருக்கும் சில தகவல்கள்!

-நஜீப் பின் கபூர்-

இன்று உலக நிகழ்வுகளை அவதானிக்கின்ற போது சில தகவல்கள்-செய்திகள் மர்மம் நிறைந்தவையாகவும் புரியாத புதிராகவும் இருக்கின்றது. வரலாறு முதல் அரசியல் மற்றும் பேரியல் நடவடிக்கைகளில் தந்திரங்கள் பிரயோகிக்கப்பட்டு வந்திருக்கின்றன. இவற்றை சராசரி மக்கள் ஜீரணித்துக் கொள்ள மாட்டார்கள். அது அவர்களுக்குப் புரியவும் மாட்டாது. பொதுவாக உலகில் பெரும்பான்மையான மக்கள் தங்களுண்டு தங்களது வேலை பிள்ளை குட்டிகள் என்று வாழ்ந்து விட்டுப் போவார்கள். அவர்களுக்குத் தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பது புரியாத புதிராக இருக்கும். அது அவர்களுக்குத் தேவையும் இல்லை.

ஆசாத் மௌலானா யார்? சேனல் 4 ஆவணப்படத்தில் ஏன் சாட்சியமளித்தார்?

வயது வந்தவர்களுக்கு என்று நீலப் படங்கள் வருகின்றன. அவற்றை ஒரு பச்சிலம் குழந்தைக்குப் போட்டுக் காட்டியால் அதனை அது புரிந்து கொள்ள மாட்டாது. பிற்காலத்தில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அதனை அது தெரிந்து கொள்ளும் அல்லது தெரியாமலும் போகலாம். அது போலத்தான் நாம் இங்கு பேசுகின்ற விடயங்களும் அமைய இடமிருக்கின்றது. இப்படி உதாரணத்தை நாம் ஏன் இங்கு உச்சரிக்கின்றோம் என்றால் இலங்கை அரசியலில் அப்படித்தான் மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள்.

மதத்தின் பெயரால் இனத்தின் பெயரால் மொழியின் பெயரால் மண்ணின் பெயரால் அவர்களிடத்தில் குரோதங்கள் எப்படி எல்லாம் உண்மைக்கும் இயற்கைக்கும் புறம்பாக விதைக்கப்பட்டு அவர்களிடத்தில் மேதல்கள் உருவாக்கப்பட்டன. இன்றும் அப்படியான முயற்சிகள் நாட்டில் கட்டவிழ்த்து விடப்படுவதற்கான முயற்ச்சிகள் தொடர்கின்றன. சூடு கண்ட பூனை அடுப்பம் கரையை நாடாது என்று ஒரு கதை இருந்தாலும் பூனையை திரும்பத்திரும்ப அங்கு இழுக்கின்ற மாய வித்தைகளும் நடக்கின்றன.

சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் மக்களை இன்னும் நிறையவே ஏமாற்றப்படுவதற்கான முயற்சிகள் பல தரப்புக்களில் நடந்து கொண்டுதான் வருகின்றன. இதனை அவர்கள் முடியுமான மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான இழுபறிகள், அது உண்மை பொய் என்ற வாதங்கள் எதிர்வரும் நாட்களில் தொடரும் என்று நாம் கடந்த வாரம் சொல்லி இருந்தோம். குற்றம் சாட்டப்படுகின்ற தரப்பும் குறிப்பாக அரச தரப்பும் எதிரணியினரும் பாதிக்கப்பட்டவர்களும் இந்த சனல் 4 விவகாரத்தில் இருபக்கமாக நின்று இன்று கயிறு இழுக்கின்றார்கள். இதில் சொல்லப்படுகின்ற கதைகள் தகவல்கள் எத்தனை பேருக்குத்தான் புரியப் போகின்றது?

