ஏமாற்றுத் தந்திரமும் ஜெனீவா மந்திரமும்!

-நஜீப் பின் கபூர்-

நாம் வாழ்கின்ற சமூகத்தில் முன்னுக்குப் பின் முரனாகப் பேசுபவர்களையும் நயவஞ்சகமாக நடந்து கொள்பவர்களையும் நிறையவே பார்த்தும் சந்தித்தும் இருக்கின்றோம். அரசியல் அரங்குகளிலும் மேற்சொன்னவை சர்வசாரதாரன நிகழ்வுகள்தான். என்றாலும், இப்படியான பச்சோந்தித்தன செயல்பாடுகளும் நடவடிக்கைகளும் எல்லா இடங்களிலும் எல்லோரிடத்திலும் விலைபோக மாட்டாது என்பதும் தெளிவு. அரசியல் ரீதியில் நரித்தனம் ஜீரணித்துக் கொள்ளக் கூடியதும் அவசியமானதும் ஒன்றுதான்.

ஆனால் நயவஞ்சகத்தனம்-கபடம் என்பன ஏற்றுக் கொள்ள முடியாதவையே என்பது எமது கருத்து. வெளிப்படைத் தன்மையுடன் செயலாற்றுகின்றபோது அங்கு சிக்கல்களுக்கோ நெருக்கடிகளுக்கோ இடமிருக்காது.  அதே நேரம் நயவஞ்சகத்தனமாக நடந்து கொள்ளும் போது நிறையவே நெருக்கடிகளையும் அவமானங்களையும் சந்திக்க வேண்டி வருவதும் தவிக்க முடியாதது.

இப்போது தலைப்புக்குள் பிரவேசிப்போம். நாம் வாக்குறுதிகள் கொடுத்து விட்டால் அதனை மீறாமல் நடந்து கொள்வது நாகரிகமானது. நிறைவேற்ற முடியாது அல்லது நிறைவேற்ற மாட்டோம் என்று ஏற்கொனவே தெரிந்து கொண்டு நாம் வாக்குறுதிகளைக் கொடுப்போமாக இருந்தால் அது நயவஞ்சகம்  என்பதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமிருக்காது.

அரசு என்றவகையில் உள் நாட்டில் ஒன்றையும் சர்வதேத்தில் மற்றுமொன்ளையும் பேசி காரியம் சாதிக்க முனைவது இந்த தகவல் தொழிநுட்பங்கள் வளர்ச்சியடைந்துள்ள காலத்தில் எந்தளவு ஏற்புடையது என்று தெரியவில்லை. ஐரோப்பாவுக்குப் போய் ஆங்கிலத்தில் ஒன்றையும் உள்நாட்டில் வந்து சிங்களத்தில் பேசும் போது அதற்குத் தலைகீழாக மாற்றிப் பேசுவதும்தான் இலங்கை இராஜதந்திரமாக இருந்து வருக்கின்றது.

இதனால்தான் இன்று நமது அரசாங்கம் உள்நாட்டிலும் சர்வதேச அரங்குகளிலும் நிறையவே நெருக்கடிகளுக்கு இலக்காகி வருகின்றது. அரசின் கொள்கை வகுப்பாளர்களும் தலைவர்களின் பேச்சுக்களைத் தயாரிப்பவர்களும் எஜெமான்களைத் திருப்திப்படுத்தும் நோக்கில் இவற்றை முன்னெடுப்பதால் தேசம் என்ற வகையில் அண்மைக் காலங்களில் நிறையவே தலை குனிவை நாடு சந்தித்து விட்டது. அந்த விவகாரங்களை நாம் இங்கு பட்டியலிட விரும்ப வில்லை.

இனப் பிரச்சினை விவகாரத்தில் இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு, பதிமூன்றாவது அரசியல் திருத்தம் தொடர்பில் இலங்கை அரசாங்ம் கடைப் பிடித்து வருகின்ற முரன்பாடான கொள்கை. இந்தியாவில் போய் இறங்கும் போது பதிமூன்று பிளஸ் என்பார்கள் கொழும்பில் வந்து இறங்கியதும் பதிமூன்று மைனஸ் என்று கால் வைப்பார்கள்.

