அரசுக்கு சர்ச்சை ஏற்படுத்திய கம்மன்பில

சீனாவில் இருந்து தேசிய கொடி இறக்குமதி செய்யப்பட்டதாக அமைச்சர் உதய கம்மன்பில வெளியிட்ட கருத்து தொடர்பில் ஆராய்வதாக பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் சானக தர்மகீர்த்தி தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின நிகழ்வின் போது ஏற்றப்பட்ட நாட்டின் தேசிய கொடிகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என பிவித்துரு ஹெல உருமய கட்சியின் தலைவர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.

கடுவலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், நாளாந்தம் பயன்படுத்தும் பொருட்களில் 90 சதவீதமானவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும்.

சுதந்திர தினத்தின் போது, தலைவர்கள் ஏற்றிய தேசிய கொடியும் சீனாவில் தயாரிக்கப்பட்டதாகும். எதிர்வரும் வெசாக் பண்டிகை தினத்தை முன்னிட்டு வெசாக் அலங்கார கூடுகளையும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அவ்வாறெனில் நாட்டில் டொலர் தட்டுப்பாடு எப்போது நிறைவுறும் என அமைச்சர் உதய கம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவை, பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் சானக தர்மகீர்த்தியிடம் வினவியது. இதற்கு பதிலளித்த அவர், தேசிய கொடி இறக்குமதிக்கு தெரிவு செய்யப்பட்ட தரப்பினருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்டார்.

தேசிய கொடி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் மாத்திரம் இறக்குமதி செய்யப்படுவதாகவும், அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்த கருத்து தொடர்பில் ஆராய்வதாகவும் இராஜாங்க அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

தேசிய மற்றும் பௌத்த கொடிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு அமைச்சு தயாராகவுள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Story

வருவது பசிலா நாமலா?

Next Story

'சிறுபான்மையின மத சுதந்திரத்தை அழிக்காதே' கவனயீர்ப்பு போராட்டம்