மொசட், சிஐஏ, ரோ, கேஜிபி, போன்ற உளவு அமைப்பு பாணியில்தான் இதில் வரும் கதைகள் அமைவதால் பெரும்பான மக்கள் அதனை நிச்சயமாக ஜீரணித்துக் கொள்ள முடியாது. எனவேதான் ‘சனல் 4 கதை புரிவோருக்கும் புரியாதோருக்கும்’ என்ற தலைப்பில் இந்த வாரமும் நாம் சில தகவல்களை மக்கள் மயப்படுத்த முனைகின்றோம். குற்றம் சாட்டப்பட்டவர்களும் அவர்களுக்கு எதிராக இருந்து அரசியல் செய்வோரும் பாதிக்கப்பட்டவர்களும் நிஜம் பொய் என்ற தலைப்பில் சனல் 4 கதைக்கு இப்போது விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அரசின் நிலைப்பாடு!

அரசு என்று வருகின்ற போது ஜனாதிபதி ரணில். ஆளும் தரப்பு என்று பார்க்கின்ற போது மிகப் பெரும் மக்கள் அங்கிகாரத்துடன் அதிகாரத்தக்கு வந்து இன்று மக்கள் மத்தியில் மூக்குடைபட்டு நிற்கும் மொட்டுக் கட்சி. அதிகாரத்தை தொடர்ந்து தம் கட்டுப்பாட்டில் வைத்திருக் தமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே வாய்க்கு அரசி பேட வேண்டிய நிலையில் அதிகார வார்க்கம்.  இதனை சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணையில் அவர்கள் காட்சிப்படுத்தி இருந்தார்கள்.

இந்த சனல் 4 கதையிலும் நாடாளுமன்றத்தில் ஒரு வாக்கொடுப்பு வருமாக இருந்தால் கண்ணை மூடிக் கொண்டு அரசுக்கு ஆதரவளிக்க நிறையவே உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். நாம் ஏற்கெனவே சொன்னது போல அந்தப் பெரும்பான்மையை பெற்றுக் கொள்ளும் வழிமுறைகளை அதிகாரத்தை தம் பிடியில் வைத்திருப்பவர்கள் நன்றாக தெரிந்துதான் வைத்திருக்கின்றார்கள். எனவே சனல் 4 கதையை இந்த ஆட்சியாளர்கள் குப்பையில் தூக்கி எறிந்து விடுவார்கள் .அதற்கு நாடாளுமன்றத்தில் நியாயம் எதிர்பார்ப்பது முட்டால்தனமானது. ஜனாதிபதி ரணில் பராளுமன்றத் தெரிவுக்குழு, ஓய்வு பெற்ற அதிகாரிகளை வைத்து விசாரணை என்ற கதைகளை நாடும் சர்வதேசமும் பாதிக்கப்பட்டவர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

வழக்கமாக நாம் சொல்லவது போல நமது ஜனாதிபதி,  ராஜபக்ஸாக்களின் கைப்பொம்மை அத்துடன் அவரது பேச்சுக்கும் செயல்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தனக்குக் கிடைத்த இந்தப் பதவியை எப்படி பாதுகாத்துக் கொள்வது. அடுத்து தனக்கு அந்த கதிரையில் தொடர்ந்தும் தேர்தலைத் தவிர்த்து அதிகாரத்தை நீடிப்பது எப்படி என்ற சிந்தனையில்தான் அவர் இன்று இருக்கின்றார். இதனை நாட்டு மக்களும் அறிவார்கள்.

எனவே இந்த சனல் 4 செய்திகளை வைத்துக் கொண்டு ராஜபக்ஸாக்களுக்கு எதிராக வருகின்ற உள்நாட்டு சர்வதேச விமர்சனங்களில் தனது இருப்புக்கு கிடைக்கின்ற பாதுகாப்பு வாய்ப்புக்கள் என்ன என்பதுதான் ஜனாதிபதி ரணிலின் சமகால சிந்தனையாக இருக்கும்.

அத்துடன் நாடாளுமனற்தில் இருக்கின்ற பெரும்பான்மையைத் தொடர்ந்து பாதுகாத்துக் கொள்வதாக இருந்தால் ராஜபக்ஸாக்களுக்கு குறிப்பாக கோட்டாவுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் அவர் எடுக்க மாட்டார். எடுக்கவும் முடியாது. இன்று சனல் 4 இது சாலேயை வைத்து கோட்ட பார்த்த வேலை என்று சொல்லி இருந்தாலும் அதற்கு எதிராக உள்நாட்டு விசாரணைகள் என்று வந்தால் அது கூட கோட்டா மற்றும் ராஜபக்ஸ குடும்பத்துடன் கலந்துரையாடலின் எடுக்கபட்ட முடிவாக அது இருக்கும். அதன் உறுப்பினர்களும் அவர்கள் கையாட்களாக இருக்க அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.

தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில மாத காலமே இருக்கின்றது. அப்படி அமைக்கின்ற குழு தனது அறிக்கையைத் தருகின்ற போது நாட்டில் அரசியல் களத்தில் மாற்றங்களுக்கும் இடமிருக்கின்றது. எனவே மக்கள் செலவில் நம்பிக்கை இல்லாத குழுவை வைத்து அறிக்கை தயாரிப்பதோ விசாரணை நடத்தவதோ தேவைதானா?

எனவே சர்வதேசமும் நாடும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நடுநிலையான சர்வதேச விசரணைக் குழுவே இதற்குத் தீவர்வாகும். ஈஸ்டர் தாக்குதலுக்கு இன்டர்போல் விசாரணை என்று சொன்ன ஜனாதிபதி ரணில் இன்று வரை அதனைச் செய்யவில்லை. இதனால் அவர் இந்த விவகாரத்தில் நம்பகத் தன்மையற்ற ஒரு மனிதனாகத் தன்னை உறுதிப்படுத்தி இருக்கின்றார். இது பொறுப்புவாய்ந்த ஆளும் தரப்பு நிலை.

ஆசாத் மௌலானா யார்? சேனல் 4 ஆவணப்படத்தில் ஏன் சாட்சியமளித்தார்?

தந்தையும் மகனும்

இப்போது இந்த விவகாரத்தில் கதாநாயகனாக அல்லது வில்லனாக வரும் மௌலானா பற்றிய சில தகவல்களைப் பார்ப்போம்.

இயற்பெயர் மொஹம்மட் ஹன்சீர்.

புனைப் பெயர் ஆசாட் மௌலானா.

பிறப்பு 1984

முதல் திருமணம் 2005

பாணதுறை மாமி மகள்

அதன் மூலம் இரு பிள்ளைகள்.

தந்தை முகம்மட் மிஹ்ழர் (கமலன்)

கிழக்கு மாகாணம்

அம்பாறை மாவட்டம்

கல்முனைத் தேர்தல் தொகுதி

ஊர் மருதமுனை.

அதற்கு முன்னர் அவரது தந்தை பற்றியும் சில செய்திகளை வாசகர்களுக்குச் சொல்ல வேண்டும். நூலைப்போல சேலை தாயைப் போல குழந்தை என்ற ஒரு வசம் இருக்கின்றது. இது மௌலானாவுக்கும் நன்றாகப் பெருந்துகின்றது. மௌலானா தந்தையும் ஒரு கடும் போக்குச் சிந்தினை கொண்டவராகத்தான் பிரதேசத்தில் செயல்பட்டு வந்திருக்கின்றார். ஆரம்ப காலத்தில் ஜேவிபி.யுடன் அவர்க்குத் தொடர்பு இருந்திருக்கின்றன. அந்த நாட்களில் அவர்கள் வாழ்ந்த கிழக்கு-கல்முனை, மருதமுனையில் இப்படி ஜேவிபி சிந்தனையில் ஒருவர் ஈர்க்கப்பட்டிருந்தார் என்றால் அவர் பிரதேசத்தில் வித்தியாசமான ஒரு மனிதனாகத்தான் இருந்திருக்க வேண்டும்.!

அதன் பின்னர் ஈழ விடுதலைப் போர் துவங்க, தோழர் பத்மநபா அணியில் அவர் தன்னை இணைத்து போராளியாகின்றார். அவர் இயற் பெயர் மிஹ்ழராக இருந்தாலும் இயக்கம் அவருக்கு கமலன் என்று பெயரிட்டது. 1987 வடகிழக்கு இணைந்த மகாணசபைத் தேர்தலில் இவர் தான் சார்ந்த இயக்கம் சாhப்பில் மலர் சின்னத்தில் வேட்பாளராகவும்  மிஹ்ழர் அல்லது கமலன் அன்று தேர்தலில் களமிறங்கி இருந்தார்.

