நஜீப் பின் கபூர்
நன்றி:25.01.2025 ஞாயிறு தினக்குரல்
சொந்தக் குழந்தைக்கே பெற்றோர் துரோகிகளாகக் கூடாது!
அரசியல் உள்நோக்கங்களுடனான விசமத்தன பிரசாரங்கள்!
என்பிபி.அரசின் கல்வி சீர்திருத்தங்கள் குறைமாத பிரசவமா?

அரசியல் என்று வரும் போது நம்மில் சிலர் அதில் தனக்கு இன்ரெஸ்ட் கிடையாது-நாட்டமில்லை என்று கதைப்பதை நாம் பரவலாகப் பார்த்திருக்கின்றோம். ஆனால் அப்படிச் சொல்கின்றவர்களுக்கு அதில் நாட்டம் உண்டோ இல்லையோ அரசியல் அன்றாடம் அவர்களில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டுதான் வருகின்றது. அவர்களின் நாடி நாளங்கள் அனைத்திலும் அரசியல்தான் புறையோடி நிற்கின்றது. இந்த ஆதிக்கம் கருவிலே துவங்கி விடுக்கின்றது. கதை இப்படி இருக்க அரசியலில் நாட்டமில்லை என்பது எப்படி ஏற்புடையது.? இதனை எவராது மறுக்கமுடியுமா?
எனவே அரசியலில் நாட்டம் இல்லை என்று கதைப்போர் பற்றி நாம் என்னவென்று சொல்வது. அது எந்தளவு யதார்த்தமானது என்பது அவர்கள்தான் உணர- சிந்திக்க வேண்டும். அதே நேரம் தனது குழந்தைகளில் தனக்கு நாட்டம் இல்லை என்று எவராவது சொல்வது உண்டா?. அப்படி எவராது நடந்து கொண்டால் அவன் அல்லது அவள் ஒரு தந்தையாகவோ தாயாகவோ ஒரு மனிதனாகவோ இருக்க முடியாது. எனவேதான் தனது குழந்தைக்கு ஒன்று என்றால் பெற்றோர்கள் பதறிப் போய்விடுகின்றார்கள்.
தனது குழந்தையின் தலைவிதியுடன் இந்த அரசியல் விளையாடுகின்றது-அதன் சேதாரத்தின் அகோரத்தையும் அழிவையும் ஒரு பெற்றோர்கள் புரிந்து கொள்வார்களாக இருந்தால் அதற்காக அவர்கள் உயிரைப் பணயம் வைத்து போராடவும் தயங்க மாட்டார்கள். ஒவ்வொரு குழந்தையை பிரசவித்தவர்களும் ஜிஹாதிகளாக மாறவும் தயங்க மாட்டார்கள். இது ஏன்? குழந்கைகள் தான் ஒவ்வொரு பெற்றோரினதும் உலகம். நமது இந்த வார்த்தையில் இருந்து பெற்றோர்கள் எந்தளவுக்கு தமது செல்வங்கள் மீது அக்கரையுடையவர்களாக-பாசமிக்கவர்களாக இருக்கின்றார்கள் என்பதனைப் புரிந்து கொள்ள இது போதுமான விளக்கமாக இருக்கும் என்று நாம் கருதுகின்றோம்.
தனக்கு ஆர்வம் இல்லாத அரசியல் தனது குழந்தைகள் வாழ்கையுடன் எப்படி விளையாடி இருக்கின்றது. எதிர்காலத்தில் விளையாடும் என்பதனை முதலில் சுருக்கமாகப் பார்ப்போம். நாடு விடுதலை பெறும் போது ஆசியாவில் நாம் ஜப்பனுக்கு அடுத்தபடியாக வளமான ஒரு நாடாக இருந்தோம். இன்று உலகிலே வங்குரோத்து நாடாக மாறி இருக்கின்றோம் என்று பேசுகின்றோம்-ஆதங்கம் கொள்கின்றோம். இது எதனால் வந்த வினை? நமது கல்வி முறையும் நமது அரசியலும்தான் நம்மை இந்த பாதாளத்துக்குத் தள்ளி இருக்கின்றது என்பதில் எவருக்காவது மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியுமா? இதனை அனைவரும் ஒரு மனதாக இன்று ஏற்றுக் கொள்கின்றோம்.
