அயோத்தி ராமர் கோயில் நிலம் மோசடி.-பிரியங்கா புகார்

அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளைக்குக் குறைந்த மதிப்புள்ள நிலங்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

பல ஆண்டுகளாகப் பிரச்சினைக்குரியதாக இருந்த அயோத்தி ராமர் கோயில் விவகாரம் ஒரு வழியாகக் கடந்த 2019இல் முடிவுக்கு வந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 2019 நவம்பர் 9இல் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதில் அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து ராமர் கோயில் கட்டும் பணிகளை மேற்பார்வையிட ஏதுவாகவும் உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரிலும் ராமர் கோவில் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.

அயோத்தி ராமர் கோயில்

அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்ட நாடு முழுவதும் இருந்து நன்கொடை வசூலிக்கப்பட்டது. கடந்த 2019 ஆகஸ்ட் 5ஆம் தேதி அயோத்தி கோயிலுக்கான பூமி பூஜை போடப்பட்டது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு முதல் செங்கலை எடுத்து கொடுத்தார். அதன் பிறகு கட்டிட பணிகள் விறுவிறுவென நடந்து வருகிறது. வரும் 2023 டிசம்பர் மாதத்திற்குள் அயோத்தி கோயில் கட்டுமானத்தை முடித்து, மக்கள் வழிபாட்டிற்குத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மோசடி?

அயோத்தியில் ராமர் கோயில் அறக்கட்டளை கோயிலுக்காக நிலங்களைக் கையகப்படுத்தி வருகிறது. அப்படி இதுவரை சுமார் 70 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, பல முக்கிய விஐபிக்கள் அயோத்தியில் முறைகேடாக நிலங்களை வாங்கி வருவதாகக் கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. அதாவது கோயிலுக்கு அருகே நிலத்தை வாங்கினால், அந்த நிலங்களைக் கையகப்படுத்தும் ராமர் கோயில் அறக்கட்டளையிடம் பெரிய விலைக்கு விற்கலாம் என்ற திட்டத்தோடு பல விஐபிக்கள் அங்கு நிலம் வாங்க முயன்று வருகின்றனர். இது தொடர்பாக ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியது.

பிரியங்கா காந்தி

இந்நிலையில், இந்த விவகாரத்தில் காங். பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பாஜகவை கடுமையாகச் சாடியுள்ளார். இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, “நாட்டில் உள்ள அனைத்து குடும்பத்தினரும் ராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்துள்ளனர். இது தொடர்பாக வீடு வீடாகச் சென்று பிரச்சாரமும் நடத்தப்பட்டது. பலரும் நம்பும் இந்த விவகாரத்தில் கூட விளையாடுகிறார்கள். தலித்துகளின் நிலங்களும் கூட இதில் பறிக்கப்பட்டுள்ளன.

பல மடங்கு அதிகப் பணம்

அங்குள்ள சில நிலங்கள் சந்தை விலையைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக அறக்கட்டளைக்கு விற்கப்பட்டுள்ளது. நன்கொடை மூலம் சேகரிக்கப்பட்ட பணத்தில் மிகப் பெரிய மோசடி நடந்துள்ளது. இதில் பாஜக தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கும் கூட தொர்பு உள்ளது. மக்களின் பக்தியை வைத்துக் கொள்ளையடிக்கிறார்கள். இது தொடர்பாக முறையான விசாரணையை நடத்த வேண்டும். தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

நிலத்தை வாங்கியது யார்

ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதியளித்த பிறகு பல எம்எல்ஏக்கள், மேயர், அயோத்தியா டிவிஷனல் கமிஷனர், வருவாய் அதிகாரிகள், டிஐஜி உள்ளிட்டோர் அவர்களின் உறவினர்கள் பெயரில் கோவிலைச் சுற்றி நிலம் வாங்கியுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், இது தொடர்பாக அரசாணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விசாரணைக்கு உத்தரவு

வருவாய் துறை தலைமையில் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி விரிவான அறிக்கை தாக்கச் செய்ய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாக அம்மாநில தகவல் தொடர்பு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நவ்நீத் சேகல் தெரிவித்துள்ளார். இருப்பினும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே ராமர் கோயில் கட்டப்படுவதால் உச்ச நீதிமன்ற இதை விசாரணை செய்ய வேண்டும் என பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

Previous Story

அலி சப்ரியை விரட்டவும் -ஞானசார

Next Story

புகையிரத சீட்டு வழங்குவது நிறுத்தம்!