ஆஸ்கர் விருது:வழங்குவது யார்? திரைப்பட விருதுக்குதேர்வு எப்படி?

சில மாதங்களுக்கு ஒருமுறை நாம் ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்க்கிறோம். அது ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பைப் பெறுகிறது. பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை ஈட்டுகிறது. ஆனால், அத்தகைய படங்களில் ஏதாவது ஆஸ்கர் விருதுக்கு செல்கிறதா? அந்த விருதுக்கு ஒரு படம் எப்படித் தேர்வாகிறது?

ஆஸ்கர் விருது

உலகின் மிகவும் மதிப்புமிக்க விருதான ஆஸ்கரை யார் வழங்குகிறார்கள்? எந்தெந்த திரைப்படங்கள் அங்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றன? எப்படி தேர்ந்தெடுக்கப்படுகின்றன? ஸ்லம்டாக் மில்லினியர் படத்திற்காக ஏஆர் ரகுமானுக்கு இரண்டு விருதுகள் எப்படிக் கிடைத்தது?

ஆஸ்கர் விருதுகளின் செயல்முறையை இங்கு புரிந்துகொள்வோம்.

ஆஸ்கர் விருதை வழங்குவது யார்?

ஆஸ்கர் விருது

நாம் ஒவ்வொருவரும் திரைப்படத்திலோ இணையதளத்திலோ ஏதாவது ஒரு வகையில் “ஹாலிவுட்” என்ற எழுத்துகளை லாஸ் ஏஞ்சல்ஸ் மலை மீது பார்த்திருப்போம். அங்கிருந்து சில மைல் தொலைவில் உள்ள டால்ஃபி திரையரங்குக்கு ஆண்டுதோறும் ‘தி ஆஸ்கர்’ எனப்படும் அகாடெமி விருதுகளுக்காக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் ஈர்க்கப்படுகிறார்கள்.

1927ஆம் ஆண்டில், அகாடெமி ஆஃப் மோஷன் பிச்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ், அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர்கள் குழுவால் நிறுவப்பட்டது. 1928ஆம் ஆண்டில், அந்தக் குழு தனது அகாடெமி விருதுகளை முதன்முறையாக வழங்கியது. இன்று அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் பிற திரைப்பட தயாரிப்பாளர்கள் உட்பட 9,000க்கும் மேற்பட்டோர் அகாடெமியில் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

யாரும் எளிதில் இங்கு உறுப்பினராக முடியாது. அதற்கு சினிமாவில், இயக்குதல், நடிப்பு, எழுத்து, இசை என்று உறுப்பினராக விரும்பும் நபர் தங்களுடைய பிரிவில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பவராக இருக்க வேண்டும். அப்படி இருப்பவர்களில் இதில் உறுப்பினர் ஆவதற்கு அகாடெமி தான் அழைப்பு விடுக்கிறது.

யாரும் தாமாக அதற்கு விண்ணப்பித்துச் சேர்ந்துவிட முடியாது. ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரையில் இடம் பெறுபவர்களுக்கு மட்டும் அகாடெமியே உறுப்பினர் ஆவதற்கான அழைப்பை அனுப்புகிறது.

சரி, ஏன் இந்த அகாடெமி விருதுகள் ஆஸ்கர் என்று அழைக்கப்படுகின்றன?

அகாடெமி விருதில் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும் கோப்பை ஆஸ்கர் என்றழைக்கப்படுகிறது. இந்தப் பெயர் உண்மையில் எப்படி வந்தது என்பதற்குப் பல கதைகள் உள்ளன. ஆனால், எதையும் உறுதியாகக் கூறுவது கடினம்.

ஆஸ்கர் விருதுகள் யாருக்கு வழங்கப்படுகின்றன?

ஆஸ்கர் விருது

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் வெவ்வேறு மொழிகளில் தயாரிக்கப்படுகின்றன. அதேநேரத்தில் இதுபோன்ற லட்சக்கணக்கான திரைப்படங்கள் உலகம் முழுவதுமே வெளியாகின்றன. ஆனால், ஆஸ்கர் விருதுக்கு ஒரு படம் பரிந்துரைக்கப்படுவதற்குச் சில நிபந்தனைகள் உள்ளன.

