இஸ்ரேல் ஹமாஸ்: ‘காயம், வலி, ஆதரவற்ற நிலை’- OCT. 7க்கு பிறகு தலைகீழாக மாறிய வாழ்க்கை

பாட்ஷேவாவுக்குத் தன் கணவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்று தெரியாது. அப்துல்லா தனது பதின் வயதிலேயே குடும்பத்தினரை இழந்துவிட்டார். கிறிஸ்டினாவும் அப்துல் ரஹ்மானும் மீண்டும் நடக்க முடியும் என்ற நம்பிக்கையில் நாட்களை கடக்கின்றனர்.

இஸ்ரேல், காஸா, லெபனான் மற்றும் மேற்குக் கரையில் சேர்ந்த இவர்கள், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி நடந்த தாக்குதலுக்குப் பிறகு தங்கள் வாழ்க்கை எப்படி தடம் மாறியது என்பதை பிபிசியிடம் விவரித்தனர்.

காயம், வலி, ஆதரவற்ற நிலை : அக்டோபர் 7 க்குப் பிறகு தலைகீழாக மாறிய மக்களின் வாழ்க்கை
இடமிருந்து வலமாக: அப்துல்லா, பாட்ஷேவா, அப்துல்ரஹ்மான் மற்றும் கிறிஸ்டினா 

ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி ஒரு வருடம் ஆகிறது. அந்த தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேரை பணயக் கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காஸாவில் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை நடத்தியது. ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்த தாக்குதலில் 41,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.

‘இருக்கிறாரா இல்லையா என்று கூட தெரியாததுதான் கடினமான விஷயம்’

காயம், வலி, ஆதரவற்ற நிலை : அக்டோபர் 7 க்குப் பிறகு தலைகீழாக மாறிய மக்களின் வாழ்க்கை
மகன் ஈதன் மற்றும் மகள் ஆகியோருடன் ஓஹாட் யஹாலோமி மற்றும் பாட்ஷேவா

கடந்த வருடம், அக்டோபர் 7-ஆம் தேதிக்கு முந்தைய நாள், ஓஹாட் யஹாலோமியும் அவரது 10 வயது மகள் யேலும் அருகிலுள்ள மேய்ச்சல் நிலத்திற்கு கால்நடைகளைத் தேடிச் சென்றனர்.

அந்த சமயத்தில் யேலின் மூத்த சகோதரர் ஈதன் (12) தனது நண்பர்களுடன் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தார்.

ஓஹாட்டின் மனைவி பாட்ஷேவா, இரண்டு வயது பூர்த்தி ஆகாத அவர்களது இளைய மகளுடன் வீட்டில் இருந்தார்.

காஸா எல்லையில் இருந்து ஒரு மைல் தொலைவில் உள்ள தெற்கு இஸ்ரேலில் நிர் ஓஸ் கிப்புட்ஸ் என்னும் பகுதியில், வாழ்க்கை மிகவும் வித்தியாசமானது. அங்கு 400க்கும் குறைவான மக்கள் வசிக்கின்றனர்.

“நாங்கள் எங்கள் வாழ்க்கையை நேசித்தோம், நாங்கள் மிகவும் எளிமையாக இருந்தோம். எங்களின் வாழ்க்கை சொர்க்கம் போல இருந்தது” என்று 45 வயதான பாட்ஷேவா விவரித்தார்.

மறுநாள் காலை ராக்கெட் தாக்குதல் குறித்த எச்சரிக்கை சைரன் சத்தம் கேட்டு குடும்பத்தினர் கண் விழித்தனர்.

ஆனால் சில நிமிடங்களில் அது வெறும் ராக்கெட் தாக்குதல் மட்டும் அல்ல என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன.

‘அல்லாஹு அக்பர்’ என்று சிலர் கோஷமிடும் சத்தமும், துப்பாக்கிச் சூடும் சத்தமும் வெளியில் இருந்து கேட்டன.

குடும்பத்தினர் பல மணிநேரங்களாக, பயத்தில் தங்கள் ‘பாதுகாப்பான அறையில்’ இருந்தனர். ஆனால் தாக்குதல் நடத்தியவர்கள் வீட்டிற்குள் நுழைய முயற்சித்தனர்.

