அமெரிக்காவில்: சூடு- 5 பேர் பலி

கொலராடோ: அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் 6 இடங்களில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபரையும் போலீசார் சுட்டுக் கொன்றனர். இதனையடுத்து துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்தது.

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அமெரிக்காவில் கடந்த மாதம் பள்ளிக்கூட மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

அண்மையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கார்லண்ட் பகுதியில் உள்ள கேஸ் நிரப்பும் மையத்தில் லாரியில் வந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பி ஓடினார். இச்சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

துப்பாக்கி சூடு கலாசாரம்

அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. துப்பாக்கி விற்பனை தொடர்பாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வந்தது. அதிபர் ஜோ பைடனும் துப்பாக்கி விற்பனை, பயன்பாடு ஆகியவற்றில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த உத்தரவிட்டார்.

மீண்டும் துப்பாக்கி சூடு

ஆனாலும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் டென்வர் ரயில் நிலையம் அருகே இன்றும் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. டென்வர் நகரத்தின் மெட்ரோ ரயில் நிலையம் அருகே திடீரென மர்ம நபர் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

ரயிலுக்கு காத்திருந்தவர்கள்

மெட்ரோ ரயிலுக்காக காத்திருந்தவர்களை இலக்கு வைத்து மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதனால் பொதுமக்கள் அங்கிருந்து அலறியபடி தப்பி ஓட முயற்சித்தனர். ஆனாலும் மர்ம நபர் இடைவிடாமல் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி

இச்சம்பவத்தில் 4 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மெட்ரோ ரயில் நிலையத்தைத் தொடர்ந்து அருகே உள்ள பகுதிகளுக்கும் சென்று மொத்தம் 6 இடங்களில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். இதனால் அமெரிக்காவின் இன்றைய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் யார்?

ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் உள்ள நபரா? என டென்வர் போலீசார் விசாரித்து வருகின்றனர். அமெரிக்காவில் அடுத்தடுத்து நிகழ்த்தப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பொதுமக்களிடையேயும் வெளிநாட்டவர்களிடையேயும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Previous Story

எலான் மஸ்க்கை வம்பிழுக்கும் சீனா.!

Next Story

பிரான்ஸ்:ஜிஹாதிகளுக்கு ஆதரவாக பிரசங்கம் மூடப்பட்ட மசூதி