இந்தியாவிலும் மாணவர்கள் கோட்டாவுக்கு எதிராக ஆர்ப்பட்டம்

டெல்லியில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் கெளடில்யா மார்க் பகுதியில் உள்ள இலங்கை தூதரம் முன்பாக தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவர்களை போலீஸார் தடுத்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது குரல் எழுப்பினர்.

இலங்கையில் விரைவாக புதிய அரசாங்கம் அமைக்க வேண்டும் என்றும் போராட்டத்தின்போது மாணவர்கள் குரல் எழுப்பினர்.

சீனா, இந்தோனீசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளின் தூதரகங்கள் இதே கெளடில்யா மார்க் பகுதியில் உள்ளன. இந்த நிலையில், மாணவர்கள் தடையை மீறி போராட்டம் நடத்துவது குறித்த தகவலறிந்ததும் டெல்லி போலீஸார் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போகும்படி காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர். ஆனால், அவர்கள் தொடர்ந்து தூதரகத்தை முற்றுகையிடும் வகையில் முன்னேறினர்.

இதையடுத்து சிலரை கட்டாயப்படுத்தி அருகே இருந்த போலீஸ் வாகனங்களில் ஏற்றி காவல் நிலையத்துக்கு போலீஸார் கொண்டு சென்றனர். மாலையில் இந்த மாணவர்களின் விவரங்களை பதிவு செய்து கொண்டு அனைவரையும் போலீஸார் விடுவித்தனர்.

இலங்கையில்…

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டபோது, ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலம் உள்ளிட்ட முக்கிய இடங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போராட்டக்காரர்கள், இன்று அனைத்து கட்டடங்களை விட்டும் விலகுவதாக அறிவித்துள்ளனர்.

“நாங்கள் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்திலிருந்து உடனடியாக வெளியேறுகிறோம். அமைதியான முறையில் இங்கிருந்து நாங்கள் புறப்படுகிறோம். ஆனால் எங்கள் போராட்டத்தை தொடருவோம்,” என்று போராட்டக்காரர்களை ஒருங்கிணைக்கும் குழவைச் சேர்ந்த ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

அரசு அலுவலகங்களை ஆக்கிரமிப்புது எங்களுடைய நோக்கம் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவரும் நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கத் தவறியதற்காக பதவிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி தலைநகர் கொழும்பில் மக்கள் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில், அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த அரசு அலுவலகங்களை மீட்பது தொடர்பாக பாதுகாப்புப்படை உயரதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் நடத்திய சமாதான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த முன்னேற்றம் காணப்பட்டது.

போராட்டக்காரர்கள் அரசு கட்டடங்களை விட்டு வெளியேறி வரும் நிலையில், அந்த பகுதிகளின் முழுமையான கட்டுப்பாட்டையும் ராணுவத்தினர் தங்கள்வசமாக்கி வருகின்றனர்.

Previous Story

சரத் பொன்சேகா ஜனாதிபதி !

Next Story

கோட்டா  பதவி விலகல் கடிதம்