கால்நடை மேய்க்கச் சென்ற பாகிஸ்தான் இளைஞர் ‘காதலால்’ எல்லை தாண்டி இந்தியா வந்த கதை

பாகிஸ்தானின் ஹவேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரின் வீடியோ பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அவர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு (எல்ஓசி) அப்பால் இந்திய பாதுகாப்புப் படையினரின் காவலில் இருப்பது காட்டப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரைச் சேர்ந்த ஜீஷான் என்ற இளைஞர் மாயமானது குறித்து அவரது தந்தை உள்ளூர் நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளார்
ஜீஷான் என்ற இளைஞர் மாயமானது குறித்து அவரது தந்தை உள்ளூர் நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளார்

ஜம்மு – காஷ்மீரின் பாரமுல்லா மாவட்ட எஸ்எஸ்பி ஜிபி சிங், பாகிஸ்தானை சேர்ந்த இளைஞர் இந்திய ராணுவத்தின் காவலில் இருப்பதை பிபிசி உருதுவிடம் உறுதிப்படுத்தியிருந்தார்.

மறுபுறம், இந்திய எல்லை அருகில் உள்ள பாகிஸ்தான் ஹவேலி மாவட்ட துணை ஆணையர் தாரிக் மஹ்மூத், ”ஜீஷான் என்ற இளைஞர் மாயமானது குறித்து அவரது தந்தையின் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்” என்றார்.

போலீசார் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், ஜீஷானின் நண்பர்கள் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்களிடம் தகவல் சேகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஒரு பெண் மீதான காதலால், இந்த இளைஞர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து இந்தியாவின் காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்ததாகவும், அங்கு அவர் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இருப்பினும், இளைஞரின் தந்தை போலீசாரிடம் அளித்த தனது மனுவில், எல்ஓசிக்கு அப்பால் உள்ள ஒரு பெண்ணுடன் தனது மகனுக்கு காதல் இருப்பதாகக் குறிப்பிடவில்லை. ஜீஷான் மூன்று நாட்களுக்கு முன்பு விலங்குகளை மேய்ப்பதற்காகச் சென்றார், ஆனால் இதுவரை வீடு திரும்பவில்லை என்று மட்டுமே அவர் தெரிவித்துள்ளார்.

பாரமுல்லா மூத்த போலீஸ் சூப்பிரண்டு (எஸ்எஸ்பி) ஜிபி சிங் கூறுகையில், இருவருமே (ஜீஷான் மற்றும் அந்த பெண்) ராணுவத்தின் காவலில் இருந்தனர் என்றார். ராணுவம் அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தவுடன், அடுத்தகட்ட விசாரணை உடனடியாகத் தொடங்கப்படும் என்று அவர் கூறினார்.

மறுபுறம், அந்தப் பெண்ணின் தந்தை பிபிசி உருதுவிடம் கூறுகையில், “என் மகளை ராணுவத்தினர் ஞாயிற்றுக்கிழமை காலை ஏழு மணிக்கு காவலில் எடுத்தனர், நான்கு மணி நேரத்திற்குப் பிறகு விடுவித்துவிட்டனர். என் மகள் பாதுகாப்பாக இருக்கிறாள்” என்றார்.

அதேநேரம், ஹவேலி துணை ஆணையரின் கூற்றுப்படி, ஜீஷானின் தந்தை போலீசாரிடம் அளித்த தகவலில், தனது மகன் மூன்று நாட்களுக்கு முன்பு கால்நடை மேய்க்க வீட்டை விட்டுச் சென்றதாகவும், இதுவரை வீடு திரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். தன் அளவில் அவரைத் தேட முயற்சி செய்தும், அவர் கிடைக்கவில்லை என்று அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

துணை ஆணையரின் கூற்றுப்படி, தனது மகன் எல்ஓசி-யைக் கடந்து ஜம்மு – காஷ்மீர் சென்று தனது காதலியைச் சந்தித்த வீடியோ குறித்து, தனது கிராம மக்கள் தன்னிடம் தெரிவித்ததாக தந்தை கூறியுள்ளார்.

இளைஞர் ஒருவரைக் காவலில் எடுத்துள்ளதை இந்திய போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்

வைரல் வீடியோவில் என்ன இருக்கிறது?

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோவில், ஒரு பெண் ஒரு இளைஞனின் கையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது, மேலும் வீடியோ எடுப்பவர்கள் இந்தத் தருணத்தில் அவர்களின் அடையாளம் குறித்து அவர்களிடம் கேள்விகளைக் கேட்கிறார்கள்.

இருவரும் திறந்தவெளியில் ஒன்றாக அமர்ந்துள்ளனர், அவர்களின் முகங்கள் தெளிவாகத் தெரிகின்றன, அதே நேரத்தில் அவர்களுக்குப் பின்னால் பசுமையான மலைகள் உள்ளன. கேள்வி கேட்பவர் இருவரிடமும் அவர்களின் பெயர்கள் மற்றும் பகுதிகளை உறுதிப்படுத்துகிறார்.

இந்திய போலீசாரின் கூற்றுப்படி, அந்தப் பெண் எல்ஓசி-க்கு மிக அருகில் உள்ள உரி செக்டாரின் தில்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர்.

பிபிசி அந்தப் பெண்ணின் தந்தையைத் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, “என் மகளை ராணுவத்தினர் ஞாயிற்றுக்கிழமை காலை ஏழு மணிக்கு காவலில் எடுத்தனர், நான்கு மணி நேரத்திற்குப் பிறகு விடுவித்துவிட்டனர்” என்றார்.

