ஊடகங்கள் மீது கொத்து குண்டு வீச்சு!

நஜீப் பின் கபூர்

Free Media Movement – Sri Lanka

நேரடியாக கதைக்கு வருவதாக இருந்தால் இன்று ஊடகங்களே குறிப்பாக சமூக ஊடகங்கள் ஆட்சியாளர்களின் மிகப் பெரிய விரோதிகள் என்ற நிலை உருவாகி இருக்கின்றது. மக்கள் செல்வாக்கில்லாத ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை அவர்கள் அப்படிச் சிந்திப்பதில் எந்தத் தவரும் கிடையாது. அதில் உண்மைகள் இருக்கின்றன என்பது எமது கருத்து. ஒரு காலத்தில் நகருக்கு ஒரு வாசிகசலை, பிற்காலத்தில் கிராமத்துக்கு- பாடசாலைக்கு ஒரு வாசிகசலை என மக்களின் வாசிப்பு முக்கியத்துவம் உணரப்பட்டது. அதனால் வாசிப்புத்  திறனை அதிகரிப்பது பற்றி பல்வேறு மட்டங்களில் கருத்துக்கள் சொல்லப்பட்டு வந்தன. இன்று ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வாசிகசாலையாக செயல்பட வேண்டி இருக்கின்றது.

WHO WE ARE – Free Media Movement – Sri Lanka

இதனால் வாசிகசாலைகள் மீதான சிந்தனையிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. எதனை எடுத்தாலும் இன்று வலைப்பழத்தை தோலுரித்துக் கையில் கொடுப்பது போல சமூக ஊடகங்கள் செய்திகளை மலை போல் ஒவ்வொருவரினதும் தலையில் கொட்டிக் கொண்டிருக்கின்றன. எனவே மக்கள் எந்தத் தலைப்பில் செய்திகளை தேட வேண்டுமோ அந்தத் தலைப்பில் தகவல்கள் அவர்களின் மடிகளிலே வந்து விழுகின்றன. எனவே நாம் மேற்சொன்ன நகரத்துக்கு கிராமத்துக்கு பாடசாலைக்கு ஒரு வாசிகசாலை என்ற கருத்து இன்று மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்து விட்டது என்பதுதான் எமது கருத்து. அதற்காக அவை அவசியம் இல்லை என்று எவரும் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

இன்று வாசிகசாலைக்குச் சென்றுதான் மக்கள் பத்திரிகை வாசிக்க வேண்டும் என்பதோ அல்லது தகவல்களைத் தேட வேண்டும் என்ற நிலை இல்லை. தனக்கு என்ன தலைப்பில் தகவல் வேண்டுமோ அதனை நமது கரங்களில் இருக்கின்ற கையடக்கத் தொலைபேசி ஒரு சில நொடிகளில் கொண்டு வந்து கொடுத்து விடுகின்றன. இதனால் இன்று நேரம் காலம் பணம் சிரமம் என்ற அனைத்துமே மிச்சப்படுத்தப்படுகின்றது. ஆனால் வயது வந்த ஒரு தலைமுறை இந்த தொழிநுட்ப அறிவை தெரிந்திருக்காத காரணத்தால் அவர்களுக்கு வாசிகசாலைகள் அவசிமாகிக்னறது என்பதும் யதார்த்தமானது. ஆனால் அவ்வாறானவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. அந்தத் தலைமுறை வாழ்வின் இறுதிக் காலத்தில் இருக்கின்றார்கள்.

கடந்த ஒரு தசாப்தத்திற்கு முன்னிருந்த சமூகம் கூட இன்றில்லை. குறிப்பாக இந்த 4-5 வருடங்களில் தகவல்கள் தொழிநுட்பம் தொடர்பான சிந்தனையில் சமூகத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி விட்டது. முன்பிருந்த சம்பிரதாயமான தகவல் வழங்கும் செல்முறை இன்று செலழிந்து வருவதனால் நவீன தொழிநுட்பங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் இன்று செய்திகள் அடுத்த கனமே மக்கள் பார்வைக்கு எடுத்து வந்து விடுகின்றன. தகவல்கள் தொடர்பில் இன்று 50 வருடங்களுக்கு முன்பிருந்த சமூக நிலமையை ஒரு முறை எண்ணிப்பாருங்கள். உலகில் ஏதாவது ஓரிடத்தில் நடந்த சம்பவம் ஒன்று தொடர்பான தகவல்கள் நம்மை வந்தடைய சில நாட்கள் அல்லது சில வாரங்கள் எடுத்தன.

