கோட்டா அவசரகால பிரகடனம் நெருக்கடியை தீர்க்காது!

நாட்டின் நெருக்கடியான சூழ்நிலைக்குள் ஜனாதிபதியின் பொது அவசரகால பிரகடனம், பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும். அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட பிரச்சினைக்கு அரசாங்கத்திடம் தீர்வு இல்லை. இதனையடுத்தே பொது மக்கள் இன்று வீதிகளில் இறங்கிப் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

இந்த போராட்டத்தின்போது கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்த 69 லட்சம் வாக்காளர்கள், கோட்டாபயவுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று யாரும் எதிர்பார்க்கமுடியாது.ஏனெனில், நாட்டின் இன்றைய பிரச்சினை, அனைத்து மக்களையும் பாதித்திருக்கிறது. அனைத்து மக்களும் கோட்டாபயவின் அரசாங்கத்தை தூற்றுகின்றனர்

எவரும் ஜனாதிபதி கோட்டாபய கூறுகின்ற கொரோனா, சர்வதேச நிலவரம் மற்றும் முன்னைய அரசாங்கங்களின் மோசடிகள் என்ற காரணங்களை ஏற்றுக்கொள்ள தயாரில்லை.அதுவும் அந்த காரணங்களை முன்வைப்பதற்கான உகந்த காலம் இதுவல்ல.

பொதுமக்கள் இன்று தமது உணவுக்காகவும் சாதாரண வாழ்க்கைக்காகவும் குரல் கொடுக்கின்றனர்.எனவே அவர்களுக்கு அல்லது அவர்களை திருப்திப்படுத்தும் அறிவிப்புக்களே வெளியாகவேண்டும்.

அவ்வாறான அறிவிப்புக்களே நாட்டுக்கும், அரசாங்கத்துக்கும், முக்கியமாக ஜனாதிபதிக்கும் பாதுகாப்பானதாக அமையும்.இதனை விடுத்து, மக்களின் போராட்டங்களை தடுப்பதற்காக அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியதை பெரும்பாலானோர் விமர்சிக்கின்றனர்

இந்த அவசரக்கால நிலையை கோட்டாபய ராஜபக்ச, தனித்து நின்று செயற்படுத்தமுடியாது. நிச்சயமாக படைத்தரப்பை கொண்டே செயற்படுத்தவேண்டும்.தற்போது பொருளாதார நெருக்கடி படைத்தரப்பையும் பாதித்துள்ளமையை ஏற்கனவே தகவல்கள் வெளிப்படுத்தியிருந்தன. படையினருக்கான உணவு விடயத்தில் கூட பற்றாக்குறை நிலவுவதாக நாடாளுமன்றத்திலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

எனவே தாமும் பாதிக்கப்பட்டு, தமது குடும்பத்தினர் சார்ந்த சமூகமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை தமது எதிர்பால் வெளிக்காட்டும் பொதுமக்களுக்கு எதிராக படைத்தரப்பினர் முழு மனதுடன் செயற்படுவார்களா? என்பது கேள்விக்குறியானதாகும். அவ்வாறு அவர்கள், கடுமையான முறையில் அவசரகால பிரகடனத்தை அமுல்படுத்தினால், அது தற்போதுள்ள பிரச்சினையை மேலும் உக்கிரப்படுத்திவிடும்.அது ஒரு இராணுவ ஆட்சியாக கூட கருதப்படும் நிலை உருவாகி விடும்.எனவே அதனை கோட்டாபய ஜனாதிபதி சிந்தித்தாரா? என்பது தெரியவில்லை.

மாறாக அவசரகால நிலை பிரகடனத்தின்போது படைத்தரப்பு, உரியமுறையில் சட்டத்தை செயற்படுத்தாது போனால், அது ஜனாதிபதியின் பதவிக்கே ஆபத்தை கொண்டு வந்து விடும்.இந்தவேளையில் இந்தியா கோட்டாபய ராஜபக்சவுக்கு உதவி செய்யும் என்றும் படைகளை அனுப்பும் என்றும் கதைகள் சொல்லப்படுவது களத்திற்கு பொருத்தமானதாக தெரியவில்லை.

