கலைந்த கனவுகள் சிதைந்த திட்டங்கள்

-நஜீப் பின் கபூர்-

மனித வாழ்வில் எதிர்பார்த்த விடயங்கள் கைகூடாமல் போன நிகழ்வுகள் பல சந்தர்ப்பங்களில் நடந்திருக்கலாம். அதே போன்று நெடுநாள் கனவுகளும் கலைந்து போன நேரங்களும் நிறையவே நாம் வாழ்வில் அனுபவித்திருக்கலாம். அது போன்றுதான் சமூக ரீதியிலும் பல எதிர்பார்ப்புக்கள் இருக்கின்றன. அப்படியான ஒரு எதிர்பார்ப்பாகத்தான் ‘கோட்டா கோ ஹோம்’ போராட்டமும் பார்க்கப்பட்டது. அதன் வெற்றி கூட பல இடங்களில் கொண்டாடப்பட்டும் இருந்தன. நாமும் ஏதோ எமது தீவு உலகிற்கு புதியதோர் நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்திருக்கின்றது என்று செய்தி சொல்லி இருந்தோம். இன்று இவை அனைத்தும் வெறும் மாயை என்று ஆகிவிட்ட பின்னணிதான் நாட்டில் காணப்படுகின்றது. குடி மக்கள் நடாத்திய புரட்சியை அவர்கள் தெரிவு செய்த மக்கள் அவையே-நாடாளுமன்றமே தோற்கடித்திருக்கின்றது என்று எண்ணத் தோன்றுகின்றது.

இது பற்றிய கதையைத்தான் இந்த வாரம் பேச வேண்டி இருக்கின்றது. கோட்டாவை ஓட்டி விட்டால் தேசத்துக்கு விடுதலை என்று பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்தார்கள். சிலர் இதுதான் உண்மையான விடுதலை நாள் என்று கூட பகிரங்கமாக அறிவித்தும் இருந்தார்கள். ஆனால் ஒரு சில நாட்களுக்குள்ளே இவை அனைத்தும் வெறும் கனவு-மாயை என்ற நிலைக்கு வந்து விட்டது. இலங்கை அரசியல் யாப்புப்படி ஜனாதிபதி பதவியில் இருக்கும் போது ஏதோ காரணங்களினால் தொலைந்தால் பிரதமராக இருப்பவர்தான் அதற்கான வாரிசு என்ற நிலை, நமது அரசியல் யாப்பில் இருக்கின்றது. அதற்கேற்ப நாடாளுமன்றத்தில் ஒரு ஆசனத்தை மட்மே வைத்திருக்கும் ரணில் பிரதமராக வந்து இன்று சட்ட ரீதியான ஜனாதிபதி என்றும் ஆகிவிட்டார்.

உலக வரலாற்றில் ஒரு ஆசனத்தை மட்டுமே வைத்திருப்பவர் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் அதிகாரத்துக்கு வந்திருப்பது இலங்கையில் மட்டுமேயாக இருக்க வேண்டும். சரி அவர் எப்படியோ இன்று ஜனாதிபதி. அவரையும் வீட்டுக்கு அனுப்பி ஆக வேண்டும் என்று கடும் போக்காளர்கள் நிற்க்கின்றார்கள். சரி அவரையும் அனுப்பிவிட்டால் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். தினேஷ் குனவர்தன என்பவர் அந்த ஜனாதிபதி ஆசனத்திற்க்கு வந்து விடுவார். அவருக்கத் தேவை நாடாளுமன்றதில்  இதற்காக வாக்கெடுப்பு நடக்கின்ற போது பெரும்பான்மை உறுப்பினர்கள்  ஆதரவாக கை தூக்கினால் போதுமானது. அவர் ஜனாதிபதி.

ராஜபக்ஸாக்கள் மீது மக்களுக்கு என்னதான் கோபம் இருந்தாலும் நமது நாடாளுமன்றத்தில் இருக்கின்ற ஆளும் தரப்பு உறுப்பினர்களின் ஆதரவு அவர்களுக்கு தேவையான அளவுக்கு இன்று இருக்கின்றது. அத்துடன் தேவையாக இருந்தால் எதிராணியில் இருந்து கூட காசுக்கு பொருட்களை சந்தையில் வாங்குவது போல வங்கிக் கொள்ள நாடாளுமன்றத்தில் நிறையவே உறுப்பினர்களும் இருக்கின்றார்கள், என்பதனைத்தான் நமது அண்மைக் கால நாடாளுமன்றப் பதிவுகளில் பார்க்க முடிகின்றது. பணத்தை வாங்கிக் கொண்டவர்கள் உத்தமர்கள் போல்தான் இங்கு வார்த்தைகளையும் விடுவார்கள். இவை எல்லாம் நாம் அன்றாடம் பார்க்கின்ற காட்சிகள்தான். இப்போது புரட்சியின் பின் விளைவுகள் பற்றி சற்றுப் பார்ப்போம்.

