
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. இதற்கிடையே, இஸ்கான் அமைப்பு நிர்வாகி துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் தேச விரோத குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்பட்டார்.
இதனால் பல்வேறு இடங்களில் போராட்டம் நடக்கிறது. இந்நிலையில், டாக்காவில் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸை மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் மிஸ்ரி சந்தித்து பேசினார்.
நெருக்கமான உறவு
இது குறித்து, முகமது யூனுஸ் கூறியதாவது: இந்தியாவுடன் உறவு வலுவானது. நெருக்கமானது. வங்கதேச மக்களின் நம்பிக்கையையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதில் அரசு உறுதிபூண்டுள்ளது. இந்தியாவில் இருந்து முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அறிக்கைகள் வங்கதேசத்தில் பதற்றதை உருவாக்கியது. இவ்வாறு அவர் கூறினார்.
தாக்குதல்
இது குறித்து மத்திய வெளியுறவுத்தறை செயலாளர் மிஸ்ரி கூறியதாவது: சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சமீபத்தில் ஹிந்துக்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்தேன். வங்கதேச இடைக்கால அரசுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கான இந்தியாவின் விருப்பத்தை தெளிவுபடுத்தினேன். இவ்வாறு அவர் கூறினார்.