இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்து, பெரிய மோதலாக மாறக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
சமீப காலத்தில் இரானில் நடைபெற்ற போராட்டங்கள் மீது நடந்த கடுமையான அடக்குமுறையின் பின்னணியில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதன் மூலம், அமெரிக்காவும் இரானும் நேரடி மோதலுக்கு எவ்வளவு அருகில் வந்துள்ளன என்பதும் வெளிப்படுகிறது. குறிப்பாக, கடந்த ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது அந்த நிலை மிகவும் நெருக்கமாக உள்ளது.
ஒருபுறம் ஆட்சி மாற்றத்தை வலியுறுத்தி தீவிரமடைந்து வரும் உள்நாட்டுப் போராட்டங்கள், மறுபுறம் தனது நோக்கங்களை ரகசியமாக வைத்துள்ள அமெரிக்க அதிபர் என இரானியத் தலைவர்கள் இப்போது இருமுனை நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.
இந்த நிலை இரானில் மட்டுமல்ல, ஏற்கெனவே நிலைமையற்றதாக இருக்கும் முழுப் பிராந்தியத்திலும் அச்சத்தையும் பதற்றத்தையும் மேலும் தூண்டியுள்ளது.

யூஎஸ்.எஸ். அப்ரஹாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பலும், ஏவுகணை தாங்கி கப்பல்களும் மத்திய கிழக்கு பிராந்தியத்துக்குள் நுழைந்துள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்பு ஏற்பட்ட பதற்றத்தை கவனமாகக் கையாண்ட இரான்
முந்தைய காலங்களில் அமெரிக்காவுடனான மோதல்களில் இரான் காட்டிய அதே நிதானமான மற்றும் கவனமாக கணக்கிடப்பட்ட பதிலடியை இந்த முறையும் பின்பற்றும் என்று சொல்ல முடியாது.
இரானுக்குள் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போராட்டங்களை வன்முறையுடன் அடக்கிய ஒடுக்குமுறையின் பின்னணியில், அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் விடுத்துள்ள மிரட்டல்கள், இஸ்லாமிய குடியரசு மிகக் கடும் உள்நாட்டு அழுத்தங்களை எதிர்கொண்டு வரும் ஒரு அசாதாரணமான தருணத்தில் வெளிப்பட்டுள்ளன.
இதன் விளைவாக, இந்நேரத்தில் அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அது பிராந்திய அளவிலும் இரானுக்குள்ளும் பெரிய அளவிலான மோதலுக்கு இட்டுச் செல்லும் அபாயம் அதிகரித்துள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில், இரான் பொதுவாக தாமதமான மற்றும் வரையறுக்கப்பட்ட பதிலடியையே விரும்பி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2025 ஜூன் 21-22 தேதிகளில் இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மறுநாள் கத்தாரில் உள்ள அமெரிக்காவின் விமானப்படைத் தளம் மீது இரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.
இந்தத் தாக்குதல் குறித்து இரான் முன்கூட்டியே எச்சரிக்கை அளித்திருந்தது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.
வான் பாதுகாப்பு அமைப்புகள் பெரும்பாலான ஏவுகணைகளை இடைமறித்தன, உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. இது ஒரு பெரிய போரைத் தவிர்த்து, அதே சமயம் தனது உறுதியை வெளிப்படுத்த இரான் மேற்கொண்ட ஒரு திட்டமிட்ட முயற்சியாகவே பார்க்கப்பட்டது.
இதேபோன்ற ஒரு சூழல் டிரம்பின் முதல் பதவிக்காலத்தின்போது, 2020 ஜனவரியிலும் நிகழ்ந்தது.
ஜனவரி 3-ஆம் தேதி பாக்தாத் விமான நிலையம் அருகே குத்ஸ் படைத் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா கொன்றதை தொடர்ந்து, ஐந்து நாட்களுக்குப் பிறகு இராக் முகாமில் உள்ள அமெரிக்காவின் விமானப்படைத் தளம் மீது இரான் ஏவுகணைகளை வீசியது.
அப்போதும் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அமெரிக்க வீரர்கள் யாரும் கொல்லப்படவில்லை என்றாலும், பலருக்கு அதிர்ச்சியால் மூளை பாதிப்புகள் ஏற்பட்டதாகப் பின்னாளில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வுகள் இரான் மோதலைத் தூண்டுவதை விட, அதை ஒரு எல்லைக்குள் வைத்திருக்கவே விரும்புகிறது என்ற கருத்தை உறுதிப்படுத்தின.

’12 நாள் போரின் ஒரு தொடர்ச்சி’
ஆனால், தற்போதைய சூழல் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் மாறுபட்டதாக உள்ளது.
1979-ல் இஸ்லாமியக் குடியரசு உருவானதிலிருந்து இல்லாத அளவுக்கு, இரான் தற்போது மிகக் கடுமையான உள்நாட்டுப் போராட்டங்களைச் சந்தித்து மீண்டு வருகிறது.