ஏனெனில் இந்தியா தற்போது இலங்கையில் கிடைத்த வாய்ப்பை இறுதிவரையில் தக்கவைக்கவே முயற்சிக்கும். இலங்கை மக்களின் நன்மதிப்பை மேலும் வளர்த்துக்கொள்ளவே முயற்சிக்கும்.ஏற்கனவே இரண்டு தடவைகளாக இலங்கைக்கு படைகளை அனுப்பிய அதில் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் இந்தியாவுக்கு உண்டு.

அதற்கு அப்பால், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளின் செல்வாக்குக்கு மத்தியில் இலங்கை அரசாங்கத்துடன் அதுவும் சீனாவுடன் ஒரு கட்டத்தில் முழுமையாக சார்பாக இருந்த அரசாங்கத்துடன் செயற்படும் அளவுக்கு இந்திய ராஜதந்திரம் தற்போது நன்மைகளை கொண்டு வந்திருக்கிறது.

எனவே இந்தியா இந்த சந்தர்ப்பத்தை நழுவவிடாது. மாறாக நாட்டில் அடுத்து வரும் நாட்களின் தீவிரத்தை கருத்திற்கொண்டு இந்தியா, 1987ம் ஆண்டு வடக்கு மக்களுக்கு மாத்திரம் முன்னெடுத்த ‘உணவு ராஜதந்திரத்தை’ இந்த முறை இலங்கையின் அனைத்து மக்களுக்கு முன்னெடுத்து இலங்கையின் அனைத்து மக்களின் நன்மதிப்பையும் பெறும் செயற்பாட்டையும் முன்னெடுக்கும் வாய்ப்புக்களை மறுக்கமுடியாது.

இந்தநிலையில் நாட்டில் அமுல் செய்யப்பட்டுள்ள அவசரகால நிலை பிரகடனம் காரணமாக, இலங்கையின் நன்மதிப்பு சர்வதேச ரீதியில் மீண்டும் கடுமையாக பாதிக்கப்படலாம்.இது தற்போதைய அரசாங்கத்தை அதாள பாதாளத்துக்குள் தள்ளிவிடும்.

மறுபுறத்தில் அரசியல் நிலைமையை நோக்கினால், காபந்து அரசாங்கம் ஏற்படுத்தப்படுவது தவிர்க்கமுடியாத ஒன்றாக இருக்கிறது.எனினும் காபந்து அரசாங்கம் ஒன்று ஏற்படுத்தப்படுமானால், ஜனாதிபதியின் நிலைப்பாட்டுக்கு அங்கு கேள்வி எழுந்து விடும் அபாயமும் உள்ளது.

குறிப்பாக அனைவராலும் பேசப்படுவதை போன்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் அனைத்துக்கட்சிகளின் காபந்து அரசாங்கம் அமையுமானால், அந்த அரசாங்கம், ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணையை கொண்டு வந்து ஜனாதிபதியை பதவியில் இருந்து அகற்றும் ஆபத்தையும் நிராகரிக்கமுடியாது.

எனவே சிக்கல்களை தீர்க்கும் இராஜதந்திர முயற்சிகளை கோட்டாபய எடுப்பார் என்று நம்புவோம்.ஆகவே கொந்தளித்துள்ள பொதுமக்களை சாந்தப்படுத்தும் திட்டங்களை உரிய அவசர நடவடிக்கைளின் ஊடாக அறிவிப்பதை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும்.

இதில் ஏனைய நாடுகளில் இருந்து உணவு மற்றும் ஏனைய அத்தியாசிய தேவைகளை நிவாரணமாக பெற்றுக்கொடுப்பது கூட அடங்கலாம். அல்லது ஜனாதிபதி நிலைமைக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.

இந்த பதவி விலகல் செயற்பாட்டை பொறுத்தவரை தற்போதுள்ள கொந்தளிப்பு நிலையை 50 வீதத்தினால் குறைத்து விடும் என்று எதிர்பார்க்கலாம்.

Previous Story

"மிரிஹானவில் அடிப்படைவாதிகள்"

Next Story

மறைவிடங்களில் பதுங்கியுள்ள அமைச்சர்கள்!