ஐ.நா. வில் தீர்மானம் வெற்றி! இஸ்லாமோ போபியா மார்ச் 15

ஷகீல் அக்தர்

‘சீனா, ரஷ்யா ஆதரித்தன’

ஐநா பொதுச்சபை மார்ச் 15ஆம் தேதியை ‘இஸ்லாமோபோபியாவுக்கு எதிரான நாள்’ என நிர்ணயித்துள்ளது. இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு (OIC) சார்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கான பாகிஸ்தான் தூதர் முனிர் அக்ரம், இது தொடர்பான ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார்.

அது உலக அளவில் வாழும் இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களுக்கு எதிரான வெறுப்பு, பாகுபாடு மற்றும் வன்முறையைத் தடுக்கும் நோக்குடன் முன்மொழியப்பட்டது. ஓஐசி அமைப்பில் உள்ள 57 நாடுகளுடன் சேர்த்து, சீனா, ரஷ்யா உட்பட எட்டு நாடுகளும் இந்த தீர்மானத்தை ஆதரித்தன.

ஆனால் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு இந்தியா ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளது. இந்து, சீக்கியம், பௌத்தம் போன்ற பிற மதங்களுக்கு எதிரான வன்முறை, பாகுபாடு மற்றும் வெறுப்பை இந்த தீர்மானம் புறக்கணிக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திரிமூர்த்தி கூறினார்.

கோடிக்கணக்கான முஸ்லிம்கள் வாழும் இந்தியா போன்ற ஒரு நாடு, குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிரான வன்முறையையும் வெறுப்பையும் கட்டுப்படுத்தும் தீர்மானத்தை எதிர்ப்பதன் காரணம் என்ன?

இஸ்லாமிய வெறுப்புக்கு எதிரான தீர்மானம் என்ன சொல்கிறது?

இந்த தீர்மானத்தை அறிமுகம் செய்து பேசிய பாகிஸ்தான் தூதர் முனீர் அக்ரம், “இஸ்லாமிய வெறுப்பு என்பது ஒரு உண்மை. உலகின் பல பகுதிகளில் இந்தப் போக்கு வளர்ந்து வருகிறது. அந்த உண்மையைக் கருத்தில் கொள்ள வேண்டும்,” என்றார்.முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு, பாகுபாடு மற்றும் வன்முறை போன்ற வடிவங்களில் இஸ்லாமோஃபோபியாவை உலகின் பல பகுதிகளில் காணலாம் என்றார் அவர்.

இத்தகைய வன்முறைகள், பாகுபாடுகள் மற்றும் விரோதமான நடத்தைகள் முஸ்லிம்களின் மனித உரிமைகளை கடுமையாக மீறுவதாகவும், இது முஸ்லிம் நாடுகளில் அமைதியின்மையை உருவாக்குவதாகவும் பாகிஸ்தான் தூதர் மேலும் தெரிவித்தார்.இந்த தீர்மானம் குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு எதிரான குரலை ஒலிக்கச் செய்கிறது ஆனால் பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் இலக்கு வைக்கப்படுவதை இந்த தீர்மானம் புறக்கணிக்கும் வகையில் உள்ளது என்பது இந்தியாவின் நிலைப்பாடு.

ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் பிரதிநிதி டி.எஸ். திரிமூர்த்தி இது குறித்து பேசுகையில், “ஒரு மதத்தை முன்னிலைப்படுத்துவது வேறு, ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிரான வெறுப்பு எதிர்ப்பு தினத்தை கடைப்பிடிப்பது வேறு,” என்றார்.

“மற்ற மதங்களுக்கு எதிரான வெறுப்பு மற்றும் வன்முறையின் தீவிரத்தை இந்த தீர்மானம் மட்டுப்படுத்தலாம்,” என்று அவர் கூறினார்.இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் பௌத்தர்களுக்கு எதிரான வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களைப் பற்றியும் இந்த கூட்டத்தில் டி.எஸ். திரிமூர்த்தி பேசினார்.

“உலகில் 1.2 பில்லியன் இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களும், 535 மில்லியன் பௌத்தத்தைப் பின்பற்றுபவர்களும், 30 மில்லியனுக்கும் அதிகமான சீக்கியர்களும் உள்ளனர். அந்த வகையில், குறிப்பிட்ட ஒரு மதம் மட்டுமே வெறுப்புக்கு இலக்காகும் என்ற கண்ணோட்டத்தை கைவிட வேண்டிய நேரம் இது. மாறாக எல்லா மதங்களும் ஒரே மாதிரியான பிரச்னையை எதிர்கொள்கின்றன,” என்றார் திருமூர்த்தி.

ஏற்கெனவே ஆகஸ்ட் 22ஆம் தேதியை மதம் தொடர்பான வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான தினத்தை கடைப்பிடிக்க நாம் 2019இல் ஒப்புக் கொண்டுள்ளோம். நவம்பர் 16ஆம் தேதியை சர்வதேச சகிப்புத்தன்மை தினத்தை கடைப்பிடிக்க நாம் ஒப்புக் கொண்டுள்ளோம். ஐ.நா அவையில் நாம் உள்ளடக்கிய நிலைப்பாட்டை பராமரிக்க வேண்டும். இந்த தீர்மானத்தில் இந்தியா ஆதரிக்கும் பன்முகத்தன்மை என்ற வார்த்தை இடம்பெறாதது துரதிருஷ்டவசமானது. ஐ.நா அவை குறிப்பிட்ட ஃபோபியாக்களுக்கு சாதகமான கூடமாக அமைந்து விடக்கூடாது என இந்தியா கருதுகிறது என்றும் திருமூர்த்தி பேசினார்.