டிசம்பர் மற்றும் ஜனவரி தொடக்கத்தில் வெடித்த இந்தப் போராட்டங்கள் மிகக் கடுமையான முறையில் ஒடுக்கப்பட்டன.
இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், பலர் காயமடைந்திருக்கலாம், சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம் என்றும் மனித உரிமை அமைப்புகள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இரானில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக இணைய சேவை முடக்கப்பட்டுள்ளதாலும், நேரடித் தொடர்புகள் இல்லாததாலும் உயிரிழந்தவர்களின் துல்லியமான எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை.
இரானிய அதிகாரிகள் இந்த மரணங்களுக்குப் பொறுப்பேற்க மறுப்பதோடு, இதற்கு “பயங்கரவாதக் குழுக்களே” காரணம் என்றும், இஸ்ரேல்தான் இந்தப் போராட்டங்களைத் தூண்டிவிடுகிறது என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.
சமீபத்தில் இரானின் அதி உயர் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர், இந்தப் போராட்டங்களைக் கடந்த ஆண்டு நடந்த 12 நாள் போரின் ஒரு தொடர்ச்சியாகவே பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அதிகாரிகளின் இந்தச் சித்தரிப்பு, அவர்கள் ஏன் அந்தப் போராட்டங்களை பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதி அணுகினார்கள் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. மேலும், போராட்டக்காரர்கள் மீது இவ்வளவு கடுமையான மற்றும் தீவிரமான அடக்குமுறை பயன்படுத்தப்பட்டதை நியாயப்படுத்துவதற்கான ஒரு காரணமாகவும் இது பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
தற்போது தெருக்களில் போராட்டங்களின் வேகம் குறைந்திருந்தாலும், மக்களின் அதிருப்தி இன்னும் தீரவில்லை. இரானிய மக்களுக்கும் ஆளும் அமைப்புக்கும் இடையிலான இடைவெளி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது அதிகரித்துள்ளது.
ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில், பல நகரங்களின் சில பகுதிகள் மற்றும் முக்கிய நகரங்களின் குடியிருப்புப் பகுதிகள் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டை மீறிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு, மிகக் கடுமையான பலத்தை உபயோகிப்படுத்தி அதிகாரிகள் மீண்டும் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டினர்.
தற்காலிகமாக இவ்வாறு கட்டுப்பாட்டை இழந்தது, அதிகாரிகளைப் பெரிதும் கலக்கமடையச் செய்துள்ளது. தற்போது நிலவும் அமைதி என்பது பேச்சுவார்த்தை மூலம் உருவானது அல்ல, மாறாகக் கட்டாயப்படுத்தித் திணிக்கப்பட்டது. இதனால் சூழல் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக்கூடிய நிலையில் உள்ளது.

இரானின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறதா ?
இந்தப் பின்னணியில், அமெரிக்கா நடத்தும் எந்தவொரு தாக்குதலின் தன்மையும் மிகவும் முக்கியமானது.
ஒரு சிறிய அளவிலான தாக்குதல் பிராந்தியப் போரைத் தவிர்த்து அமெரிக்காவுக்கு ஒரு ராணுவ வெற்றியாக அமையலாம். ஆனால், அது இரானிய அதிகாரிகளுக்கு உள்நாட்டில் மீண்டும் ஒரு அடக்குமுறையைத் தேர்ந்தெடுக்க ஒரு வாய்ப்பாக அமையக்கூடும்.
இதுபோன்ற சூழ்நிலை, ஏற்கெனவே தடுப்புக்காவலில் உள்ள போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் வழங்கப்படவும், புதிய கைது நடவடிக்கைகள் தொடரவும் வழிவகுக்கும்.
அதே சமயம், இரானிய அரசை நிலைகுலையச் செய்யும் வகையிலான ஒரு மிகப்பெரியத் தாக்குதலை அமெரிக்கா மேற்கொண்டால், அது இரானை மிகப்பெரிய குழப்பத்திற்குள் தள்ளும்.
90 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டில், மத்திய அதிகாரம் திடீரென சரிந்தால் அது ஒரு சீரான மாற்றத்திற்கு வழிவகுக்காது. மாறாக, அது அப்பகுதி முழுவதும் நீண்டகால நிலையற்ற தன்மை, குழுக்களுக்கிடையிலான வன்முறை மற்றும் அதன் பாதிப்புகள் அண்டை நாடுகளுக்கும் பரவும் அபாயத்தை உருவாக்கும். இதன் விளைவுகளைக் கட்டுப்படுத்த பல ஆண்டுகள் ஆகலாம்.
இந்த அபாயங்கள்தான் இரானின் கடுமையான எச்சரிக்கைகளுக்குக் காரணமாக உள்ளன.
இரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை மற்றும் வழக்கமான ராணுவத்தின் மூத்த தளபதிகள், அமெரிக்காவின் எந்தவொரு தாக்குதலும் அது எந்த அளவில் இருந்தாலும், ஒரு போராகவே கருதப்படும் என்று மூத்த அரசியல் அதிகாரிகளுடன் சேர்ந்து எச்சரித்துள்ளனர்.
இரானின் அண்டை நாடுகளை குறிப்பாக அமெரிக்காவின் படைகள் உள்ள வளைகுடா நாடுகளிடையே இந்த அறிவிப்புகள் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
இரான் உடனடியாகப் பதிலடி கொடுத்தால், அந்த நாடுகள் தங்களின் நேரடி ஈடுபாடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் உடனடியாக ஆபத்துக்கு உள்ளாகும் நிலை உருவாகும். மேலும், இந்த மோதல் இரான் – அமெரிக்கா என்ற வரம்பைத் தாண்டி, மிகவும் பரந்த பிராந்திய அளவில் பரவக்கூடிய அபாயத்தையும் ஏற்படுத்தும்.
போராட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறையை பயன்படுத்த வேண்டாம் என்று இரான் அதிகாரிகளை டிரம்ப் பலமுறை எச்சரித்துள்ளார். மேலும், கலவரம் உச்சத்தில் இருந்த போது, “உதவி வருகிறது” என்று இரான் மக்களிடம் அவர் கூறினார்.
இந்தக் கருத்துகள் இரானுக்குள் பரவலாகப் பகிரப்பட்டு, போராட்டக்காரர்களிடையே எதிர்பார்ப்புகளை அதிகரித்தன.

2025ஆம் ஆண்டில் நடைபெற்ற 12 நாள் போருக்கு முன்பிருந்த நிலையை விட, தற்போது இரான் ராணுவ ரீதியாக பலவீனமாக உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருதுகிறார்.
சூழ்நிலையைப் பற்றி இரு தரப்பினரும் அறிந்திருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு நடந்த 12 நாள் போருக்குப் பிறகு இரான் ராணுவ ரீதியாக முன்பைவிட பலவீனமடைந்துள்ளது என்பதை டிரம்ப் அறிந்திருக்கிறார்.
அதே நேரத்தில், முழுமையான மற்றும் முடிவில்லாத போரை நடத்துவதில் அவருக்கு பெரிதாக விருப்பமில்லை என்பதையும் இரான் நன்றாகவே அறிந்துள்ளது.
அந்த பரஸ்பரப் புரிதல் ஓரளவு நிம்மதியை அளிக்கக்கூடும்.
ஆனால் அதே நேரத்தில், அது ஆபத்தான தவறான கணிப்புகளுக்கும் வழிவகுக்கலாம். இரு தரப்பும் தங்களுடைய தாக்கத்தை அதிகமாக மதிப்பிட அல்லது எதிர்தரப்பின் நோக்கங்களை தவறாகப் புரிந்துகொள்ளும் அபாயம் உள்ளது.
இரானை மீண்டும் அடக்குமுறைச் சுழற்சிக்குள் தள்ளாமலும், குழப்பநிலைக்குள் வீழ்த்தாமலும், வெற்றி பெற்றதாகக் காட்டிக்கொள்ளக்கூடிய ஒரு முடிவு டிரம்புக்கு தேவையாக உள்ளது.
இரானின் தலைவர்களுக்கோ, எப்போது நடவடிக்கை எடுப்பது, அதை உலகம் எப்படி பார்க்கும் என்பது தான் மிகப் பெரிய அபாயமாக உள்ளது.
கடந்த காலங்களில் தாமதமாகவும் குறியீட்டு முறையிலான பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்ட இரானின் முந்தைய நடைமுறை, இனி போதுமானதாக இருக்காமல் போகலாம்.
சமீபத்திய பெரும் போராட்டங்களால் அமைதி குலைந்துள்ள நாட்டுக்குள் கட்டுப்பாட்டை மீட்டெடுப்பதற்கும், வெளியில் தனது எதிர்ப்பு ஆற்றலை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கும் வேகம் அவசியம் என்று தலைவர்கள் கருதினால், அந்த பழைய முறை போதாது என அவர்கள் எண்ணக்கூடும்.
ஆனால், இரான் மிக விரைவாகப் பதிலடி கொடுத்தால், அது நிலைமையை மோசமாக்கி மற்ற நாடுகளையும் போருக்குள் இழுத்துவிடும் ஆபத்தும் உள்ளது.
இரு தரப்பிலும் அழுத்தம் அதிகரித்துள்ளதால், இந்த மோதல் அதன் மிக ஆபத்தான கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது.
இதில் சமநிலையைக் கவனிக்கத் தவறி எடுக்கப்படும் ஒரு தவறான முடிவு, அரசாங்கங்களை மட்டுமன்றி கோடிக்கணக்கான இரானிய மக்களையும் ஒட்டுமொத்தப் பிராந்தியத்தையும் பாதிக்கும்.