1.படம் குறைந்தபட்சம் 40 நிமிடங்களாவது இருக்க வேண்டும்

2.லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள எந்த திரையரங்கிலாவது குறைந்தது 7 நாட்களாவது ஓடியிருக்க வேண்டும்

3.ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். அதற்கு முன்பு எந்த ஓடிடி தளத்திலும் வெளியிடப்பட்டிருக்கக்கூடாது.

ஒவ்வொரு நாடும் ஒரு பிரிவுக்கு ஒரு படத்தை மட்டுமே அனுப்ப முடியும். இந்த நிபந்தனைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் திரைப்படங்கள் நடிகர்களின் பெயர்களுடன் அகாடெமிக்கு ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். அதிலிருந்து பரிந்துரைகளுக்குத் தகுதியான படங்களின் பட்டியலை அகாடெமி வெளியிடுகிறது.

இதில் உலகம் முழுவதும் இருந்து தகுதி பெற்ற 400 திரைப்படங்கள் அடங்கும். அகாடெமி உறுப்பினர்கள் இறுதியாக 5 பேரைத் தேர்ந்தெடுத்து அதிலிருந்து இறுதி வெற்றியாளரை அறிவிக்கின்றனர்.

வெற்றியாளர் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்?

ஆஸ்கர் விருது

அகாடெமி ஆஃப் மோஷன் பிச்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸின் உறுப்பினர்கள் திரைப்படத் துறையில் அவர்களது பணியின் அடிப்படையில் 17 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளார்கள்.

நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள், ஆவணப்பட தயாரிப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள், ஒலி வடிவமைப்பாளர்கள், காட்சி விளைவுகள் எனப் பல்வேறு பிரிவுகள் அதில் அடக்கம். ஒன்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் யாரையும் வைக்க முடியாது.

இந்த 17 பிரிவுகளில் உள்ள மொத்த உறுப்பினர் கலைஞர்களில் சில கலைஞர்களைக் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் நடுவர் குழு அமைக்கப்படுகிறது. இந்த நடுவர் குழு உறுப்பினர்களின் இறுதிப் பட்டியல் கடைசி வரை அறிவிக்கப்படுவதில்லை.

இந்த நடுவர் குழு உறுப்பினர்கள் அந்தந்தத் துறைகளில் 20க்கும் மேற்பட்ட பிரிவுகளில் இருந்து வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதாவது நடுவர் குழுவின் நடிகர் பிரிவு உறுப்பினர்கள் சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் அல்லது நடிகை விருதுகளுக்கு மட்டுமே வாக்களிக்க முடியும். இசைக்கலைஞர்களின் நடுவர் குழு சிறந்த பாடல், சிறந்த பின்னணி இசை ஆகியவற்றை மட்டுமே தேர்வு செய்ய முடியும்.

இந்த வாக்குகளின் அடிப்படையில், இறுதி 5 பரிந்துரைகளில் அதிக வாக்குகளைப் பெறுபவர் வெற்றி பெறுவார்.

அனைத்து உறுப்பினர்களும் ஒரேயொரு விருதுக்கு மட்டுமே வாக்களிக்க முடியும். இதற்காக முன்னுரிமை வாக்கு முறைமை என்ற முறை பயன்படுத்தப்படுகிறது. இதில் நடுவர் குழு உறுப்பினர்கள் விருப்பப்படி வாக்களிக்க வேண்டும். ஒரு பிரிவில் 10 பரிந்துரைகள் உள்ளன என்றால் அதில் யார் பாதிக்கும் மேலான வாக்குகளைப் பெறுகிறாரோ அவருடைய படம் வெற்றி பெறுகிறது.

ஆரம்பத்தில் ஏ, பி, சி, டி, இ, எஃப், ஜி, ஹெச், ஐ, ஜே எனப் பத்து திரைப்படங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதில் நடுவர் குழு உறுப்பினர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப இந்தத் திரைப்படங்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

இந்தத் திரைப்படங்களில் ஏதேனும் ஒன்று 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றால், அந்தப் படம் இயல்பாகவே சிறந்த படமாக மாறும். ஆனால், வாக்குகள் அத்தகைய தெளிவான முடிவைக் கொடுக்கவில்லை என்றால், குறைந்த வாக்குகளைப் பெற்ற படங்கள் முதலில் பட்டியலில் இருந்து நீக்கப்படும். அதற்குப் பிறகு இரண்டாவது அதிக வாக்குகளைப் பெற்ற படத்திற்கு அந்த வாக்குகள் மாற்றப்படும்.

