-வக்கார் முஸ்தஃபா-
முதல் பார்வையிலேயே ஏற்பட்ட காதலின் கதை இது. அதுவும் 49 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாய பேரரசர் ஔரங்கசீப் ஆலம்கீரின் காதல் கதை. அப்போது ஷாஜகான் இந்தியாவின் பேரரசராக இருந்தார். அவருடைய மகன் இளவரசர் ஒளரங்கசீப்புக்கு அப்போது வயது 35.

ஔரங்கசீப் இரண்டாவது முறையாக தக்காணத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்க ‘ஒளரங்காபாத்’ செல்லும் வழியில் புர்ஹான்பூரை கடந்து சென்றார். புர்ஹான்பூர் தற்போதைய இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தில், தப்தி ஆற்றின் வலது கரையில் அமைந்துள்ளது. தாஜ்மஹாலில் நிரந்தரமாக அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு அவரது தாயார் மும்தாஜ் மஹால் , தற்காலிகமாக அடக்கம் செய்யப்பட்ட இடம் இதுவாகும்.
ப்ரோகேட், மஸ்லின் மற்றும் பட்டு ஆகியவற்றிற்கு பிரபலமான இந்த நகரத்தில் ஔரங்கசீப்பின் சித்தி சுஹேலா பானோ வசித்து வந்தார். அவர் மிர் கலீல் கான்-இ-ஜமானை மணம் செய்திருந்தார். ஒளரங்கசீப் அவரை சந்திக்கச் சென்றார்.
“ஒளரங்கசீப் புர்ஹான்பூரின் ஜைனாபாதில் ‘அஹு கானா’ தோட்டத்தில் உலாவிக்கொண்டிருந்தபோது, இளவரசரின் சித்தியும் தனது பணிப் பெண்களுடன் அங்கு வந்திருந்தார்,” என்று நவாப் ஷம்ஸ்-உத்-தௌலா ஷாநவாஸ் கான் மற்றும் அவரது மகன் அப்துல் ஹயீ கான் ஆகியோரால் எழுதப்பட்ட 18ஆம் நூற்றாண்டின் ‘மாஸர்-அல்-உம்ரா’ புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டி, மௌலானா அபுல் கலாம் ஆசாத், தனது ‘குபர்-இ-காதிரில்’ எழுதியுள்ளார். திறமை, நடை உடை, பாவனை மற்றும் அழகிற்கு ஈடு இணையே இல்லை. நடந்துகொண்டிருந்த அவர்கள் அனைவரும் ஒரு மரத்திற்கு அருகே வந்தனர். அந்த மரத்தில் மாம்பழங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. பணிப்பெண்கள் அனைவரும் மரத்தடியை அடைந்தவுடன், அவர்களில் ஒருவர் இளவரசரை கவனிக்கவும் இல்லை, அவரது சித்தி இருப்பதையும் பொருட்படுத்தவில்லை. அந்தப் பெண் துணிச்சலாக குதித்து உயரமான கிளையிலிருந்து ஒரு பழத்தைப் பறித்தார்.”

மௌலானா அபுல் கலாம் ஆசாத்
இளவரசரின் சித்திக்கு இந்தச் செயல் பிடிக்கவில்லை. அந்தப் பெண்ணை அவர் கண்டித்தார். ஆனால் அந்தப்பெண் இளவரசரை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே அவரைத்தாண்டி சென்றுவிட்டார். இந்த ஓரக் கண் பார்வை இளவவரசரின் மனதை கொள்ளை கொண்டது. அவர் நிலைகுலைந்தார்.
ஔரங்கசீப்பின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஹமிதுதீன் கான் இந்த நிகழ்வை சற்று வித்தியாசமாக விவரித்துள்ளார் . “இது அவரது சித்தியின் வீடு என்பதால், அந்தப்புர பெண்களை அவர் கண்ணில் படாதவாறு வைக்க அதிக கவனம் செலுத்தப்படவில்லை. இளவரசர் முன்னறிவிப்பு இல்லாமல் வீட்டிற்குள் வந்துவிட்டார். ஹீராபாய் என்ற இயற்பெயர் கொண்ட ஃஜைனாபாதி, ஒரு மரத்தடியில் நின்றுகொண்டு, தனது வலது கையால் கிளையைப் பிடித்தபடி மெதுவாக பாடிக்கொண்டிருந்தார்,”என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மயக்கமடைந்த இளவரசர்…
“அவரைப்பார்த்த இளவரசரால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அங்கேயே அமர்ந்து பின் மயங்கி தரையில் சாய்ந்தார். இந்தச் செய்தி சித்தியை எட்டியதும் அவர் வெறுங்காலுடன் ஓடி வந்து ஒளரங்கசீப்பை கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்தார். சிறிது நேரம் கழித்து இளவரசருக்கு சுயநினைவு திரும்பியது.”