இந்திய-தமிழ் நாடு சென்னை  கோடம்பாக்கம் சகரியாத் தெருவில் ஒரு கட்டடத்தில் வைத்து  பத்மநபாவை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்ற போது அந்த இடத்தில் அவருடன் இருந்த பதின்மூன்று (13) பேரும் கொல்லப்பட்டார்கள். அவர்களது உடல்கள் சென்னை ராஜாஜி மண்டபத்தில் அன்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.  அதில்  மௌலானா தந்ததையும் அடங்குவார். அவரது உடல் இஸ்லாமிய முறைப்படி சென்னை முஸ்லிம் மையவாடி ஒன்றில் அடக்கம் செய்யப்பட்டது. இதனால் ஈழ விடுதலைப் போராட்ட வீரர்கள் பட்டியலில் மிஹ்லார் என்ற கமலன் பெயரும் அடங்குகின்றது. அப்போது அன்சீருக்கு வயது ஆறு.

க.பொ.த சாதாரண தரத்தில் அணைத்துப் பாடங்களிலும் உயர் சித்தி பெற்ற அன்சீர் விஞ்ஞானம் உயர்தரத்தில் கற்றார். எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்காததால் கண்டி-குண்டசாலை விவசாய பீடத்தில் இணைந்தார். ஆனால் ஒரு வருடத்தில் அதிலிருந்து வெளியேறியும் விட்டார். குடும்பப் பொருளாதாரம் காரணமாக அவருக்கு ஒரு தொழில் தேவைப்பட்டது.

தனது தந்தையை விடுதலைப் புலிகள் கொன்றார்கள் என்பதால் சிறுபராயம் முதல் அன்சீருக்கு அவர்கள் மீது கடும் கோபம் இருந்தது. டக்லஸ் தேவானந்த அமைச்சரானபோது மர முந்திரிகை கூட்டுத்தாபனத்துக்கு  குலசேக்கரம் சங்கர் தலைவராக இருந்தார். அப்போது அவரது காரியாலய உதவியாளராக மௌலானாவுக்கு ஒரு  நியமானம் கிடைத்தது. இந்த சங்கர் பிற்காலத்தில் டக்லசின் ஈபிடிபி கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்திருக்கின்றார்.  போராட்டத்துக்கு டக்லஸ் தனி இயக்கம் துவங்கும் முன்னர் குலசேக்கரம் சங்கரும் பத்மநபாவுடன் ஒன்றாக இருந்தவர்கள் அதனால்  நண்பர்கள். அப்போது மௌலானா தந்தையும் அவர்கள் அணியில் இருந்தார்.

பிள்ளை-மௌலானா உறவு

புலிகள் அணி பிளந்த போது 2004 அளவில் அதில் கருணாவுடன் ஹன்சீர்  வந்து இணைந்து கொண்டார். அன்று முதல் ஹன்சீர் தனது பெயரை ஆசாட் மௌலான என மாற்றிக் கொண்டார். இதற்குக் காரணம் அனைவராலும் அறியப்பட்ட மசூர் மௌலான இவரது பட்டனர் ஒருவர் என்பதாகும். இந்த மசூர் மௌலானா முன்னாள் செனட் சபை உறுப்பினர். பின்னர் அஸ்ரஃப் மு.கா.வைத் துவங்கிய போது ஐதேக. விலிருந்து விலகி மசூர் மௌலானா அதில் இணைந்து கொண்டார்.

கருணா-பிளையான் முரண்பாடு வர கிழக்கு அரசியல் களத்தில் மௌலானா பிள்ளையான் அணியைத் தெரிவு செய்தார். அன்று முதல் மௌலான பிளையானுக்கு மிகவும் விசுவாசமாக செலாற்றியதால் இரண்டாம் நிலைத் தலைவர் என்றளவுக்கு அவரது செயல்பாடுகள் அமைந்திருந்தன. இதனால்தான் பிள்ளையான் நிதிச் செயலாளராகவும் பிரச்சாரச் செயலாளராகவும் பேச்சாளராகவும் காரியம் பார்த்திருக்கின்றார் இந்த மௌலானா.