ராஜபக்ஸாக்கள் இந்த நாட்டைக் குட்டிச்சுவராக்கிப் போட்டார்கள் இதன் பின்னர் இவர்களை இந்த நாட்டில் வைத்திருக்கக் கூடாது விரட்டியடிக்க வேண்டும் அப்படி அவர்கள் ஓடிப் போகின்ற போது நம்மிடமிருந்து கொள்ளையடித்த பணத்தையும் பறித்தெடுக்க வேண்டும். அவர்களை சிறையில் போட வேண்டும். தண்டிக்க வேண்டும். என்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீட்டுக்கு வீடு பேசிக் கொண்டிருந்தார்கள். இப்படியான வார்த்தைகளை உச்சரிக்காத மனிதர்களே இந்த நாட்டில் இல்லை என்ற அளவுக்கு அந்தக் கதைகள் இருந்தன.

கடைசியாக நடந்த நாடளுமன்ற அமர்வில் ஓடிப்போன ஜனாதிபதியை இங்கு அழைத்து வந்து அவருக்கு கௌரவமான வாழ்வுக்கான வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்றும் இப்போது ஆளும் தரப்பு உறுப்பினர்கள் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். நமது நாட்டில் ஜனாதிபதியாக இருந்த ஒருவர் பதவி துறக்கும் போது அவருக்கு ஓய்வு சம்பளம், ஒரு மாளிகை, காரியாலய வசதிகள், வாகனவசதிகள், அதிகாரிகள், விஷேட பாதுகாப்புப் படைப் பிரிவு, ஊழியர்கள் என்றெல்லாம் அவரை நடாத்துவதற்கு ஒரு பட்டாலமே கிடைக்கும். மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சி ஓடிய கோட்டாவுக்கும் நிச்சயமாக எதிர்வரும் நாட்களில் இந்த வசதி வாய்ப்புக்கள்  கிடைக்க அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. தேவையானால் தற்போதுள்ள நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குப்பலத்தில் அவர் இதற்கு மேலும் அடைந்து கொள்ளவும் முடியும். பெரும்பான்மை அவர்கள் கைகளில்தான் இருக்கின்றது.

அதற்கு அப்பால் இன்றைய நிகழ்வுகள் தொடர்பாக சி;ந்திக்கும் போது பதவியில் தற்போது இருக்கின்ற ஜனாதிபதி ரணில் வெரும் கைப்பொன்மை நிலை என்ற அளவுக்குத்தான் காரியங்கள் நடக்கின்றதோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது. அவருக்குத் தேவைப்படுவது வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த நாட்டில் ஜனாதிபதி கதிரையில் அமர்வது. அது இப்போது நடந்தும் விட்டது. எனவே இருக்கின்ற இரண்டரரை வருடங்களையும் எப்படியாவது பதவியில் இருந்து விட்டுப் போவதுதான் அவருடைய எதிர்பார்ப்பாகவும் இருக்க முடியும். நமது ஜனாதிபதி கோட்டாவை விட ரணில் மிகச் சிறந்தவர். துணிவு மிக்கவர் முதுகெலும்பு உள்ளவர் என்றெல்லாம் இப்போது ரணிலைப் பற்றி ஆளும் மொட்டுத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இவரை அவர்கள் மொட்டுக் கட்சிக்குத் தலைவராக்கி அழகு பார்த்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஏதுவும் இருக்காது.

கோட்டா மென்போக்கு ஏன்.?

தனக்கும் தனது அரசுக்கும் எதிராக மக்கள் கிளர்ச்சி பண்ணிக் கொண்டிருக்கின்ற நேரம் உச்ச அதிகாரங்களைக் கையில் வைத்திருந்த ஜனாதிபதி கோட்டா மென்போக்குடன் நடந்த கொண்டார். அவர் ஏன் அப்படி நடந்து கொணடார் என்றால் அவருக்கு எதிராக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் நிறையவே பாரிய குற்றச்சாட்டுக்கள் இருந்தன. மேலும் நாட்டில் இருக்கின்ற பொருளாதாரா நெருக்கடியினால் அவரும் அவரது அரசும் உலக நாடுகளின் தயவை எதிர்பார்த்திருக்க வேண்டி இருந்தது. எனவே அவர் அடக்கமாக நடந்து கொண்டதன் பின்னணிதான் இது. இதனால் கிளச்சிக்காரர்கள் என்னதான் செய்தாலும் அவர் அதனைப் பார்த்துக் கொண்டிருக்க மட்டுமே முடிந்தது. இந்தப் போராட்டம் இந்தளவு வெற்றிகரமாக நகர்வதற்கு இதுதான் பிரதான காரணம் என்பது நமது கணிப்பு.