‘என்ன நோய் இது?’ இதற்கு முன் எப்போதாவது உனக்கு இப்படி நடந்திருக்கிறதா?’என்று சித்தி கேட்டார்.
இளவரசர் அப்போது பதில் எதுவும் சொல்லவில்லை. ஆனால் நேரம் நள்ளிரவை எட்டியபோது, “எனது நோயைக் குறிப்பிட்டால், அதை உங்களால் குணப்படுத்த முடியுமா?” என்று இளவரசர் தனது சித்தியிடம் கேட்டார்.

அவரது சித்தி இந்த வார்த்தைகளைக் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். “நீ சிகிச்சை என்று என்ன சொல்கிறாய். நான் (உன் சிகிச்சைக்காக) என் உயிரைக் கொடுப்பேன்” என்று கூறினார்.
அதன் பிறகு இளவரசர் அவரிடம் முழு விஷயத்தையும் கூறினார். இதைக் கேட்டு சித்தி மௌனமானார். கடைசியில் இளவரசர், ‘என் வார்த்தைகளுக்கு பதில் சொல்லாத நீங்கள் எப்படி எனக்கு சிகிச்சை அளிப்பீர்கள்,”என்றார்.
பிறகு பதிலளித்த சித்தி, “உனக்காக நான் என்னை தியாகம் செய்துவிடுவேன். ஆனால் என் கணவரைப் பற்றி உனக்குத் தெரியுமே. அவர் மிகவும் பயங்கரமானவர். ஹீராபாய் பற்றிய உன் பேச்சைக் கேட்டால், முதலில் அவளையும், பின்னர் என்னையும் கொன்றுவிடுவார். இதைப்பற்றி அவரிடம் சொல்வதால் எந்தப்பயனும் இல்லை. என் உயிர் மட்டுமே பறிபோகும். எந்தக் குற்றமும் செய்யாத அந்த ஏழை அப்பாவியின் வாழ்க்கையை ஏன் கெடுக்கவேண்டும்,” என்றார்.
அதற்கு இளவரசர், “நிச்சயமாக, நீங்கள் சொல்வது உண்மைதான். நான் வேறு ஏதாவது உத்தியைக் கையாள்கிறேன்,” என்று பதிலளித்தார். சூரிய உதயத்திற்குப் பிறகு இளவரசர் தன் அரண்மனைக்குத் திரும்பினார், அவர் எதுவும் சாப்பிடவில்லை. பின்னர் அவர், தன் நம்பிக்கைக்குரிய முர்ஷீத் குலி கானுடன் விரிவாக விவாதித்தார்.
“எனது ரத்தத்திற்கு ஈடாக, உங்களுடைய பணி நிறைவேறினால், அதுவே எனக்குப்போதும்,” என்று முர்ஷீத் குலி கான் கூறினார்.

முதல் பார்வையிலேயே காதல் வலையில் விழுந்த இளவரசர்
“எனக்காக உங்கள் உயிரைத் தியாகம் செய்ய நீங்கள் தயாராக உள்ளீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் சித்தியை விதவையாக்க என் இதயம் தயாராக இல்லை. இது தவிர குர்ஆனின் விதிகளின்படி, மதச் சட்டத்தைப் பற்றிய அறிவைப் பெற்ற ஒரு நபர், இதுபோல வெளிப்படையாக கொலை செய்ய முடியாது. நீங்கள் அல்லாஹ் மீது பாரத்தை போட்டுவிட்டு, கான்-இ-ஜமானிடம் (வெற்றிக்காக) பேச வேண்டும்,” என்று இளவரசர் கேட்டுக்கொண்டார்.
முர்ஷித் குலி கான் முழு கதையையும் கான்-இ-ஜமானிடம் விவரித்தார். “இளவரசருக்கு எனது வணக்கம். இதற்கான பதிலை நான் அவருடைய சித்தியிடம் அளிக்கிறேன்,” என்று அவர் பதில் சொன்னார். ஔரங்கசீப்பின் அந்தப்புரத்திலிருந்து சித்ராபாயை தன்னிடம் ஒப்படைக்கும்படி கான்-இ-ஜமான் தனது மனைவிக்கு செய்தி அனுப்பினார்.”