எனவே தனது குழந்தைகள் மீது பாசம் காட்டுகின்ற பெற்றோர்கள் இந்த அரசியலிலும் விரும்பியோ விரும்பாமலோ கவனம் செலுத்தித்தான் ஆகவேண்டும். அதற்குத் தயாராக இல்லாத பெற்றோர் தனது குழந்தைகள் மீது உண்மையான அக்கறை இல்லாத ஒரு பெற்றோர் என்பதுதான் எமது வாதம். ஆனால் இந்த விவகாரங்களில் தனது பங்களிப்பை செய்வதில் பெற்றோருக்கு நிறையவே சிக்கல்கள் இருக்கின்றன.
அதில் முதலாம் இடத்தில் இருப்பது தனது வாழ்வில் அரசியல் செலுத்துகின்ற ஆதிக்கத்தைப் பெற்றோர் புரியாமலும் உணராமலும் இருப்பது. அடுத்து அப்படி மேலோட்டமாக புரிதல் இருந்தாலும் இதில் தனது பங்களிப்பு என்ன என்பதனை அவர்கள் அறியாதவர்களாக இருக்கின்றார்கள். அதனை ஒரு சமுதாயக் குறைபாடாகத்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அரசியல்-அரசியல்வாதிகளை விட சமூகம்தான் சக்திவாய்ந்தது என்பதும், அதன் பலம் தேவைகளின் போது பாவிக்கப்படாமல் இருப்பதும் மிகப் பெரும் பலவீனங்களில் ஒன்றாக இருக்கின்றது. மேலும் பெற்றோர்களின் அறிவு. உலகுக்கும் தேசத்துக்கும் தேவையான கல்வி தொடர்பான கருத்துப் பறிமாறல்கள் சமூகத்தில் விவாதிக்கப்படாமை. மாற்றங்களுக்கான கூட்டுச் செயல்பாடுகளின் வலிமையை அறியாமை. அரசியல் ரீதியிலான பிளவுபட்ட கருத்துக்கள். மாற்றங்களுக்கான தலைமைத்துவ குறைபாடுகள் என்று பல இதில் இருக்கின்றன. இது பொதுவானதாக இருந்தாலும் இந்த நாட்டுக்கென்ற தனித்துவமான குறைபாடுகளும் இதில் இருக்கின்றன.
1948ல் நாடு விடுதலை பெற்றது முதல் அதிகாரத்துக்கு வந்த தலைவர்கள் மக்கள் நலன்களுக்காக ஆட்சியை முன்னெடுக்கவில்லை என்பது இப்போது விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கின்றது. குறிப்பாக கடந்த இரு தசாப்பதங்கள் அதிலும் ராஜபக்ஸாக்கள் மற்றும் நல்லாட்சி ரணில் ஜனாதிபதிகளான காலங்களில் நாட்டில் அப்பட்டமான கொள்ளைகள் மோசடிகள் இங்கு எல்லை மீறி நடந்திருந்தது.
இதில் மிகவும் மோசமான பக்கம் என்னவென்றால் நாட்டில் நிருவாகம் ஒட்டு மொத்தமாக அரசியல்வாதிகளின் தேவைகள் நலன்களை மையமாக கொண்டே தீர்மானங்களாக அமுலாகி வந்துள்ளன. அதனால் அரசியல்வாதிகளைப் போலவே நிர்வாகம் நீதி சட்டம் ஒழுங்கு படைத்தரப்பு என்ற அனைத்து துறைகளும் ஊழல் புறையோடிப்போய் இருந்தது. இன்றும் என்பிபி அரசிலும் அதன் தாக்கம் முற்றும் முழுதாக அகன்றுவிடவில்லை.
தாம் அதிகாரத்துக்கு வந்ததும் எந்தளவு விரைவாக சொத்து செல்வம் பணம் சேர்க்கலாம் என்றுதான் நமது அரசியல்வாதிகள் ஓடித்திருந்திருக்கின்றார்கள். ராஜபக்ஸாக்கள் கொமிஸ் கேட்டதனால் பல திட்டங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் கைவிட்டு இங்கிருந்து ஓடி இருக்கின்றன. சீனாவிடம் ராஜபக்ஸாக்கள் கொமிஸ் வாங்கிய காசோலைகளின் நிழல் பிரதிகள் தன்னிடம் இருக்கின்றன என்றெல்லாம் ஜனாதிபதி அனுர அரசியல் மேடைகளில் பகிரங்கமாக பேசி வந்திருந்தார். இன்றும் பேசிவருகின்றார்.
