இலங்கை சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்தி 

இலங்கையின் போராட்டம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் கூடிய கவனத்தை செலுத்தியுள்ளன. உலகில் அனைத்து நாடுகளின் ஊடகங்களும் இலங்கையில் நடைபெறும் போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

பிரான்ஸின் 24 செய்திச் சேவை

பிரான்ஸின் 24 செய்திச் சேவை, இலங்கையின் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டகாரர்கள் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தை முற்றுகையிட்டுள்ளனர் என்ற தலைப்பில் செய்தியை வெளியிட்டுள்ளது.

கடந்த 7 தசாப்தங்களில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல மாதங்களாக பொதுமக்கள் கோபமும் ஆத்திரமும் ஏற்பட்டுள்ளது.

சனிக்கிழமை கொழும்பில் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டகாரர்கள், காவல்துறை தடைகளை உடைத்துக்கொண்டு அரச தலைவர் மாளிகையை முற்றுகையிட்டுள்ளனர் என குறித்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

இந்தியாவின் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திச் சேவை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, அரச தலைவரது மாளிகையில் இருந்து தப்பிச் செல்லும் போது போராட்டகாரர்கள் அவரது உத்தியோகபூர்வ இடத்தை முற்றுகையிட்டுள்ளனர் என்ற தலைப்பில் செய்தியை வெளியிட்டுள்ளது.

இலங்கை ஊடகங்களை மேற்கோள்காட்டி, அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் பயணப் பொதிகள் இலங்கை கடற்படையின் கஜபா கப்பலுக்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் அந்தச் செய்தி சேவையின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரச தலைவரை பதவி விலகக் கோரி, போராட்டகாரர்கள் அரச தலைவரின் மாளிகையை முற்றுகையிட்டுள்ளதாக அல் ஜெசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

அல் ஜெசீரா

இந்த வருடத்தில் இலங்கையில் நடந்த மிகப்பெரிய எதிர்ப்பு போராட்டத்தில் ஆயிரக்கணக்கான போராட்டகாரர்கள் காவல்துறை தடைகளை உடைத்துக்கொண்டு அரச தலைவரது மாளிகைக்குள் புகுந்துள்ளனர் என அல் ஜெசீரா கூறியுள்ளது.

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியால் கோபமடைந்துள்ள போராட்டகாரர்கள் அரச தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தை முற்றுகையிட்டுள்ளனர் என்ற தலைப்பில் ரொய்டர் செய்திச் சேவை செய்தியை வெளியிட்டுள்ளது.

Previous Story

ரணில்  இல்லத்திற்கு தீ வைப்பு

Next Story

ரணில் வீடு தீ வைக்கப்பட்ட தொடர்பில் வெளிவரும் தகவல்