வரலாற்றாசிரியர் ஜாதுநாத் சர்க்கார் இந்தக்கூற்றுடன் உடன்படவில்லை.” இந்த சம்பவத்தின் விவரங்களில் கருத்து வேறுபாடு உள்ளது. ஆனால் மத நம்பிக்கையும், எளிய மனமும் கொண்ட இளவரசர் முதல் பார்வையில் காதலித்ததை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள்,”என்று எழுத்தாளர் ராணா சஃப்வி கூறுகிறார்.
‘ஒளரங்கசீப்பின் இளமை காதல்’ என்று கஜேந்திர நாராயண் சிங் குறிப்பிடுவதும், ‘ஒளரங்கசீப்பின் ஒரே காதலி’ என்று வரலாற்றாசிரியர் ஜாதுநாத் சர்க்கார் குறிப்பிடுவதும் ‘ஹீராபாயை’தான். அவர் ஒரு காஷ்மீரி இந்து. அவர் பெற்றோரால் சந்தையில் விற்கப்பட்டார். கான்-இ-ஜமானின் அரசவையில் ஹீராபாய் பாடல்கள் பாடி, நடனமாடி வந்தார்.

ஔரங்கசீப் தனது சித்தியிடம் மன்றாடி ஹீராபாயைப் பெற்றதாக ‘மாஸர்-அல்-உம்ரா’ வில் எழுதப்பட்டுள்ளது. “ஔரங்கசீப் தனது சித்தப்பாவிடமிருந்து ஹீராபாயை அழைத்துச் செல்ல விரும்பியபோது, அதற்குப் பதிலாக அவர் சித்ராபாயைக் கோரினார்,” என்று ‘எஹ்காம்-இ-ஆலம்கிரி’ குறிப்பிடுகிறது. இந்த பரிமாற்றம் நடந்தது.
ஹீரா பாய்க்கு ‘ஃஜைனாபாதி மஹால்’ என்று பெயர் வழங்கப்பட்டது என்று ஜாதுநாத் சர்க்கார் கூறுகிறார். ஏனெனில் அரச அந்தப்புரப் பெண்களின் பெயர்களை பகிரங்கமாகக் குறிப்பிடக்கூடாது. மேலும் அவர்களுக்கு வேறு பெயர் வைக்கப்பட வேண்டும் என்று பேரரசர் அக்பர் காலத்திலிருந்தே ஒரு வழக்கம் இருந்தது. அவர்கள் பிறந்த இடம் அல்லது அரச அந்தப்புரத்தில் அவர்கள் எந்த இடம் அல்லது நாட்டில் இருந்து சேர்ந்தார்களோ, அந்தப் பெயரால் அவர்கள் அழைக்கப்பட்டனர்.
விஷயம் ஷாஜகானின் காதுகளை எட்டியது
எனவே ஃஜைனபாதைச் சேர்ந்த ஹீராபாய் ஒளரங்கசீப்பின் அரண்மனைக்குள் நுழைந்தபோது, அவள் ஃஜைனாபாதி மஹால் என்று அழைக்கப்பட்டாள். ” உலகத்தைப் பற்றி கவலையில்லாமல் இருந்தபோதும், ஒளரங்கசீப் பிரபலமானார். ஃஜைனாபாதியின் அன்பில் கட்டுண்டு கிடந்தார்.
தனது கைகளால் மதுக்கோப்பையை நிரப்பி ஃஜைனாபாதியிடம் அளித்து, அவரது மயக்கும் அழகில் கிறங்கிப்போவார். ஒரு நாள் ஃஜைனாபாதி தனது கையால் மதுவை நிரப்பி ஔரங்கசீப்பிடம் கொடுத்து அதை உதட்டில் வைத்து பருகும்படி வற்புறுத்தினார்,” என்று மாஸர்-அல்-உம்ரா தெரிவிக்கிறது.
“இந்த மதுவை குடிப்பதை வைத்து, என் அன்பையும் இதயத்தையும் எடைபோட வேண்டாம் என்று இளவரசர் கெஞ்சினார். ஆனால் ஹீராபாய் கேட்கவில்லை. வேறு வழியில்லாமல் இளவரசர், மதுவை உதடுகளால் பருக முடிவுசெய்தார்.
இளவரசர் வேறுவழியில்லாமல் குடிக்கத் தயாராக இருப்பதைக் கண்டவுடன் ஹீராபாய், உடனடியாக அவரது உதட்டின் அருகிலிருந்து மதுக்கோப்பையை நீக்கி, குடிக்க வைப்பது தன் நோக்கம் அல்ல, அவரது காதலை சோதிக்கவே இப்படி செய்ததாக கூறினார்.”
