லாரிஜானி படுகொலை உணர்த்துவது இதை தான்
ஈரானில் தேசியப் பாதுகாப்பில் நீண்ட அனுபவமும் கொண்ட நபராகவும் அலி லாரிஜானியை இஸ்ரேல் கொன்றுள்ளது. இந்த போரை விரைவாகவும் ராஜதந்திர ரீதியாகவும் முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய நபராக லாரிஜானி கருதப்பட்ட சூழலில், அவர் உயிரிழந்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இஸ்ரேல் மீது இது தொடர்பான விமர்சனங்களும் அதிகரித்துள்ளது.
இஸ்ரேல்-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் 3வது வாரத்தில் நுழைந்துள்ளது. போரின் முதல் நாளே கமேனி கொல்லப்பட்ட போதிலும், ஈரான் சரணடையாமல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. மறுபுறம் போரை முடிவுக்குக் கொண்டு வர முடியாமல் அமெரிக்காவும் திணறுகிறது. இதனால் ஒரு இடியாப்ப சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அலி லாரிஜானி
இதற்கிடையே நேற்றைய தினம் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் அலி லாரிஜானி கொல்லப்பட்டுள்ளார். இவர் கொல்லப்பட்டதை இஸ்ரேல் தான் முதலில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஈரான் இதை மறுத்த போதிலும், இன்று காலை லாரிஜானி மரணத்தை உறுதி செய்துள்ளது. இவரது மரணம் ஈரான் போர் எப்படி முடியும் என்பதிலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
மூத்த ஈரான் அரசியல்வாதியாகவும் தேசியப் பாதுகாப்பில் நீண்ட அனுபவமும் கொண்ட நபராகவும் அலி லாரிஜானி அறியப்படுகிறார். மேலும், இவர் யதார்த்தமான அணுகுமுறைக்குப் பெயர் பெற்றவர்.
ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வரப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கக் கூடிய நபராக அலி லாரிஜானி கருதப்பட்டார். அவரும் இப்போது உயிரிழந்துள்ள நிலையில், ராஜதந்திர வழிகளில் போரை முடிவுக்குக் கொண்டு வரும் வாய்ப்பு குறைந்துள்ளதாக வல்லுநர்கள் கருதுகின்றனர்.
பல ஆண்டுகளாக ஈரான் ஆட்சியில் செல்வாக்கு மிக்க ஒருவராக லாரிஜானி திகழ்ந்தார். மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி உட்பட பல்வேறு தலைவர்களுடன் இவருக்கு நேரடியாகவே தொடர்பு இருந்தது.
இதன் மூலம் முக்கியமான முடிவுகளில் அவர் ஆதிக்கம் செலுத்தினார். ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் அவர் மிக முக்கிய தேசியப் பாதுகாப்பு அதிகாரியாக உருவெடுத்தார்.
அண்மைய மோதல் தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, வளைகுடா நாடுகளுக்கு இடையே அடிக்கடி பயணம் மேற்கொண்டார். மேலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க மாஸ்கோவுக்கும் அவர் சென்றது குறிப்பிடத்தக்கது. ஈரானுக்கு ராஜதந்திர ரீதியாக எந்தளவுக்கு முக்கிய நபராக லாரிஜானி இருந்தார் என்பதையே இது காட்டுகிறது.
பகீர் குற்றச்சாட்டு
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் தீவிரமடைந்து, லாரிஜானி போன்ற ஒரு முக்கிய தலைவரின் மரணம், போரை விரைவாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளைத் தடுக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
அதேநேரம் இது எதிர்பாராத தாக்குதலைப் போலத் தெரியவில்லை என்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நினைப்போரை இஸ்ரேல் குறிவைப்பது போலவே தெரிவதாக ஐரோப்பிய வெளியுறவு கவுன்சிலின் மூத்த கொள்கை ஆய்வாளரும், மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கத் திட்டத்தின் துணை இயக்குநருமான எல்லி ஜெரான்மேயே தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் சொல்வது என்ன
இருப்பினும், இதில் இஸ்ரேலின் பார்வை வேறு விதமாகவே இருக்கிறது. அதாவது கமேனி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரவே இந்த போர் ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
ஈரானின் தற்போதைய ஆட்சியாளர்களைத் தொடர்ந்து தாக்கி அழிப்பதுதான் இதன் தீர்வு எனச் சொல்லும் இஸ்ரேல் அதிகாரி, ஒரு கமேனி ஆட்சிக்குப் பதிலாக மற்றொரு கமேனி ஆட்சி வருவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்கிறது.
போர் தொடக்கத்திலேயே காமேனி கொல்லப்பட்ட நிலையில், ஈரானின் நிர்வாகத்தையும் அதன் போர் கால வியூகத்தையும் நிர்வகிக்கும் தலைமைத்துவ கட்டமைப்பின் முக்கிய அங்கமாக லாரிஜானி உருவெடுத்தார்.
அவர் கடைசியாக வெள்ளிக்கிழமை அன்று தெஹ்ரானில் நடைபெற்ற ஒரு பெரும் பேரணியில் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ராஜதந்திர ரீதியாகப் போரை முடிவுக்குக் கொண்டு வருவோரை இஸ்ரேல் குறிவைத்துக் கொல்கிறதா..
இந்த போர் எப்படி தான் முடிவுக்கு வரும் என்ற இரு பெரிய கேள்விகளை அலி லாரிஜானி மரணம் எழுப்பியுள்ளது.




