அரசை ஏலம் போடும் கோட்டா!

“பெரும்பான்மைக்கு அரசை கையளிக்கத் தயார்”

113 என்ற பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசாங்கத்தை கையளிக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்று ஜனாதிபதியுடன் இடம்பெற்ற ஆளுங்கட்சி உறுப்பினர்களின் சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் தற்போது நிலவிவரும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அரசுக்கெதிரான மக்களின் போராட்டங்கள் விஷ்வரூபம் எடுத்துள்ளன.

இந்தநிலையில்,  நிலைமை கைமீறிச் சென்றதால் நேற்று நள்ளிரவு அமைச்சரவை கலைக்கப்பட்டதுடன் இன்று புதிதாக நான்கு அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

எனினும், அரசுக்கெதிரான மக்களது போராட்டங்கள் இன்றும்  நாடளாவிய ரீதியில்  பேரெழுச்சி கொண்டன.

தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு அனைத்து கட்சிகளுக்கும் இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்திருந்த நிலையில் எதிர்க்கட்சி உள்ளிட்ட பலர் அந்த அழைப்பை நிராகரித்திருந்தனர்.

இதேவேளை, இன்று மாலை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தது.

இவ்வாறான பின்னணியிலேயே இன்று மாலை இடம்பெற்ற ஆளுங்கட்சியின் கூட்டத்தில் ஜனாதிபதி இவ்வாறானதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக  பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

Previous Story

தற்போது ஜனாதிபதி செயலகம் சுற்றிவளைப்பு!

Next Story

பிள்ளையான் அலுவலகம் முற்றுகை