இந்து மாணவிகள் ஹிஜாப் அணிந்த போஸ்டர் – பள்ளியில் மதமற்றம் நடக்கிறதா?

மத்திய பிரதேச மாநிலம் தாமோஹ் நகரில் உள்ள கங்கா ஜமுனா மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் மதம் மாற்றப்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சைக்கு மத்தியில், பள்ளியின் நிர்வாகிகள் மீது போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

மேலும் இங்குள்ள சுமார் 1,200 மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்ப்பது குறித்தும் மாநில அரசு சிந்தித்து வருகிறது.

பள்ளி நிர்வாகத்தின் மீதான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து 295 (ஏ), 506 பி மற்றும் ‘சிறார் நீதிச் சட்டம்’ ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஷ்ரா செய்தியாளர்களிடம் கூறினார்.

பள்ளியில் மதமாற்றமா?

“போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும் உண்மைகள் வெளிவந்தால் எஃப்ஐஆரில் கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்படலாம்” என்று அவர் கூறினார்.

மத்திய பிரதேச கல்வி வாரியத்துடன் இணைந்த தாமோஹ்வின் ‘கங்கா ஜமுனா மேல்நிலைப் பள்ளி’க்கான அங்கீகாரத்தை மாநில அரசு ‘ரத்து செய்துள்ளது’.

மாவட்ட அளவில் தனி சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டுள்ளது. இதில் துணை கலெக்டர் ஆர்.எல்.பாக்ரி மற்றும் மகளிர் பிரிவு துணை போலீஸ் கண்காணிப்பாளர் பாவ்னா தாங்கி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்,” என்று தாமோஹ் மாவட்ட ஆட்சியர் மயங்க் அகர்வால் கூறினார்.

சர்ச்சையின் பின்னணி என்ன?

மத்திய பிரதேசத்தில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு பள்ளிக்கூடம் ஒன்றில் முதலிடம் பிடித்த மாணவர்களின் படங்கள் அடங்கிய போஸ்டர் ஒட்டப்பட்டது. இந்தப் பள்ளியில் 98.5 சதவிகித மாணவர்கள் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அந்த சுவரொட்டியில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் போஸ்டரில் சில இந்து மாணவிகள், ஹிஜாப் அணிந்திருக்கும் படங்களும் இடம் பெற்றதால் சர்ச்சை எழுந்துள்ளது. இதற்குப் பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பள்ளி நிர்வாகம் கட்டாய மதமாற்றம் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ‘கல்மே'(இஸ்லாமிய புனித நூல்) கற்பிக்கப்படுவதாகவும், இந்து பெண்கள் ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தப்படுவதாகவும் பாரதிய ஜனதா கட்சியின் உள்ளூர் தலைவர்கள் உட்பட சில அமைப்புகள் குற்றம் சாட்டின.

இது பற்றிய பேச்சு வலுப்பெற்ற நிலையில் மாநில அரசு, மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டது.

தாமோஹ் கங்கா ஜமுனா பள்ளியில் இந்து மாணவிகள் ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தப்படுவதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் வி.டி.ஷர்மா குற்றம் சாட்டினார்.

“பள்ளிக்கூடம் என்ற போர்வையில் லவ் ஜிகாத், ஜிகாதி சாம்ராஜ்யம் அமைப்பவர்கள் மீது மதமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து அவர்களின் சொத்துகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்,” என்றார் அவர்.

இந்த சர்ச்சை குறித்து மே 30ஆம் தேதி ட்வீட் செய்த தாமோஹ் மாவட்ட ஆட்சியர் மயங்க் அகர்வால், “கங்கா ஜமுனா பள்ளியின் போஸ்டர் குறித்து சிலர் பரப்பிய தகவல் குறித்து காவல் நிலைய பொறுப்பாளர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை நடத்தியதில் இது உண்மையல்ல என்று கண்டறியப்பட்டது. விசாரணைக் குழு தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது,” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த தாமோஹ் காவல்துறை கண்காணிப்பாளர் ராகேஷ் சிங், “குற்றச்சாட்டுகள் விசாரணையில் நிரூபிக்கப்படவில்லை” என்று எழுதினார்.

