ஏப்ரல் 25 மீண்டும் தேர்தல்! குறுக்கே நிற்க்கும் ரணில்!!

-நஜீப் பின் கபூர்-

மீண்டும் ஏப்ரல் 25ல் நாட்டில் தேர்தல் நடாத்துவதற்குப் பொருத்தமான திகதி என ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது. இதற்குத் தயாராகுமாறு தேர்தல் ஆணைக்குழு மாவட்ட தேர்தல் அத்தாட்சி அதிகாரிகளுக்கு செய்தியும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகின்றது. இந்த ஏப்ரல் 25ம் திகதிய தேர்தல் அறிவிப்புப் பற்றித்தான் இன்று எல்லோரும் ஆர்வமாக இருக்கின்றார்கள். ஆனால் வழக்கம் போல இந்த அறிவிப்பிலும் நமக்கு அணுவளவேணும் நம்பிக்கை கிடையாது. அதிகாரத்தில் இருக்கின்ற தலைவர்களும் அரச அதிகாரிகளும் இந்தத் தேர்தல் தொடர்பில் மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம்.

2023 LG Election: postal voting applications accepted from tomorrow

பதவியில் இருக்கின்ற ஜனாதிபதி ரணில் பிரதமர், தினேஷ, ராஜபக்ஸாக்கள், மற்றும் மொட்டுக் கட்சி முக்கியஸ்தர்கள் நீதி மன்றம், தேர்தல் ஆணைக்குழு, நிதி அமைச்சின் செயலாளர், பொலிஸ் அதிகாரிகள், அரச அச்சக் கூட்டுத்தாபனத் தலைவர் அனைவரும் இந்தத் தேர்தல் தொடர்ப்பில் இரகசிய மக்கள் விரோத கூட்டணி ஒன்றை அமைத்துக் கொண்டுதான் நாடகமாடிக் கொண்டிருக்கின்றார்கள் என்று நாம் நம்புகின்றோம். இந்த  நாட்டில் இருக்கின்ற குடிமக்களுக்கு எதிரான ஒரு சதி வேலையைத்தான் இவர்கள் இப்போது செய்து கொண்டு வருகின்றார்கள். தமக்கு நாடாளுமன்றத்தில் இருக்கின்ற பெரும்பான்மைப் பலம்தான் இவர்கள் பொதுமக்களுக்கு எதிராக சதியை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல உதவி வருகின்றது.

நாடாளுமன்றத்தில் வெரும் ஒரு உறுப்பினரை மட்டும் வைத்திருந்த ரணிலை பிரதமராக்கி அதன் பின்னர் அவரை ஜனாதிபதியாக்கி இன்று நாட்டில் குடிமக்களுக்கு விரோதமான ஒரு அரசுதான் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்று இதனை நாம் அடையாளப்படுத்த முடியும். வரலாற்றில் என்றும் இல்லாதவகையில் கற்பணைக்கும் எட்டாத பொருட்களின் விலையேற்றம். அசாதாரண மின் கட்டணம். ஏரி பொருள் விலையேற்றம். வைத்திய சாலைகளில் மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு. தொடர்ச்சியான ஊழல். அப்பட்டமான கொள்ளை அனைத்துக்கும் இந்த ஆட்சியாளர்களுக்கு துணை நிற்பது அவர்களுக்குள்ள நாடாளுமன்றப் பெரும்பான்மை ஒன்றுதான்.

Sri Lanka President Ranil Wickremesinghe

இதனை வைத்துக் கொண்டுதான் அவர்கள் இன்று குடிமக்களின் அடிப்படை உரிமைகளுக்குக் கூட கை வைத்து நாம் நினைத்த நேரத்தில் தான் நாட்டில் தேர்தல் நடக்கும் அதுவரை எவரும் வாய் திறக்கவோ வீதிக்கு இறங்கவோ கூடாது அப்படி இறங்கினால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று மீண்டும் மீண்டும் ஜனாதிபதி ரணில் எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருக்கின்றார். இந்த கட்டுரையைத் தயாரித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்கான மக்கள் போராட்த்தில் இரண்டாவது உயிரும் தற்போது பலியாகி இருக்கின்றது.

ரணிலுக்கு மிகவும் விசுவாசமான ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தல் தொடர்பில் தனது ஆதரவாளர்களிடையே பேசும் போது. தற்போதய நிலையில் தேர்தல் நடக்க மாட்டாது. எனவே நீங்கள் அதற்காக இப்போது வீணே பணத்தை செலவு செய்ய வேண்டாம் என்று ஆலோசனை கூறி இருக்கின்றார். சஜித் மற்றும் அணுர ஆகியோர் ஓடிக் கலைத்து ஓரிடத்தில் நிற்பார்கள். அப்போது தேர்தல் நடக்கும். அதுவரை நீங்கள் உங்களது வேலைகளைச் செய்து கொண்டிருங்கள் என்று அந்த முக்கியஸ்தர் தனது ஆட்களுக்குக் கூறி இருக்கின்றார்.

