-நஜீப்-
(நன்றி ஞாயிறு தினக்குரல்- 20.07.2025)
வெள்ளம் கரைபுரண்டுவர அதில் மாட்டிவன் உயிர் தப்ப துரும்பைப் பிடித்தாவது கரை சேருவது தெரிந்ததே. அதே போன்று பகைக்கு உதாரணமாக சொல்லப்படுகின்ற கீரியும் பாம்பும் கூட அந்த சந்தர்ப்பங்களில் ஆற்றில் மிதந்து வரும் மரக்கட்டைக்குத் தாவி ஒற்றுமையாக பயணிப்பதை ஜனாதிபதி அனுரகுமார தேர்தல் மேடைகளில் அழகாக பேசிவந்தார்.
அந்தக் காட்சியைத்தான் நாம் பேருவளை நகர சபையில் அண்மையில் பார்த்தோம். அங்கு சுயேட்சை.7 ஐமச.6 என்பிபி.3 என்று ஆசனங்களைப் பெற்றிருந்தன. வேடிக்கை என்னவென்றால் மூன்று ஆசனங்கள் பெற்ற என்பிபி. தவிசாளர் பதவி பெற சஜித் அணி உதவியது.
அதனால் அவர்களுக்குத் துணை தவிசாளர் பதவி. சஜித் அணி இதற்கு என்ன நியாயங்கள் சொன்னாலும் மரக்கட்டையில் தப்பி உயிர் பிழைக்கும் ஒரு காட்சிதான் பேருவளையலும் நடந்தது.
அமைச்சர் நளின் ஜயதிஸ இது கட்சிகளுடன் கூட்டணி அல்ல. தனி நபர் ஒத்துழைப்பு என்று கூறுகின்றார். சஜித் அணி கட்டுப்பாடுகளை மீறி இது அங்கு நடந்திருப்பதாக கதை சொல்கின்றது. இதற்கு ஒழுக்காற்று நடவடிக்கை வருமாம்.