மீண்டும் இந்தியாவிடம் ஏதாவது சாதித்துக் கொள்வதாக இருந்தால் நாம் முன்பு சொன்து போல அங்கே பிளஸ் இங்கே மைனஸ் கதைதான். இது கூட இன்று இந்தியாவுக்கு நன்கு பழக்கப்பட்டுப் விட்டது. இவர்களுக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் கூட இது விடயத்தில் சூடு சொரனையோ வெட்கமமோ கிடையாது என்று குறிப்பிட்டால் அது கடுமையான வார்த்தைப் பிரேயோகமாக எவரும் கருதுவதற்கு இடம் இருக்காது என்று நாம் நினைக்கின்றோம்.

இனப் பிரச்சினைக்கு தமிழகத்தின் உணர்வும் ஆர்வமும் வெலுத்துப் போன சீலைத் துணி போல் இன்று காட்சி தருகின்ற அதே வேலை, தமிழர் தரப்பில் இனப் பிரச்சினைக் கோஷம் என்பது வெரும் அரசியல் பிழைப்பாகப் போய்க் கொண்டிருக்கின்றது. அதே போன்று முஸ்லிம்களின் அரசியல் கோஷம் வெருமனே அவர்களுக்குக் கொடுத்தால் நமக்கும் தா என்ற சிறுபிள்ளையின் செயலாகத்தான் இருந்து வருகின்றது.

எப்படியோ அந்த சமூகத்தில் அரசியல் உரிமைக்காக என்று கட்சி சமைத்தவர்கள் நல்ல இலாபமீட்டுகின்ற அரசியல் வியாபாரிகளாக இன்று கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கின்றார்கள். நாடாளுமன்றப் பிரவேசத்துக்கு ஒரு பாய்ச்சல்-கூட்டணி இலக்கை எட்டியதும் பட்டம் பதவி பணம் என்று அடுத்த பல்டி என்று அவர்கள் அரசியல் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் இந்த பல்டிகளுக்கெல்லாம் சமூக நன்மை என்று வேறு கதை விடுகின்றார்கள்.

இனப் பிரச்சினை விவகாரம் அப்படி இருக்க, போர்க் குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் ஜனாநாயகத்தின் ஆரோக்கிய நிலமைகள் என்ற விவகாரத்தை இப்போது சற்றுப் பார்ப்போம். போருக்குப் பின் கொடுக்கப்பட்ட அவகாசங்கள், அதன் பின்னர் நடந்த நல்லாட்சி  மாற்றத்தில் இந்திய மற்றும் சர்வதேசம் இலங்கை மீது வைத்திருந்த நம்பிக்கைகள் எல்லாம் நாம் வழக்கமாக சுட்டிக் காட்டுவது போல இளவு காத்த கிளியின் நிலையில்தான் முடிந்தன.

ஒரு தாசப்தத்துக்கு மேல் இந்த விவகாரங்களில் இன்றுவரை எந்த விதமான முன்னேற்றங்களும் கிடையாது. எனவே சுதந்திரத்துக்குப் பின் இனப் பிரச்சகை;குத் தீர்வு என்ற அத்தியாயத்தில் இப்போது போருக்குப் பின்னாலான பிரச்சினைகளுக்கான தீர்வுகள் என்ற ஒரு அத்தியாயமும் பேச வேண்டி இருக்கின்றது.