ரணில் விடயத்தில் கதை முற்றிலும் வித்தியாசமானது அவர் தன்னைப் பற்றி விதைத்திருந்த கதைகளின் படி அவர் மேற்கத்திய ஆதரவாலர். அவர் அதிகாரத்துக்கு வந்த அடுத்த நாளே எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும். உலக நாடுகள் அவருக்கு அள்ளிக் கொடுத்துவிடும் என்று ஒரு எண்ணம் நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்த எண்ணம் வெரும் மாயை என்று நாம் நெடுநாளாக சொல்லி வந்திருந்தோம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது ரணில் சக்தி மிக்க ஜனாதிபதி. அவர் எதிபார்த்தபடி உலக நாடுகள் அவருக்கு உதவா விட்டாலும் அதனைப் பற்றி அவர் பெரிதாகக் கவலைப்பட்டுக் கொள்ளவும் மாட்டார். நாம் முன்பொருமுறை சொல்லி இருந்தது போல அவர் பூமியில் வாழ்கின்ற ஒரு மனிதனோ குடி மக்களின் உணர்வுகளை புரிந்த ஒரு தலைவரோ அல்ல. எனவே அவை எது பற்றியும் அவர் கவலைப்படமாட்டார். நமது இந்த வார்த்தைகளின் யதார்த்தத்தை பொருத்திருந்து பாருங்கள்.

இதனைப் புரிந்து கொண்டிருக்கின்ற ராஜபக்ஸாக்கள் இந்த ரணிலை வைத்து இப்போது நன்றாகவே காய் நகர்த்துகின்றார்கள். அண்மையில் நாடாளுமன்றத்தில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் அவசரகால சட்டம் விஷேட விதிகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இது முற்றிலும் குடிமக்களை குறிப்பாக அரசுக்கு எதிராகக் குரல் கொடுப்போரை தண்டிப்பதற்காக் கொண்டுவரப்பட்ட சட்டமூலம் என்பதனை நாம் இப்போது பார்க்க முடியும். இந்த சட்ட மூலம் நாடாளுமன்றத்துக்கு விவாதத்துக்கு வருவதற்கு முன்னரே அடக்கு முறை துவங்கி விட்டது. தானீஷ் அலி என்ன இளைஞர் விமானத்தில் இருந்து இழுத்து வெளியே எடுக்கப்பட்டு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றார்.

அடுத்த நாள் விவாதம் நடை பெற்றுக் கொண்டிருந்த நேரம் ருகுனு பல்கலைக்கழக்கத்தின் முன்னாள் மாணவ தலைவரும் ‘அனித்த’ எனும் அரசியல் பத்திரிகையில் கடமையாற்றிய எந்தணி விரங்க புஸ்பிக்க என்ற இளைஞன் அரச எதிர்ப்பு ஆர்ப்பட்டமொன்றில் கலந்து விட்டு வீட்டுக்கு வசு வண்டியில் பிரயாணம் செய்கின்றபோது  இனம் தெரியாதவர்கள் நீல நிற வேனில் வந்து அவரைக் கடத்திச் சென்றிருக்கின்றார்கள். இவை எல்லாம் பாரதூரமாக மனித உரிமை மீறல்களாக இருந்தாலும் அது பற்றியும் ரணில் கவலைப்பட்ட மாட்டார். இதனால் நாட்டுக்கு வருகின்ற அவப் பெயரோ பொருளாதார நெருக்கடிகளோ ரணிலுக்கு ஒரு பொருட்டாக இருக்காது என்பதற்கு நாம் முன்சொன்ன அவரது குன அம்சங்கள்தான் காரணம்.

ஆளும் தரப்பிலுள்ள மொட்டுக் கட்சியினர் இப்போது ரணிலை தமக்குத் தேவையானவாறு பாவித்து போராட்டக்காரர்களைப் பலி வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள். ரணில் தான் ஆட்சிப் பொறுப்பை (பிரதமர்) ஏற்பதாக இருந்தால் தனக்கு ஐந்து தேசிய பட்டியல் உறுப்பினர்களைத் தரவேண்டும் என்று முன்பு கேட்டிருந்தார். இதனை நாம் சில மாதங்களுக்கு முன்னர் சொல்லி இருந்தோம். ஆனால் அவர் ஜனாதிபதியாக வந்தும் அந்த உறுதி மொழிகள் நிறைவேவில்லை. அதற்காக யாரும் பதவி விலகுவதாகவும் இல்லை. இதனால் அதற்றுக்குப் பதிலாக இன்று ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்கள் ஐந்து பேருக்கு ஆளுநர் பதவி வழங்குவது என்று உறுதியாகி இருக்கின்றது. வருகின்ற தினங்களில் இது நடக்கலாம். அப்போது ரணில் விசுவாசிகள் பலர் ஆளுநராக பதவியில் அமர்வார்கள்.