இது போன்ற செய்தியை வெளியிட்ட நியூயோர்க் டைம்ஸ்சுக்கு தான் வழக்குப் போட இருப்பதாக ஒருமுறை மஹிந்த ராஜபக்ஸ பகிரங்கமாக அறிக்கை விட்டிருந்தார். ஆனால் அப்படியான முறைப்பாட்டை அவர் நீதிமன்றத்தில் இன்றுவரை சமர்ப்பிக்கவும் இல்லை. அதே போன்று ரணிலின் மத்திய வங்கிக்கொள்ளை.! இதனை நாம் இங்கு எதற்காக நினைவுகூருகின்றோம் என்றால் நமது அரசியல் தலைவர்கள் பதவிக்கு வந்ததும் சம்பாதிக்கின்ற முயற்சியில்தான் முழுமூச்சுடன் இருந்து வந்திருக்கின்றார்கள். நமது நாட்டு மக்களின் நலன்களிலோ அல்லது இளம் சந்ததியினர்களின் நலன்களிலோ இவர்கள் அக்கறையுடையவர்களாக இருந்து எதையுமே செய்யவில்லை.
இந்தக் கல்விச்சீர்திருத்தம் தொடர்பாக தற்போது ஒரு தசாப்தங்களுக்கு மேலாக திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால் அது இன்றுவரை சாத்தியப்படவில்லை. இப்போது என்பிபி. இதனை அமுல் படுத்துவதற்கு நடவடிக்கைளில் இறங்கி இருக்கின்றது. அதில் ஆறாம் தரம் ஆங்கில புத்தகத்தில் இருந்த ஒரு குறைபாட்டை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த கல்வி சீர்திருத்தத்துக்கும் இவர்கள் ஆப்பு வைத்திருக்கின்றார்கள். இதற்கொதிராக இன்று நாடுபூராவும் பெற்றோர்கள் வீதியிலிறங்கி போராட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
குறிப்பிட்ட ஆபாச இணைய முகவரி 2015ல் இருந்தே சிபார்சில் இருந்ததாகவும் அரசுதரப்பு வாதமாக இருக்கின்றது. அன்று இது பற்றி யாரும் போசாதது ஏன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றார்கள். இதற்கு எதிரணி அன்று அப்படி இருந்தாலும் அது நடைமுறைக்கு வரவில்லை என்று திருப்பி பந்தை கைமாற்றவும் இங்கு இடமிருக்கின்றது. எப்படியும் அதிகாரிகளோ அரசோ இந்த தவறிலிருந்து நழுவிச் செல்ல முடியாது.
இந்த நாட்டில் எட்டு வருடங்களுக்கு ஒமுறை கல்வி சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற விதி இருக்கின்றது. ஆனால் காலங்கடந்தும் அது அப்படி நடைபெறவில்லை. சுசில் பிரேம்ஜயந் கல்வி இராஜாங்க அமைச்ராக இருந்த போது இதற்கான முயற்சிகள் நடந்தன. ஆனால் அவரால் அதனை அமுல்படுத்த முடியவில்லை. கலாநிதி உபாலி சேதர தான் அப்போது அமைச்சின் செயலாளராக இருந்து ஏற்பாடுகளைக் கவனித்து வந்தார். இந்த என்பிபி. தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட இதுபற்றி பெரிதாக ஏதும் சொல்லப்பட்டிருக்கவில்லை. ஆனால் இவர்கள் பதவிக்கு வந்ததும் கல்வி சீர்திருத்தம் ஒன்றின் தேவையை அமுல்படுத்துவதில் கடுகதி வேகத்தில் ஆர்வம் காட்டி விட்டார்கள் என்றுதான் நமக்கும் எண்ணத் தோன்றுகின்றது.