என்னதான் ஈழத் தமிழ் அரசியல்வாதிகள் வாயதாலும் அரசியல் அனுபவத்தாலும் முதிர்ச்சி அடைந்தவர்கள் என்று நாம் கருதிக் கொண்டிருந்தாலும் யதார்த்தம் அப்படியாக இல்லை. இதனை இலங்கை வாழ் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டு. இதற்கு நல்ல உதாரணம் தான் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு பற்றி பல வருடங்களுக்கு முன் பெரியவர் சம்பந்தரும், சட்டவல்லுனர் சுமந்திரனும் புதிய யாப்புடன் தீர்வு வருகின்றது என்று சமூகத்துக்குச் சொல்லி வந்த கதைகளையும் நாம் நினைவு படுத்த முடியும்.

இன்றும் கூட ஈழத் தமிழர் தமக்குள் பிளவு பட்டுக் கொண்டு செய்கின்ற அரசியல் தமிழ் மக்கள் நலன்கள் சார்ந்த விவகாரம் என்பதை விட அவர்களது தனிபப்ட்ட அரசியல் பிழைப்பு சார்ந்த நகர்வுகளாகவே நாம் பார்க்கின்றோம். ஒட்டு மொத்தத்தில் தமிழ் தரப்புக்கள் தமது அரசியல் இருப்புக்காகவும் முஸ்லிம் தரப்பு அவர்களின் தனிப்பட்ட அரசியல் வர்த்தகம் பிழைப்பு சார்ந்த நடவடிக்கைளில்தான் தற்போது அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றார்கள்.

தேர்தலும் தேர்தல் பிரதிநித்துவமும்தான் சிறுபான்மை சமூகங்களின் தேவைகள் அல்ல என்பதனை இந்த சமூகங்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகின்றதோ தெரியாது. எனவே பேரின அரசியலை மட்டும் என்றும் குற்றம் சொல்வதில் அர்த்தம் இல்லை.

இப்போது ஜெனீவா பற்றி மீண்டும் பார்ப்போம் இந்த முறை ஜெனீவாவில் இலங்கை பெரும் நெருக்கடிகளைச் சந்திக்கும் என்று சிலர் எழுதிக் கொண்டும் பேசிக் கொண்டும் வருகின்றார்கள். அதே நேரம் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். இந்த முறை நாம் எமது பக்க நியாயங்களை சொல்லி அங்கு வெற்றி பெறுவோம் என்று சொல்லி வருகின்றார்.

இலங்கை தனது நிலைப்பாட்டில் எந்த தளர்வுகளையும் இதுவரை விடவில்லை. வாக்கெடுப்பில் தோற்றாலும் இது வரையிலுமா எல்லா சர்வதேச  நெருக்கடிகளையும் அது எப்படியோ சமாளித்துக் கொண்டு வந்திருக்கின்றது. பேரினத்தின் சம்மதம் இல்லாது இனப் பிரச்சனைக்குத் தீர்வு இல்லை என்று ஜீ.எல். இந்தியாவிலே சொல்லி விட்டு வந்திருக்கின்றார்.

அதே போன்று சர்வதேசம் விரும்புகின்ற படி இங்கு ஏதும் செய்ய முடியாது. என்ன விசாரணைகளாக இருந்தாலும் அது உள்நாட்டில்தான் நடக்க வேண்டும் என்பதனையும் அவர் வலியுத்தி வருகின்றார். இவை எல்லாம் எதனைக் காட்சிப் படுத்துகின்றன என்று நாம் கேட்க்கின்றோம். அதே நேரம் ஜீ.எஸ்.பி.க்காக மேற்கத்திய நாடுகளைத் திருப்திப்படுத்துக்கின்ற பாணியிலும் அவர் அவர்களுடன் உறவாடிக் கொண்டு வருகின்றார்.