இந்தச் செய்தி ஷாஜகானை எட்டத் தொடங்கியது. சம்பவங்களைப் பதிவு செய்தவர்களிடம் இருந்து விவரங்களும் வரத் தொடங்கின.
இந்த சம்பவத்தை ஒளரங்கசீப்பின் மூத்த சகோதரர் தாரா ஷிகோ, தனது தந்தை ஷாஜகானிடம் கூறியதாக ராமானந்த் சாட்டர்ஜி எழுதுகிறார். இந்த நயவஞ்சகரின் சுய கட்டுப்பாடு, தனது சித்தி வீட்டுப் பணிப்பெண்ணுக்காக அழிந்து வருவதைப் பாருங்கள்’ என்று அவர் புகார் கூறியதாக கூறப்படுகிறது.
1653 நவம்பரில் ஃஜைனபாதி ஒரு மாதத்திற்கு ஒளரங்கசீப்புடன் தௌலதாபாத் சென்றிருந்தார் என்று கருதப்படுகிறது. அவர் 1654 இல் காலமானார்.
ஔரங்கசீப் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தார் என்று மௌலானா ஆசாத் எழுதுகிறார். அதே நாளில், அவர் வேட்டைக்குச் செல்ல உத்தரவிட்டார். துக்கமான சூழலில், கேளிக்கை மற்றும் வேட்டையாடுவது எப்படிப் பொருந்தும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் ஆச்சரியமடைந்தனர்.
ஔரங்கசீப் வேட்டையாட அரண்மனையை விட்டு வெளியேறியபோது, மிர்-இ-அஸ்கர் (தளபதி) ஆகில் கான் ராஸி,” இந்த துக்ககரமான சூழலில் வேட்டையாடச் செல்வது, நாம் கண்ணால் பார்க்க முடியாத ஏதோ ஒன்றை அடிப்படையாகக் கொண்டது,”என்று கூறினார்.
பதிலுக்கு ஔரங்கசீப் பாரசீக மொழியில் இந்த கவிதையை படித்தார். “வீட்டில் அழுது துடித்ததில் என் இதயம் திருப்தியடையவில்லை. காட்டில் நான் முழு மனதுடன் அழ முடியும்,”என்பது அந்த கவிதையின் பொருள்.
இதைக்கேட்ட ஆகில் கானின் நாவில் இருந்து திடீரென கவிதை வரிகள் வெளிவந்தன. “காதல் மிகவும் சுலபம் என்று தோன்றியது, ஆனால் அது மிகவும் கடினமாக இருந்தது. பிரிவு மிகவும் கடினமானது. ஆனால் காதலி அதை எவ்வளவு எளிதாக ஏற்றுக்கொண்டார்.”

ஔரங்கசீப் உணர்ச்சிவசப்பட்டார். இது யாருடைய கவிதை என்று கேட்டார். கவிஞர் என்று கூறப்படுவதை விரும்பாத ஒருவரின் கவிதை இது என்று ஆகில் கான் கூறினார்.
இந்தக்கவிதை ஆகில் கானுடையது என்பதை ஒளரங்கசீப் புரிந்து கொண்டார். அவரைப் பாராட்டி, அன்றைய தினத்திலிருந்து அவரது பாதுகாப்பை தன்னுடைய பொறுப்பில் ஏற்றுக்கொண்டார்.
இத்தாலிய பயணியும் எழுத்தாளருமான நிக்கோலாவ் மனுசி(1639-1717) இவ்வாறு எழுதுகிறார். “ஒளரங்கசீப் சிறிது காலம் தொழுகையைக்கூட மறந்துவிட்டார். அவரது நாள் இசை மற்றும் நடனத்தில் கழிந்தது. நடனக் கலைஞர் ஃஜைனாபாதி இறந்தபோது, ஔரங்கசீப், இனி மது அருந்தவோ, இசையை கேட்கவோ மாட்டேன் என்று சத்தியம் செய்தார்.”
“அந்த நடனக் கலைஞரின் வாழ்க்கையை முடித்துவைத்ததன் மூலம் அல்லாஹ் தனக்கு கருணை புரிந்ததாகவும், அவர் காரணமாக ஏற்பட்ட பல தீய பழக்கங்கள் ஆட்சி செய்யும் வாய்ப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தன என்றும் ஒளரங்கசீப் பின்னாளில் அடிக்கடி கூறுவார்”.