பள்ளியில் மதமாற்றமா?

மாவட்ட கல்வி அதிகாரி மீது பேனா மை வீசப்பட்டது

நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை காரணமாக பல அமைப்புகள் தாமோஹ் மாவட்ட கல்வி அதிகாரி எஸ்.கே.மிஷ்ரா மீது கோபமடைந்தன.

இம்மாதம் 6ஆம் தேதி அவர் தனது அலுவலகத்தில் இருந்து வெளியே வரும்போது பாரதிய ஜனதா கட்சியின் ஒரு குழுவினர் அவர் மீது பேனா மையை வீசினர்.

கட்சியின் மூன்று தலைவர்களுக்கு ‘விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ்’ அளிக்கப்பட்டிருப்பதாக இந்தச் சம்பவத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய, பாரதிய ஜனதா கட்சியின் தாமோஹ் மாவட்டத் தலைவர் பிரீதம் சிங் லோதி தெரிவித்தார்.

”இதுபோன்ற சம்பவங்களை பாஜக ஆதரிக்காது’ என்றார் அவர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தமோஹ்வின் பாஜக துணைத் தலைவர் அமித் பஜாஜ் மற்றும் மேலும் இரண்டு தொண்டர்கள் மீது போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகத்தின் அறிக்கையால் அமைச்சர் கோபம்

தாமோஹ் மாவட்ட நிர்வாகத்தின் அறிக்கை தொடர்பாக மாநில பள்ளிக் கல்வி அமைச்சர் இந்தர் சிங் பர்மார் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியரின் அறிக்கையை விமர்சித்த அவர், “பள்ளி நிர்வாகத்திற்கு க்ளீன் சிட்’ வழங்குவதற்குப் பதிலாக பள்ளி மீதான குற்றச்சாட்டுகளை நிர்வாகம் முறையாகவும் முழுமையாகவும் விசாரித்திருக்க வேண்டும்,” என்றார்.

மத்திய பிரதேசத்தின் தலைநகர் போபாலில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பர்மார், “சம்பவத்திற்குப் பிறகு மாவட்டக் கல்வி அதிகாரி விசாரணை நடத்தி பள்ளி குறித்து தவறான தகவல்களை வழங்கியுள்ளார்.

பள்ளியை அவ்வப்போது அவர் ஆய்வு செய்திருக்க வேண்டும். மாவட்ட கல்வி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கிறேன்,” என்றார்.

பள்ளியில் மதமாற்றமா?

முதலமைச்சரின் கடுமையான நிலைப்பாடு

இந்தச் சம்பவம் குறித்து முதல்வர் சிவராஜ் சிங் செளஹானும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இது தொடர்பாக மாநில தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநரிடம் முதல்வர் பேசினார்.

“தாமோஹ்வின் கங்கா ஜமுனா பள்ளியில் இருந்து வெளிச்சத்துக்கு வந்த விவகாரம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள யாரும், எந்த மகளையும், குழந்தைகளையும் ஹிஜாப் அணியவோ, வேறு உடை அணியவோ கட்டாயப்படுத்த முடியாது. இதற்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுப்போம்,” என்று பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்தார்.

”மாநிலத்தின் சில பகுதிகளில் மதமாற்ற சதி நடந்து வருகிறது,” என்று ஏஎன்ஐ செய்தி முகமையிடம் முதல்வர் கூறினார்.

“அவர்களை வெற்றிபெற விடமாட்டோம். மாநிலம் முழுவதும் விசாரணைக்கு அறிவுறுத்தியுள்ளோம். மதரஸாவை நடத்தும் கல்வி நிறுவனங்களாக இருந்தாலும் சரி, அங்கு தவறான வழியில் கல்வி கற்பிக்கப்பட்டால், அதையும் நாங்கள் ஆய்வு செய்வோம்.