அதன் பிறகு, தனது குடும்ப உறுப்பினர்களைக் காப்பாற்ற, ஓஹாட் ‘பாதுகாப்பான அறை’யை விட்டு வெளியேறி, தாக்குதல் நடத்துபவர்களைத் தடுக்க முயற்சித்தார்.

துப்பாக்கிகள் மற்றும் எறிகுண்டு ஜாக்கெட்டுகளுடன் ஆயுதம் ஏந்திய தாக்குதல்தாரிகள் வீட்டிற்குள் நுழைந்து ‘பாதுகாப்பான அறைக்குள்’ நுழைவதற்கு முன்பு ஓஹாட் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

‘அப்பா எப்போது திரும்புவார்’

காயம், வலி, ஆதரவற்ற நிலை : அக்டோபர் 7 க்குப் பிறகு தலைகீழாக மாறிய மக்களின் வாழ்க்கை
பட்ஷேவாவும் அவரது கணவரும் நிம்மதியான வாழ்க்கையை எதிர்நோக்கி நிர் ஓஸ் கிப்புட்ஸுக்கு வந்தனர்

பட்ஷேவா, “தாக்குதல் நடத்தியவர்கள் தங்கள் துப்பாக்கிகளை எங்களை நோக்கி காட்டி, ‘காஸாவுக்குப் போகலாம்’ என்று ஆங்கிலத்தில் சொன்னார்கள். அதன் பிறகு, அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை நான் உடனடியாக புரிந்துகொண்டேன்.” என்கிறார்

பட்ஷேவாவும் அவரது மகள்களும் காஸாவுக்கு அழைத்துச் செல்ல மோட்டார் சைக்கிளில் ஏற்றப்பட்டனர். ஈதன் மற்றொரு நபருடன் மற்றொரு மோட்டார் சைக்கிளில் அனுப்பப்பட்டார்.

மோட்டார் சைக்கிள் ஏற்றி செல்லப்பட்ட போது, அது பழுதாகி நின்றது. அந்த சமயத்தில் பட்ஷேவாவும் அவரது மகள்களும் எப்படியோ தப்பித்து விட்டனர். ஆனால் ஈதனும் அவரது தந்தையும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஈதன் காஸாவில் 52 நாட்கள் ஹமாஸால் பணயக்கைதியாக வைக்கப்பட்டார். அக்டோபர் 7-ஆம் தேதி எடுக்கப்பட்ட வீடியோக்களை ஈதனுக்கு வலுக்கட்டாயமாக காட்டப்பட்டதாக பட்ஷேவா கூறினார்.

“அவர்கள் மக்கள், குழந்தைகள் மற்றும் பெண்களை எப்படி கொடூரமாக கொன்றார்கள் என்பதை ஈதன் பார்த்தார்”

நவம்பரில் பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் போடபட்டதை தொடர்ந்து ஈதன் விடுவிக்கப்பட்டதாக பட்ஷேவா கூறினார்.

கடந்த ஆண்டு ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மோதல் தொடங்கியதில் இருந்து இவ்வாறு ஒப்பந்தம் போடப்பட்டது இதுவே ஒரே முறையாகும்.

ஆயுதமேந்திய பாலத்தீனியக் குழு ஜனவரி மாதம் ஓஹாட் காயங்களுடன் உயிருடன் இருப்பதைக் காட்டும் வீடியோவை வெளியிட்டது. பின்னர் அவர் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு கூறியது.

பாட்ஷேவாவிடம் இஸ்ரேலிய ராணுவம் , ”ஓஹாட் பற்றிய கூற்றுக்களை உறுதிப்படுத்த முடியவில்லை. அவரது நிலை குறித்த எந்த தகவலையும் கண்டறியவும் முடியவில்லை.” என்றது.

பட்ஷேவா தனது குழந்தைகள் அந்த தாக்குதலால் இன்னமும் பயத்தில் இருப்பதாகவும், கொடிய கனவுகள் காண்பதாகவும் கூறினார். கிட்டத்தட்ட ஒரு வருடமாக குழந்தைகள் அவருடன் ஒரே படுக்கையில் தூங்குவதாகவும் கூறினார்.

