-நஜீப் பின் கபூர்-
பொதுவாக இந்த அரசியல் பக்கத்தில் நாம் தேசிய அரசியல் விவகாரங்களைப் பற்றித் தான் தொடர்ச்சியாகப் பேசிக் கொண்டு வருகின்றோம். அதில் அரசியல்வாதிகள் மேற்கொள்கின்ற தீர்மானங்கள் மற்றும் அவர்களின் மோசடி நடவடிக்கைகள், ஏமாற்றுக்கள் கொள்ளைகள் என்றெல்லாம் நிறையவே பேசி வந்திருக்கின்றோம்.
அதனைவிட இந்த அரசியல் சதி-வஞ்சனைகளில் இருந்து குடிமக்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையிலும் அவ்வப்போது சில செய்திகளையும் நாம் பொது மக்களுக்குச் சொல்லி இருக்கின்றோம். எதிர் வருகின்ற நாட்களில் அரசியல்வாதிகள் தொடர்ந்தும் மக்களை ஏமாற்ற வர இருக்கின்றார்கள். அதனால் குடிகளின் நலன்கள் மற்றும் பாதுகாப்புக் கருதி இந்தக் கட்டுரையில் மேலும் சில செய்திகளைச் சொல்ல எதிர்பார்க்கின்றோம்.
பொதுவாக மனிதர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவன் பின்பற்றுகின்ற மதங்கள் என்று சிறிதும் பெரிதுமாக டசன் கணக்கான மத நம்பிக்கைகள் உலகில் இருக்கின்றன. இது தவிர மத நம்பிக்கைகளுக்கு அப்பால் பட்ட நாத்தீக கொள்கையுடையவர்களும் அங்காங்கே வாழ்ந்து வருகின்றார்கள். என்றாலும் மதம் உலகில் வழுவாக இருந்து கொண்டிருக்கின்றது.
இதனால் அரசியல்வாதிகள் மதங்களை முதன்மைப்படுத்தி அல்லது பிற மதங்களின் அச்சுறுத்தல்களை முன்னிருந்தி தமது அரசியல் நலன்களை அடைந்து கொள்ளும் நடைமுறை இங்கு மட்டுமல்லாது உலகில் பல இடங்களிலும் இது இருந்து வருகின்றது. சிலுவைப் போர் பின்னணிகூட மதத்தை முன்னிருத்தியதாக அமைந்திருந்தது. இன்னும் உலகில் மதத்தை முன்னிருத்திய அரசியல் பல நாடுகளில் நடந்து கொண்டுதான் வருகின்றது. பக்கத்து இந்தியாவில் கூட இதனை அவதானிக்க முடியும்.
இங்கு இது பற்றி நேரடியாகச் சொல்வதாக இருந்தால் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வரலாற்றில் என்னுமில்லாத வகையில் பௌத்த மதத்தை முன்னிருத்தி நாட்டில் அரசியல் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இதனால் இந்த நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை சமூகங்களை கடும் போக்கு இனவாதிகள் அச்சுறுத்தி தேர்தலில் வாக்குக் கொள்ளை நாட்டில் நடந்தது.
பொதுவாக நாட்டிலுள்ள அனைத்து பௌத்த விகாரைகளையும் இந்த கடும் போக்க இன-மதவாதிகள் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தேர்தல் பரப்புரைகளை செய்து அதில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றுக் கொண்டார்கள்.
ஆனால் சுவரில் எறிந்த பந்து திரும்பி வருவது போல வந்த வேகத்திலே இந்த மதவாதிகள், இனவாதிகள் கவிழ்ந்தும் போனார்கள். மதகுருமார்களும் காசுக்காக கடந்த காலங்களில் உண்மைக்கு எந்தவகையிலும் பொறுத்தமில்லாத கதைகளைச் சொல்லி மக்களை ஏமாற்றி அரசியல் செய்து வந்திருக்கின்றார்கள். இன்று அப்படிப்பட்டவர்களைக் கண்டு கொள்ள முடியவில்லை. பலர் தமது கடந்த காலத் தவறுகளுக்கு பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
கதை இப்படி அமைந்தாலும், இவர்கள் மீண்டும் மதவாதத்தை உசுப்பேற்றி தேர்தல்களில் தமது வன்முறையை தொடர மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இந்த நாட்டில் கிடையாது. பேரின கடும் போக்காளர் இப்படிச் சொல்லி வாக்கு வேட்டைகளை வெற்றிகரமாக தெற்க்கில் செய்து வந்த அதே நேரம், வடக்கு கிழக்கில் பேரிவாதத்தை குறிப்பாக ராஜபக்ஸாக்களை பயங்கரவாதிகளாகக் காட்டி கிழக்கில் முஸ்லிம் தனித்துவத் தலைமைகள்,
தமது சமய-சமூகப் பாதுகாப்பு கருதி தமது சமூகப் பிரதிநிதித்துவத்தை ராஜபக்ஸாக்களுக்கு எதிரான கதைகளைச் சொல்லி வென்றெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அவர்கள் முஸ்லிம் பிரதேசங்களில் வாக்குக் கொள்ளைகளில் ஈடுபட்டார்கள்.
