அமெரிக்காவிலேயே எதிர்கொள்ளும் விமர்சனம் என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்துக்கு அமெரிக்கத் தலைவர்கள் கடும் எதிர்வினை ஆற்றியுள்ளனர் (இடமிருந்து: குடியரசுக் கட்சித் தலைவர் மார்ஜரி டெய்லர் கிரீன், ஜனநாயக கட்சி செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் மற்றும் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் யாஸ்மின் அன்சாரி)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் இரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட பதிவில், இரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அச்சுறுத்தியுள்ளார்.
அவர் இரானை ஹோர்மூஸ் நீரிணையைத் திறக்குமாறு வலியுறுத்தினார், அப்படிச் செய்யாவிட்டால் மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.
அச்சுறுத்தல்களையும் எச்சரிக்கைகளையும் அவர் முன்பும் விடுத்துள்ளார். ஆனால் இந்த முறை டொனால்ட் டிரம்ப் பயன்படுத்திய கெட்ட வார்த்தைகள் குறித்து உலகம் முழுவதும் விவாதம் தொடங்கியுள்ளது.
ஓர் அதிபர் இத்தகைய மொழியைப் பயன்படுத்துவது ‘வெட்கக்கேடானது’ என்று மக்கள் கூறி வருகின்றனர்.
இரான் அவரது இந்த கருத்தை விமர்சித்துள்ளது. இரான் மத்திய ராணுவ கட்டளை மையத்தின் அப்தொல்லாஹி அலியாபாதி, டிரம்பின் அச்சுறுத்தல் குறித்துக் கூறுகையில்,
“இது விரக்தி நிறைந்த, சமநிலையற்ற மற்றும் முட்டாள்தனமான செயல்” என்றார்.
இரான் அதிபர் அலுவலக செய்தித் தொடர்பாளர் மெஹதி தபாதபாய் கூறுகையில், “கப்பல்களிடம் வசூலிக்கப்படும் போக்குவரத்து சுங்கக் கட்டணத்தின் ஒரு பகுதி, போரில் ஏற்பட்ட சேதங்களை ஈடுகட்டப் பயன்படுத்தப்படும் போது ஹோர்மூஸ் நீரிணை மீண்டும் முழுமையாகத் திறக்கப்படும்” என்றார்.

நியூ மெக்சிகோவைச் சேர்ந்த ஜனநாயக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மெலனி ஸ்டான்ஸ்பரி
‘டிரம்ப் அர்த்தமற்ற பேச்சுகளைப் பேசுகிறார்’
இரானில் மட்டுமல்ல, அமெரிக்காவிற்குள்ளும் டிரம்பின் இந்த கருத்துக்கும் அதில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைக்கும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
வெர்மான்ட் செனட்டரும், ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராவதற்கு இரண்டு முறை போட்டியிட்டவருமான பெர்னி சாண்டர்ஸ் எக்ஸ் தளத்தில்,
“இரான் போர் தொடங்கி ஒரு மாதத்திற்குப் பிறகு, ஈஸ்டர் ஞாயிறு அன்று அமெரிக்க அதிபர் இத்தகைய கருத்தை வெளியிடுகிறார். இது மனநிலை சரியில்லாத ஒரு நபர் பேசும் அர்த்தமற்ற பேச்சு. நாடாளுமன்றம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் போரை உடனே முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்,” என பதிவிட்டுள்ளார்.

நியூ மெக்சிகோவைச் சேர்ந்த ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மெலனி ஸ்டான்ஸ்பரி, “அவர் உண்மையை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.
25-வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவை இப்போது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என குறிப்பிட்டுள்ளார்
அமெரிக்க அரசியலமைப்பின் 25-வது திருத்தச் சட்டத்தில், அதிபரைப் ‘பதவிக்குத் தகுதியற்றவர்’ எனக் கருதி, அவரது அதிகாரங்களை துணை அதிபரிடம் ஒப்படைப்பதற்கான வழிவகை உள்ளது.
மற்றொரு ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எமி பெரா, “எனது குடியரசுக் கட்சி நண்பர்களுக்கும் இது தெரியும். இப்போது அவர்கள் கொஞ்சம் துணிச்சலைக் காட்டி, இந்த அரசியலமைப்பிற்கு விரோதமான போரைத் தொடுக்கும் அவரது திறனைக் கட்டுப்படுத்த எங்களுடன் இணைய வேண்டிய நேரம் இது.” என குறிப்பிட்டுள்ளார்.
மாசசூசெட்ஸைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம் மெக்கவர்ன் இதை ”மனநலப் பிறழ்வு” என்று குறிப்பிட்டார்.
“அமெரிக்க அதிபருக்கு உதவி தேவை. அவரது நடத்தை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறியது மற்றும் மிகவும் ஆபத்தானது,” என அவர் எழுதினார்.