பிரதமராக இருந்த மஹிந்தாவை விரட்டி விட்டோம். கோட்டாவையும்  விரட்டி விட்டோம். இதன் பின்னர் நாம் நினைக்கின்வாறுதான் ஆட்சி அமையப் போகின்றது. எமது கருத்துக்கள் திட்டங்களும் புதிய அரசு அமைக்கின்ற போது உள்வாங்கப்பட வேண்டும்> என்று போராட்டக்காரர்கள் கோரிக்ககையும் விடுத்திருந்தனர். பொது மக்கள் மட்டுமல்ல அரச உயர் அதிகாரிகளும் புரட்சி வெற்றி பெற்றுவிட்டது. ஜனாதிபதி செயலகம்> ஜனாதிபதி மாளிகை> பிரதமர் அலுவலகம்>  வீடு எல்லாமே கைப்பற்றியாகி விட்டது. பாராளுமன்றமும் சுற்றிவளைக்கபட்டது. இதற்கு மேல் ராஜபக்ஸாக்கள் ஆட்டம் குலோஷ் என்றுதான் அனைவரும் கணக்குப் போட்டிருந்தார்கள். சர்வதேச ஊடகங்களும் உலக்கிற்கு புதியதோர் அரசியல் நாகரிகம் இலங்கையில் இருந்து என்று செய்தி சொல்லி இருந்தது. நாம் கூட அப்படித்தான் பதிவுகளை வைத்திருந்தோம்.

இப்போதுதான் புரிகின்றது கனவுகள் களைந்து விட்டது. போட்டிருந்த திட்டங்கள் அனைத்தும் தவிடுபொடியாகி விட்டது என்பது. இப்போது இது தோற்றுப் போன ஒரு புரட்சி. அதில் பங்கு கொண்டவர்கள் அனைவரும் கூண்டோடு இம்சைகளுக்கு ஆளாக்கினற நிலைதான் நாட்டில் ஏட்பட்டிருக்கின்றது. இதனைத்தான் கடந்த புதன் கிழமை நிறைவேற்றப்பட்ட அவசரகால சட்டமூலம் நமக்குக் காட்டுகின்றது. அரச முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேக்கார நாடாளுமன்றத்தில் பேசும் போது இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை இருக்கின்றது. அவர்கள் கண்டறியப்படுவார்கள் என்று எச்சரித்திருந்ததுடன் அவர்களுக்கு வாழ்வே இல்லாமல் போகும் அவர்களது பரம்பரையினருக்கே அரச தொழில் வாய்ப்புக்களும் இல்லை.  எனவே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்திருந்தார். எனவே அரசு எதிர்காலத்தில் அடக்கு முறைக்குத் தயாராகின்றது என்பது மிகத் தெளிவு.

என்னதான் பட்ணி கிடந்தாலும் அரசுக்கு எதிராக எவருமே வாய் திறக்கக் கூடாது. என்ற செய்தியைத்தான் புதன் நிறைவேற்றபட்டட பிரேரணை நமக்கச் சொல்லி இருக்கின்றது. ஆனால் அரசு சொல்வது போல  அடக்குமுறை வெற்றி பெற்றதாக உலகில் எங்கும் வரலாறுகள் கிடையாது. கொலைகள் ஆள் கடத்தல் அடவடித்தனங்கள் சிறைகூடங்கள் என்று காட்டி மக்களை எவ்வளவு காலத்துக்குத்தான் அச்சுறுத்த முடியும்? ஆனால் இந்த ரணிலைப் பகடக் காயாக வைத்து மொட்டுக் கட்சியினர் நிறையவே அட்டகாசங்களைச் செய்ய அதிகளவு இடமிருக்கின்றது. இது வடக்குக் கிழக்கில் போர் காலத்திலும்  1988-1989 களில் நடந்த மனித உரிமைகள் மீறல்கள் அளவிற்குச் சென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஆனால் இன்றைய உலகம் வேறு அந்த நாள் கதைகள் வேறு என்பதனை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நன்றி:31.07.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

மீராபாய் சானு கதை

Next Story

மொட்டுக் கட்சியில் இன்னும் பலருக்கு அமைச்சு