அதனால் இவர்களால் உரிய முறையில் முன் ஆயத்தங்களை செய்ய முடியாது போனது. இதற்கு நல்ல ஆதாரம்தான் முதலாம் தவணைக்காகதான் இதுவரை ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றார்கள். இரண்டாம் மூன்றாம் தவணைக்கு அவர்களைத் தயார் செய்ய வேண்டி இருக்கின்றது. நாம் அறிந்த வரை அடுத்து இரண்டாம் மூன்றாம் தவணைக்கான அலகுகள் தொடர்பில் இன்னும் தயாரில்லாத ஒரு நிலையும் இருப்பதாகத் தெரிகின்றது. அதே போல தேவையான உபகரணங்கள் கூட தயார்நிலையில் இல்லை. இவை இதிலுள்ள தொழிநுட்ப ரீதியிலான குறைபாடுகளாக நாம் காண்கின்றோம். அது அப்படி இருக்க இன்று நமது அரசியல்வாதிகள் நாம்தான் இதில் நிபுணர்கள் போல உபதேசம் செய்து கொண்டு சீர்திருத்தங்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
என்பிபி. அரசில் இருக்கின்ற கல்வி அமைச்சர் திட்டத்தை அமுல்படுத்துகின்ற முன்னோடியாக இருப்பதால் அவர் இதில் கருத்துச் சொல்வதில் தவறுகள் இருப்பதாக நாம் கருதவில்லை. ஆனால் அரசிலுள்ள ஒட்டுமொத்த அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கல்வியியலாளர்கள் போல பேசுவது ஏற்றுக் கொள்ள முடியாது. அதே போன்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் விமல் வீரவன்ச மற்றும் கடும் போக்கு பௌத்த தேரர்கள் அரசியல் உள்நோக்கங்களுடன் கல்வி சீர்திருத்தங்களை விமர்சிப்பதும் ஏற்புடையதல்ல. இவர்களுக்கு கல்வி பற்றி என்ன தெரியும்.!
கல்வி பற்றி யாராவது சொல்கின்ற கருத்துக்களை காவிக் கொண்டு நமது அரசியல்வாதிகள் அரசியல் மேடைகளில் சந்தைப்படுத்துவது ஆரோக்கியமான ஒரு செயலாக இல்லை. அது அவர்களுடைய வேலையுமல்ல. அதனைக் கல்வியாளர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். தவறை வைத்து பிரதமர் பதவி விலக வேண்டும் குறைந்தது கல்வி அமைச்சிலிருந்தாவது வெளியேற்றப்பட வேண்டும் என்று கோசங்களுக்கு மத்தியில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கை இல்லாப்பிரேரனை ஒன்று தயார் நிலையில் இருக்கின்றது. ஆனால் இதுவரை அது கையளிக்கப்படவில்லை என்று தெரிகின்றது. அதற்கு வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றது. இதனை நாம் மற்றுமொரு இடத்தில் பேசி இருக்கின்றோம்.

கல்வி சீர்திருத்தம் பற்றி கருத்து தெரிவிக்கின்ற ஆசிரிய தொழிற்சங்கவாதியான ஜோசப் ஸ்டாலின் நிச்சயமாக கல்வி சீர்திருத்தம் நாட்டுக்குத் தேவை என்று எற்றுக் கொள்கின்ற அதே நேரம் இதில் உள்ள குறைபாடுகளையும் ஜனாதிபதியிடம் நேரடியாக சுட்டிக் காட்டி இருக்கின்றாராம். அதே நேரம் தமது பிள்ளைகளின் கல்வி சீர்திருத்தங்களுக்காக பெற்றோர் தெருவில் இறங்கி போராடுவதையும் ஸ்டாலின் ஆரோக்கியமாகப் பார்க்கின்றார்-பாராட்டுகின்றார்.
அதே நேரம் நாட்டில் பாடசாலைகளின் தரம் பின்வருமாறு அமைகின்றது.
1.அதிவசதியான கல்லூரிகள்.
2.மத்திய வசதிகளைக் கொண்ட பாடசாலைகள்.
3.கிராமப்புறப் பாடசாலைகள்.