டெல் அவிவ் நகரில் இரான் போருக்கு எதிராக ஒரு போராட்டத்தில் பங்கேற்கும் மக்கள்
அடிக்கடி காலக்கெடுவை மாற்றும் டொனால்ட் டிரம்ப்
தனது சமீபத்திய பதிவில், டொனால்ட் டிரம்ப் இரானை செவ்வாய்கிழமைக்குள் ஹோர்மூஸ் நீரிணையைத் திறக்குமாறு கூறியுள்ளார். ஆனால் இரான் போரின் போது அவர் பலமுறை தனது காலக்கெடுவை மாற்றியுள்ளார்.
மார்ச் 21 அன்று, அவர் 48 மணி நேரத்திற்குள் ஹோர்மூஸ் நீரிணையைத் திறக்க வேண்டும் என்று இரானை அச்சுறுத்தினார்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே “மிகவும் நல்ல மற்றும் பயனுள்ள பேச்சுவார்த்தை” நடந்ததாக அவர் கூறினார், மேலும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைத்தார்.
இருப்பினும், அத்தகைய பேச்சுவார்த்தை எதையும் இரான் மறுத்தது.
மார்ச் 27 அன்று, அவர் மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதலை 10 நாட்களுக்கு ஒத்திவைப்பதாகக் கூறினார். ‘இரான் அரசு இதைக் கோரியது’ என்று அவர் கூறினார். இதன் மூலம் அவரது புதிய காலக்கெடு ஏப்ரல் 6-ஆக நீட்டிக்கப்பட்டது.

மேரிலாந்தின் ஜனநாயகக் கட்சி செனட்டர் கிறிஸ் வான் ஹோலன், டொனால்ட் டிரம்பை அதிபர் பதவிக்குத் தகுதியற்றவர் என்று கூறினார்.
‘அதிபர் பதவிக்குத் தகுதியற்றவர்’
அமெரிக்காவின் மூத்த ஜனநாயக கட்சி செனட்டர் பேட்டி முர்ரே, “இவர் ஒரு தீவிரமான மனநலப் பாதிப்பு கொண்ட நபர், அதிகார மமதையில் ஆபத்தான போர் குற்றங்களைச் செய்யப் போவதாக அச்சுறுத்துகிறார்.
அமெரிக்க அதிபர் நமது வீரர்களை ஆபத்தில் தள்ளுவது குறித்து இத்தகைய மொழியில் பேசக்கூடாது. குடியரசுக் கட்சித் தலைவர்கள் ஜனநாயக கட்சியினருடன் இணைந்து இந்தப் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்,” என எக்ஸ் தளத்தில் எழுதினார்.
ஜனநாயக கட்சியை சேர்ந்த ஓரிகான் செனட்டர் ஜெஃப் மெர்க்லி “அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈஸ்டர் சமயத்தில் விடுத்த இந்த கெட்ட வார்த்தைகள் நிறைந்த அச்சுறுத்தல் மற்றும் இரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் போன்ற உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவது பற்றி பேசியிருப்பது ஒரு விரக்தியடைந்த மற்றும் தார்மீக ரீதியாகச் சிதைந்த ஒரு நபரின் வார்த்தைகள்.
சர்வதேச சட்டத்தின்படி இத்தகைய தாக்குதல்கள் போர்க்குற்றங்களாகக் கருதப்படலாம் என்று பல நிபுணர்கள் கருதுகின்றனர். நமது ராணுவத் தலைவர்களிடம் நான் கேட்டுக்கொள்வது இதுதான் – போர்க்குற்றங்களைச் செய்யச் சொல்லும் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிய மறுப்பது உங்கள் சட்டப்பூர்வப் பொறுப்பாகும்.” என குறிப்பிட்டுள்ளார்.
மேரிலாந்தின் ஜனநாயகக் கட்சியின் செனட்டர் கிறிஸ் வான் ஹோலன், டொனால்ட் டிரம்பை அதிபர் பதவிக்குத் தகுதியற்றவர் என்று கூறினார்.
அதே சமயம், அரிசோனாவின் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் யாஸ்மின் அன்சாரி, “அமெரிக்க அதிபரின் நடத்தை சமநிலையற்ற ஒரு நபரைப் போல உள்ளது, மேலும் அவர் நமது நாட்டிற்கும் ஒட்டுமொத்த உலகிற்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறிவிட்டார்,” என எழுதியுள்ளார்.
ஜனநாயக கட்சி மட்டுமல்லாது, டிரம்பின் சொந்த குடியரசுக் கட்சியிலிருந்தும் அவருக்கு எதிராகக் குரல்கள் எழுந்துள்ளன.
டிரம்பின் முன்னாள் கூட்டாளியும் குடியரசுக் கட்சித் தலைவருமான மார்ஜரி டெய்லர் கிரீன், அதிபர் டிரம்பைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஒரு நீண்ட எக்ஸ் தள பதிவில் அவர், “ஈஸ்டர் காலை அதிபர் டொனால்ட் டிரம்ப் இதைப் பதிவிட்டுள்ளார்.
அவரது நிர்வாகத்தில் தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் எவரும், மண்டியிட்டு கடவுளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், அதிபரை வணங்குவதை நிறுத்த வேண்டும் மற்றும் டிரம்பின் இந்த ஆவேசப் போக்கில் தலையிட வேண்டும்.
உங்கள் அனைவரையும் மற்றும் அவரையும் எனக்குத் தெரியும். அவர் தனது மனநிலையை இழந்துவிட்டார், இதில் உங்கள் அனைவருக்கும் சம பங்கு உண்டு.”என குறிப்பிட்டுள்ளார்




