குஜராத் தேர்தல்: பாஜகவை ஆம் ஆத்மி வீழ்த்துமா?

குஜராத்தின் ராஜ்கோட்டில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் பிரசாரத்திற்கு ஹன்சா பென் பாரத்பாய் பர்மார வந்துள்ளார். ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் ராஜ்கோட்டின் கோட்டாரியா பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை பிரசார நிகழ்ச்சியைத் தொடங்கினார்.

ஹன்சாபென் பர்மர்

ஹன்சா பென் சுமார் 10 பெண்களுடன் ஒரு சிறிய டிரக்கில் பயணம் செய்து இங்கு வந்துள்ளார். யார் வந்திருக்கிறார் என்று அவரிடம் கேட்டபோது கேஜ்ரிவால் என்று பதில் சொன்னார். கேஜ்ரிவால் யார்? இந்த கேள்விக்கு ஹன்சா பென் உட்பட எந்த பெண்ணாலும் பதில் சொல்ல முடியவில்லை.

ட்ரக்கில் இருந்த பெண்களிடம் குஜராத் முதல்வர் யார் என்று கேட்டபோது, நரேந்திர மோதி என்று அனைவரும் ஒரே குரலில் சொன்னார்கள். அரவிந்த் கேஜ்ரிவாலின் பிரசாரத்தில், கேஜ்ரிவாலுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று குஜராத்தி மொழியில் கோஷம் எழுப்பப்பட்டது.

திறந்த காரில் கைகளை அசைத்தபடி ஒரு ஹீரோபோல கேஜ்ரிவால் சென்றுகொண்டிருந்தார். சாலையில் இருந்த கேஜ்ரிவாலின் ஆதரவாளர்கள் அவரது கைகளைத் தொட விரும்பவில்லை.

இந்த பிரசாரம் இந்தியாவில் பிரபலங்களின் அரசியலுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்தது. கார்களின் அணிவகுப்பு, அவற்றில் கேஜ்ரிவாலின் பெரிய படங்கள், உயரமான கட்சிக் கொடிகள், மேள தாளத்தின் சத்தம், இவை அனைத்திற்கும் நடுவில், திறந்த காரில் கைகளை அசைத்தபடி கேஜ்ரிவால்.

இந்தியாவில் உள்ள எல்லா பெரிய அரசியல் கட்சிகளும் தேர்தல் நேரத்தில் இதுபோன்ற பிரசாரங்களை நடத்துகின்றன. பிரசாரங்களில் கூட்டத்தை மதிப்பிடுவது கடினம். சாலை முழுவதும் நெரிசல் ஏற்படுவதால், அங்கு நிற்பவர்கள் அனைவருமே பிரசாரத்தின் ஒரு அங்கமாகத் தெரிவார்கள்.

ஆம் ஆத்மி கட்சியின் கொடி யாருடைய கழுத்துகளில் தொங்கிக்கொண்டிருந்தது என்று பார்க்கும்போது, கேஜ்ரிவாலின் முன்னும் பின்னும் சுமார் ஆயிரம் அல்லது ஆயிரத்து ஐநூறு பேர் இருந்தனர்.

இதே ராஜ்கோட்டில்தான் 2002ல் நரேந்திர மோதி முதல்முறையாக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றார். 2012 வரை குஜராத் சட்டப்பேரவை தேர்தலாக இருந்தாலும் சரி அல்லது 2014 முதல் மக்களவை தேர்தலாக இருந்தாலும் சரி, அதன் பிறகு

குஜராத் அரசியலில் கடந்த நான்கு தசாப்தங்களாக பாஜகவும் காங்கிரஸும் ஒன்றுக்கொன்று போட்டிபோடுகின்றன. முதல்முறையாக இங்கு நடைபெறும் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மூன்றாவது அணியாக இருக்கும் என்ற பேச்சு அடிபடுகிறது.

மோதி மீது அதிருப்தி

ஆமதாபாத்தில் இருந்து ராஜ்கோட் செல்லும் வழியில் வட்வான் சட்டப்பேரவைத் தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் உள்ள படெளத் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் உக்ரேஜியா தனது 20 வயது மகள் மற்றும் 10 வயது மகனுடன் கொய்யா பழம் விற்கிறார்.

