இலங்கை:தொடர் நெருக்கடி!

இலங்கையின் புதிய நிதி அமைச்சராக நேற்று முன் தினம் பொறுப்பேற்ற அலி சப்ரி, பதவி ஏற்ற மறு நாளே ராஜினாமா செய்துள்ளார். மேலும், ஆளும் கூட்டணிக்கு ஆதரவு அளித்து வந்த முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேன தலைமையிலான எம்.பி.,க்கள் தங்கள் ஆதரவை திரும்பப் பெற முடிவு செய்துள்ளனர். இதையடுத்து இலங்கை அதிபர் மற்றும் பிரதமருக்கு நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழக்கும் சூழல் உருவாகி உள்ளது.

இலங்கையில் 2019ல் நடந்த பொது தேர்தலுக்குப் பின், அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுன கூட்டணி அரசு பொறுப்பேற்றது. கோத்தபய ராஜபக்சேவின் சகோதரர் மகிந்தா ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்றார். மற்றொரு சகோதரரான பசில் ராஜபக்சே நிதி அமைச்சராக பொறுப்பேற்றார்.

மக்கள் அவதி

மகிந்தாவின் மகன் நமல் ராஜபக்சே இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இலங்கையின் அதிகாரமிக்க பதவிகள் அனைத்தும், ராஜபக்சே குடும்பத்தினர் வசம் உள்ளன.இந்நிலையில், கொரோனா தொற்று பரவலுக்குப் பின் இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாட்டால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் விலை, பல மடங்கு உயர்ந்துள்ளது.பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாடு முழுதும் பல மணி நேர மின் வெட்டால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

நிலைமை கைமீறிப் போனதை அடுத்து, ‘பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும்’ எனக் கோரி, பொதுமக்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, இலங்கையில் அவசரநிலையை பிரகடனப்படுத்தி, கடந்த 1ம் தேதி நள்ளிரவு பிரதமர் உத்தரவிட்டார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த முடிவால் மக்கள் போராட்டம் தீவிரமடைந்தது.இதையடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்தா ராஜபக்சே தவிர, அமைச்சரவையில் உள்ள 26 அமைச்சர்கள் தங்கள் பதவிகளை சமீபத்தில் ராஜினாமா செய்தனர்.

நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளித்து, இந்த இக்கட்டான சூழலில் இருந்து மீள, அனைத்து கட்சி உறுப்பினர்களையும் அடக்கிய கூட்டு அமைச்சரவையை அமைக்க, கோத்தபய ராஜபக்சே திட்டமிட்டார். இதில் இணைய, அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்தார். ஆனால், அதிபரின் அழைப்பை ஏற்க எதிர்க்கட்சியினர் மறுத்துவிட்டனர்.

இதற்கிடையே, மகிந்த ராஜபக்சே கட்சியைச் சேர்ந்த ஜி.எல்.பிரிஸ் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், தினேஷ் குணவர்தனே கல்வி அமைச்சராகவும், ஜான்ஸ்டன் பெர்னாண்டோ நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகவும் நேற்று முன் தினம் பொறுப்பேற்றனர்.

அரசியல் குழப்பம்

இலங்கை நிதி அமைச்சரும், அதிபரின் சகோதரருமான பசில் ராஜபக்சே மீது, இலங்கையின் பொதுஜன பெரமுனா கூட்டணி கட்சித் தலைவர்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது. இதையடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று முன் தினம் திடீரென பசில் ராஜபக்சேவை பதவி நீக்கம் செய்தார். சட்டத்துறை அமைச்சராக இருந்த அலி சப்ரி புதிய நிதியமைச்சராக நேற்று முன்தினம் பொறுப்பேற்ற நிலையில், அவரும் நேற்று திடீரென அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இது தொடர்பாக அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அவர் அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:மிகுந்த சிந்தனை மற்றும் ஆலோசனைக்குப் பின், தற்போதைய நிலைமையை கருத்தில் வைத்து ராஜினாமா முடிவை எடுத்துள்ளேன்.
நாடு முன் எப்போதும் சந்தித்திராத நெருக்கடியை சமாளிக்க, தகுந்த இடைக்கால ஏற்பாடு செய்யப்பட வேண்டும். புதிய நிதி அமைச்சரை நியமிப்பதுடன், முற்றிலும் மாறுபட்ட நடவடிக்கைகளே நாட்டின் தற்போதைய தேவையாக உள்ளது.இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் குழப்பம் காரணமாக, ஆளும் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை முன்னாள் அதிபரும், இலங்கை சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்ரிபால சிறிசேன திரும்ப பெற முடிவு செய்துள்ளார். இதையடுத்து, அவரது கட்சியை சேர்ந்த 14 எம்.பி.,க்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதிருப்தி எம்.பி.,க்கள்

இவர்களை தவிர கூட்டணியில் இடம் பெற்றுள்ள மேலும் 27 உறுப்பினர்கள் ஆதரவை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக அதிருப்தி எம்.பி.,க்கள் தெரிவித்தனர்.

இலங்கை பார்லி.,யில் மொத்தமுள்ள 225 இடங்களில் குறைந்தபட்ச பெரும்பான்மையை நிரூபிக்க, 113 உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும்.

தற்போதுள்ள நிலவரப்படி அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு 109 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், ராஜபக்சே சகோதரர்கள் தலைமையிலான இலங்கை அரசு பெரும்பான்மையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அனைத்துக் கட்சி கூட்டம்!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பதற்காக கொழும்பில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. அதிபர் கோத்தபய, பிரதமர் மகிந்த உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், பொருளாதார நெருக்கடி குறித்து விவாதிக்க, இன்றும், நாளையும் பார்லிமென்டில் விவாதம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

துாதரகங்கள் மூடல்

பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், நிதிச்சுமையை குறைக்கும் வகையில் ஆஸ்திரேலியாவின் சிட்னி, ஈராக்கின் பாக்தாத், நார்வேயின் ஓஸ்லோ ஆகிய நகரங்களில் உள்ள இலங்கை துாதரகத்தை மூட, இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

Previous Story

இம்ரான் கானின் அரசியல் பயணம்

Next Story

மிரிஹான ஆர்ப்பாட்டத்தில் அரச வன்முறையாளர்களை  இறக்கிய நிஷ்சங்க சேனாதிபதி