கத்தார் 2022: சிவப்பு அட்டையால் தடுமாறிய வேல்ஸை சூப்பர் கோலால் வீழ்த்திய இரான்

கத்தார் உலக கோப்பையில் 40-க்கும் மேற்பட்ட கோல்கள் அடிக்கப்பட்டு விட்டன. ஆனால் வேல்ஸ் அணிக்கு எதிராக ஈரான் வீரர் ரூஸ்பே சேஷ்மி அடித்த கோல்தான் பெனால்ட்டி கட்டத்துக்கு வெளியே இருந்து அடிக்கப்பட்ட முதல் கோல்.

இரான்

தேசிய கீதம் தொடர்பான சர்ச்சை, அரசு ஆதரவாளர்கள் – எதிர்ப்பாளர்கள் மோதல் என மைதானத்துக்கு உள்ளேயேயும் வெளியேயும் அரசியலாக்கப்பட்டிருக்கும் இரான் கால்பந்து அணிக்கு வேல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் பெரும் புத்துணர்ச்சியைக் கொடுத்திருக்கும்.

முதல் போட்டியில் தேசிய கீதம் பாடாமல் புறக்கணித்த இரான் வீரர்கள், இந்தப் போட்டியில் தேசிய கீதம் பாடினர். அந்த நேரத்தில் அரங்கத்தில் இருந்த இரானிய ரசிகர்கள் அதைக் கேலி செய்யும் விதமாக உரத்த குரல் எழுப்பினார்கள்.

இவற்றுக்கு இடையே, கூடுதல் நேரத்தின் கடைசி நிமிடங்களில் அடித்த இரண்டு அதிரடி கோல்கள் மூலம் இரான் அணி கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டியில் முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.

போட்டியின் இறுதி நேரத்தில் வேல்ஸ் அணியின் கோல்கீப்பர் வேய்னி ஹென்னெஸ்ஸி இரானிய வீரர் மீது வேகமாக மோதி உதைத்ததால் அவருக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டது.

கத்தார் கால்பந்து போட்டியில் வழங்கப்பட்ட முதல் சிவப்பு அட்டை இதுவாகும். இதனால் கடைசி நேரத்தில் மாற்று கோல்கீப்பரைக் கொண்டு, 10 பேருடன் வேல்ஸ் அணி விளையாட நேர்ந்தது.

சேஷ்மி அடித்த கோலை இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை அடிக்கப்பட்ட கோல்களில் இரண்டாவது மிகச் சிறந்த கோல் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

செர்பியா அணிக்கு எதிராக பிரேசில் வீரர் ரிச்சார்லிசன் தலைக்கு மேல் இருந்த பந்தை தலைகீழாகச் சுழன்று அடித்த கோல் இதுவரையிலான கோல்களில் மிகச் சிறந்தது என்று பாராட்டுப் பெற்றிருக்கிறது.

போட்டியில் என்ன நடந்தது?

வேல்ஸும் இரானும் சமபலம் கொண்ட அணிகளாகவே கருதப்படுகின்றன. போட்டியின் ஆட்ட நேரம் தொடங்கியதில் இருந்தே இரு அணிகளின் காப்பரணை பேணியதுடன் எதிரணியின் கோலை நோக்கியும் பந்தைக் கடத்திக் கொண்டிருந்தன.

இரான்

13-ஆவது நிமிடத்தில் வேல்ஸின் கீஃபர் மூர் தலையால் முட்டி கோலை நோக்கித் திருப்பிய பந்தை இரானிய கோல் கீப்பர் ஹுசைனி அற்புதமாகத் தடுத்தார். முதல்பாதி முழுவதுமே கோல் ஏதும் போடப்படாமல் நிறைவடைந்த நிலையில், இரண்டாவது பாதி ஆட்டத்திலும் கோலடிக்க முடியாமல் இரு அணி வீரர்களுமே திணறிக் கொண்டிருந்தார்கள்.

ஆட்ட நேரம் முடிய 5 நிமிடங்கள் மாத்திரமே இருந்த போதுதான் வேல்ஸ் அணிக்கு பெரும் சோதனை வந்தது. இரானின் மெஹ்தி தரேமி கோலை நோக்கி பந்தைக் கடத்திச் சென்று கொண்டிருந்தபோது அதைத் தடுப்பதற்காக காலை உயர்த்தி வந்த வேல்ஸ் கோல் கீப்பர் ஹென்னஸி அவர் மீது மிக வேகமாக மோதினார்.

முதலில் அவருக்கு மஞ்சள் அட்டை கொடுத்து எச்சரிக்கப்பட்டது. பின்னர் காணொளி உதவி மூலம் அதை சிவப்பு அட்டையாக மாற்றினார் நடுவர். அதன் பிறகு மாற்று கோல்கீப்பரை வரவழைத்து 10 பேரைக் கொண்டு ஆடியது வேல்ஸ் அணி.

