ஆம் ஆத்மி: பஞ்சாப்பில் ஆட்சி!

 

பஞ்சாப்பில் சட்டசபை தேர்தலில் தொங்கு சட்டசபை உருவாக வாய்ப்பு உள்ளதாக ஏபிபி சி வோட்டர் தெரிவித்துள்ளது. இங்கு ஆம் ஆத்மி கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2022ம் வருடம் மிக முக்கியமான அரசியல் வருடமாக பார்க்கப்படுகிறது. உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இதில் 4 மாநிலங்களில் பாஜக ஏற்கனவே ஆட்சியில் உள்ளது.

பஞ்சாப்பில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. ஆனால் பஞ்சாப்பில் அமிரிந்தர் சிங் காங்கிரஸில் இருந்து வெளியேறிவிட்டதால் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பு குறைந்துள்ளது.

சித்து

அதேபோல் காங்கிரசின் நவ்ஜோத் சிங் சித்துவும் தேசிய தலைமையோடு மோதல் போக்கில் இருப்பதால் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பஞ்சாப்பின் புதிய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி அவ்வளவு பிரபலம் கொண்டவர் இல்லை என்பதால் காங்கிரஸ் கட்சிக்கு போதுமான தலித் வாக்குகளை, சிறுபான்மையினர் வாக்குகளை இவர் பெற்றுத்தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படி?

அதேபோல் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் வெல்லும் வாய்ப்புகளும் உள்ளன. ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து களப்பணிகளை செய்து வருவதால் அங்கு அக்கட்சிக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ளது. அதேபோல் விவசாய சட்டங்களை வாபஸ் பெற்றதால் பாஜக மீதான எதிர்ப்பு குறைந்து வாக்குகள் பிரியும் வாய்ப்புகளும் உள்ளன. இது காங்கிரசுக்கு பின்னடைவாக மாறலாம். இந்த நிலையில்தான் பஞ்சாப்பில் சட்டசபை தேர்தலில் தொங்கு சட்டசபை உருவாக வாய்ப்பு உள்ளதாக ஏபிபி சி வோட்டர் சர்வே தெரிவித்துள்ளது.

ஏபிபி சி வோட்டர்

ஏபிபி சி வோட்டர் படி பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும். அங்கு நான்கு முனை போட்டி நிலவுகிறது. காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி, சிரோன்மணி அகாலிதளம் ஆகிய கட்சிகள் முக்கிய போட்டியாளர்களாக கருதப்படுகிறது. இன்னொரு பக்கம் அமிரிந்தர் சிங்கின் லோக் காங்கிரசும் போட்டியிடுகிறது.

வெற்றி

இங்கு உள்ள 117 இடங்களில் மெஜாரிட்டி பெற 59 இடங்களில் வெல்ல வேண்டும். அதன்படி ஆம் ஆத்மி 50-56 இடங்களை வெல்லும் வாய்ப்புகள் உள்ளன. காங்கிரஸ் 39-45 இடங்களை வெல்லும் வாய்ப்புகள் உள்ளன. அமிரிந்தர் சிங்கின் லோக் காங்கிரஸ் 0-3 இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பாஜக

சிரோன்மணி அகாலிதளம் 17-23 இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பாஜக பஞ்சாப்பில் 0-3 இடங்களை வெல்லும் வாய்ப்புகள் உள்ளன. இதன் மூலம் பஞ்சாப்பில் இந்த முறை ஆட்சி மாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. காங்கிரஸ் கட்சி தான் வலுவாக இருந்த மாநிலத்தை இந்த முறை இழந்துவிடும் வாய்ப்பு உள்ளதாக ஏபிபி சி வோட்டர் சர்வே தெரிவித்துள்ளது.

Previous Story

ரஷ்ய அதிபர் புடின்:உருக்கமான தகவல்

Next Story

குழந்தைகளை பிரிக்க இன்று அறுவை சிகிச்சை