தொலைக் காட்சிகள் அறிமுகமானதால் அவை இந்தத் தகவல் வரும் வேகத்தை இன்னும் சற்று விரைவுபடுத்தியது. ஆனால் இது விடயத்தில் சமகால நிலை என்ன? அந்த சம்பவம் தொடர்பான செய்திகளை அக்குவேறு ஆணி வேராக சமூக ஊடகங்கள் அதே நொடியில் நேரலையாக நமக்கு எடுத்து வந்து தருகின்றன. நமது தாமதம்தான் இதனைத் தெரிந்து கொள்வதில் நமக்கு இடை வெளியை ஏற்படுத்துகின்றன. அத்துடன் அன்று அந்த செய்திகள் பக்கச்சார்பான தகவல்களாகவும் ஒருதலைப்பட்சமானவையாகவும் கூட அமைந்திருந்தாலும் விரும்பியோ விரும்பாமலோ அதனைத்தான் நாம் நம்ப வேண்டி இருந்தது.

இன்று நிலமை என்ன இந்தத் தகவல்களை நமக்குக் உடன் தருவதற்கு பெரிய செய்தி சேவைகளோ நிறுவனங்களோ அவசியமில்லை. களத்தில் இருக்கின்ற ஒரு சிறுவனோ சிறுமியோ தகல்லை நேரலையாகவே நமது பார்வைக்கு கொண்டு வந்து தருகின்ற நிலை காணப்படுகின்றது. இந்த சமூக ஊடகங்களினால் உலகில் என்ன நடந்திருக்கின்றது என்று எண்ணிப்பாருங்கள். நமக்கு செய்தி சொல்ல இன்று பிபிசியோ, ரொய்டரோ, சீ.என்.என்.னோ தேவையில்லை. ஆனால் அவை நமக்கு அன்று தகவல்கள் பரிமாற்றித்தில் செய்த பணிகளை இன்று நாம் நன்றியுடன் நினைவு கூறவேண்டி இருக்கின்றது. கதை அவ்வளவுதான்.

இந்த மாற்றம் சர்வதேச அரசியலிலும் தாக்கங்களை எற்படுத்தி இருக்கின்றது. உலக அரசியல் இராணுவ வல்லாதிக்கத்திலும் உள்நாட்டு அரசியலிலும் சமூகத்திலும் தனி மனித வாழ்வில் இது இன்று பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றது. இதனால் மேற்கத்திய நாடுகளின் ஊடக ஆதிக்கம் இன்று வலுவிழந்து காணப்படுகின்றது. அதே போன்று உள்நாட்டில் அரசு வைத்திருக்கின்ற செய்தி சேவைகள் பாரிய பின்னடைவை எதிர்நோக்கி வருகின்றது. ஒரு காலத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நமக்கு வழங்கிய சேவைகள், அரச தொலைக் காட்சி செய்த சேவைகள்  நமக்கு கொடுத்த செய்திகள் என்பவற்றை ஒரு முறை கற்பனை செய்து பாருங்கள். அவற்றின் கதை எந்தளவுக்கு இன்று கந்தலாகி நிற்க்கின்றது என்பது அப்போது புரியும்.

Sri Lankan journalists fear new gov't silencing dissent

இந்த பின்னணியில் தோன்றிய தனியார் செய்தி சேவைகள், அவற்றின் பக்கச்சார்பான செயல்பாடுகள் குறிப்பாக அண்மையில் ராஜபக்ஸாக்களை அதிகாரத்துக்குக் கொண்டு வருவதற்கு அவை மேற்கொண்ட இனவாத சிந்தனைகள், வன்முறைகள் சிறுபான்மை சமூகங்கள் மீதான அடக்குமுறை டாக்டர் சாபி தொடர்பான செய்திகள். களனியில் பிடிக்கபட்ட நாகத்தைக் காட்டி பௌத்த சமூகத்தை முட்டால்களாக்கியமை என்பன எவ்வளவு பெரிய வன்முறை. அன்று அதனை நம்பியவர்களே தாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று கொடுக்கின்ற வாக்மூலங்கள் என்பவற்றை முழு உலகுமே இன்று பார்க்கின்றது.

இவ்வளவு நீண்ட ஒரு கதையை நாம் ஏன் இங்கு முன்வைக்கின்றோம் என்றால், இன்று தகவல்கள் தொடர்பான ஆதிக்கம் ஆட்சியாளர்களின் கைகளில் இல்லை. அது ஆகாய வெளிபோல் பறந்து விரிந்து வியாபித்து நிற்க்கின்றது. இதனால் ஆட்சியாளர்கள் மீண்டும் பழைய பாணியில் அதிகாரத்துக்கு வருவதாக இருந்தால் இன்று மக்களுக்கு வந்தடைகின்ற உண்மையான செய்திகளை மூடி மறைக்க வேண்டும். ஆனால் சமகால தொழிநுட்பத்தில் அது சாத்தியமில்லை. இது ஆகாய வெளிக்கு வேலி சமைக்கின்ற ஒரு முயற்சி.

ஊடகங்கள் ஆட்சியாளர்களுக்குப் பெரும் தலைவலியாகவும் சவாலாகவும் அமைந்திருக்கின்றன. எனவேதான் சமூக ஊடக செயல்பாட்டாளர்கள் மீது ஊடகக்காரர்கள் மீதும் ஆட்சியாளர்கள் வன்முறை மூலம் நடவடிக்கை எடுக்கின்ற முயற்சியில் இறங்கி இருக்கின்றார்கள்.  சமூக ஊடகங்கள் பதவியில் இருக்கின்ற ஆட்சியாளர்களுக்கு தெந்தரவு கொடுப்பதால் அவர்களை முன்பு லசந்த, எகனலிகொட, பொத்தல ஜயந்த, போன்றவர்களுக்கு செய்தது  போல  நடவடிக்கை எடுத்தால் சர்வதேச ரீதியில் பெரும் நெருக்கடிகளுக்கு இலக்காக வேண்டி வரும் என்பதால் சட்டத்தின் மூலம் ஊடகங்கள் ஊடக்கார்கள் மீது நடவடிக்கைக்கு அரசு விரைவாக தயாராகி வருவதை அவதானிக்க முடிகின்றது. தனக்கு நாடாளுமன்றத்தில் இருக்கின்ற பெரும்பான்மை இதற்கு அவர்களுக்குக் கைகொடுக்கக் கூடும்.

Media Supression in Sri Lanka a long way off 

இது விவகாரத்தில் சர்வதேசத்தில் இருந்து வரும் எதிர்ப்புக்களையும் அரசு கண்டு கொள்வதாக இல்லை. தமது அரசியல் இருப்பும் பதவிகளை பாதுகாப்பதும் ஊடகங்களை அடக்கி ஆள்வதில் அல்லது அழிதொழிப்பதில்தான் தங்கி இருக்கின்றது என்று அதிகாரத்தில் இருக்கின்றவர்கள் கருதுகின்றார்கள். இதனால்தான் அவர்கள் இந்த அடக்குமுறையை துரிதப்படுத்தி வருகின்றார்கள். இன்று தோன்றி இருக்கின்ற இந்த நிலமையை ஆட்சியாளருக்கும் ஊடகத்துறையினருக்குமான மோதலாக போராக நாம் அடையாளப்படுத்தலாம்.

சமூக ஊடகங்களை வெற்றி கொள்வதில் ஆட்சியாளருக்கு பெரும் சவால்கள் இருந்து வருகின்றன. ஒவ்வொரு தனிமனிதனும் குழந்தையும் கூட இன்று சமூக ஊடகங்களின் செயல்பாட்டாளர்களாகவும் பங்குதாரர்களாகவும் இருப்பதால் களம் அரசுக்கு வாய்ப்பாக இல்லை. எனவேதான் சட்டம் மூலம் ஆட்சியாளர்கள் ஊடகங்கள் மீதும் ஊடக செய்பாட்டாளர்கள் மீது  இன்று கொத்து குண்டுகளை வீசிக் கொண்டிருக்கின்றார்கள். ஆட்சியாளர்களும் சில தனிப்பட்ட அரசியல்வாதிகளும் தம்மை விமர்சனம் செய்கின்ற ஊடகங்களை-ஊடகக்காரர்களை விலைக்கு வாங்கிய சம்பவங்களும் நிறையவே நாட்டில் நடந்தும் இருக்கின்றன. அடுத்த இன்று பல சமூக ஊடகவியலாளர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்திருப்பதை அவதானிக்க முடிக்கின்றது.

ஒளிபரப்பு ஒழுங்கு படுத்தும் ஆணைக்குழு

ஒளிபரப்பு ஒழுங்கு படுத்தும் ஆணைக்குழு என்ற பெயரில் தற்போது ஆட்சியாளர்கள் சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றார்கள். இப்படி அமைக்கப்படுகின்ற குழுவில் ஐந்து உறுப்பினர்களை நியமித்து அவர்களுக்கு சில அதிகாரங்களை வழங்கி தற்போது அரசுக்கு எதிராக விமர்சனங்களை கட்டுப்படுத்துவதுதான் இதன் அடிப்படை நோக்கம்.

கடந்த காலங்களில் இது போன்ற பல முயற்சிகளை ஆட்சியாளர்கள் மேற்கொண்ட போது அதற்கு கடும் எதிர்புக்கள் கிளம்பியதால் அரசு பின்வாங்கியது. இந்த முறை வேறு பெயரில் இந்த சட்டத்தை கொண்டு வந்து ஊடங்கள் மீது நடவடிக்கைக்கு ஏற்பாடுகளை நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ மேற்கொண்டு வருகின்றார். நாம் முன்பு சொன்னது போல தற்போது நாடாளுமன்றில் ஆட்சியாளருக்குத் தேவையாக  உறுப்பினர்கள் இதற்குக் கைதூக்கத் தயாராக இருப்பதால் இந்த ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மசோதவை அவர்கள் சுலபமாக நிறைவேற்றிக் கொள்ள இடமிருக்கின்றது.

