அணு சக்தியில் இயங்கும் புதிய நீர்மூழ்கி கப்பலை வடகொரியா உருவாக்கியிருக்கிறது. இந்த கப்பலை தயாரிப்பது சாதாரண விஷயமல்ல. இதுவரை இந்தியா உட்பட வெறும் 6 நாடுகள்தான் இந்த கப்பலை உருவாக்கியிருக்கின்றன. இந்நிலையில் தற்போது இந்த வரிசையில் வடகொரியாவும் இணைந்திருக்கிறது.
அமெரிக்க கடற்படையின் அட்டாக் நீர்மூழ்கிக் கப்பல்களின் அளவுக்கு இணையாக இந்த கப்பல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. வடகொரிய அதிபர், கிம் ஜாங் உன் இந்த கப்பலின் உட்புற கட்டுமானத்தை ஆய்வு செய்யும் படங்கள், அரசு ஊடகங்களால் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இந்த கப்பல் இன்னும் நீரில் இறக்கப்படவில்லை.

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்குவது, கிம் ஜாங் உன்னின் நீண்டகால லட்சியமாகும். அவர் முதன்முதலில் 2021ல் கட்சி மாநாட்டில் இதுபற்றி விவாதித்திருந்தார். இருப்பினும் தென்கொரியா சொந்தமாக அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை தயாரித்துக்கொள்ள அமெரிக்க அனுமதியளித்ததால், அவசரமாக இந்த கப்பலை உருவாக்க கிம் உத்தரவிட்டிருந்தார்.

இத்தகைய கப்பல்கள் பல பாசிட்டிவ் விஷயங்களை கொண்டிருக்கிறது. டீசல்களால் இயங்கும் கப்பல்கள் எனில், பேட்டரிகளை ரீச்சார்ஜ் செய்யவும், டீசலை பெறவும் கரைக்கு வர வேண்டி இருக்கும். ஆனால், அணுசக்தி நீர்மூழ்கி கப்பலில், போதுமான உணவு இருப்பின் பல ஆண்டுகள் வரை அந்த கப்பலால் மேற்பரப்புக்கு வராமல் நீருக்கடியில் இருக்க முடியும். அணுசக்தி கப்பல்கள் வேகமானவை, அமைதியானவை. எனவே இதை கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டம்.
அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பலை உருவாக்கும் தொழில்நுட்பத்தை அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மட்டுமே பெற்றுள்ளன. சுமார் 8,700 டன் எடை கொண்ட இது, அமெரிக்க கடற்படையின் பெரும்பாலான வெர்ஜீனியா-வகுப்பு தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு நிகரானது.
வடகொரியாவின் தற்காப்பு கொள்கைக்கு இந்தக் கப்பல் மிகவும் முக்கியமானது என்று கிம் கூறியுள்ளார். கொரிய மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, “இந்த கப்பல் உண்மையில் மிக வலிமையான தாக்குதல் திறனை அடிப்படையாகக் கொண்டது. தேசிய பாதுகாப்பிற்கான சிறந்த கேடயம், மிக சக்திவாய்ந்த தாக்குதல் திறனே!” என்று கிம் கூறியிருப்பதாக தெரிய வந்திருக்கிறது.
அமெரிக்காவின் ஆதரவுடன் தென்கொரியா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்குவது, வட கொரிய பாதுகாப்பை மீறும் செயல் என்றும், எதிர் கொள்ளப்பட வேண்டிய அச்சுறுத்தல் என்றும் கிம் தெரிவித்தார்.
என்னதான் வடகொரியா அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை உருவாக்கியிருந்தாலும், தென்கொரியாவிடம் இதைவிட சக்தி வாய்ந்த ஆயுதங்கள், கப்பல்கள் இருக்கின்றன. இப்படி இருக்கையில் இரண்டு நாடுகளும் வலுவான ஆயுதங்களை உருவாக்குவது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.