”அப்பா எப்போது திரும்புவார் என்று என் குழந்தைகள் கேட்கிறார்கள். என் கணவருக்கு என்ன நடக்கிறது என்று கூட தெரியவில்லை. இது மிகவும் கடினமான விஷயம். அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது கூட எனக்கு தெரியவில்லை. இதுபோன்ற சூழலில் எங்கள் வாழ்க்கையை ஓட்டுவது கடினம்” என்றார்.

‘நான் இறந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்’

இஸ்ரேல் - பாலத்தீனம்
அப்துல்லாவின் கையில் ஏற்பட்ட காயம்

அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேலை தாக்கும் போது அப்துல்லாவுக்கு சுமார் 13 வயது.

அதற்கு முன், வடக்கு காஸாவிற்கு அருகிலுள்ள அல்-தாவோனில் அவரது வாழ்க்கை நகர்ந்தது. பள்ளிக்குச் செல்வது, நண்பர்களுடன் கால்பந்து விளையாடுவது, கடற்கரையில் நடப்பது என அவரது பெற்றோர், சகோதரர் மற்றும் இரண்டு சகோதரிகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

அப்துல்லாவின் பிறந்தநாளுக்கு முந்தைய நாள், மக்களை தெற்கே செல்ல உத்தரவு வந்தது.

விரைவில், அப்துல்லாவின் குடும்பத்தினர் அவசரமாக அத்தியாவசியப் பொருட்களைக் கட்டிக்கொண்டு சலா அல்-தின் சாலையை நோக்கிச் சென்றனர். இந்த சாலையைதான் இஸ்ரேலிய ராணுவம் வெளியேறும் வழி என்று கூறியது.

ஆனால் அவர்கள் சலா அல்-தின் சாலையை நோக்கி நகர்ந்தபோது, ​​அந்த வாகனம் இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் சிக்கியது.

“நானும் எனது சகோதரர் அகமதுவும் காரில் இருந்து தூக்கி வீசப்பட்டோம்” என்று அப்துல்லா விவரித்தார்.

வான்வழித் தாக்குதல் நடந்தபோது அகமதுவுக்கு 16 வயது, அவருடைய ஒரு கால் துண்டிக்கப்பட்டது. மற்றொரு காலில் உலோகத் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.

இஸ்ரேல் - பாலத்தீனம்
அப்துல்லா, மின்னா (இடது) மற்றும் ஹாலா (நடுவில்)

அப்துல்லாவின் கைகள், தலை, இடுப்பு மற்றும் வாயில் காயங்கள் ஏற்பட்டன, மேலும் அவரது வயிற்றில் இரண்டு நீண்ட தழும்புகள் உள்ளன.

ட்ரோன் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக அப்துல்லா, அவரது குடும்பத்தினர் மற்றும் நேரில் கண்ட சாட்சிகள் பலர் பிபிசியிடம் தெரிவித்தனர்.

இஸ்ரேலிய ராணுவம் இந்தக் கூற்றை நிராகரித்ததுடன், அன்றைய தினம் பொதுமக்களின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றும் அது பொய்யான குற்றச்சாட்டு என்றும் கூறியது.

ஒரு செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் , “விசாரணையில் இஸ்ரேலிய ராணுவம் இந்த தாக்குதலை நடத்தியது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.”என்றார்

தனது பெற்றோர் பற்றி நான் கேட்டபோது, அவரின் கேள்விகளை மருத்துவமனை ஊழியர்கள் எவ்வாறு தவிர்த்தார்கள் என்பதை மறக்க முடியாது என்று அப்துல்லா கூறினார்.

“என் பெற்றோர்களுக்கு என்னவாகி இருக்கும் என்று எனக்கு தெரியும் ”

அவர் மேலும் கூறுகையில், “நான் அங்கேயே கொல்லப்பட்டிருந்தால், இப்போது நடக்கும் விஷயங்களை விட நன்றாக இருந்திருக்கும்.”