தேர்தல் தொடர்பாக அமைச்சரவையில் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டிருக்கின்றது. அதனால் வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்று நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு ஒரு கடிதத்தை அனுப்பி வைத்திருந்தார். ஆனால் பிரதமர் தினேஷ; அப்படி எந்தத் தீர்மானமும் அமைச்சரவையில் எடுக்கப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் இது பற்றி கேள்வி எழுப்பப் பட்ட போது கூறி இருந்தார். ஆனால் தகவல் அறியும் உரிiயில் இப்படி ஒரு தீர்மானம் அமைச்சரவையில் எடுக்கப்பட்டதா என்று கேட்கப்பட்ட போது. ஆம் அப்படி ஒரு தீர்மானத்தை அமைச்சரவை எடுத்திருந்தது என்று பதில் வழங்கப்பட்டிருக்கின்றது. இது எவ்வளவு கேவலமான செயல்.? இது பற்றி நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்கப்பட்ட போது அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளைப் பார்க்கின்ற போது நாட்டில் ஒரு வன்முறை ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது. இது போன்ற எத்தனையோ நியாயங்களின் அடிப்படையில் பார்க்கின்றபோது ஆட்சியாளர்கள் இந்த உள்ளூராட்சித் தேர்தலை தற்போததைக்கு நடத்த மாட்டார்கள் என்பது நமக்கு வலுவான நம்பிக்கை ஏற்படுகின்றது.  எதிரணியில் இருக்கின்ற அரசியல்வாதிகள் நீதி மன்றம் அப்படிச் சொல்லி விட்டது இப்படிச் சொல்லி விட்டது தேர்தல் நடக்கும் என்று கூறினாலும் அதிகாரத்தில் இருக்கின்றவர்கள் நாம் முன் சொன்ன ஆளும் மற்றும் அதிகாரிகள் தரப்பினர் பாம்புக்கும் நோகாமல் பாம்பை அடித்த கம்பையும் நோகாமல்தான் இப்போது காய்நகர்த்திக் கொண்டு செல்கின்றார்கள்.

ஆளும் தரப்பினர் தமக்கு வேண்டியவாறு காய் நகர்த்திக் கொள்வதற்காகத்தான் தேர்தலுக்கு பிந்திய திகதி ஒன்றை தேர்தல் ஆணைக்குழு இனம் காட்டி இருக்கின்றார்கள். ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தலுக்கு வாய்ப்பான நாட்கள் இருந்தும் திட்டமிட்டு திகதி காலதாமதமாக சொல்லப்பட்டிருக்கின்றது. அதற்கிடையில் ஆட்சியாளர்கள் தமக்கு ஏற்றவாறு களத்தை மாற்றி அமைத்துக் கொள்வார்கள் என்பது நமது வாதம்.

Sri Lanka:

நீதி மன்றம் கூட தேர்தல் தொடர்ப்பில் அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கின்றது என்பதற்கு நிறையவே ஆதாரங்கள் இருக்கின்றன. இப்போது தேர்தலுக்குத் தேவையான நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கின்ற நீதி மன்றத்தின் பேச்சைக் கேட்டு அதற்குத் தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கையில் இறங்கி நிதி அமைச்சின் செயலாளர் அதற்காக அழைக்கப்பட்ட கலந்துரையாடலில் கலந்து கொள்வதை அவர் தவிர்த்து விட்டார்.

தான் பாதுகாப்பு தொடர்பான சாகல ரத்நாயகாவின் கலந்துரையாடலில் பங்கு பற்றியமையால் தேர்தல் ஆணைக்குழுக் கூட்டத்தில் தன்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்று பதில்  வழங்கி இருக்கின்றார் நிதி அமைச்சின் செயலாளர். இந்த நிதி அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும் ஜனாதிபதி ரணிலின் கீழ் வருகின்றது. அந்த ஆவணத்தில்தான் செயலாளரின் இந்த பிடிவாத போக்கும் இருக்கலாம். அவை அப்படி இருக்க இந்த தேர்தல் தொடர்பான மேலும் சில செய்திகளைப் இப்போது பார்ப்போம்.

