இந்திய தூதரகம் முன் குவைத்தில் ஹிஜாப்புக்கு ஆதரவாக போராட்டம்

குவைத் இந்திய தூதரக அருகில் ஹிஜாப்புக்கு ஆதரவாக பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் ‘அல்லாஹு அக்பர்’ (இறைவனே மிகப்பெரியவன்) என்ற பெயரில் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர். இந்தியாவில் மத தீவிரவாதம் அதிகரித்து வருவது வருத்தம் அளிப்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளில் முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. ஹிஜாப் அணிவதற்கு போட்டியாக இந்து மாணவிகள் காவித்துண்டு அணிந்து வரவே போராட்டங்கள் வெடித்தன. உடுப்பி மாவட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. ஒரு கல்வி நிறுவனத்தில் தேசிய கொடிக்கம்பத்தில் காவிக்கொடி ஏற்றப்பட்டது.

இதனையடுத்து நிலைமையை கட்டுப்படுத்து வகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தார் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை. இந்த விவகாரம் மாநில உயர்நீதிமன்றத்துக்கு சென்றது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஹிஜாப் அல்லது காவித்துண்டு என எந்தவித மத அடையாளங்களையும் வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வரக்கூடாது என்று உத்தரவிட்டது.

குவைத்தில் ஆர்ப்பாட்டம்

ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து குவைத் நாட்டின் இஸ்லாமிய அரசியலமைப்பு இயக்கத்தின் பெண்கள் பிரிவின் சார்பில் குவைத் நாட்டின் இந்திய தூதரகத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அவர்கள் ‘அல்லாஹு அக்பர்’ (இறைவனே மிகப்பெரியவன்) என்ற பெயரில் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர்.

முஸ்லீம் பெண்கள்

இந்தியாவில் முஸ்லிம் பெண்களுக்கு எதிராக நடந்து வரும் அத்துமீறல்கள் குறித்து சர்வதேச சமூகம் அமைதி காத்து வருவது கவலையளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வழக்கறிஞர் டனா சரப் கூறியதாவது : இந்தியாவில் மத தீவிரவாதம் அதிகரித்து வருவது வருத்தம் அளிக்கிறது.

ஆர்ப்பாட்டம் எதற்கு

அந்த நாட்டின் குடிமக்கள் முஸ்லிம் நாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் அவர்களது மத சடங்குகளை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எங்களது எதிர்ப்பை, கருத்துக்களை இந் திய தூதரகம் அந்த நாட்டுக்கு அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம் ஆகும்.

இந்தியா – குவைத் நல்லுறவு

குவைத் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே சிறப்பான நல்லுறவு இருந்து வருகிறது. இந்திய அரசு அனைத்து மதத்தையும் சரிசமமாக மதிக்க வேண்டும் என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 120 க்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்.

Previous Story

ஞானசாரர் முன் அலி சப்ரி,  தெரிவித்த கருத்துக்கள்

Next Story

இருவரின் மரண தண்டனையை சிங்கப்பூர் அதிபர் ஹலிமா நிறுத்தினார்