ஒருவேளை உறுப்பினர் ஒருவர் ‘சி’ திரைப்படத்திற்குத் தனது வாக்கை வழங்கியுள்ளார் என வைத்துக்கொள்வோம். ஆனால், அது குறைந்த வாக்குகளைப் பெற்ற படமாக நீக்கப்பட்டுவிட்டது என்றால், அதே உறுப்பினருடைய வாக்கு இரண்டாவது அதிக வாக்குகளைப் பெற்ற படத்திற்கு மாற்றப்படும். இதைச் செய்வதன்மூலம் எந்தப் படமும் பெரும்பான்மை வாக்குகளை எட்டாமல், அதேவேளையில் குறைந்த வாக்குகளைப் பெற்ற படங்களும் அகற்றப்படுகின்றன. அதற்குப் பிறகு இறுதியாக ஆஸ்கர் விருதுக்கான வெற்றியாளர் தேர்வு செய்யப்படுகிறார்.

ஆஸ்கர் விழாவில் சர்ச்சைகளும் விமர்சனங்களும்

ஆஸ்கர் விருது

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை முகத்தில் குத்திய தருணம் உங்களுக்கு நினைவிருக்கலாம். அகாடெமி விருதுகள் சர்ச்சைக்குள்ளானது அதுவே முதல் முறையல்ல. 2016ஆம் ஆண்டில், ஆஸ்கர் விழாவின் மிக முக்கியமான தருணம், சிறந்த படத்திற்கான விருது தவறாக அறிவிக்கப்பட்டது. விருதுக்கு அறிவிக்கப்பட்ட பெயர் லாலா லேண்ட். ஆனால், வெற்றி பெற்றது மூன்லைட்.

இதுமட்டுமின்றி, அகாடெமி வெள்ளை இனத்தவருக்குச் சாதகமாக இருப்பதாக அடிக்கடி குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. #OscarsSoWhite என்ற ஹேஷ்டேக் பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் ஓர் இயக்கமாக இருந்து வருகிறது. இதன் விளைவாக இன்று அகாடெமியில் மட்டுமல்ல, பரிந்துரைகளிலும் அதிக பன்முகத்தன்மை உள்ளது.

அதனால்தான் 2020ஆம் ஆண்டில் சிறந்த படத்திற்கான விருதை வென்ற முதல் ஆங்கிலம் அல்லாத திரைப்படம் என்ற பெருமையை கொரிய மொழி திரைப்படமான ‘தி பேரசைட்’ பெற்றது.

ஆஸ்கர் விழாவில் இந்தியா

ஆஸ்கர் விருது
படக்குறிப்பு,2009ஆம் ஆண்டு இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்

ஏஆர்.ரஹ்மானின் ‘ஜெய் ஹோ’ மற்றும் ஆஸ்கர் மேடையில் அவர் தமிழில் பேசியதும்தான் ஆஸ்கர் என்றதும் முதலில் நினைவுக்கு வரும். உண்மையில் 2009இல், ஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஒரு வரலாற்றை உருவாக்கியது. ஒரே ஆண்டில் 4 ஆஸ்கர் விருதுகளை இந்தியாவுக்கு கொண்டு வந்தது.

சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த பாடலுக்கான விருதுகளை ஏஆர்.ரஹ்மான் வென்றார். அதே பாடலுக்காக குல்சாருக்கும் இணை விருது வழங்கப்பட்டது. மேலும் ரசூல் பூக்குட்டி, ரிச்சர்ட் பைக் மற்றும் இயன் டாப் ஆகியோர் சிறந்த ஒலி கலவைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றனர்.

1983இல் ரிச்சர்ட் அட்டன்பரோவின் காந்தி திரைப்படத்திற்காக ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்தியர் பானு அத்தையா. அதைத் தொடர்ந்து 1992இல் சினிமாவுக்காக ஆற்றிய பங்களிப்பிற்காக சத்யஜித் ரே ஆஸ்கர் விருது பெற்றார்.

Previous Story

தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டத்தை தவிர்த்த நிதியமைச்சின் செயலாளர்

Next Story

தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம், ஆர்.ஆர்.ஆர். நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது