உய்குர் முஸ்லிம் சித்ரவதை ஐ.நா.  குற்றச்சாட்டு!சீனா மறுப்பு!!

ஜெனீவா: உய்குர் முஸ்லிம்களை சீன அரசு சித்ரவதை செய்வதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

சீனாவின் வடமேற்கில் ஜின்ஜியாங் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உய்குர் இனத்தை சேர்ந்த சுமார் 1.2 கோடி முஸ்லிம்கள் வசிக்கின்றனர். கடந்த 20-ம் நூற்றாண்டில் ஜின் ஜியாங் பகுதி சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் கடந்த 1949-ம் ஆண்டில் சீன ராணுவம் ஜின்ஜியாங்கை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அப்போது முதலே சீன ராணுவத்தை எதிர்த்து உய்குர் முஸ்லிம்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அவர்களை ஓடுக்க சீன அரசு அடக்குமுறைகளை கையாண்டு வருகிறது. சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் முகாம்களில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களின் ஆதிக்கத்தை குறைக்க சீனாவின் ஹன் இன மக்கள் ஜின்ஜியாங் பகுதியில் பெரும் எண்ணிக்கையில் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி 48 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

மறுகல்வி முகாம்கள் என்ற பெயரில் உய்குர் முஸ்லிம்கள் முகாம்களில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களின் உடல் உறுப்புகள் திருடப்பட்டு கள்ளச் சந்தையில் விற்கப்படுகின்றன. இந்த இன பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்.

இளைஞர்கள் பரிசோதனைக்கூட எலிகளைப் போன்று பயன்படுத்தப்படுகின்றனர். அவர்களை வைத்து பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. உய்குர் முஸ்லிம்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த அவர்களுக்கு கட்டாய கருத்தடை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. கருத்தடை மாத்திரை, கருத்தடை ஊசிகளும் போடப்படுகின்றன.

நூற்றுக்கணக்கான மசூதிகள் அழிக்கப்பட்டுள்ளன. முஸ்லிம் மதத்தை பின்பற்ற தடை விதிக்கப்படுகிறது. முகாம்களில் முஸ்லிம்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர். அவர்களின் அனைத்து அடிப்படை உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சித்ரவதைகளை சீன அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். ஜின்ஜியாங் பகுதி தொடர்பான சர்ச்சைக்குரிய சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா மறுப்பு

ஐ.நா.வுக்கான சீன தூதரக அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “ஜின்ஜியாங் பகுதியில் தீவிரவாதத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஐ.நா. அறிக்கையில் சுட்டிக் காட்டப்படவில்லை.

அந்தப் பகுதியில் மனித உரிமைகளை நிலைநாட்ட சீன அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவற்றை மறைத்து ஒருதலைப்பட்சமாக அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. சீனாவின் உள்விவகாரங்களில் யாரும் தலையிட முடியாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Story

UK: மனைவி குறித்த 18 ஆண்டு கால இரகசியத்தை போட்டு உடைத்த ரிஷி சுனக்!

Next Story

ஆப்கான் மசூதியில் குண்டு வெடிப்பு: 20 பேர் பலி