கிரிக்கட் திலீபன் சனல் 4 தேர்தல்

-நஜீப் பின் கபூர்-

மேலே குறிப்பிட்டிருக்கின்ற நான்கு தலைப்புக்களையும் இணைத்து ஒரு முடிச்சு போட எத்தனிக்கின்ற இந்த முயற்சியில் நாம் எவ்வளவு தூரம் சாதித்திருக்கின்றோம் என்பதனை வாசகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். மொத்தத்தில் இந்த நான்கு தலைப்புக்களும் நமது நாட்டில் சமகாலதத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்ற செய்திகளாக இருந்து வருகின்றன.  அந்த வகையில் இதற்கு நாம்  முதல் முடிச்சைப் போட முனைகின்றோம். கடந்த வாரம் கிரிக்கட்டில் நாடு பெற்ற அவமானம் பற்றிய பல சுவையான வேதனையான துயரமான கதைகள் இருக்கின்றன.

Mohammed Siraj praised on social media as India win Asia Cup

அடுத்து திலீபன் நினைவு தொடர்பான முன்னுக்குப் பின் முரணான செயல்கள், சனல் 4 தொடர்பான புதிய விவாதங்கள் மற்றும் எதிர்காலத்தில் இந்த நாட்டில் தேர்தல்கள் இல்லாது இதே நாடாளுமன்றப் பெரும்பான்மையை வைத்துக் கொண்டு வன்முறையான ஆட்சியொன்று நாட்டில் தொடரப் போகின்றதா என்ற அச்சம் நாட்டில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இவை தொடர்பாக இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

1965ம் ஆண்டு அமெரிக்காவில் உலக சம்பியன் குத்துச் சண்டைப் போட்டியொன்று நடைபெற இருந்தது. அப்போது நடப்புச் சம்பியன் ஜொனி லிஸ்டனும், அவரை எதிர்த்து மறுமுனையில் கசியஸ் கிளே அல்லது முகம்மட் அலியும் கோதாவில் எதிரும் புதிருமாக நின்றிருந்தனர். அந்த நாட்களில் குத்துச் சண்டை உலகில் சொனி லிஸ்டன் உலகச் சம்பியன். அவருக்கு எதிராக களத்துக்கு வந்தவர் அன்று எழுர்ச்சி பெற்று வருகின்ற குத்துச் சண்டை வீரராக அலி அறியப்பட்டிருந்தார். இந்த பின்னணியில்தான் போட்டி அமைந்திருந்தது.

உலகம் பூராவிலும் இருந்து இந்த முதல்தரப் போட்டியைக் கண்டு களிக்க டிக்கட்டுக்களை முன்கூட்டிப் பதிவு செய்து அங்கு வந்திருந்தனர். போட்டி துவங்குகின்ற அந்த நேரத்திலும் பல ரசிகர்கள் போட்டியைப் பார்க்க அரங்கிற்குள் நுழைவதற்காக வரிசையாக கவுண்டரில் நின்று கொண்டிருந்தனர். அப்போது போட்டி துவங்கி, முதல் சுற்று ஆரம்பித்து சில வினாடிகளிலே போட்டி முடிவடைந்து விட்டதாகவும், அலி முதல் சுற்று முடியும் முன்னரே சொனி லிஸ்டனை வீழ்த்தி வெற்றி பொற்று விட்டதாக ஒலிபெருக்கியில் அறிவிப்புச் செய்யப்பட்டது. அது போலத்தான்  இந்த முறை  கொழும்பு ஆர்.பிரேமதாச அரங்கில் நடந்த ஆசிய வெற்றிக் கிண்ண இறுதிப் போட்டிகளும் இலங்கைக்குப் பெரும் ஏமாற்றத்தை கொண்டு வந்து கொடுத்து முற்றுப் பெற்றிருக்கின்றது.

