ஆசிய கோப்பை கிரிக்கெட்2022

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் பார்க்க விரும்பும் அனைத்தும் நடந்து வருகின்றன.

சனத் ஜெயசூர்யாவின் ஆக்ரோஷமான பேட்டிங், முரளிதரன் மற்றும் அஜந்தா மென்டிஸ் ஆகியோரின் மாயாஜால பந்துவீச்சு மற்றும் அனைத்திற்கும் மேலாக உலகையே மெய்சிலிர்க்க வைக்கும் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பரபரப்பான பந்தயம்.

கிரிக்கெட்

கிரிக்கெட்டின் இந்த இரண்டு பாரம்பரிய போட்டியாளர்களும் இந்த மாதம் ஐக்கிய அரபு எமிரேட்டில் மீண்டும் மோத உள்ளனர். ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை நடைபெறும் 15வது ஆசிய கோப்பை போட்டியில் அவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்.

ஆசிய கோப்பை பந்தயங்கள் இலங்கையில் நடைபெறவிருந்த நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைமை காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு போட்டி மாற்றப்பட்ட போதிலும், அதை இலங்கைதான் நடத்தவுள்ளது.

இது டி20 உலகக் கோப்பை ஆண்டு என்பதால், ஆசியக் கோப்பையும் டி20 வடிவில் நடத்தப்படும். ஆசிய கோப்பை போட்டிகள் டி20 வடிவத்தில் நடப்பது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, 2016 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு முன் நடந்த ஆசிய கோப்பை போட்டியும், டி20 வடிவத்தில்தான் நடந்தது.

கிரிக்கெட்

பாரம்பரிய மோதலுக்கான காத்திருப்பு

உலகக் கோப்பை நடைபெறும் ஆண்டில், ஆசியக் கோப்பையிலும் அதே வடிவத்தை கடைப்பிடிக்க ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது.

எப்போதும் போல் இந்த முறையும் ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் – இந்தியா இடையிலான போட்டி முக்கிய பங்கு வகிக்கும். ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு முன், இந்த இரு அணிகள் மோதும் சிறப்பு மிக்க போட்டிக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

பத்து மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக இரு அணிகளும் ஐக்கிய அரபு எமிரேட்டில் மீண்டும் மோதுகின்றன. கடந்த ஆண்டு அக்டோபரில் துபாயில் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியின் போது, பாகிஸ்தான், 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

டி20 உலகத் தர வரிசையில் இந்தியா முதலிடத்திலும், பாகிஸ்தான் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

எந்த ஒரு போட்டியிலும் பாகிஸ்தானும் இந்தியாவும் இருப்பது அதன் தலைவிதியை மாற்றுகிறது. ஆனால் 38 ஆண்டுகளுக்குப் பிறகும் ஆசியக் கோப்பை சூழ்நிலையின் கைதியாக இருப்பதற்கும், அதற்குக் கிடைக்க வேண்டிய இடம் கிடைக்காமல் போனதற்கும் என்ன காரணம்?கிரிக்கெட்

இந்தியா-பாகிஸ்தான் உறவுகளின் தாக்கம்

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரசியல் உறவுகள் ஆசிய கோப்பையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

1990 ஆம் ஆண்டில், நான்காவது ஆசிய கோப்பை போட்டியை இந்தியா நடத்தியது. ஆனால் அந்த நேரத்தில் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமாக இருந்தது, எனவே பாகிஸ்தான் இந்த போட்டியில் பங்கேற்கவில்லை.

1993-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதால் ஆசிய கோப்பை போட்டியை நடத்த முடியாமல் போனது.

2018 போட்டிகள் இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு எமிரேட்டில் நடத்தப்பட்டபோது இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் உறவுகள் மீண்டும் ஒருமுறை முன்னுக்கு வந்தன. அப்போதைய பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்கூர் அதை இந்தியாவில் ஏற்பாடு செய்வதாக அறிவித்தார். ஆனால் நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த போட்டிகள் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலால் துபாய் மற்றும் அபுதாபிக்கு மாற்றப்பட்டது.

ஆசியக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தியது என்பது இல்லை.1986-ம் ஆண்டு இலங்கை மீது கோபம் கொண்டு இரண்டாவது ஆசியக் கோப்பையை இந்தியா புறக்கணித்தது. இந்த அதிருப்திக்குக் காரணம், 1985ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான டெஸ்ட் தொடர். இதில் நடுவர்களின் பல முடிவுகள் இந்தியாவுக்கு எதிராக அமைந்திருந்தன. மேலும் டெஸ்ட் தொடரில் தோல்விக்கு, நடுநிலைமையை கடைப்பிடிக்காத நடுவர்களே காரணம் என்று இந்தியா கூறியது.

