/

அரவிந்த் கேஜ்ரிவாலை கொல்ல முயற்சி -ஆம் ஆத்மி

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் இல்லத்தின் முன்பாக, பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அமைப்பான பாரதிய யுவ மோர்ச்சா தொண்டர்கள் நடத்திய போராட்டமும், அப்போது நடந்ததாக கூறப்படும் வன்முறையும் சர்ச்சையாகியுள்ளன.

இது அரவிந்த் கேஜ்ரிவாலை கொல்வதற்கான முயற்சி என்கிறது ஆம் ஆத்மி கட்சி.

என்ன நடந்தது?

காஷ்மீர் பண்டிட்டுகள் மீது நடத்தப்பட்ட வன்முறை, அதைத் தொடர்ந்து அவர்கள் பள்ளத்தாக்கைவிட்டு வெளியேறியது ஆகிய பிரச்சனைகளைப் பேசும் சர்ச்சைக்குரிய ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் குறித்து அரவிந்த் கேஜ்ரிவால் சட்டமன்றத்தில் பேசிய கருத்துகளை எதிர்த்து பாரதிய யுவ மோர்ச்சா கேஜ்ரிவால் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தச் சென்றது.

அப்போது அங்கே அவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் டிவிட்டரில் பகிர்ந்த ஒரு வீடியோவில் வீடியோவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கேஜ்ரிவால் வீட்டின் முன் உள்ள தடுப்பு உடைக்கப்படுவதாக காட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோவின் உண்மைத் தன்மையை பிபிசி சுயாதீனமாக உறுதி செய்யவில்லை.

“இந்த சம்பவம் நடந்த கொஞ்ச நேரத்தில் இது குறித்து கருத்து தெரிவித்த ஆம் ஆத்மி தலைவர்கள், மிகவும் பரபரப்பான வகையில் பேசியுள்ளனர். அதாவது, “தேர்தலில் வெல்ல முடியவில்லை என்பதால், கேஜ்ரிவால் கொல்லப்பட வேண்டும் என்று பாஜக நினைக்கிறது” என ஆம் ஆத்மி தலைவர்கள் பேசியுள்ளனர்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவைப் பகிர்ந்த சஞ்சய் சிங் , ” பாஜக, அரவிந்த் கேஜ்ரிவாலைக் கொல்ல முயற்சிக்கிறது. இதோ தேஜஸ்வி யாதவ் தன் குண்டர்களுடன் அட்டகாசம் செய்கிறார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, “காவல்துறையினர் இருக்கும்போதே இந்த செயல் நடந்திருப்பது, அவமானகரமானது. தேர்தல் தோல்வியால் கோபமடைந்ததால்தான் பாஜக இப்படிச் செய்கிறது என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது” என்று பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானும் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியின் பொதுச்செயலாளரும், டெல்லி முதல்வருமான மணிஷ் சிசோடியா, ஊடகங்களைச் சந்தித்து பேட்டியளித்தபோதும், “தேர்தலில் வெல்ல முடியவில்லை என்பதால் அரவிந்த் கேஜ்ரிவாலை கொல்ல முயற்சிக்கிறது பாஜக” என்று குறிப்பிட்டுப் பேசியுள்ளார். இது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

நடந்தது என்ன?

டெல்லி சட்டமன்றத்தில் பேசும்போது, “காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்துக்கு வரிநீக்கம் செய்ததை விட, ஏன் விவேக் அக்னிஹோத்ரி இந்தப் படத்தை யூட்யூபிலேயே பதிவேற்றக்கூடாது” என்று கேட்டிருந்தார் கேஜ்ரிவால்.

இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டின் முன்பு பாரதிய யுவ மோர்ச்சா போராட்டம் நடத்தியது. இந்தப் போராட்டத்தின்போது இளைஞர்கள் அவரது வீட்டு முன் இருந்த தடுப்புகளை உடைத்து உள்ளே நுழைய முயற்சித்ததாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்கள் காட்டுகின்றன.

Previous Story

ஏப்ரல் 3 நாடு ஸ்தம்பிக்கும்!

Next Story

கிறிஸ் ராக்கை அறைந்த பின்னர் வெளியேற மறுத்த வில் ஸ்மித்