இவை எல்லாம் அரசியல் அரங்கில் எதிரும் புதிருமான பாதைகளாக இருந்தாலும், இன்றுவரை இலங்கை எப்படியோ இந்தியாவையும் சர்வதேசத்தையும் ஏமாற்றுவதில் நிறையவே சாதித்து வந்திருக்கின்றது என்பதனை சொல்லித்தான் ஆக வேண்டும். ஆனால் நாடு வரலாற்றில் என்றும் இல்லாத நெருக்கடியான ஒரு கட்டத்தில் இன்று இருப்பதையும் மறுப்பதற்கில்லை.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி நாட்டில் ஜனாநாயகத்தை வலுப்படுத்துமாறு மேற்கத்திய நாடுகள் வேண்டுகோள் விடுத்துக் கொண்டு வருகின்றன. ஆம் நாம் அவற்றை செய்யத்தான் போகின்றோம் என்று அங்கு இருக்கும் போது சொல்லிவிட்டு வருபவார்கள். இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதிகளைப் போன்றே இங்கு வந்ததும் அதில் சிறு சிறு மாற்றங்களைச் செய்ய முடியும் என சர்வதேசத்தையும் அதே பாணியில் ஏமாற்ற முனைகின்றார்கள்.

தற்போது நாட்டில் சிவில் அமைப்புக்கள் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர்கள் மீது வன்முறைகள்  கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. இவற்றை செய்கின்றவர்களை கண்டு பிடிப்பதில் அரசு அசமந்த போக்கை கடைப்பிடித்து வருகின்றது. அதே நேரம் இப்படிப்பட்ட குண்டர்களை-வன்முறையாளர்களை பொது மக்கள் கையும் களவுமாகப் பெயர் முகவரிகள் சகிதம் பிடித்துக் கொடுக்கின்ற போது அரசு அவர்கள் மீது எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல் விட்டு விடுகின்றது.

பாதிக்கபடப்டவர்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி நீதி மன்றங்களை நாடவேண்டி வருகின்றன. மேலும் அரசு ஆதரவான அடவடித்தனங்களில் ஈடுபடுகின்றவர்களை சட்டத்தின் முன் பொலிசார் கொண்டு செல்லும் போது சட்டப் பலயீனங்களைத் திட்டமிட்டு வைத்து அவற்றை அங்கு சமர்ப்பிப்பதால் குற்றவாளிகள் வழக்குகளில் இருந்து சுலபமாக விடுதலை பெறுகின்ற ஏற்பாடுகளும் திட்டமிட்டு நடக்கின்றது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்ப்பில், ஒரு பொலிஸ் அதிகாரி தனது பதவி உயர்வு காரணமாக பதிவுகளை முறைகேடாக செய்தார். இப்போதுதான் சாரியான வாக்குமூலங்கள் பெறப்பட்டிருக்கின்றது என்று பொலிஸ் திணைக்களமே அறிவிக்கின்றது. இது எவ்வளவு பாரதூரமான செயல்?

அப்படிச் செய்த பொலிஸ் அதிகாரி இப்போது எங்கே என்று கேட்டால் அவர் அமெரிக்காவுக்குத் தப்பி ஓடிவிட்டார் என்றும் அதே பொலிஸ் தினைக்களம் கூறி இருக்கின்றது. இது எவ்வளவு கேவலமான செயல்? நிருவாகம்.! எனவே ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான குற்றவாளிக்குத் தண்டனை கிடைக்கும் என்று எப்படி நம்ப முடியும்.?

பொறுப்பான அரச நிருவனங்களே இப்படி வன்முறையாக நடந்து கொள்கின்றபோது குற்றவளிகள் அரசு தரப்பினராக இருந்தால் அவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது உறுதி. அதே போன்று எத்தனையோ பாரதூரமான குற்றவாளிகள் இன்று அரச அனுசரையுடன் விடுதலை பெற்றிருக்கின்றார்கள்.

ஜனாதிபதியே கொலைத் தண்டனை பெற்றிருந்த குற்றவாளிகளுக்கு சன்றிதழ் வழங்கி விடுதலையும் கொடுத்து அவர்களுக்கு அதி உயர் பதவிகளும் கொடுகின்ற ஒரு அரசியல் கலாச்சாரம்தான் இந்த நாட்டில் காணப்படுகின்றது. இது எவ்வளவு ஆபதத்தானது, வன்முறை மிக்கது.