இப்போது வாசகர்களின் தெளிவுக்காக கிரிக்கட் தொடர்பான மிகக் குறைந்த ஓட்டங்கள் பற்றிய சில தகவல்களை இப்போது பார்ப்போம். கிரிக்கட் வரலாற்றில் மிகவும் குறைவான டெஸ்ட் ஓட்டங்களைப் பெற்ற நாடாக நியுசிலாந்து இருக்கின்றது. 1955ல் இங்கிலாந்துடன் நடந்த இந்தப் போட்டியில் அது வெரும் 26 ஓட்டகளை மற்றுமே முதல் இனிங்சில் பெற்றது. அடுத்து 20 ஓவர்கள் போட்டியில் கர்டேஜீனா 10 ஓட்டங்களை ஸ்பைனுக்கு எதிரான போட்டியில் பெற்றிருந்தது. இப்போட்டி அண்மையில் 2003 பெப்ரவாரி 26ல் நடைபெற்றிருக்கின்றது. இந்த நிலையில்தான் தற்போது ஆசியக் கிண்ணப் 50 ஓவர் இறுதிப் போட்டியில் பெரும் எதிர்பார்ப்புக்களுடன் களமிறங்கிய இலங்கை அணி தனது மண்ணிலோ வெறும் 50 ஓட்டங்களைப் பெற்று அவமானப்பட்டிருக்கின்றது.

இந்த போட்டியின் மூலம் சர்வதேச அளவில் பேசப்படுகின்ற ஒரு வீரராக முகம்மட் சிராஜ் மாறி இருக்கின்றார். மிகவும் வருமையான ஒரு குடும்பப் பின்னணியில் பிறந்து வளர்ந்த இவர் ஒரு ஆட்டா ஓட்டுனரின் மகன். அவர் தனது செயல் மூலம் தான் பிறந்த நாட்டுக்கும் பெற்றோருக்கும் பெருமை தேடிக் கொடுத்திருக்கின்றார். இறுதி ஆட்டத்தில் தனக்கு வழங்கப்பட்ட சிறப்பாட்டக்காரனுக்குரிய பணத்தை மைதான ஊழியர்களுக்கு வழங்கி அதிர்ச்சியை ஏற்படுத்திய இருந்தார். இதற்கு முன்னரும் இவர் இப்படித் தனக்கு கிடைத்த ஒரு தொகைப் பணத்தை மேற்கிந்தியாவில் கிரிக்கட் விளையாடுகின்ற சிறுவர்களுக்கு கிரிக்கட் உபகரணங்களை வாங்க அன்பளிப்புச் செய்திருந்தார்.

இந்தப் போட்டியில் பல இடங்களில் பந்தயம் பிடித்துத் தோற்றுப் போனவர்கள் செய்லகள் மூலம் தமது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கின்றார். கடவுள் சிலைகளை வைத்து சோதிடம் சொன்ன கேகலையைச் சேர்ந்த ஒரு சோதிடர் அந்த சிலைகளை நிலத்தில் போட்டு உடைத்து நொருக்கி இருக்கின்றார். இன்னும் பல இடங்களில்  தொலைக் காட்சிப் பெட்டிகள் போட்டுடைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இன்னும் அந்த கோபம் தீர்ந்ததாகச் தெரியவில்லை. அடுத்து பணத்தை வாங்கிக் கொண்டு சிலர் ஆட்டத்தை மண்கவ்வச் செய்து விட்டார்கள் என்று திட்டிக் கொண்டிருக்கின்றார்கள் ரசிகர்கள்.