ஆம் ஆத்மி கட்சி குறித்து அவரிடம் கேட்டபோது, “ஆமாம். நான் கேள்விப்பட்டேன். இலவச மின்சாரம் மற்றும் நல்ல கல்வி பற்றி பேசுகிறார்கள். அது எனக்கு நல்லது. மோதி எங்களை தெருவுக்கு கொண்டு வந்துவிட்டார்” என்றார்.

“விலைவாசி மிகவும் அதிகமாக உள்ளது. எவ்வளவு வேலை செய்தாலும், தேவைகள் நிறைவேறுவது இல்லை. மகளுக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது. திருமணத்திற்கு குறைந்தது 2.5 லட்சம் ரூபாய் செலவாகும். ஆனால் கடன் வாங்குவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.”

“பணப்பற்றாக்குறையால் என்னால் படிப்பை முடிக்க முடியவில்லை. என் தம்பியும் எட்டாம் வகுப்புக்குப் பிறகு படிப்பை விட்டுவிட்டான். காங்கிரஸை பற்றி யாரும் பேசுவதில்லை. ஆம் ஆத்மி மற்றும் பாஜக பற்றி பேசப்படுகிறது. பல சமயங்களில் பாஜக வெற்றி பெறும் என்று தோன்றுவதால் அதற்கு ஓட்டு போட்டு வந்தோம்,” என்று ராஜேஷின் மகள் தேஜல் உக்ரேஜியா கூறினார்.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அரவிந்த் கேஜ்ரிவால், குஜராத்தி மொழி செய்தி சேனலின் பிரபல தொகுப்பாளரான இசுதான் காத்வியை குஜராத்தில் ‘முதல்வர்’ முகமாக அறிவித்தார். ரோட் ஷோவில் கேஜ்ரிவாலுடன் காத்வியை காணவில்லை.

ராஜ்கோட்டின் பிரபல பணக்கார தலைவரான இந்திரநீல் ராஜ்குருவும் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தார். கேஜ்ரிவால் இசுதானை முதல்வர் வேட்பாளராக அறிவித்த நாளன்று அவர் காங்கிரஸில் சேர்ந்துவிட்டார்.

இந்திரநீல் ராஜகுரு முன்பும் காங்கிரசில் இருந்தார். 2012இல் அவர் ராஜ்கோட் கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

இந்திரநீல் ராஜ்குருவின் ‘நீல் ரிசார்ட்’டில் ரோட்ஷோவுக்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தன. ரிசார்ட் ஹாலில், ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் சின்னம் சுவரை மூடியிருந்தது. சனிக்கிழமையன்று முழு ரிசார்ட்டும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இங்கு பணிபுரிபவர்கள் தெரிவித்தனர்.ஆனால் திடீரென்று நிலைமை தலைகீழானது.

முதல்வர் வேட்பாளராகும் டிவி தொகுப்பாளர்

ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் முதல்வர் வேட்பாளர் இசுதன் காத்வி

ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் முதல்வர் வேட்பாளர் இசுதன் காத்வி

ஆம் ஆத்மி கட்சியை விட்டு ஏன் விலகினீர்கள் என்று இந்திரநீல் ராஜ்குருவிடம் கேட்டோம்.

“பாஜகவை தோற்கடிக்கும் என்பதால் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தேன். தேர்தல் விஷயத்தில் தீவிரம் காட்டாததால், காங்கிரஸ் மீது எனக்கு அதிருப்தி ஏற்பட்டது. கடந்த ஆறு மாதங்களாக நான் அரவிந்துடன் இருந்தேன், அவர் காங்கிரஸை தோற்கடிக்க முயற்சிக்கிறார், பாஜகவை அல்ல என்பதை உணர்ந்தேன்,”என்று அவர் பதில் அளித்தார்.

“காங்கிரஸை தோற்கடிக்க என் பணத்தை பயன்படுத்த முடியாது. அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு என்னிடம் உள்ள பணம் மட்டுமே தேவை. ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளரால் கூட தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று நான் நினைக்கிறேன்,” என்றார் அவர்.

காத்வி குஜராத்தி தொலைக்காட்சி உலகில் நன்கு அறியப்பட்ட பெயராக இருக்கலாம், ஆனால் அரசியலுக்கு முற்றிலும் புதியவர்.

காத்வியை முதல்வர் வேட்பாளராக ஆக்கிய கேஜ்ரிவாலின் உத்தி என்ன?