பிராந்திய அரசியல் ஆதிக்கம் காரணமாக இந்த மோசமான செயல்பாடுகளை இந்தியாவும் சீனாவும் கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றன. அரசு மீது மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கின்ற போது எதிரணியினர் தமக்குள் பிளவுபட்டிருப்பதால் அது ஆளும் தரப்புக்கு நல்ல பாதுகாப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. எனவே இந்த நாட்டில் சிறுபான்மை சமூகங்கள் மட்டுமல்ல பெரும்பான்மை சமூகங்களும் காலங் காலமாக ஏமாற்றப் பட்டுக் கொண்டு வருகின்றது.

அதே போன்று இந்த நாட்டு மக்களை ஏமாற்றுவதில் கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேல் இந்த நாட்டில் இருக்கின்ற அரசியல் வியாபாரரிகள் பெரு வெற்றிகளைப் பெற்று வந்திருக்கின்றார்கள். அத்துடன் நிறையவே மக்கள் சொத்துக்களையும் அவர்கள் சேகரித்தும்-கொள்யடித்தும் வைத்திருக்கின்றார்கள்.

இது அவர்களின் அரசியல் தலைமுறைகளை பல தசாப்தங்களாக பாதுகாத்து வைத்துக் கொள்ள துணை புரிந்து வந்திருக்கின்றது. ஆனால் இன்று மக்களும் இதற்கு மேல் ஏமாறுவதற்குத் தங்களுக்கு கிஞ்சித்தேனும் இடம் கிடையாது என்றவகையில் குமுறுகின்ற எரிமலையின் நிலையில் இருக்கின்றார்கள்.

அவர்கள் தமது தலைகளில் சுமத்தப்பட்டிருக்கின்ற பாரத்தை அசாதாரமாகவும் உலகத்தார் ஆச்சர்யப்படத் தக்க அளவிலும் இன்று தாங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இதனை நாம் இப்படியும் உவமானப்படுத்தலாம். பளுத் (பாரம்) தூக்கும் போட்டியில் பங்கு கொள்கின்ற ஒருவன் வருடக் கணக்கில் அதனை தாங்கிக் கொணடிருக்கும் நிலையில் இருக்கின்றது இலங்கை மக்களின் இன்றைய வாழ்வியல் நிலை.

இந்த நிலையில் நாட்டில் வங்கிக் கட்டமைப்புக்கள் விரைவில் சீர்குழைவதற்கான ஏது நிலை உருவாகி வருகின்றது என்று அரச தரப்பில் உள்ளவர்களே அச்சம் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். தொழிலாளர் வேலை நிறுத்தம், குடி மக்கள்-விவசாயிகள் போராட்டங்கள் எல்லாம் இதன் வெளிப்பாடுகளே. இந்த கிளர்ச்சிகளைப் பொலிஸ் பலத்தை பிரயோகித்து அடக்க துறைக்குப் பொறுப்பான அமைச்சர்  அண்மையில் ஜனாதிபதியிடத்தில் அனுமதி கேரி இருக்கின்றார். அதற்கு ஜனாதிபதி முட்டால் என்று அமைச்ரை அங்கு திட்டியதாகவும் தகவல்.

இன்னும் பல அரசு தரப்பு அரசியல்வாதிகள் இங்கே ஜனாதிபதியை ஹிட்லர் பாத்திரத்தில் களத்தில் இறங்குமாறு கேட்டிருக்கின்றார்கள். வேடிக்கை என்னவென்றால் தார்மீகம் போதிக்கின்ற பல பௌத்த காவிகளும் கூட அவரிடத்தில் இந்த ஹிட்லர் கோரிக்கைகளைத் தொடர்ந்து விடுத்துக் கொண்டு வருகின்றார்கள்.

நன்றி:ஞாயிறு தினக்குரல் 20.02.2022

Previous Story

A/L பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அவசர கோரிக்கை

Next Story

நாங்களும் ஜேவிபி. தான்