மேற்சொன்ன அனைத்தையும் விட இந்த அவமாத்தையும் தோல்வியையும் பலர் மொட்டுக் கட்சி மீதும் ராஜபக்சாக்கள் தலையில் கொட்டி விட முனைவதையும் அவதானிக்க முடிகின்றது. போட்டியை கண்டுகளிக்க ராஜபக்ஸாக்கள் மைதானத்தக்கு வந்தது, அத்துடன் போட்டி தொலைக் காட்சியில் நேரடியாக ஒளி ஒலி பரப்புச் செய்யப்படுகின்ற நேரத்தில் மொட்டுக் கட்சிக்கான விளம்பரங்கள் அதில் கொடுக்கப்பட்டதால் அதனால் மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பையும் கோபத்தையும் வைத்து கடவுள் இலங்கை அணியைக் கவிழ்த்து விட்டார்-இலங்கை அணியைத் தண்டித்து விட்டார் என்று ஒரு பரவலான விமர்சனமும் நாட்டில் தற்போது மேற் கொள்ளப்பட்டு வருகின்றது. இது எந்தக் கடவுள் பார்த்த வேலை என்று நமக்குத் தெரியாது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் திலீபனின் தியாகத்தை நினைவு கூருவதற்கான நிகழ்வுகள் தற்போது உணர்வுபூர்வமாக தமிழ் பிரதேச்களில் நடந்து கொண்டிருக்கின்ற இந்த நாட்களில், நிகழ்வுகள் தொடர்பாக இலங்கை நீதி மன்றங்கள் பிரதேசத்தக்குப் பிரதேசம் முரணான தீர்ப்புக்ககைளைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. சிலர் இந்த திலீபன் நினைவு நிகழ்வுகளை கொழும்பில் நடாத்தக் கூடாது என்று நீதி மன்றத்தில் செய்த முறைப்பாட்டை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அதற்குத் தடைவித்து தீர்ப்புச் சொல்லி இருக்கின்றது.

Memories of the second day of Tyaga Deepam Dileepan - Time News

அதே நேரம் வடக்கில் இதே விதமாக தடைவிதிக்கக் கோரிக் கொடுக்கப்பட்ட முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது இது ஜனாநாயக உரிமை இது மக்களின் அகிம்சை வழிப் போராட்டம் இது அவர்களின் ஜனநாயக உரிமை என்று திலீபன் நிகழ்வுகளுக்கு நீதி மன்றம் அங்கிகாரம் கொடுத்திருந்தது. எனவே இலங்கையில் தெற்கில் ஒரு விதமாகவும் வடக்குக் கிழக்கில் மற்றும் ஒருவிதமாகவும் தீர்ப்புக்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அஹிம்சை வழியில் பொத்துவிலில் இருந்து துவங்கிய இந்தப் போராட்டங்கள் வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. இதற்கு முதலில் அக்கரைப்பற்றில் வைத்து சிலர் ஊர்வலத்தை மறைத்து அட்டகாசங்களைப் பண்ணி இருந்தார்கள். இது ஆளும் தரப்பு ஆதரவான ஒரு அரசியல்வாதியின் ஏற்பாட்டில் நடந்த வேலை என்று தெரியவருகின்றது.  இது தேவையில்லாத ஒரு செயல் என்று குறிப்பிட்ட அரசியல்வாதிக்கு எதிராக பிரதேசத்திலே கண்டனங்கள் எழுந்தன. பின்னர் திருமலையில் கடும் போக்குச் செயல்பாட்டுக்காரர்கள் மேற்கொண்ட அடவடித்தனங்களுக்கு படைத்தரப்பினர் ஒத்துழைப்புக் கொடுத்தது மட்டுமல்லாமல் அவர்களும்

சேர்ந்தே திலீபன் ஊர்வலம் நடத்தியவர்களை அடித்துக் காயப்படுத்தி இருக்கின்றார்கள் என்று முறைப்பாடுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஆமை வேகத்தில்தான் அது தொடர்பான நீதி நகர்ந்து கொண்டிருக்கின்றது. மற்றுமொரு இடத்தில் இதற்கு எதிராக சிலர் பாதாதைகளைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு கோசங்களை எழுப்பிக் கொண்டிருந்தார்கள். அப்படி பதாதைகளைத் பிடித்துக் கொண்டிருந்த ஒருவரிடத்தில் எதற்காக இந்தப் போராட்டம் என்று ஊடகக் காரர் ஒருவர் கேள்வி எழுப்ப தனக்கு ஏன் என்று தெரியாது (மட தன்னே மாத்தியா) என்று அவர் பதில் வழங்கி இருந்த செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி இருந்தது.