ராணுவத்தினர் தனது மகளுக்குத் தேநீர் மற்றும் உணவு வழங்கியதாக அவர் கூறுகிறார்.

தந்தையின் கூற்றுப்படி, இந்த விவகாரங்கள் (காதல்) குறித்து அவருக்கு போலீஸ் மூலமாகவே தெரியவந்தது. “எங்கள் குழந்தை பாதுகாப்பாக இருக்கிறாள், அதுவே எங்களுக்குப் போதும்.”

மறுபுறம், பாகிஸ்தான் போலீசாரின் கூற்றுப்படி, வைரல் வீடியோ மூலம் பாகிஸ்தான் இளைஞர் ஒரு இந்தியப் பெண்ணுடன் தொடர்பில் இருந்ததும், இது தொடர்பாக எல்லையை கடந்து மறுபக்கத்திற்குச் சென்றதும் அவர்களுக்குத் தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானின் ஹவேலி டிஎஸ்பி சீமாப் அப்பாசி பிபிசியிடம், ”ஆரம்பகட்ட தகவல்களின்படி, அந்த இளைஞர் பைன்கடி கிராமத்தை சேர்ந்தவர்.”

பைன்கடி, ஹவேலி மாவட்டத்தின் கடைசி எல்லைக் கிராமமாகும்.

ஃபேஸ்புக்கில் நஸ்ருல்லா என்ற பாகிஸ்தான் நபருடன் ஏற்பட்ட நட்பிற்குப் பிறகு, இந்தியப் பெண் அஞ்சு அவரைத் திருமணம் செய்ய கைபர் பக்துன்க்வா சென்றடைந்தார் (கோப்புப் படம்)
பேஸ்புக்கில் நஸ்ருல்லா என்ற பாகிஸ்தான் நபருடன் ஏற்பட்ட நட்பிற்குப் பிறகு, இந்தியப் பெண் அஞ்சு அவரைத் திருமணம் செய்ய கைபர் பக்துன்க்வா சென்றடைந்தார் 

‘மக்கள் தூரத்திலிருந்து பார்த்துப் பார்த்து சோர்வடையும் போது…’

இந்தப் பகுதியின் உள்ளூர்வாசியான ஷபீர் பேக்கின், பைன்கடிக்கு அப்பால் மொபைல் போன் சேவை இல்லை என்றும், கிராம மக்கள் பலருக்கு இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோ மூலம் தான் தெரியவந்தது என்றும் அவர் கூறினார்.

ஷபீர் பேக்கின் கூற்றுப்படி, “நாங்கள் வீடியோவைப் பார்த்தோம், அதன் பிறகு ஜீஷானின் பெற்றோரிடம் உங்கள் மகன் மற்றொரு காஷ்மீருக்கு (ஜம்மு-காஷ்மீர்) சென்றுவிட்டான், அவனது வீடியோ வைரலாகி வருகிறது என்று கூறினோம்.”

ஹவேலியில் வசிக்கும் சர்தார் முசாஃபர், ”ஜீஷான் எல்லையை கடந்து இந்தியாவின் காஷ்மீருக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் பகுதியில் ஒரு சிறிய மழைக்கால ஓடை உள்ளது, அதைக் கடப்பதில் பெரிய சிரமம் எதுவும் இல்லை” என்றார்.

மக்களின் கால்நடைகள் மழைக்கால ஓடையைக் கடந்து மறுபக்கத்திற்குச் செல்லும் இது போன்ற பல சம்பவங்கள் நடப்பதாக அவர் கூறினார்.

ஹவேலி கஹூட்டாவில் வசிக்கும் வழக்கறிஞர் ஷாஜியா கயானி பிபிசியிடம், ”எல்லையின் இருபுறமும் மக்களுக்கு ரத்த உறவுகள் உள்ளன, மேலும் இந்த மக்கள் தூரத்திலிருந்து ஒருவரையொருவர் பார்த்துப் பார்த்து சோர்வடையும் போது, இதுபோன்ற ஆபத்தான சம்பவங்கள் வெளிவருகின்றன” என்றார்.

“முன்பு பேருந்து சேவை மூலம் காஷ்மீரி குடும்பங்கள் தங்களுக்குள் சந்திப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன, இப்போது அதுவும் முடிவுக்கு வந்துவிட்டது. தலைமுறை தலைமுறையாக இந்த உறவுகள் தொடர்கின்றன. அப்படியிருக்கும்போது மக்கள் ஒருவரையொருவர் சந்திக்க இதுபோன்ற முயற்சிகளைச் செய்யத்தான் செய்வார்கள்” என்றார்.

சமீபத்திய நாட்களில், 2024 நவம்பர் 24 அன்று, இந்தியாவின் காஷ்மீரை சேர்ந்த ஒரு பெண் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து, ஹவேலி மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் உள்ள பாகிஸ்தான் இளைஞரின் வீட்டிற்குச் சென்றார்.

பின்னர் அந்தப் பெண் பாகிஸ்தான் இளைஞரைத் திருமணம் செய்யும் நோக்கில் எல்லையைக் கடந்ததாகப் போலீசார் கூறினர்.

Previous Story

குரல் தரும் குறுஞ்செய்திகள்.

Next Story

"සුපිරි" ඇමරිකාවට වැරදුණේ කොතනද? TRUMP OUT?