இப்போது தாமோஹ் சம்பவம் குறித்து எனக்கு புகார்கள் வருகின்றன. இரண்டு மாணவிகள் வாக்குமூலமும் அளித்துள்ளனர். அவர்கள் புகார்தாரர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். இது மிகவும் தீவிரமான விஷயம். நாங்கள் எஃப்ஐஆர் பதிவு செய்கிறோம். இதற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசின் நிலைப்பாட்டிற்கு பிறகு மாவட்ட

நிர்வாகம் மீண்டும் செயலில் இறங்கியுள்ளது

முதலமைச்சரின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து தாமோஹ் போலீசார் நடவடிக்கை எடுத்து, இரு பெண்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்தனர்.

இதை உறுதிப்படுத்திய தாமோஹ் போலீஸ் கண்காணிப்பாளர் ராகேஷ் சிங், “இரண்டு மாணவிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

மாநில அரசின் அறிவுறுத்தலுக்குப் பிறகு மீண்டும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், பள்ளி நிர்வாகத்தின் மீது மாணவிகள் சுமத்தியுள்ள கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறை அதிகாரிகள் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர் என்றும் கூறினார்.

பள்ளியில் மதமாற்றமா?

பள்ளி நிர்வாகம் என்ன சொல்கிறது?

2010ஆம் ஆண்டு முதல், முகமது இத்ரிஸ் தலைமையிலான ‘கங்கா ஜமுனா வெல்ஃபேர் சொசைட்டி’ என்ற அரசு சாரா அமைப்பால் பள்ளி நடத்தப்படுகிறது.

அதிகரித்து வரும் சர்ச்சையைக் கண்ட அவர் சில செய்தியாளர்களை அழைத்து விஷயங்களைத் தெளிவுபடுத்த முயன்றார்.

எந்தவொரு மாணவர் அல்லது மாணவி மீதும் வலுக்கட்டாயமாக எந்த விதிமுறைகளும் திணிக்கப்படவில்லை என்றார் அவர்.

பள்ளி சீருடையில் மாணவிகள் தானாக முன்வந்து ஸ்கார்ஃப் அல்லது துப்பட்டாவை அணிந்து கொள்ளலாம் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் இது தொடர்பான எழுத்துப்பூர்வ தகவலையும் அவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளார்.

ஹிஜாப் மட்டுமல்ல, பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் கையில் கலாவா (புனித கயிறு) கட்டிக்கொண்டு சென்றால் பள்ளியின் ஆசிரியர்கள் அதை வலுக்கட்டாயமாக அகற்றுகிறார்கள் என்று பாரதிய ஜனதா கட்சியின் உள்ளூர் தலைவர் அமித் பஜாஜ் குற்றம் சாட்டுகிறார்.

பள்ளியில் மூன்று ஆசிரியைகள் முன்பு இந்துவாக இருந்து பின்னர் இஸ்லாமுக்கு மாறியதாகவும் பஜாஜ் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மூன்று பேரும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து, ’தாங்களாகவே முன்வந்து மதம் மாறியதாகவும், அதுவும் பள்ளியில் சேருவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு செய்ததாகவும்’ எழுத்துப்பூர்வமாக அறிக்கை சம்ர்ப்பித்துள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணை பல்வேறு நிலைகளில் நடந்து கொண்டிருக்கிறது.

“இந்த அமைப்பு கல்வியுடன் மட்டும் நிற்கவில்லை. இது பெட்ரோல் பம்புகள், கிடங்குகள், பருப்பு ஆலைகள், ஆடை ஷோரூம்கள் போன்றவற்றையும் இயக்குகிறது. தற்போது இவை அனைத்தும் விசாரணையின் கீழ் உள்ளன,” என்று ‘கங்கா ஜமுனா நல அறக்கட்டளை’ தொடர்பாக உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Previous Story

விரைவில் புதிய போர் யுக்திகள்!

Next Story

நூற்றாண்டின் முடிவிலே மீட்சி! அதுவரைக்கும் காத்திருக்கவும்!