குஜராத்தில் உள்ள அரசியல் ஆய்வாளர்கள் இதை மிகவும் முதிர்ச்சியான மற்றும் விவேகமான முடிவாக கருதவில்லை.

“குஜராத்தில் உள்ள காத்விகள், சாரண்-பாட் சாதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அரசர்களின் அவைகளில் புகழ் பாடி வந்தவர்கள்,” என்று குஜராத் பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் பேராசிரியர் கெளராங் ஜானி கூறினார்.

“அவர்களின் எண்ணிக்கை, குஜராத் மக்கள்தொகையில் ஒரு சதவிகிதம் மட்டுமே. இதை மிகவும் பக்குவமான முடிவாக நான் பார்க்கவில்லை. யாரும் இல்லாதபோது, யாரோ ஒருவரை முன்னிநிறுத்துவதுபோல இது தெரிகிறது.”

“இது ஆம் ஆத்மி கட்சிக்கு எந்த பயனையும் அளிக்காது. 1995-ம் ஆண்டுக்குப் பிறகு பாஜக இங்கு தேர்தலில் தோல்வியடையவில்லை. அதன் அமைப்புமுறை மிகவும் வலிமையானது,” என்று பேராசிரியர் கெளராங் ஜானி குறிப்பிட்டார்.

“தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முழு ஆள் பலமும் பாஜகவிடம் உள்ளது. அந்த கட்சியை தோற்கடிக்க, சமூக மற்றும் அரசியல் தளத்தில் அனுபவம் வாய்ந்த ஒருவரிடம் இந்தப்பொறுப்பை ஒப்படைத்திருக்க வேண்டும்.”

“காத்வியை முதல்வர் வேட்பாளராக்குவது கட்சிக்குள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தும். கோபால் இட்டாலியா ஒரு படேல்.. இந்த முடிவை ஜீரணிப்பது அவருக்கு கடினமாக இருக்கும். இசுதானின் தலைமையில் தேர்தலை சந்தித்தால், படேல் வாக்குகள் கிடைப்பது சிரமமாகிவிடும்,” என்று அவர் தெரிவித்தார்.

இசுதான், ஆமதாபாத்தில் உள்ள குஜராத் வித்யாபீட்டில் ஜர்னலிஸம் படித்துள்ளார். இசுதான் ஒரு சாதாரண மாணவராக இருந்ததாகவும், அவர் அறிவுஜீவி இல்லை என்றும் அவரை கற்பித்த பெயர் வெளியிட விரும்பாத பேராசிரியர் ஒருவர் கூறினார். ஜெஜ்ரிவால் என்ன சொன்னாலும் அதை அவர் கண்டிப்பாக கேட்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

1995 முதல் காங்கிரஸால் தோற்கடிக்க முடியாத கட்சியை, எந்த உத்தியால் அவரது கட்சி தோற்கடிக்கப்போகிறது என்று இசுதான் காத்வியிடம் வினவப்பட்டது.

“எங்கள் கட்சி மக்களின் தேவைகள் என்ற குறிக்கோளுடன் இயங்குகிறது. பாஜகவைத் தவிர வேறு எந்தக் கட்சியும் இங்கு இல்லை. எனவே குஜராத் மக்கள் நிர்ப்பந்தத்தின் பேரில் அதை வெற்றி பெற வைத்தனர். இப்போது ஆம் ஆத்மி கட்சி வந்துவிட்டது. பாஜகவைத் தவிர்க்க வழிபிறந்துவிட்டது என்று மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்,”என்று காத்வி குறிப்பிட்டார்.

ஆம் ஆத்மி கட்சியால் யாருக்கு நஷ்டம்?

அரவிந்த் கேஜ்ரிவால் குஜராத்தில் பிரச்சாரம்

அரவிந்த் கேஜ்ரிவால் குஜராத்தில் பிரச்சாரம்

“காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளின் வாக்கு வங்கியையும் ஆம் ஆத்மி கட்சி சிதைக்கும்,” என்று சூரத்தில் உள்ள சமூக ஆய்வு மையத்தின் (CSS) பேராசிரியர் கிரண் தேசாய் கூறினார்.

கடந்த ஆண்டு சூரத் நகராட்சித்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 27 இடங்களை கைப்பற்றியது. சூரத்தில் பாஜக வலுவாக உள்ளது. அரசியலில் கேஜ்ரிவாலுக்கும் மோதிக்கும் ஒற்றுமைகள் உள்ளன. ஆனால் கேஜ்ரிவாலின்’டெல்லி மாடல்’ குஜராத்தில் பிரபலம் அடைந்துவருகிறது.

