“இஸ்ரேலின் கோழைத்தனம்..” ஐநா கண்டனம்

கத்தாரில், போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையில் ஹாமஸ் தலைவர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்கள் மீது இஸ்ரேல் கடும் தாக்குதலை நடத்தியிருக்கிறது. இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

காசாவிலிருந்து சுமார் 1,854 கி.மீ தொலைவில் உள்ள கத்தார் தலைநகர் தோஹாவில், போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. பேச்சுவார்த்தை நடந்துக்கொண்டிருக்கும்போதே திடீரென இஸ்ரேல் போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியிருக்கிறது.

இந்த தாக்குதலை ‘கோழைத்தனம்’ என கத்தார் கண்டித்திருக்கிறது. ஐநா கண்டனம் ஐநா சபையின் தலைவர் இந்தத் தாக்குதலை, “கத்தாரின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் மீதான பட்டவர்த்தனமான மீறல். காசா போரில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் நிரந்தர போர் நிறுத்தத்தை நோக்கிச் செயல்பட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சகம் “சகோதர நாடான கத்தாரின் இறையாண்மையின் மீதான மிருகத்தனமான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பையும், பட்டவர்த்தனமான மீறலையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறது.

துருக்கியின் வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், “இஸ்ரேலின் இந்தத் தாக்குதல், காசா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தில் இஸ்ரேலுக்கு ஆர்வம் இல்லை என்பதைக் காட்டுகிறது.

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில், ஹமாஸ் பேச்சுவார்த்தை பிரதிநிதிகளை குறிவைப்பது இஸ்ரேல் சமாதானத்தை அடைய விரும்பவில்லை என்பதையும், போரைத் தொடரவே விரும்புகிறது என்பதையும் காட்டுகிறது.

மேலும் ஆக்கிரமிப்பு கொள்கையையும், பயங்கரவாதத்தையும் ஒரு அரசு(இஸ்ரேல்), தனது கொள்கையாகவே ஏற்றுக்கொண்டுள்ளது என்பதற்கு தெளிவான சான்று” ” என்று துருக்கி வெளியுறவு அமைச்சகம் கண்டித்திருக்கிறது.

எமிரேட்ஸ் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கத்தாருக்கு ஆதரவு தெரிவித்து, இஸ்ரேலை கண்டித்திருக்கிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபரின் இராஜதந்திர ஆலோசகர் அன்வர் கர்காஷ், “அரபு வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு முக்கியமானது. இந்தத் தாக்குதலுக்கு எதிராக கத்தாருடன் நாங்கள் முழு மனதுடன் நிற்கிறோம்” என்று கூறியுள்ளார்.

குவைத் வெளியுறவு அமைச்சகம், “இஸ்ரேலிய படைகள் கத்தார் மீது நடத்திய மிருகத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என கூறியிருக்கிறது.

ஜோர்டான் வெளியுறவு அமைச்சகம், இஸ்ரேலின் இந்த குண்டுவீச்சு சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறல் என்றும், கத்தாரின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு மீதான அப்பட்டமான தாக்குதல் என்றும் கூறியுள்ளது.

இந்தத் தாக்குதல் அரபு நாட்டின் இறையாண்மையின் மீறல் என்றும், பிராந்தியத்தை மேலும் வன்முறை மற்றும் மோதலை நோக்கித் தள்ளும் ஆபத்தான, ஏற்றுக்கொள்ள முடியாத ஆத்திரமூட்டும் செயல் என்றும் அந்நாட்டு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.

ஈரான் இந்தத் தாக்குதலை “மீறல்” என்று கூறியிருக்கிறது. வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய், “இந்த மிகவும் ஆபத்தான மற்றும் கிரிமினல் நடவடிக்கை அனைத்து சர்வதேச விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் பெரும் மீறலாகும்.

கத்தாரின் தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் மீதான மீறல் இது” என்று கூறியுள்ளார். ஈராக் வெளியுறவு அமைச்சகம் இந்தத் தாக்குதலை “கோழைத்தனமான செயல்” என்று விமர்சித்ததுடன், எந்த ஆக்கிரமிப்பையும் எதிர்கொள்ள கத்தாருக்கு “முழு ஆதரவையும்” தெரிவித்தது.

Previous Story

கத்தாரில் Doha ஹமாஸ் தலைவருக்கு முடிவுரை எழுதியது இஸ்ரேல் எப்படி நிகழ்த்தியது

Next Story

நேபாளத்தில் அமைச்சருக்கு அடி, உதை - கலவரமான Gen Z புரட்சி! -