Media Suppression: A Favorite Tool of the “Strongman”

தற்போது ஆளும்தரப்பு உறுப்பினர்கள் பகிரங்க இடங்களில் இதற்கு ஆதரவை வெளிப்படுத்தி பேசி வருகின்றார்கள். தனக்குத் தேவை எனக் கருதும் நிறுவனங்கள் தனி மனிதர்கள் எவர் மீதும் இந்த ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க முடியும். மேலும் ஏற்கெனவே ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரங்கரளை இரத்துச் செய்யும் அதிகாரமும் இந்த ஆணைக் குழுவுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

ஆணைக்கழுவில் மொத்தமாக ஐந்து உறுப்பினர்கள் இருப்பார்கள். ஊடகத்துறை அமைச்சரின் செயலாளர், தொலைத் தொடர்பு ஆணைக்குழுவின் தலைவர், ஏனைய மூன்று உறுப்பினர்களையும் அரசமைப்பு பேரவையில் அனுமதியுடன் ஜனாதிபதியே நியமனம் செய்வார். அத்தோடு இந்தக் குழுவின் தலைவர் ஜனாதிபதியினால் நேரடியாக நியமனம் செய்யப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமாக பார்க்கின்ற போது ஊடகங்கள் தொடர்பான தணிக்கை குழுவாகவும் மேற்பார்வை செய்கின்ற ஒரு குழுதான் இது. எனவே இதன் பின்னர் ஊடக நிறுவனங்களும் ஊடகக்காரர்களும் விலங்கிடப்படுகின்றார்கள் என்பதுதான் இந்த ஆணைக்கு நியமனம் அமையும் போது நடக்கும்.

தேசிய பாதுகாப்பு சட்டம், அமைதிக்குப் பங்கம் ஏற்படாதவாறு செய்திகளைச் செல்வது, தேசிய பொருளாதரத்தக்கு பங்கம் ஏற்படாதவாறு தகவல்களை வழங்குவது போன்ற விடயங்களை இந்த ஆணைக்குழு பார்த்துக் கொள்ள வேண்டும்.

Sri Lanka: Groups express concern over the president's statement about the media - IFEX

இந்த மசோத நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமாக இருந்தால் இலத்திரனியல் ஊடகங்கள் கடும்  அழுத்தங்களுக்கு இலக்காகும் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் இன்று இலத்திரனியல் ஊடகங்களுக்கு அடிமையாகி இருப்பதால் அதிலிருந்து மக்களை விடுவித்து ஆட்சியாளர்கள் மீதான விமர்சனங்களை குடிமக்கள் பார்வையில் இருந்து திரை போடுவதும் தான் இந்த மசோதவின் எதிர்பார்ப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது. முறைப்பாடுகள் கிடைத்தாலும் கிடைக்கவிட்டாலும் ஊடகங்களை விசாரிக்கும்  அதிகாரம் இந்தக் குழுவுக்கு இருக்கின்றது.

இந்த ஏற்பாட்டின் மூலம் இதன் பின்னர் நாட்டில் என்ன நடக்கப் போகின்றது என்பதனை ஒருவர் ஊகித்துக் கொள்ள முடியும். ஆட்சியாளர்களும் இந்த ஆணைக்ழுவும் சொல்கின்ற செய்திளை மட்டும்தான் இதன் பின்னர் மக்கள் பார்க்க வேண்டும் கேட்க வேண்டும் என்று இவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

நவீன தொழிநுட்ப காலத்தில் இது எவ்வளவு தூரம் வெற்றி பெறப்போகின்றது என்பதனை பொறுத்திருந்து  பார்க்க முடியும். அத்தோடு ஊடகத்துறைக்கும் ஆட்சியாளருக்குமிடையில் ஒரு போர் இதன் மூலம் ஆரம்பமாகின்றது என்பது மட்டும் உறுதி. ஊடகத்துறையை அச்சுருத்தி காரியம் சாதிக்க எடுக்கப்படுக்கின்ற ஒரு முயற்சியாகத்தான் இது அமையப்போகின்றது. இது அரசியல் யாப்பு 14 சரத்துக்கு முரணானது என்று நாடளுமன்ற உறுப்பினரும் சட்டதரணியுமான சுமந்திரன் குறிப்பிடுகின்றார்.

நன்றி: 04.06.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

அமெரிக்கா-ஸ்வீடன் நேட்டோ!

Next Story

"திரும்பிய பக்கமெல்லாம்  சடலங்கள், உடல் பாகங்கள்" - பிழைத்தவரின் சாட்சி!