ஜெனிவாவில் மனித உரிமைகள் அமர்வு நடந்து கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் ஆளும் தரப்பும் அரச படையினரும் இப்படி நடந்து கொண்டிருப்பது ஐ.நா.வுக்கும் மனித உரிமைகள் அமைப்புக்கும் நீ எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டிரு நாம் இப்படித்தான் நடந்து கொள்வோம் என்று கன்னத்தில் கொடுத்த அறை என்றுதான் நாம் இதனைப் பார்க்க வேண்டி இருக்கின்றது. இத் தாக்குதலகள்; தொடர்பாக தமிழ் அரசியல் செயல்பாட்டாளர்களின் உணர்வுகளை அவதானிக்கின்ற போது, இதனை அவர்கள் அரசியல் கண்ணோட்டத்தில்தான் பார்க்கின்றார்கள்.

இதற்கு நாம் கடும் தெனியில் எதிர்ப்புக்களைக் கொடுக்கின்ற போது குறிப்பிட்ட ஒரு தரப்புக்கு அது செல்வாக்கை கொடுத்துவிடும் என்று வஞ்சகக் கண்ணோட்டத்தில்தான் அவர்கள் பார்வை அமைந்திருப்பது போலவும் நமக்குத் தெரிகின்றது.  இந்தத் தாக்குதல் அவர்கள இனரீதியான கண்ணோட்டத்தில் பார்ப்பதற்குப் பதிலாக கட்சி ரீதியில் பார்க்கின்றார்கள்.

இந்த நேரத்தில் ஜனாதிபதி ரணில் அமெரிக்கா போய் அங்கு நாம் சீனா பக்கமும் கிடையாது இந்தியா பக்கமும் கிடையாது என்று பேசிதனது மேற்கத்திய விசுவாசத்தை உறுதி செய்து ஏதாவது பிடுங்கலாம் என்று யோசிக்கின்றார் போலும். ஜனாதிபதி உலகிற்கு உபதேசம் பண்ணிக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் சட்ட வல்லுணரும் அமெரிக்காவில் நின்றிருக்கின்றார். ஆனால் நமக்கு அதிலும் சில சந்தேகங்கள் வருகின்றன.

Channel 4's Hollow Spectacle: Blowers without Whistles – Sri Lanka Guardian

சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை உண்டு பண்ணிய சனல் 4 கதைகள் மேற் சொன்ன இரு நிகழ்வுகளாலும் சற்று வீரியம் குறைந்து போய் இருந்தாலும் குமுறுகின்ற எரிமலை நிலையில்தான் அது இன்னும் இருந்து வருகின்றது. இதற்கிடையில் நாம் இந்தக் கட்டுரையைத் தயாரித்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில் சனல் 4 பற்றிய விவாதங்கள் நாடாளுமன்றதில் நடந்து கொண்டிருக்கின்றன. இதிலுள்ள வேடிக்கை என்ன வென்றால் இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிப்பதற்காக அழைக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி மீது இந்த ஈஸ்டர் படுகொலைகள் தொடர்பான விசாரணைகளைத் திசை திருப்ப முனைந்த குற்றச்சாட்டு இருக்கின்றது.

இதற்கு எதிரணி உறுப்பினர்கள் தமது பலத்தை எதிர்ப்பை வெளிப்படுத்திய போது அரசு அவர் மூலம் தெளிவுபடுத்து எடுத்த முயற்சி கையிடப்பட்டது. அதற்குப் பின்னர் அந்த விளக்கத்தை கொடுக்க அரசு மற்றும் ஒருவரை கொண்டுவர ஏற்பாடுகளைச் செய்திருந்தது. ஆனால் சனல் 4 வில் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்ஹ கொலைக் குற்றச்சாட்டில் விசாரணைகளை மூடி மறைக்க முயன்றார் என்ற மற்றுமொரு பொலிஸ் அதிகாரியை வைத்து இதற்கு விளக்கம் அளிக்கும் முயற்சியும் நடந்தது. இது என்ன வேடிக்கை.