தனது பிணத்தை தானே புதைப்பது என்ற நமது கதை-தலைப்பு நடைமுறைச் சாத்தியம் இல்லாத ஒன்று என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விவகாரம்தான். இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரமும் ஆளும் தரப்பைப் பொறுத்தவரை அப்படிப்பட்ட ஒன்றுதான் என்பது எமது கருத்து. தேர்தல் தொடர்பான நம்பிக்கையான புதிய செய்திகள் சொல்லப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இது பற்றி நாம் நம்பகம் இல்லாத தகவல்களைத்தான் வாசகர்களுக்குச் சொல்லி வந்திருந்தோம். இதனால்தான் தனது பிணத்தை தானே சுமப்பது பற்றி தலைப்பில் இந்தவாரம் செய்தி சொல்ல வருகின்றோம்.

தற்போதய அரசியல் பின்னணியில் தேர்தல் நடக்குமாக இருந்தால் இது ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை ஒரு தற்கொலை முயற்ச்சியாக அமையும். அதனால்தான் ஆட்சியாளர்கள் இந்த உள்ளூராட்சித் தேர்தலை நடத்தமாட்டார்கள் என்று நாம் அடித்துச் சொல்லி வருகின்றோம்-வந்திருக்கின்றோம். கடைசியாக ஜனாதிபதி நாடாளுமன்றம்தான் தேர்தலைத் தீர்மானிக்கும் என்று சொல்லி இருக்கின்ற செய்தி அவருக்கு அதில் இருக்கின்ற பெரும்பான்மை பலத்தின் விசுவாசத்தில் பேரில்தான் ரணில் இப்படிப் பேசி இருக்கின்றார்.

இப்போது இதில் நெருக்கடிக்கும் அவமானத்துக்கும் ஆளாவது ஆளும் மொட்டுக் கட்சியினர்தான். அவர்கள் நாம் தேர்தலுக்குத் தயாராகத்தான் இருக்கின்றோம். எமக்கும்தான் மிகப் பெரிய வெற்றி கிடைக்கும் எமது வாக்குகள் சொல்கின்ற படி எந்தச் சரிவையும் சந்திக்கவில்லை என்று சொல்லி வந்தனர். அப்படியாக இருந்தால் தேர்தலைத் தள்ளிப் போட நாடாளுமன்றத்தில் தீர்மனம் நிறைவேற்றும் நிலை வந்தால் அதற்கு மொட்டுக்கட்சியனர் ஆதரவாக வாக்களிக்கும் போது அவர்களின் உண்மையான முகமூடி நாட்டு மக்களுக்குத் தெரியவரும்.

சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய மொட்டுக் கட்சியின் பல உறுப்பினர்கள் இப்போதுதான் சற்று பொருளாதார தலைதூக்கி சீராகிக் கொண்டு வருகின்றது இந்த நேரத்தில் தேவையில்லாமல் தேர்தலை நடாத்தி மீண்டும் நாட்டை படுகுழியில் தள்ளுவதை நாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது  என்று நமக்கும் தேர்தல் வேண்டும் என்றவர்கள் இன்று ஜனாதிபதி ரணிலின் தாளத்துக்கு ஆட்டம் போடத் துவங்கி இருக்கின்றனர். இப்போது இவர்கள் என்ன சொல்ல வருகின்றார்கள் என்பது புரிந்து கொள்ளக் கூடியதே.

இது குட்டில் தேர்தலாக இருந்தாலும் நாட்டின் அரசியல் வரலாற்றை தலைகீழாகப் புரட்டிப் போடுகின்ற ஒரு புரட்சிகரத் தேர்தலாக அமையும் என்பது எமது கணிப்பு. ஏன் நாம் இப்படி சொல்கின்றோம் என்றால் இந்தத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து பதவியில் இருக்கின்ற ஜனாதிபதி ரணிலும் ஆதிகாரத்தில் இருக்கின்ற மொட்டுக் கட்சியினரும் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்க முடியாத ஒரு நிலைக்கு ஆளாவர்கள்கள். இதனை அவர்கள் தெளிவாக அறிந்;து வைத்திருக்கின்றார்கள்.

நாட்டில் ஆளும் தரப்புக்குக் கிடைத்த எந்த கணிப்புக்களும் நல்ல செய்தியைச் சொல்லவில்லை. அதனால்தான் தனது பிணத்தை தானே சுமக்கின்ற வேலையை இந்த ஆட்சியாளர்கள் ஒரு போதும் செய்ய மாட்டர்கள். எனவேதான் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை இவர்கள் ஒரு போதும் இப்போதைக்கு நடத்த மாட்டார்கள் என்று நாம் தொடர்ந்தும் சொல்லி வந்திருந்தோம். இப்போது நமது வாதம் மீண்டும் உறுதிப்படுத்தப் பட்டிருக்கின்றது.