“எனது கை ஏற்கனவே துண்டிக்கப்பட்டுவிட்டது போல உணர்கிறேன். மருத்துவர்கள் அதை சரிசெய்ய முயன்றனர், ஆனால் அது வீணானது” என்று அப்துல்லா தனது கையில் இருந்த காயங்களின் அடையாளங்களைப் பார்த்து கூறுகிறார்.

அப்துல்லா மற்றும் அவரது இரண்டு சகோதரிகள், மின்னா (18) மற்றும் ஹலா (11), தெற்கு காஸாவில் உள்ள கான் யூனிஸ் என்ற பகுதியில் தங்கள் பாட்டியுடன் வசித்து வருகின்றனர்.

அப்துல்லாவின் இரண்டு சகோதரிகளும் அன்று வாகனத்தில் இடம் இல்லாததால் வடக்கு காஸாவில் இருந்தனர். அவர்களின் பெற்றோர் தாக்குதலில் கொல்லப்பட்ட நாளில் அவர்கள் அந்த வாகனத்தில் இல்லை என்பதால் தப்பித்தனர். மறுபுறம் அகமது சிகிச்சைக்காக கத்தாரில் தங்கி உள்ளார்.

“எங்களின் மகிழ்ச்சி, நிம்மதி எல்லாம் போய்விட்டது. நாங்கள் என் தாய், தந்தை மற்றும் மாமாவை இழந்துவிட்டோம்” என்று அப்துல்லா கூறினார்.

“அவர்கள் எங்கள் முழு குடும்பத்திற்கும் மகிழ்ச்சியின் ஆதாரமாக இருந்தனர். அவர்கள் இல்லாமல் எங்களால் மகிழ்ச்சியாக வாழ முடியாது.”

“முன்னர் நாங்கள் பள்ளிக்குச் செல்வோம், விளையாடுவோம், சிரிப்போம், காஸா அழகாக இருந்தது. ஆனால் இப்போது எல்லாம் மாறிவிட்டது.”

தனது நண்பர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவர்களில் பலர் போரில் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அப்துல்லா கூறினார்.

“இது இஸ்ரேலுக்கான எனது செய்தி. நீங்கள்தான் இதை எங்களுக்கு செய்தீர்கள். நீங்கள் என் பெற்றோரைக் கொலை செய்தீர்கள். என் கல்வியைப் பறித்தீர்கள், என்னிடமிருந்து அனைத்தையும் பறித்தீர்கள்.”

‘ஒரு காலை மட்டும் இழந்ததால் நிம்மதி ‘

இஸ்ரேல் - பாலத்தீனம்
பணிக்குத் திரும்ப விரும்புவதாக கிறிஸ்டினா கூறுகிறார்.

“முன்பு நான் ஒரு புகைப்பட பத்திரிக்கையாளராக என்னை அடையாளம் காட்டி கொண்டேன். ஆனால் இன்று நான் என்னை ஒரு தாக்குதலில் இருந்து தப்பியவராக அடையாளப்படுத்துகிறேன்” என்று கிறிஸ்டினா அசி கூறினார்.

ஏ.எஃப்.பி செய்தி முகமையின், புகைப்படப் பத்திரிக்கையாளராக, கிறிஸ்டினா தனது நாடான லெபனானுக்கு தெற்கு எல்லையில் நடந்த சண்டை குறித்து செய்தி சேகரிக்க சென்றிருந்தார்.

அக்டோபர் 7-ஆம் தேதி தாக்குதல் சமயத்தில், ஆயுதமேந்திய குழுவான ஹெஸ்பொலா, இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்களைத் தொடங்கியது. இது பின்னர் பெரும் மோதலாக உருவெடுத்தது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி, கிறிஸ்டினா மற்றும் பத்திரிகையாளர்கள் குழுவினர் தெற்கு லெபனானில் உள்ள ஒரு கிராமத்திற்கு இஸ்ரேல் எல்லையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்றனர். இந்த கிராமத்தில்தான் மோதல்கள் நடந்து கொண்டிருந்தன.