இப்படியான விளக்கங்களையோ விசாரணைகளையோ நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று பாதிக்கபட்ட கிருஸ்தவ சமூகத் தலைவர்களும் பேரயாரும் அரசின் இந்த முயற்சியை கடுமையாக நிராகரிப்பதுடன் சர்வதேசத்தின் மேற்பார்வையில் அல்லது அவர்கள்தான் இது தொடர்பான விசாரணைகளை நடத்த வேண்டும் என்று கேட்டிருக்கின்றார்கள். முன்னாள் ஜனாதிபதி கோட்டா, நாமல் மற்றும் பிள்ளையான் போன்றவர்கள் சர்வதேச விசாரணைக்கு சாட்சி கொடுக்க நாம் தயாராக இருக்கின்றோம் என்று பகிரங்கமாகக் கூறி இருந்தாலும் ஜனாதிபதி ரிணில் இது தொடர்பான அடுத்த கட்ட நகர்வுகளுக்கான நடவடிக்கைகளை மேற் கொள்வார் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. அப்படியானால் அதன் பொருள் என்ன?

இது தொடர்பான தற்போது ஜனாதிபதி உள்நாட்டில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி இமாம் தலைமையில் ஒரு விசரணைக் குழுவை நியமித்திருக்கின்றார். இது விடயத்தில் நமக்கு ஒரு பெரும் அச்சம் இருக்கின்றது. அவர் ஒரு முஸ்லிமாக இருப்பதால் அவர் இந்த விசாரணையை திசை திருப்பி விட்டார் என்று கடும் போக்கு இனவாதிகளை வைத்து இந்த விசாரணையை நிராகரிக்கவும் குழப்பிவிடவும் இடமிருக்கின்றது.இதனை இமாமும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

Govt. abandons plans for snap presidential polls

இந்த பின்னணியில் இலங்கையில் தற்போது நடக்க இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்கள் நடக்குமா என்று பெரும் சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது. எதிர்க் கட்சியினரும் இது பற்றி பகிரங்கமாகத் தற்போது பேசி வருகின்றார்கள். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐதேக. தலைமையகம் சிரிகொத்தவில் நடந்த ஒரு சந்திப்பில் வஜிர அபேவர்தன இந்த பொருளாதார நெருக்கடியான நேரத்தில் தேர்தல்களுக்கு 2024ம் நிதி ஆண்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்வது மிகவும் ஆபத்தானது என்று மீண்டும் எச்சரித்திருக்கின்றார்.

அரசியல்வாதிகள் அல்லாதவர்களை வைத்து தற்போது பொருளாதார நெருக்கடியான நேரத்தில் தேர்தல் வைப்பது மிகவும் நெருக்கடியானது என்ற பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆளும் தரப்பில் இருக்கின்ற பெரும்பாலானவர்கள் தேர்தல்களைத் தவிர்த்து சுகபோகங்களை அனுபவிக்க இதே நாடாளுமன்றத்தை தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு முயல்வாhகள். ஆளும் தரப்பிலும் இதற்கு ஆதரவானவர்கள் நிறையவே இருக்கின்றார்கள்.  சஜீத் மற்றும் அணுர போன்றவர்கள் இந்த தேர்ல்களை ஜனாதிபதி மற்றும் ஆட்சியாளர் தட்டில் வைத்துத் தரமாட்டார்கள். அதளை நாம் போரடித்தான் பெற வேண்டி இருக்கும் என்று எச்சரித்து வருகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.இது யதார்தத்மானது. வரவு செலவு அறிக்கையில் நிதி ஒதுக்காது எப்படி ஐயா தேர்தலை வைப்பது என்பது ஜனாதிபதி மற்றும் ஆளும் தரப்பு கேள்வியாக எதிர் காலத்தில் வரும்.!

நன்றி: 24.09.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

பாம்பு கடித்த இடத்தில் வாய் வைத்து உறிஞ்சினால் என்ன ஆகும்?

Next Story

நேபாள கிரிக்கெட் :9 பந்தில் அரைச் சதம், 34 பந்தில் சதம்!