அமெரிக்காவையே விரட்டிய தாலிபான்கள்.

Vigneshkumar

ஆப்கனின் கஜினி மாகாணத்தில் அமெரிக்கப் படைகளின் ராணுவ முகாம் இருந்த இடத்தில் இப்போது தாலிபான்கள் செய்துள்ள செயல் அமெரிக்காவை ஆத்திரமடையச் செய்துள்ளது. இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர், ஆப்கனில் இருந்த பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அப்போது பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த தாலிபான் ஆட்சி அகற்றப்பட்டது.

அதற்குப் பதிலாக அமெரிக்கா ஆதரவுடன் மக்களாட்சி அமல்படுத்தப்பட்டது. அதேநேரம் சுமார் 20 ஆண்டுகளாகப் போராடிய பின்னரும் கூட, ஆப்கனில் அமெரிக்க படைகளால் வெல்ல முடியவில்லை.

அமெரிக்கா

இருப்பினும், இதற்காக அமெரிக்கா ஆண்டுதோறும் பல பில்லியன் டாலர் பணம் மற்றும் அமெரிக்க வீரர்களை இழக்க வேண்டியிருந்தது. இதற்கு அமெரிக்காவிலேயே எதிர்ப்புகள் அதிகரித்ததால் ஆப்கனில் இருக்கும் அமெரிக்க படைகளைத் திரும்பப் பெறப்போவதாக அமெரிக்கா அறிவித்தது.

அதன்படி கடந்த ஆண்டில் இருந்தே ஆப்கனில் இருக்கும் அமெரிக்கப் படைகள் மெல்லச் சொந்த நாட்டிற்குத் திரும்பத் தொடங்கினர். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கனை விட்டு வெளியேறியது. மறுபுறம் அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதுமே ஆப்கன் படைகள் மீது தாலிபான்கள் தாக்குதல் நடத்தத் தொடங்கினர்.

முதலில் எல்லைப் பகுதிகளைக் கைப்பற்றிய தாலிபான்கள், அதன் பின்னர் கிராமப் பகுதிகளையும் அதன் பிறகு தலைநகர்களையும் கைப்பற்றத் தொடங்கினர். இப்படி வெறும் சில வாரங்களிலேயே ஒட்டுமொத்த ஆப்கனையும் தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். கடந்த ஆகஸ்ட் 15இல் தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றினர்.

அதன் பிறகு சில வாரங்களில் தாலிபான் தலைமையில் புதிய அரசு அமைந்தது. இந்த முறை அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ஆட்சியைத் தருவோம் என்றும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்போம் என்றும் ஆட்சி அமைத்த சமயத்தில் தாலிபான்கள் தெரிவித்தனர். இருப்பினும், அதன் பின்னர் அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் இதற்கு நேர்மாறாக இருந்தது.

விரட்டினோம்

இந்நிலையில், ஆப்கனின் கஜினி மாகாணத்தில் அமெரிக்கப் படைகளின் ராணுவ முகாம் இருந்த இடத்தில் இப்போது தாலிபான்கள் செய்துள்ள செயல் அமெரிக்காவை ஆத்திரமடையச் செய்துள்ளது. அதாவது அங்கிருந்த முகாமில் அங்குச் சேவை செய்த அமெரிக்க வீரர்களின் பெயர்கள் கல்லில் பொறிக்கப்பட்டிருந்தது. தாலிபான்கள் இப்போது அதை அழித்துவிட்டு, அமெரிக்கப் படைகளை ஆப்கன் படைகள் விரட்டியதை போன்ற சொற்றொடர்களைத் தாலிபான்கள் எழுதியுள்ளனர்.

அமெரிக்கா வல்லரசா?

இது தொடர்பாகத் தாலிபான் மாகாண கலாசார தலைவர் முல்லா ஹபிபுல்லா முஜாஹித் கூறுகையில், “வருங்கால சந்ததியினர் ஆப்கன் படைகள் அமெரிக்கர்கள் எப்படி தோற்கடித்தார்கள் என்பதை அறிந்து கொள்ளவே இதைச் செய்துள்ளோம். அமெரிக்கா தான் உலகின் மிகப் பெரிய சக்தி என அழைக்கப்படுகிறது. இருப்பினும், அப்படிப்பட்ட அமெரிக்காவையே நாங்கள் விரட்டியுள்ளோம். இதை ஒட்டுமொத்த உலகமும் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

என்ன காரணம்

உலகின் பெரும்பாலான நாடுகள் இதுவரை தாலிபான் தலைமையிலான ஆட்சியை அங்கீகரிக்கவில்லை. மேலும், தாலிபான்களின் அடிப்படைவாத ஆட்சியில் முதலீடு செய்யவும் உலக நாடுகள் தயங்குவதால் ஆப்கன் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இது அந்நாட்டின் ஆட்சியாளர்களுக்கு கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைச் சமாளித்து, ஆப்கன் மக்களின் மனதை மாற்றவே இதுபோன்ற கதைகளைக் கிளப்பிவிட்டு வருவதாக அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Previous Story

2022புத்தாண்டு:874 கார்கள்  எரிப்பு!

Next Story

பிரெஞ்சு: தொலைக்காட்சி நட்சத்திரமான இரட்டையர்கள் கோவிட் தொற்றினால் பலி