ஆட்ட நேரம் முடிந்த பிறகு நிறுத்த நேரமாக 9 நிமிடங்கள் கூடுதலாகத் தரப்பட்டன. அதில் 98-ஆவது நிமிடத்தில் பெனால்ட்டி பாக்ஸுக்கு வெளியே இருந்து நேராக கோலுக்குள் பந்தை அடித்தார் சேஸ்மி. சில வேல்ஸ் வீரர்களையும், கோல்கீப்பரையும் தாண்டி பந்து கோல்வலைக்குள் புகுந்தது.

அதன் பிறகு 101-ஆவது நிமிடத்தில் பாதுகாப்பு அரண் தளர்ந்திருந்த வாய்ப்பை பயன்படுத்தி ரமீன் ரேஸியன் மற்றொரு கோலை அடித்தார்.

இரான்

இரான் அடுத்த சுற்றுக்கு போக முடியுமா?

பி பிரிவில் இடம்பெற்றுக்கும் வேல்ஸும் இரானும் ஃபிபா தரவரிசையில் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.

வேல்ஸுக்கு 19-ஆவது இடம், இரானுக்கு 20-ஆவது இடம். கத்தார் உலகக் கோப்பை போட்டியில் இரான் அணி தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் 6-2 என்ற கோல் கணக்கில் மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கிறது.  மற்றொருபுறம் வேல்ஸ் அணி தனது முதலாவது போட்டியில் அமெரிக்காவுடன் தலா ஒரு கோல் அடித்து சமன் செய்தது.

இப்போதைய நிலையில் இங்கிலாந்தும் இரானும் 3 புள்ளிகளுடன் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பெற்றிருக்கின்றன. இரான் அணியும் இங்கிலாந்து அணியும் அமெரிக்க அணியுடன் மோத வேண்டியிருக்கிறது. வேல்ஸ் அணிக்கு இங்கிலாந்து அணியுடனான ஆட்டம் மட்டும் எஞ்சியிருக்கிறது.

இரான்

பலமான இங்கிலாந்து அணியை அதிக கோல் கணக்கில் வீழ்த்தினால் இரானை கடந்து அடுத்த சுற்றுக்குச் செல்வதற்கான வாய்ப்பு வேல்ஸுக்கு கிடைக்கும். ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல.

கடந்த 5 உலக கோப்பை போட்டிகளில் இரான் அணி இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றதில்லை. ஆனால் இந்த உலகக் கோப்பை தொடரில் இரானுக்கு அந்த வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது.

கூடவே, செளதி அரேபியா, ஜப்பான் ஆகிய அணிகளும் தங்களது பிரிவில் ஒரு வெற்றியைப் பெற்றிருப்பதன் மூலமாக அடுத்த சுற்றுக்கான வாய்ப்புகளை இன்னும் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.

இன்னும் ஒரு போட்டியில் இந்த அணிகள் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்குச் செல்வது எளிதாகிவிடும். குறைந்தபட்சம் அடுத்துவரும் போட்டிகளில் தோல்வியைத் தவிர்க்க வேண்டும்.

இரான்

உலகக் கோப்பை போட்டியில் இதுவரை நடந்தவை

கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் செலவில் மைதானங்கள், ஹோட்டல்கள், விமான நிலையங்கள், சாலைகள் உள்ளிட்ட வசதிகளுடன் ஏற்பாடுகள் பிரமாண்டமான செய்யப்பட்டிருக்கின்றன.

மாற்றுத்திறனாளி இளைஞர் குரான் வாசிக்க, ஹாலிவுட் நடிகர் மார்கன் ப்ரீமன் அவருடன் உரையாட உற்சாகமாகப்போட்டிகள் தொடங்கின.

முதல் போட்டியில் கத்தார் அணி எக்வடோர் அணியைத் தோற்கடித்து உள்ளூர் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. பி பிரிவில் இரான் அணியை இங்கிலாந்து அணி 6-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இந்தத் தொடரில் அதிர்ச்சியளிக்கும் அம்சமாக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் அர்ஜென்டினா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபிய அணி வீழ்த்தியது.

இ- பிரிவு ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் அணி கோஸ்டா ரிகா அணியை 7-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, இந்தப் போட்டியில் ஒரே ஆட்டத்தில் அதிக கோல்களை அடித்த அணி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது.

இ-பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி அணி ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. போர்ச்சுகல், பெல்ஜியம், பிரேசில் ஆகிய முன்னணி அணிகள் தங்களது முதலாவது போட்டிகளில் வென்றிருக்கின்றன.

Previous Story

40,000 பேருடன் காணாமல் போன பாகிஸ்தான் நகரம்!

Next Story

அல்ஜீரியாவை அசைத்த இஸ்மாயில் படுகொலை: 49 பேருக்கு மரண தண்டனை!