பதவியில் இருக்கின்ற மொட்டுக் கட்சி முக்கியஸ்தர்கள் இப்போது இந்தத் தோல்விகளை கண்கூடாக பார்த்து வருவதால் அவர்கள் வெளி நாடுகளுக்குத் தப்பி ஓடுகின்ற முயற்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதுபற்றி தகவல்களை நாம் பிரிதோர் இடத்தில் சுட்டிக்காட்டி இருப்பதால் அதனை இங்கு மீளவும் பதியாமல் தவிர்த்திருக்கின்றோம்.  மேலும் மொட்டுக் கட்சியில் சண்டியர்கள் போல நடந்தும் பேசியும்  வந்த அரசியல்வாதிகள் இப்போது மொன் போக்காளர்களாக நிதனத்துடன் செயலாற்றத் துவங்கி இருக்கின்றார்கள். பெரியவர்கள் நாட்டை விட்டு ஓடிப் போனாலும் கீழ்மட்ட அரசியல் செயல்பாட்டாளர்கள் இந்த நாட்டில்தான் தங்கி இருக்க வேண்டும் என்பதால் அவர்கள் அளந்து பேசி வருகின்றார்கள் அல்லது மௌனம் சாதித்து வருகின்றார்கள்.

நாம் மேற்சொன்ன தேர்தலைத் தள்ளிப் போடுகின்ற பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்மொழியப்படுமாக இருந்தால் அதற்கு மொட்டுக் கட்சியி இருக்கின்றவர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்ற கேள்வியும் எழுகின்றது. மக்களில் ஜனநாயக உரிமையை எதிர்த்து எமக்கு இதற்கு கைதூக்க முடியாது என்று சிலர் தீர்மானங்களை எடுக்கவும் கூடும். அதே நேரம் தனித்துவம் பேசி அரசியல் செய்கின்ற கட்சியினர் தமது உறுப்பினர்களை ஆளும் தரப்புக்கு எதிராக வாக்களிக்க வைப்பதில் இந்த தீர்க்கமான நேரத்தில் எப்படி நடந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை. இவர்கள் சமூகத்தின் பேரால் அரசியல் வியாபாரம் பண்ணுவதால் அவர்களின் வாக்கு நிச்சயம் ஆளும் தாரப்புக்கு விசுவாசமாகத்தான் இருக்கும் என்று உறுதிய இப்போதே சொல்லி விடமுடியும்.

எதிர்க் கட்சியில் சஜித் தரப்பினரில் இருக்கின்ற சிலரும் இந்த தேர்தலைத் தள்ளிப் போடுகின்ற பிரேரணை நாடாளுமன்றத்தில் வந்தால் அதற்கு ஆதரவாக வாக்களிக்க இடமிருக்கின்றது. இந்த பிரேரணையைத் தொடர்ந்து அமைச்சரவையில் மாற்றங்கள் நடக்கின்ற போது பலருக்கு அமைச்சுக்களும் இராஜங்க அமைச்சுக்களும் கையளிக்கப்பட இருக்கின்றது என்றும் எமக்கு ஒரு தகவல் கிடைத்திருக்கின்றது. அதில் சஜித் அணியில் பலரும் இருக்கின்றார்கள். அப்படி இந்தத் தேர்தலைத் தள்ளிப் போடுகின்ற முயற்ச்சியில் ரணில்-ராஜபக்ஜாக்கள் வெற்றி பெறுவார்களாக இருந்தால் ரணிலும் ராஜபக்ஸாக்களும் இன்னும் சில காலத்துக்கு அதிகாரதிதல் இருப்பார்கள். அடுத்து ஜனாதிபதி தேர்தல் பொதுத் தேர்தல் போன்ற வற்றிலும் இதே தேர்தலைத் தள்ளிப் போடும் இராஜதந்திரத்தை இவர்கள் முன்னெடுக்க அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.

கடந்த சில தினங்களாக பசில் ராஜபக்ஸ மிகப் பெரிய ஜனநாயகவாதியாக மாறிக் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டு வருகின்றார். தேர்தல் மக்களின் அடிப்படை உரிமை தேர்தலை எக்காரணம் கொண்டும் தள்ளிப் போடக் கூடாது என்று அவர் ஊடகச் சந்திப்புக்களின் போது பேசிவருவதை வாசகர்கள் பார்த்திருப்பார்கள். இவர்கள் இப்படியெல்லாம் வேசம் போடுவது நடிப்பதும் பற்றி கடந்த வாரம் விரிவாக சொல்லி இருந்ததும் தெரிந்ததே.

நன்றி: 12.03.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

ஈரானில் 5,000 மாணவிகள் உடலில் விஷம்கண்டுபிடிப்பு..கைது தீவிரம்!

Next Story

மீள் பிரசுரம்:பழைய மாணவர் சங்கம்