அந்த வகையில் பிள்ளையானின் செயல்பாடுகள் தொடர்பாக இவர் நிறைய தெரிந்திருக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதே. மௌலானா ஓரிடத்தில் அவர்களுக்கு சிங்களம் ஆங்கிலம் மொழிகளில் புரிதல் குறைவாக இருந்ததால் தானே அனேகமாக காரியங்களை சந்திப்புக்களையும் மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அந்த வகையில் நாம் கடந்த வாரம் கட்டுரையில் சொல்லி இருந்தது போல் மௌலானாவிடம் நிறையவே இரகசியங்கள் இருக்க வாய்ப்புக்கள் இருக்கின்றன. அத்துடன் பிள்ளையான் சிறையில் இருந்ததால் அவர்தான் சுரேஸ் சாலேயுடன் இணைந்து இதில் காரியம் பார்த்திருக்க வேண்டும்.?

பிள்ளையான் தரும் தகவல்படி மௌலானா நாட்டில் இருந்து இந்தியா போகும்வரை அவருடன் நல்லுறவில்தான் இருந்திருக்கின்றார். தற்போது மௌலானாவின் சர்ச்சைக்குரிய (போலி ஆவணம்) திருமணத்தால் (2022ல்) பிரச்சினைகள் வர அதனைக்கூட அவர் பிள்ளையான் மூலம் தீர்க்க அவரது உதவியை நாடி இருக்கின்றார். குறிப்பிட்ட பெண் வீட்டுக்கு பிள்ளையான் போய் சமரசம் பேசியும் இருக்கின்றார். அது சாத்தியப்படாததால் தான் சில காலம் இந்தியாவுக்குப் போவதாக தனது தலைவன் பிள்ளையானிடம் சொல்லி விட்டுத்தான் மௌலானா வெளியேறி இருக்கின்றார்.

மௌலானாவுக்கு நெருக்கடி!

இந்தியா போன மௌலானா அங்கிருந்து பிள்ளையானைத் தொலைபேசியில் தொடர்ப்பு கொண்டு தனக்கு எதிராக பெண் வீட்டார் பொலிசில் புகார் கொடுத்திருப்பதால் தன்மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் மேலும் சில காலம் இந்தியாவில் தங்கி இருக்கப் போவதாகவும் மௌலானா  அவருக்குத் தெரியப்படுத்தி இருக்கின்றார். எனவே நாட்டில் இருக்கும் வரை தனக்கும்  மௌலானாவுக்கு எந்த முரண்பாடுகளும் இருக்கவில்லை.

அவர் எனக்கு தொடர்ந்தும் விசுவாசமாகத்தான் இருந்தார் என்று பிள்ளையான் கூறுகின்றார். இந்தப் பின்னணியில்தான் மௌலானாவை சிலர் ஆசை வார்த்தைகளைச் சொல்லி வளைத்துப் போட்டிருக்கின்றார்கள். அவர் இப்போது ஐரோப்பாவில் தஞ்சம் கேட்டு நிற்க்கின்றார், சனல் 4 சொல்லும் கதை முற்றிலும் கற்பனை என்பது பிள்ளையான் வாதம். உண்மையைக் கண்டறிய சர்வதேச விசாரணை வந்தால் தான் அதற்கு சாட்சி வழங்க ஆவலுடன் இருக்கின்றோன் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த விசாரணைக்குத் தாம் ஒத்துக் கொள்ள மாட்டோம். அடிபணிய முடியாது. இது சர்வதேச சதி என்று மொட்டுக் கட்சியில் சிலர் பேசுகின்றார்கள்.  அரசும் அவர்களுடன் சேர்ந்து  இதற்கு பின்னடிக்கின்ற போது  சனல் 4 கதை மேலும் வலுவாகும். ஜனாதிபதி ரணிலும் இதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வாய்ப்பில்லை என்பது நமது கணக்கு.

நன்றி: 17.09.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையால் இந்தியா - கனடா உறவில் விரிசல்!

Next Story

33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு மசோதா! லோக்சபாவில்  நிறைவேறியது