கிரிக்கெட்

இந்தியாவின் வலுவான நிலை

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவின் வலுவான நிலையின் தாக்கம் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிலும் தெரியும் என்றும் இந்த அமைப்பு இந்தியாவின் விருப்பத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காது என்றும் பொதுவாக நம்பப்படுகிறது.

இதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் உள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவி.

பொதுவாக ஒரு கிரிக்கெட் வாரியத்தின் தலைவர்தான் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருப்பார். தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் செளரவ் கங்குலி. ஆனால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா உள்ளார். இவர் இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன்.

சில நாட்களுக்கு முன்பு ஆசியக் கோப்பையை இலங்கையில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு மாற்றுவது பற்றி பேசப்பட்டபோது, அதன் முறையான அறிவிப்பை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிடுவதற்கு முன்பு செளரவ் கங்குலி வெளியிட்டதில் இருந்தே, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் எந்த அளவுக்கு இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை அறியலாம்.

கடந்த ஆண்டும் இதேபோன்ற ஒரு விவகாரம் நடந்தது. பாகிஸ்தானுக்கு பதிலாக துபாயில் ஆசிய கோப்பை நடத்தப்படும் என்று செளரவ் கங்குலி அறிவித்தார். அடுத்த நாளே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் எஹ்சான் மானி அதை கண்டனம் செய்தார்.

இந்தியா-பாகிஸ்தான் உறவுகள்

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் உறுப்பு நாடுகளில், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகியவை இந்தியாவுடன் நெருக்கமாக இருப்பதாக கருதப்படுகின்றன. ஆனால் ஒரு முக்கியமான உறுப்பினரான பாகிஸ்தான் ஒருபோதும் இந்தியாவுக்கு இதுபோன்ற சுதந்திரத்தை வழங்கவில்லை.

எஹ்சான் மானியாக இருந்தாலும் சரி, ஷஹ்ரியார் கானாக இருந்தாலும் சரி, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அரங்கில் பாகிஸ்தானின் பங்கு மிக முக்கியமானது.

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே நல்லுறவு இருந்த காலமும், கராச்சியில் தற்கொலைப்படைத் தாக்குதலுக்குப் பிறகு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நியூசிலாந்து கிரிக்கெட் அணி தாயகம் திரும்பிய காலமும், பின்னர் வரத் தயாராக இல்லாத காலமும் நினைவில் கொள்ளப்படவேண்டும்.

அந்த நேரத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் சார்பாக ஜக்மோகன் டால்மியா, ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் டோகிர் ஜியாவுக்கு ஆதரவாக இருந்தார். பாகிஸ்தானுக்கு வந்து விளையாடவில்லை என்றால், ஆசிய அணிகளும் அவர்கள் நாடுகளில் விளையாடாது என்று நியூசிலாந்து மற்றும் பிற வெள்ளையர் நாடுகளிடம் அவர் கூறினார்.

இந்தியாவை யார்தான் பகைத்துக்கொள்ளமுடியும். எனவே நியூசிலாந்து அணி ஒரு வருடத்திற்குப் பிறகு ஒருநாள் தொடரை விளையாட பாகிஸ்தானுக்கு வந்தது.

ஆசிய கோப்பை

ஆசிய கோப்பையை வென்ற அணிகள்

ஆசிய கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்திய அணி இதுவரை ஏழு முறை ஆசிய கோப்பையை வென்றுள்ளது. இதுவரை நடைபெற்ற 14 ஆசியகோப்பை போட்டிகளிலும் கலந்து கொண்டு ஐந்து முறை போட்டிகளை வென்றுள்ள ஒரே அணி இலங்கை.

பாகிஸ்தான் அணி இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது. 2000 வது ஆண்டு டாக்காவில் நடைபெற்ற ஆசிய கோப்பையை பாகிஸ்தான் முதல்முறையாக வென்றது. இறுதிப் போட்டியில் இலங்கையை 39 ரன்கள் வித்தியாசத்தில் அது வீழ்த்தியது.

இறுதிப் போட்டியில் நான்கு சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 56 ரன்கள் எடுத்ததற்காக கேப்டன் மொயின் கான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

2012ஆம் ஆண்டு டாக்காவில் நடந்த போட்டியில் மிஸ்பா உல் ஹக் தலைமையில் பாகிஸ்தான் அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது.

பரபரப்பான இறுதிப்போட்டியில் இரண்டு ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வங்கதேசத்தை தோற்கடித்தது.அஜீஸ் சீமா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

வங்கதேசம் மூன்று முறை இறுதிப் போட்டியில் விளையாடியிருந்தாலும் தனது முதல் வெற்றிக்காக அது காத்திருக்கிறது.

Previous Story

T20 உலக கோப்பை 2022 தகவல்கள்

Next Story

தேசத்தை அழித்த கோட்டாபய