29 வயதான கிறிஸ்டினா கூறுகையில், ”பிரஸ் என்று எழுதப்பட்ட ஜாக்கெட்டுகள் மற்றும் ஹெல்மெட்களை நாங்கள் அணிந்திருந்தோம். காரின் முன்புறத்தில் மஞ்சள் நிற டேப்பில் ‘டிவி’ என்று எழுதப்பட்டிருந்தது. நாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்தோம்.”

”திடீரென்று துப்பாக்கிச் சூடு தொடங்கியது. பக்கத்தில் இருந்த கார் தீப்பிடித்து எரிந்ததை பார்த்து நான் ஓட முயன்றேன். குண்டு துளைக்காத ஜாக்கெட் கனமாக இருந்ததாலும், கேமரா இருந்ததாலும் என்னால் ஓட முடியவில்லை. ’’

“அப்போது என் காலில் ரத்தம் வழிவதை நான் பார்த்தேன். என்னால் எழுந்து நிற்க முடியவில்லை.” என்கிறார்

வீல் சேரில் ஒலிம்பிக் தீபம் ஏந்திய பத்திரிக்கையாளர்

கிறிஸ்டினா 12 நாட்களுக்குப் பிறகு தான் கண் விழித்தார். அப்போது அவர் மருத்துவமனையில் இருந்தார்.

“நான் ஒரு காலை இழந்திருந்தேன்” என்று விவரித்தார்.

இந்த தாக்குதலில் ராய்ட்டர்ஸ் செய்தியாளர் இசம் அப்துல்லா கொல்லப்பட்டார் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர்.

“சக பத்திரிக்கையாளர்கள் இறந்தது பற்றி செவிலியர் என்னிடம் கேட்டார், அதனால் நான் அவர்களின் பெயர்களை தெரிந்து கொள்ள ஆன்லைனில் பார்த்தேன். அந்த செய்திகளை என்னால் நம்ப முடியவில்லை” என்று கிறிஸ்டினா விவரித்தார்.

லெபனானில் சர்வதேச சட்டத்தை மீறி, “தெளிவாக அடையாளம் காணப்பட்ட பத்திரிகையாளர்கள்” குழு மீது இஸ்ரேல் 120 மிமீ குண்டுகளை வீசியது என விசாரணைக்கு பிறகு லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்காலக் குழு கூறியது.

பல மனித உரிமை அமைப்புகள் இந்த சம்பவத்தை போர்க் குற்றமாக கருதி விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தின

இஸ்ரேல் பாதுகாப்பு படை பிபிசியிடம், ”எங்கள் படைகள் பயங்கரவாதிகள் இஸ்ரேலிய எல்லைக்குள் ஊடுருவி இருப்பதாக சந்தேகித்தது. அவர்களைத் தடுக்க டாங்கிகளும் பீரங்கிகளும் பயன்படுத்தப்பட்டன. இவ்விவகாரம் விசாரிக்கப்பட்டு வருகிறது.” என்று பதில் சொன்னது.

கிறிஸ்டினா தனக்கு நேர்ந்ததை எண்ணி கோபமாகவும் எரிச்சலாகவும் உணர்வதாக கூறினார்.

“இப்படி நடப்பதை பார்க்கும் போது, எல்லாவற்றிலும் நம்பிக்கை இழக்கும் சூழல் உருவாகிறது. முன்னதாக, ஒரு பத்திரிகையாளராக, சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச சமூகத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது.” என்கிறார்

அவர் மீண்டும் ஒரு பத்திரிகையாளராக களத்தில் பணியாற்ற முடியும் என்று நம்புகிறார்.

“நான் எழுந்து நின்று, கேமராவை கையில் ஏந்தி, வேலைக்கு செல்லும் நாளே என் வெற்றியை குறிக்கும் நாள்” என்றார் நம்பிக்கையுடன்.

‘நான் கத்தினேன், ஆனால் லயித் பதிலளிக்கவில்லை’

இஸ்ரேல் - பாலத்தீனம்
அப்துல்ரஹ்மான் தனது அன்றாடப் பணிகளைச் செய்ய அண்ணனின் உதவியை நம்பி இருக்கிறார்.

அது மாலை நேரம். அப்துல் ரஹ்மான் அல் அஷ்கர் மக்காச்சோளத்தை விற்றுவிட்டு, தனது நண்பரான லயித் ஷவானுடன் சிகரெட் புகைத்தபடி நடந்து கொண்டிருந்தார்.

“திடீரென்று குண்டுவெடிப்பு நிகழ்ந்தது” என அப்துல் ரஹ்மான், செப்டம்பர் 18 இரவை நினைவு கூர்ந்தார்.

அவர்கள் இருவரும் மேற்குக் கரையில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பகுதியான சிலாத் அல்-ஹரிதியா கிராமத்தின் எல்லைக்குள் வந்தனர். இது இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி.

அப்போது, ராக்கெட் சத்தம் கேட்டதாகவும் ஆனால் தப்பிக்க முடியவில்லை என்றும் அப்துல் ரஹ்மான் கூறினார்.

”எல்லாமே ஒரு சில நொடியில் நடந்தது. என்னால் ஒரு அடி மட்டுமே பின்வாங்க முடிந்தது” என்று அவர் கூறினார்.

“நான் கத்தினேன், ஆனால் லயித் பதிலளிக்கவில்லை.”

16 வயது லயித் இறந்தார். அப்துல் ரஹ்மான் பலத்த காயமடைந்தார். முழங்காலுக்கு கீழே அவரது இரண்டு கால்களையும் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அப்துல்ரஹ்மான்
,அப்துல் ரஹ்மான் செப்டம்பர் 1 முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அப்துல் ரஹ்மான் 10 நாட்களுக்குப் பிறகு சுயநினைவு திரும்பியதாகவும், அவரது இதயம் பலவீனமடைந்ததாகவும் கூறப்பட்டது.

அப்துல்ரஹ்மான் இன்னும் மருத்துவமனையில் இருக்கிறார். ஒரு கையில் உலோக தகடுகள் வைக்கப்பட்டுள்ளது. இரண்டு விரல்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் வயிற்றில் பல அறுவை சிகிச்சைகளையும் செய்துள்ளனர். எப்போதுமே வலியில் இருக்கிறார்.

அக்டோபர் 7-ஆம் தேதி முதல் மேற்குக் கரையில் வன்முறை அதிகரித்துள்ளது. ‘எங்கள் நாட்டில் கொடிய தாக்குதல்களை நிறுத்துவதே எங்களது நோக்கம்’ என்று இஸ்ரேல் கூறுகிறது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு முன்பு, அப்துல் ரஹ்மான் பிறரை போலவே சாதாரண வாழ்க்கை வாழ்ந்தார்.

ஆனால் தற்போது கழிவறை செல்வது போன்ற அன்றாட பணிகளுக்கு கூட அண்ணனை சார்ந்து வாழ்கிறார். அவரின் தாய் அவருக்கு உணவளிக்கிறார்.

அந்த தாக்குதலுக்குப் பிறகு பிபிசி இஸ்ரேலிய ராணுவத்தை தொடர்பு கொண்டது. அப்போது அவர்கள், “ஜெனின் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருந்த மெனாஷே படைப்பிரிவின் படைகள் மீது வெடிபொருட்கள் வீசப்பட்டதைக் கண்டவுடன் உடனடியாக ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது” என்றனர்.

ஆனால் அப்துல் ரஹ்மானிடம் அன்று உங்கள் கைகளில் ஆயுதம் இருந்ததா என்று கேட்டதற்கு, “என்ன ஆயுதங்கள்? நான் வீட்டை விட்டு வெளியே வந்திருந்தேன். நான் வெள்ளை ஆடைகளை அணிந்து தெருவில் நடந்து கொண்டிருந்தேன். அன்று நான் வெளியே சென்று கொண்டிருந்தேன்” என்றார்

”டிரைவிங் லைசென்ஸ் வாங்கி கார் வாங்க வேண்டும் என்பதே என் கனவாக இருந்தது. ஆனால் இன்று நான் செய்ய விரும்பும் ஒன்று நடப்பது மட்டும்தான்” என்றார்.

Previous Story

சிரிதரனை மிஞ்சும் சுமந்திரன்!

Next Story

NPP யில் டசன் கணக்கான முஸ்லிம் வேட்பாளர்கள்