ஒரு காலத்தில் மோதி ‘குஜராத் மாடலை’ முன்வைத்தார். குஜராத்தின் நடுத்தர வர்க்கத்தினரிடையே நரேந்திர மோதி இன்னும் பிரபலமாக இருக்கிறார். ஆனால் இங்குள்ள ஏழைகள் கேஜ்ரிவாலை நம்பிக்கையுடன் பார்க்கிறார்கள்.

“குஜராத் மாநிலத்தில் உள்ள தலித்துகள், சிறுபான்மையினர் மற்றும் ஏழை மக்கள் ஆம் ஆத்மி கட்சியை விரும்புகின்றனர். அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் மோதியின் அரசியலுக்கும் இடையே அதிக வித்தியாசம் இல்லை,”என்று பேராசிரியர் கிரண் தேசாய் கூறினார்.

டெல்லியில் மலிவான சிகிச்சை வசதிகள், நல்ல கல்வி மற்றும் மலிவான மின்சாரம் ஆகியவற்றை வழங்கிவருவதாக ஆம் ஆத்மி கட்சி பிரசாரம் செய்கிறது.

“கேஜ்ரிவால் நடுத்தர வர்க்கத்தை மகிழ்விப்பதற்காக இந்துத்துவ அரசியலுக்கு சவால் விடாமல் அவர்களுடன் இருப்பதாக தோற்றத்தை ஏற்படுத்துகிறார். ஆனால் ஏழைகளை அணிதிரட்ட டெல்லி மாதிரியை முன்வைக்கிறார்.”

குஜராத்தில் காங்கிரஸ் பொறுப்பாளர் ரகு சர்மா, ஆம் ஆத்மி கட்சியை பாஜகவின் ‘பி டீம்’ என்று வர்ணித்தார். இங்கு எதிர்க்கட்சியாக இருப்பது காங்கிரஸ். ஆம் ஆத்மி கட்சியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது என்றார் அவர்.

“பாஜகவுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை என்பது இங்குள்ள மக்களுக்கு தெரியும். டெல்லியில் இருந்து காந்திநகரை ஆள விரும்புகிறார்கள். அது சாத்தியமல்ல. பஞ்சாப் அரசு, டெல்லியில் இருந்து இயங்குகிறது என்று மக்கள் வருத்தப்படுகிறார்கள்,”என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சியால் பா.ஜ.கவுக்கு பலன் கிடைக்கும் என்று பாஜகவின் இளைஞர் அணி தலைவர் ஹார்திக் படேல் கருதுகிறார்.

“அரவிந்த் கேஜ்ரிவாலால் பாஜக ஆதாயம் பெறும். காங்கிரஸின் செயல்பாடு இந்த முறை மிகவும் மோசமாக இருக்கும். கடந்த முறை படிதார் போராட்டத்தால் காங்கிரசுக்கு நிறைய இடங்கள் கிடைத்தன.”என்று அவர் கூறினார்.

சாதி சமன்பாட்டில் ‘ஆம் ஆத்மி கட்சி’ எங்கே?

அரவிந்த் கெஜ்ரிவால்

1960ல் குஜராத் உருவான பிறகு முதல் முறையாக 1973ல் பிராமணரல்லாத முதல்வராக சிமன்பாய் படேல் பதவியேற்றார். அதற்கு முன் ஜீவ்ராஜ் நாராயண் மேத்தா பனியா சாதியைச் சேர்ந்தவர். மற்ற முதல்வர்கள் அனைவருமே பிராமணர்கள்.

குஜராத்தில் பிராமணர்கள் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாக இருக்கும் போது இது நடந்தது. சிமன்பாய் படேல் முதல்வராக பதவியேற்றது குஜராத் மற்றும் காங்கிரஸுக்கு ஒரு பெரிய நிகழ்வாக இருந்தது.

80களில் மாதவ் சிங் சோலங்கி, க்ஷத்ரியர்கள், ஹரிஜனங்கள், ஆதிவாசிகள் மற்றும் முஸ்லிம்களை ‘காம் மன்ச்’சின் கீழ் ஒருங்கிணைத்தார்.