4.மிகவும் பின்தங்கிய பாடசாலைகள்
என்ற நான்கு பிரிவுகள். இது நமது கணிப்பு. மாணவர்களின் கல்வி என்றுவரும் போது இந்தப் பிரிவுகள் அவர்களின் பெறுபேறுகளில் தொடர்ச்சியாக தாக்கங்களைச் செலுத்திக் கொண்டு வருகின்றன. இந்த நிலையில் நாம் மேற்சொன்ன குறைபாடுகளுடன் வரும் கல்வி சீர்திருத்தம் ஒரு குறைமாத பிரவேசம் போலத்தான் நமக்குத் தெரிகின்றது.
மேலும் மேற்சொன்ன பிரிவுகளில் அதிவசதிகூடிய பாடசாலைகளுக்கான பிரவேசம் செவ்வந்தர்கள் அரசியல்வாதிகள் உயர்பதவிகளில் இருப்போருக்கு என்று ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுவிடுகின்றன. கல்வியில் அதி திறமை காட்டுகின்ற மாணவர்களுக்கும் இங்கு மிகச்சிறிய ஒரு பங்கு கிடைக்கின்றது. பின் தங்கிய அல்லது பொருளாதார ரீதியில் கீழ்மட்டங்களில் வரும் இவர்கள் இந்தப்பாடசாலைகளின் சம்பிரதாயங்களுக்கு இவர்கள் தாக்குப்பிடிப்பது மிகவும் சிரமமானது சிக்கலானது. பல்லைக்கடித்துக் கொண்டு இருப்பது என்ற ஒருவார்த்தைதான் இவர்கள் நிலை. அடுத்து நடுத்தர பாடசாலைகள் என்று வரும்போது மேற்சொன்ன சமூகப்பிரிவின் அடுத்த நிலையில் இருப்பவர்களின் பிள்ளைகளுக்கு அங்கு இடம் கிடைக்கின்றன. இங்கு மத்தியதர வர்க்கத்தின் பிள்ளைகள் பெரும்பான்மையினராக இருப்பார்கள்.
மூன்றாம் பிரிவுப்பாடசலைகள்தான் இந்த நாட்டில் இருக்கின்ற பாடசலைகளின் எண்ணிக்கையில் ஒரு அறுபத்தி ஐந்து சதவீதம் என்று எடுத்துக் கொள்ள முடியும். அவை பெரும்பாலும் கிராமியப் பாடசாலைகள். பின்தங்கிய பாடசாலைகள் பற்றி நாம் பெரிய விளக்கங்களை இங்கு கொடுக்க வேண்டியதில்லை. இந்த பாடசாலைகள் அமைந்திருக்கின்ற பிரதேசங்கள் மிகவும் பின்தங்கியதாக இருக்கும். மாணவர்கள் எண்ணிக்கையும் ஒரு நூறு நூற்றி ஐம்பது என்ற எண்ணிக்கைக்கு கீழ் மட்ட எண்ணிக்கையில்தான் இருக்கும். இந்த நான்கு பிரிவுகளும் ஒரே போட்டிப் பரீட்சைக்குத்தான் தோற்ற வேண்டி வருகின்றது என்பது அனைவரும் அறிந்த விவகாரம்தான். கல்வி சீர்திருத்தவாதிகள் இந்த இடைவெளிகள் பற்றியும் கடுமையாக சிந்திக்க வேண்டும்.சுருக்கமாகச் சொல்வதால் அரச தரப்பும் எதிரணியும் சிறிதும் பெரிதுமாக குழந்தைகளின் வாழ்கையுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள் என நாம் நம்புகின்றோம்.
தமது சந்ததியினரின் எதிர்காலம் அரசியல் தீர்மானங்களில்தான் முடிவாகின்றன. இதனைப் பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். எனவே அரசியல் விவகாரங்களில் நீங்கள் விளிப்பாக இருக்க வேண்டும். எனவே கல்வி சீர்திருத்தங்கள் தொடர்ப்பில் நமது பெற்றோர் தொடர்ச்சியான அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். தனிப்பட்ட அரசியல் கருத்து மோதல்களுக்கும் கட்சி அரசியலுக்கும் அதிகாரக் கதிரைக்காக நடக்கின்ற போராட்டங்களுக்கும் கல்வி சீர்திருத்தங்களுக்கும் முடிச்சுக்களைப் போட்டுக் கொண்டு தமது குழந்தைகளுக்குப் பெற்றோர் துரோகிகளாகி விடக் கூடாது.





