எங்கு பார்த்தாலும் அழுகுரல்!
ரஷ்யாவின் எண்ணெய் உற்பத்தி மையங்களை குறிவைத்து உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் அந்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உக்ரைன் மீது உக்கிரத்தோடு பதில் தாக்குதல் நடத்தி வருகிறது ரஷ்யா.
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டதாகவும், அதில் நான்கு பேர் சிறுவர்கள் என தகவல் வெளியாகி இருக்கிறது. பலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சமீபத்தில் உக்ரைன், ரஷ்ய எல்லைப் பகுதிகளில் பல ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. குறிப்பாக, மாஸ்கோவுக்கு அருகிலுள்ள சில இராணுவத் தளங்கள் மற்றும் எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் தாக்கப்பட்டன.
அதற்கு பதிலடியாகவே ரஷ்யா இப்போது கீவ் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தியதாக சர்வதேச பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் கீவ் நகரம் முழுவதும் வெடிச் சத்தங்கள் கேட்டன.
ரஷ்யா தாக்குதல் நகரின் 10 பகுதிகளில் 33க்கும் மேற்பட்ட இடங்கள் தாக்குதலுக்குள்ளாகின. குடியிருப்புகள், பள்ளிகள், மருத்துவமனைகள், அலுவலகங்கள் என பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளே நேரடி இலக்காக மாறின.
ரஷ்யாவின் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள், ட்ரோன்கள் நடத்திய துல்லியத் தாக்குதலில் ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம், பிரிட்டிஷ் கவுன்சில், அஜர்பைஜான் தூதரகம், துருக்கி வணிக நிறுவன அலுவலகம் உள்ளிட்ட பல வெளிநாட்டு நிறுவனங்களின் கட்டிடங்கள் சிதைந்தன.
வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தாக்குதல் தொடர்பாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில், “அமைதிப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் உலகம் பல மாதங்களாக விவாதிக்கிறது. ஆனால் ரஷ்யா அதற்குப் பதிலாக குழந்தைகளையும் பெண்களையும் கொன்று குவிக்கிறது. இது ஒரு போர்க் குற்றம்.
ஒவ்வொரு தாக்குதலுக்கும் ரஷ்யா விலையைக் கொடுக்க வேண்டும்” எனக் கடுமையாக கண்டித்துள்ளார். உலக தலைவர்கள் கண்டனம் இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பல்வேறு நாடுகளின் தலைவர்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் கயா கலாஸ், “தூதரகங்கள், சர்வதேச நிறுவனங்கள் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும். ரஷ்யா சர்வதேச சட்டங்களை மீறுகிறது” எனக் கண்டித்துள்ளார்.
மேலும், “இது மனிதாபிமானத்தை அழிக்கும் தாக்குதல். உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார். ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ்: “போர்நிறுத்தம் தவிர வேறு வழியில்லை.
நிராயுதபாணி பொதுமக்களைக் குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது” எனத் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். ஏவுகணை தாக்குதல் தற்போது கிடைத்த தகவலின்படி ரஷ்யாவின் தாக்குதலால், கீவ் நகரில் ஒரு 10 மாடிக் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததால் பல குடும்பங்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளன.
மீட்புப் படை வீரர்கள் இரவு பகலாக தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென கட்டிடம் இடிந்தது, அடுத்த நொடியில் எங்கள் வாழ்க்கையே மாறிவிட்டது என இந்தத் தாக்குதலில் உயிர் பிழைத்தவர் கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.
ஸ்தம்பித்த ரஷ்யா..
பெட்ரோல், டீசலுக்கு பெரும் தட்டுப்பாடு.. பல கிமீ காத்திருக்கும் வாகனங்கள் போர்க் குற்றம் உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ரஷ்யா நடத்தியுள்ள இந்தத் தாக்குதலில் பல மின் உற்பத்தி நிலையங்கள் அழிந்ததால் கீவ் மற்றும் வின்னிட்சியா பகுதிகளில் சுமார் 60,000 வீடுகள் மின்சாரமின்றி இருளில் மூழ்கியுள்ளன.
ரஷ்யாவின் இந்தத் தாக்குதல் பொதுமக்களைத் துன்புறுத்தும் வகையிலான திட்டமிட்ட தாக்குதல் என உக்ரைன் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.