1985 சட்டப்பேரவைத் தேர்தலில் மாதவ் சிங் சோலங்கியின் தலைமையில் காங்கிரஸ் 182 இடங்களில் 149 இடங்களை வென்றது. குஜராத்தில் இதுவரை நரேந்திர மோதியால்கூட இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை.

பாஜகவுக்கு ஆதரவு தரும் படிதார்கள்

ஆனால் மாதவ் சிங் சோலங்கியின் இந்த நடவடிக்கை குஜராத்தில் உள்ள படிதார்களை அந்நியப்படுத்தியதாக கூறப்படுகிறது. படிதார்கள் பாஜக முகாமுக்கு மாறிவிட்டனர்.

இடஒதுக்கீடு எதிர்ப்பு இயக்கத்தின் காரணமாக 1985 இல் மாபெரும் வெற்றி பெற்ற சில மாதங்களில் மாதவ் சிங் சோலங்கி ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மாதவ் சிங் சோலங்கியின் விலகலால் குஜராத்தில் தனது ஆதிக்கத்தை காங்கிரஸ் மெதுவாக இழக்கத்தொடங்கியது.

குஜராத்தில் பட்டிதார் அதாவது படேல்கள் 14 சதவிகிதம் பேர் உள்ளனர். முந்தைய சட்டப்பேரவையில் படேல் எம்எல்ஏக்கள் 30 சதவிகிதமாக இருந்தனர். படேல் சமூகம், பாரம்பரியமாக பாஜகவுக்கு வாக்களிப்பது வழக்கம்.

குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் பதவி, கோபால் இட்டாலியாவுக்கு வழங்கியுள்ளது. கோபால், படேல் பிரிவைச் சேர்ந்தவர்.

குஜராத்தில் ஓபிசி வாக்குகள் 45 முதல் 50 சதவிகிதம் வரை உள்ளது. குஜராத் சட்டப் பேரவையில் மொத்தமுள்ள 182 இடங்களில், 71 இடங்களில் ஓபிசியினர் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

ஏழு சதவிகிதமாக உள்ள தலித்துகள் பாரம்பரியமாக காங்கிரஸின் ஆதரவாளர்களாக கருதப்படுகிறார்கள். பட்டியல் பழங்குடியினர் 14.75 சதவிகிதம் . இவர்கள் 37 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

எஸ்டி வாக்குகள் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையே பிரிக்கப்படுகிறது.

“குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு கடந்த காலம் இல்லை. எனவே மக்கள் அதை ஒரு புதிய காற்று போலப்பார்க்கிறார்கள்,” என்று இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய உறுப்பினரும், பிரபல சமூகவியலாளருமான பேராசிரியர் கன்ஷ்யாம் ஷா கூறுகிறார்.

“ஆம் ஆத்மி கட்சி, இன்னும் சாதி சமன்பாட்டிற்குள் பொருந்தவில்லை. ஆனால் காங்கிரஸின் இடத்தை அது எடுத்துக்கொள்ளக்கூடும். பல பகுதிகளில் பாஜகவுக்கு தீங்கும் விளைவிக்கக்கூடும்,” என்றார் அவர்.

குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு உடனடி வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அது நீண்ட காலம் நீடிக்குமா என்பதில் சந்தேகம் உள்ளது.

2012 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி உருவானதில் இருந்து தற்போது வரை டெல்லி மற்றும் பஞ்சாபில் அக்கட்சி ஆட்சியை அமைத்துள்ளது. இரண்டு இடங்களிலும் காங்கிரசை தோற்கடித்து கேஜ்ரிவால் ஆட்சி அமைத்துள்ளார்.

இதுவரை எந்த மாநிலத்திலும் பாஜக.வை தோற்கடிக்க கேஜ்ரிவாலால் முடியவில்லை. குஜராத் மாநிலம், ‘இந்துத்துவத்தின் ஆய்வகம்’ என்று அழைக்கப்படுகிறது.

இங்கு பாஜகவை கேஜ்ரிவால் தோற்கடித்தால், அவரது அரசியல் வாழ்வில் இதைவிட பெரிய வெற்றி வேறு எதுவும் இருக்க முடியாது. ஏனென்றால் கடந்த 27 ஆண்டுகளாக காங்கிரஸ் இதைச் செய்ய முடியாமல் திணறுகிறது.

Previous Story

SLMC 2022 புதிய நிர்வாகிகள் 

Next Story

"ஆரோக்கியத்தை சொல்லும் கண்கள்"