அதில் அவர்கள் வெற்றியும் பெற்றார்கள். தேர்தல் முடிந்ததும் எதிரும் புதிருமாக நின்று சமூகத்துக்காகப் பேசியவர்கள். யாரைத் தமது எதிரியாகக் காட்டி வக்கு வேட்டைகளில் ஈடுபட்டார்களோ. அவர்கள் தமது பதவி பட்டங்கள் தனிப்பட்ட அரசியல் பொருளாதார நலன்களை முன்னிருத்தி நாடாளுமன்றத்தில் பல்டியடித்து ராஜபக்ஸ விசுவாசிகளாக மாறிய நிகழ்வுகளை சமூகம் மறந்திருக்க முடியாது. இந்த அரசியல் சதிகாரர்களுக்கு சமூகம் கொடுக்கின்ற தண்டனை வருகின்ற தேர்தல்களில் நாம் பார்க்க முடியும்.?
இதனால் வருகின்ற தேர்தல்களில் சமூகத்தின் பேரால் வாக்கு வேட்டைக்கு வருகின்றவர்கள் விடயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. சமூகத்தின் பேரால் நடக்கின்ற இந்த வாக்குக் கொள்ளை மிகவும் ஆபத்தானது வஞ்சனையானது. என்பதனை சிறுபான்மை சமூகங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் சமூகம் இது விடயத்தில் எந்தளவுக்கு வழிப்புடன் இருக்கின்றது என்பது தெளிவில்லை. இதனால் சிறுபான்மை நலனுக்கான அரசியல் இயக்கம் என்ற கோஷம் கேலிக் கூத்தாகி நிற்கின்றது.
இது தவிர இனம் இயாலாமை அறிவீனம் பணம் பலயீனம் என்பவற்றை மையமாக வைத்தும் நாட்டில் பரவலாக தேர்தல் காலங்களில் ஏமாற்றுக்கள் தொடர்ந்தும் நடக்க அதிய வாய்ப்புக்கள் தெரிக்pன்றன.
மேலும் நாட்டில் இருக்கின்ற அச்சு, இலத்திரணியில் மற்றும் சமூக ஊடகங்களும் குடிமக்களின் இயலமையை வைத்து அவர்களை ஏமாற்றிக் கொண்டு வருகின்றன. நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் மேற் சொன்ன ஊடகங்கள் இன்றும் பொது மக்களை ஏமாற்றிக் கொண்டு வருகின்றன. இன்று தேர்தல் நாளை தேர்தல். அவர் இவர் என்று அவை வேட்பாளர்களை அறிமுகம் செய்து குழப்பிக் கொண்டிருக்கின்றது.
இன்னும் சில சமூக ஊடகங்கள் கருத்துக் கணிப்பு என்று வெற்றிவாய்ப்புப் பற்றிய கதைகளிச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் தனது கட்சி வேட்பாளர் வெற்றி வாய்ப்புப் பற்றிய கணிப்பை அதே கட்சியே நடாத்தி வெற்றியையும் அந்தக் கட்சியே உறுதி செய்து அதனை ஒரு செய்தியாக ஊடகங்கள் வாயிலாக சந்தைப்படுத்தியும் வருகின்றன. இது தர்மீகமான ஒரு செயலா நம்பகமான செய்தியா என்றும் கேட்கத் தோன்றுகின்றது.
உதாரணத்துக்கு இந்தச் செய்தியை சற்றுப் பாருங்கள்: அமெரிக்க அதிபர் பைடன், ரஸ்யா அதிபர் புடின், சீன அதிபர் சென் ஜீயா பிங், இந்தியப் பிரதமர் மோடி இவர்கள் அனைவரையும் விட பலமான அரசியல் தலைவர்தான் நமது ஜனாதிபதி ரணில்.!
இப்படி தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பவர் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன. அவர் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் ஒரு கோடி வாக்குகளைப் பெற்று வரலாற்று வெற்றியும் பெறுவார் என்று சொல்லும் போது அதனைக்கு கூட ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக சொல்லி மக்களுக்கு வழங்குவது எந்த வகையில் நியாயமானது. இது ஒரு வகையில் மக்களின் அறியாமையைப் பாவித்து அவர்களுக்கு ஊடகங்கள் வயிலாக கொடுக்கப்படுகின்ற ஒரு வகை நச்சு-விசக் கருத்துக்கள்தான் இவை.