இந்தியா எதிர்ப்பது அவசியமா?

இந்திய பத்திரிகையாளரும் ஆய்வாளருமான ஹர்தோஷ் சிங் பால், “ஐ.நா. தீர்மானம் ஒரு நல்ல நடவடிக்கை, ஆனால் தீர்மானம் நாளையே விமர்சிக்கப்படலாம் என்பதால் இந்தியா கவலை கொண்டுள்ளது,” என்கிறார்.”இந்தியா ஒருபுறம், மத சமத்துவம், ஜனநாயகம் மற்றும் சகிப்புத்தன்மை பற்றி பேசுகிறது. மறுபுறம், குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) போன்ற மத பாகுபாட்டின் அடிப்படையில் சட்டங்களை இயற்றுகிறது. நாட்டின் ஜனநாயகம் பெரும்பான்மையினருக்கு சேவை செய்யும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.

மறுபுறம் மதம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் சகிப்புத்தன்மை பற்றி பேசுகிறது,” என்கிறார் ஹர்தோஷ்.ஆபிரகாமிய மதங்களுக்கு (யூத, கிறித்தவ, இஸ்லாமிய மதங்கள்) எதிராக மட்டுமின்றி இந்து, பௌத்தம், சீக்கிய மதங்களுக்கு எதிராகவும் மத வெறுப்பு பரவி வருவதாக ஐக்கிய நாடுகள் சபையில் சில மாதங்களுக்கு முன் இந்தியா முறையிட்டது.

ஆப்கானிஸ்தானின் பாமியானில் உள்ள கௌதம புத்தரின் பழமையான சிலை இடிப்பு, குருத்வாராக்களை அவமதிப்பு, சீக்கியர்களை குருத்வாராக்களில் படுகொலை செய்தல், கோயில்கள் மீது தாக்குதல், கோயில் சிலைகளை உடைத்து கொண்டாடுதல் போன்றவை ஆபிரகாமிய மதத்தைச் சாராதவர்களுக்கு எதிரான மத வெறுப்பின் சமகால வடிவங்கள் என்று இந்திய தூதர் தனது உரையில் குறிப்பிட்டார். ‘தி இந்து’ நாளிதழின் முன்னணி ஆய்வாளர் அமித் பர்வா பிபிசியிடம் பேசுகையில், “இஸ்லாமோபோபியா தீர்மானம் தொடர்பாக இந்தியா மிகவும் விசித்திரமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது,” என்றார்.

“இஸ்லாமிய வெறுப்பு ஒரு தீவிரமான பிரச்னை. அது இப்போது உலக அரங்கில் ஒரு தீவிரமான பிரச்னையாக உருவெடுத்திருப்பது நல்லது,” என்று அவர் கூறினார். “இஸ்லாமிய வெறுப்பில் கவனம் செலுத்தாததற்கு முக்கிய காரணங்களில் ஒன்று பயங்கரவாதம்,” என்கிறார் அவர்.இருப்பினும், ஐ.நா.வின் தீர்மானத்தை விட முக்கியமான அம்சம், உலக நாடுகள் அந்தந்த நாடுகளில் இஸ்லாமோபோபியாவுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என்று அமித் பார்வா வாதிடுகிறார்.

இந்தியாவின் நிலைப்பாடு பற்றி கேட்டதற்கு, “இந்து மற்றும் சீக்கிய மதங்களுக்கு எதிரான மத வெறுப்பைப் பொருத்தவரை, இது பெரும்பாலான மேற்கத்திய நாடுகளின் அறியாமையின் விளைவு” என்று அவர் பதிலளித்தார். “இந்தியா தமது உள்நாட்டு பார்வையாளர்களுக்கு ஒரு செய்தியை அனுப்ப இந்த நிலையை எடுத்துள்ளது,” என்று அவர் மேலும் தெரிவித்தார். முஸ்லிம்கள் இந்தியாவில் மிகப்பெரிய சிறுபான்மையினர் மற்றும் அவர்கள் நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 14% உள்ளனர்.

இந்தோனீசியா மற்றும் பாகிஸ்தானில் வாழும் முஸ்லிம்களைப் போலவே, இந்தியா அதிக முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது. எவ்வாறாயினும், இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாடு, வன்முறை மற்றும் மத வெறுப்பு சம்பவங்கள் கடுமையாக அதிகரித்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் மற்றும் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இத்தகைய சூழலில்தான் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகரித்து வருவதாக எழும் கேள்விகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் சில அரபு நாடுகள் சில காலமாக கவலை வெளியிட்டு வருகின்றன.

Previous Story

குற்றவாளி கூண்டில் கொரோனா!

Next Story

மனிதர்கள் ஏன் சிரிக்கிறார்கள்? - அறிவியல் கூறும் காரணங்கள்