சராசரி பொது மக்கள் இப்படியான செய்திகளை படிக்கின்றபோது அவர்கள் குழம்பிப் போகின்ற ஒரு நிலை ஏற்படுகின்றது. இது போன்று தாம் சார்ந்த அரசியல் தலைமைகளை கட்சிகளை ஊடகங்கள் ஊதிப் பெருப்பித்து உண்மையான தகவல்கள் மக்கள் மத்தில் செல்வதை தடை செய்கின்றன. அல்லது குழப்புகின்றன. இதுவும் ஊடக வன்முறையாக-சதியாகத்தான் நாம் பார்க்க வேண்டும். இந்த வஜிர போன்று இன்னும் எத்தனையோ பேர் இப்படிக் கதைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
தமது வாக்கு வங்கிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நாம் மக்களிடம் மீண்டும் போய் கதைக்கின்ற போது எமது வாக்குகள் மீண்டும் நமக்குத்தான் என்று, மொட்டுக் கட்சியில் இருக்கின்ற பலர் இன்றும் சொல்லி வருகின்றார்கள். அத்துடன் கடந்த காலங்களில் இன வன்முறைக்குத் தலைமை தாங்கிய இனவாதி டொன் பிரசாத் போன்றவர்களுடன் மொட்டுக் கட்சி முக்கியஸதர்களான நாமல் மற்றும் ஜொன்ஸ்டன் போன்றவர்கள் தற்போதும் நெருக்கமாக செயல்;பட்டுக் கொண்டிருப்பது பெரும் சந்தேகத்தை உண்டு பண்ணுகின்றது.
அத்துடன் நைஜிரியாவில் செயல்படும் ஐஎஸ்ஐஎஸ்சுக்கு நெருக்கமான பொகோஹரமுடன் இணைந்து நாட்டில் வன்முறை ஒன்றை ஏற்படுத்த சிலர் முனைவதாக சில சமூக ஊடகவியலாளர்கள் பகிரங்கமாக செய்தி சொல்லிக் கொண்டு வருகின்றார்கள். ஆனால் இதன் உண்மைத் தன்மைகளை நமக்கு உறுதி செய்ய முடியாது.
அரசியல்வாதிகள் தமது முகாம்களுக்காக பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இதில் அவர்களது அரசியல் நலன்கள் மற்றும் பொருளாதார நலன்கள் பின்னிப் பிணைந்து இருப்பதால் அவர்கள் வருகின்ற நாட்களில் தொடர்ந்தும் அப்படித்தான் பேசிக் கொண்டிருப்பார்கள். இதனைப் பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டில் இருக்கின்ற சிவில் அமைப்புக்கள் குடிமக்களை ஊடகங்கள், அரசியல்வாதிகள், ஏமாற்றுவதை தடுக்க-தவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டயக் கடமையாக இருக்கின்றது. இந்த தெளிவூட்டல் விவகாரத்தில் புத்திஜீவிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
இந்த நாட்டில் சிங்கள மக்கள் மத்தியில் ஜாதகக்காரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற ஒரு மன நிலை இன்றும் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கின்றது. இதனால் அவர்கள் கொடுக்கின்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் ஜஸ்தி. கடந்த காலங்களில் ஜனரஞ்சக சுமனதாச மூக்குடைபட்டாலும் மீண்டும் தேர்தல் வெற்றி பற்றி அவர் புதுக் கதைகளைச் சொல்லிக் கொண்டு வருகின்றார். கோட்டாவின் ஞானக்காவும் அப்படித்தான் தற்போது பிசியாகி இருக்கின்றார் என்றும் தகவல்கள்.
இது எதைக் காட்டுகின்றது.? மக்களின் நம்பிகைகளை வைத்து மக்களை குழப்புகின்ற சதிகாரர்கள்-கும்பல்களாகத்தான் நாம் இவர்களையும் பார்க்க வேண்டும். நாம் என்னதான் விமர்சனங்கள் செய்தாலும் இவ்வாறான சதிகளில் இருந்து பெரும்பாலான மக்களைக் காப்பாற்றவது கஷ;டமான காரியம் என்பது நமக்குத் தெரியும். என்றாலும் நமது சமூகக் கடமைக்காகத்தான் இந்த தகவல்களை நாம் மக்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.
நீதி மன்றம் ராஜபக்ஸாக்களை பொருளாதாரக் கொள்ளையர்கள் என்று அடித்துச் சொல்லி இருக்கின்றது. அப்படி இருந்தாலும் அவரது ஆதரவாலர்கள் இந்தத் தீர்ப்பை கண்டு கொள்ளத் தயாராக இல்லை. அவர்களை முன் நிறுத்தித்தான் தமது அரசியல் பயணமும் விடுதலையும் என்று பெரும்பாலான மொட்டுக் கட்சிக்காரகள் இருக்கின்றார்கள்.
கொரோனா காலத்தில் முஸ்லிம்களின் உடல்களை எறியூட்டுவதற்கு ஆலோசனை வழங்கியவரும் அப்பாவி டாக்டர் சாபியை சிறையில் தள்ளி கொடுமைப்படுத்த முக்கிய புள்ளியாக இருந்த சன்ன ஜயசுமன போன்றவர்களுடன் சஜித் அரசியல் கூட்டணி வைத்துத் தேர்தலுக்கு நின்றால் அதில் இருக்கின்ற முஸ்லிம் தலைவர்கள் எப்படி ஒரணியில் நின்ற அரசியல் செய்ய முடியும் என்று நாம் தனித்துவ முஸ்லிம் தலைமைகளிடம் கேள்வி எழுப்பினாலும், பெரும்பாலானவர்கள் அரசியலில் நண்பனுமில்லை எதிரியுமில்லை என்ற நியதியில் அந்த அணியில் நின்று தமது அரசியல் உறுப்புரிமைக்காக அங்கு பணியாற்றுவர்கள் என்பதனை நாம் இப்போதே அடித்துச் சொல்ல முடியும்.
அப்போது அதற்கு புதுவிளக்கம் வேறு இவர்கள் கொடுப்பார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் இம்டியாஸ் பாகீர் மாக்கார் சன்னவை இணைத்துக் கொண்டால் தான் சஜித் அணியிலிருந்து வெளியேறுவதாக சொல்லி இருக்கின்றார். ஆனால் தனித்துவ முஸ்லிம் தலைவர்கள் அப்படி துனிச்சலாக இதுவரை பேசவில்லை. அது ஏன் என்பதனை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக தேர்தல் காலங்களில் பணம் அப்பாவி மக்களில் கண்களில் மண்ணைத் தூவி விட்டு தனது விளையாட்டைக் காட்டும். அப்போது குருடன் பார்த்த யானை போலதான் அவர்கள் நடப்பார்கள். தீர்மானங்களை எடுப்பார்கள். பணத்துக்கு அடிமையாகி தமது கருத்தியல் ரீதியான சிந்தனைகளை மக்கள் குப்பையில் போட்டு விடுவார்கள்.
எனவே குடிமக்களுக்கு எதிரான சதிகாரர்களாக அரசியல்வாதிகள், மதகுருமார், போலி மத பரப்புரைகள், ஊடக்கங்கள், காசு என்பன முன்னணியல் இருந்து வருகின்றன. எனவே அறிவியல் ரீதியில் மக்கள் விழிப்படையாத வரையில் நாட்டில் மக்களுக்கு மீட்சி வராது. நமது கணிப்பின்படி தேர்தல் தொடர்ப்பில் எழுபது (70) சதவீதமான மக்கள் இன்னும் தெளிவான நிலைப்பாட்டில் இல்லை என்பது தெரிய வருகின்றது. ஒரு ஐயாயிரம் (5000) ரூபா நோட்டுக்காக மக்கள் விலை போக நிறையவே இடமிருக்கின்றது.
ஜேவிபி ஜனரஞ்சகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பதுள்ளை-சமந்த வித்தியாரத்ன தன்னிடம் மொட்டுக் கட்சி உறுப்பினர் ஒருவர் ஒரு வாக்காளருக்கு நாம் ஒரு இலட்சம் ரூபாய்களைக் கொடுத்தாவது இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதாக தன்னிடம் கூறியதாக ஊவாவில் ஒரு பகிரங்க கூட்டத்தில் சில தினங்களுக்கு முன்னர் சொல்லி இருந்தார். இது எவ்வளவு ஆபத்தான கதை.
அரசியல்வாதிகள் ஊடகங்கள் மதகுருமார் ஒருபோதும் மக்களுக்கு யதார்த்தத்தை சொல்ல மாட்டார்கள். அவர்களின் வியாபாரமும் நலன்களும் இந்த அரசியலில் தங்கி இருப்பதனால் அவர்கள் அப்படித்தான் நடந்து கொள்வார்கள். எனவே தேர்தல் முடிவுகள் தொடர்ப்பில் ஒரு அச்ச நிலைதான் நாட்டில் இருக்கின்றது. குடிமக்களைக் குழப்புக்கின்ற சதிகாரர்கள்தன் இந்த தேர்தல் முடிவுகளிலும் செல்வாக்குச் செலுத்துவார்கள் போலும்.!
நன்றி: 14.01.2024 ஞாயிறு தினக்குரல்