அடுத்தடுத்து வரப்போகும் புது படங்கள் -?

ஓமிக்ரான் பரவல் தீவிரமடைந்ததை அடுத்து இரவு நேர ஊடரங்கு, ஞாயிறு முழு நாள் ஊரடங்கு, குறிப்பாக திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி போன்ற காரணங்களால் புது வருடம் மற்றும் பொங்கல் பண்டிகை விடுமுறை தினங்களை ஒட்டி வெளியாக திட்டமிட்டிருந்த பல பெரிய படங்களின் வெளியீடு, தேதி குறிப்பிடப்படமால் ஒத்தி வைக்கப்பட்டன.

ஆனால், தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி என்ற போதிலும் வெளியீடு தள்ளி வைக்கப்பட்ட, ரசிகர்களால் அதிகம் எதிர்ப்பார்க்கப்படும் முன்னணி கதாநாயகர்களது படங்களின் வெளியீடு தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. என்னென்ன படங்கள், எப்போது வெளியீடு என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

‘வீரமே வாகை சூடும்’

பிப்ரவரி மாதம் வெளியாகும் முதல் திரைப்படமாக நடிகர் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ இருக்கிறது. அறிமுக இயக்குநர் சரவணன் இயக்கத்தில் விஷாலின் ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இந்த கதை கடந்த மாதம் குடியரசு தினத்தை ஒட்டி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ஓமிக்ரான் சூழல் காரணமாக தள்ளி போய் தற்போது பிப்ரவரி 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் நேரடியாக வெளியாகும் இந்த படத்தில் கதாநாயகியாக டிம்பிள் ஹயாதி, ரவீனா, யோகி பாபு என பலர் நடித்துள்ளனர். படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. இதே தேதியில் அதாவது பிப்ரவரி 4ஆம் தேதி பாலா அரண் இயக்கத்தில் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ திரைப்படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

‘மகான்’

இதற்கடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள ‘மகான்’ திரைப்படம் நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் பிப்ரவரி 10ம் தேதி வெளியாகிறது படத்திற்கு பிறகு நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் கார்த்திக் சுப்பராஜ்ஜின் இரண்டாவது படம் இது. வழக்கமான குடும்ப வாழ்க்கை சலித்து போய் தன் சந்தோஷத்திற்கு குடும்பத்தில் இருந்து வெளியேறும் தந்தை ஒருவன் குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு தன் மகனையும் குடும்பத்தையும் சந்திக்கும் விருப்பம் கொண்டு திரும்புகிறான். அப்போது என்ன நடக்கிறது என்பதை கொண்டு நகரும் கதைக்களம் இது என அமேசான் ஓடிடி தளத்தின் ‘மகான்’ கதை சுருக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. சிம்ரன், பாபி சிம்ஹா, வாணி போஜன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

‘FIR’

விஷ்ணு விஷாலின் ‘FIR (ஃபைசல் இப்ராஹிம் ரைய்ஸ்)’ திரைப்படமும் நேரடியாக திரையரங்குகளில் பிப்ரவரி 11ம் தேதி வெளியாகிறது. மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், கெளதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் என இந்த படத்தில் பலர் நடித்துள்ளனர்.இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேல் ஆகும் நிலையில் இந்த மாதம் 11ம் தேதி படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.தீவிரவாதத்தை அடிப்படையாக கொண்டு ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளதாக விஷ்ணு விஷால் இந்த படம் குறித்து முன்பு தனது பேட்டிகளில் தெரிவித்து இருக்கிறார்.

‘கடைசி விவசாயி’

‘FIR’ திரைப்படத்தோடு இயக்குநர் மணிகண்டனின் ‘கடைசி விவசாயி’ திரைப்படமும் பிப்ரவரி 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் விஜய்சேதுபதி, யோகிபாபு, நல்லாண்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்திற்கு இசை சந்தோஷ்ர நாராயணன். இந்த திரைப்படத்தின் வேலைகளும் நிறைவடைந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகும் நிலையில் தற்போதுதான் வெளியாகிறது.

‘ராமையா’ எனும் சிறு கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடித்துள்ளதாக தெரிவித்துள்ள இயக்குநர் ஒரு மரக்கால் நெல் வைத்து சாமி கும்பிட ஆசைப்படும் மாயாண்டி எனும் விவசாயி ஒருவரை சுற்றி கிராமத்தில் நடக்கும் கதை எனவும் மணிகண்டன் தன் முந்தைய பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.

‘வலிமை’

‘கடைசி விவசாயி’ படத்தை தொடர்ந்து இந்த மாத இறுதியில் ரசிகர்களால் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் திரைப்படமான நடிகர் அஜித்தின் ‘வலிமை’ நேரடியாக திரையரங்குகளில் வெளியாகிறது.

கடந்த மாதம் பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி 13ம் தேதி என அறிவிக்கப்பட்டு பின்பு ஓமிக்ரான் பரவல் தீவிரம் காரணமாக திரையரங்குகளுக்கு வரும் மக்களின் நலனே முக்கியம் என படக்குழு அறிக்கை வெளியிட்டு பட வெளியீட்டை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்கள்.

ஆனால், இன்று இந்த மாதம் 24ம் தேதி வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ‘நேர் கொண்ட பார்வை’ படத்திற்கு பிறகு இயக்குநர் ஹெச். வினோத், நடிகர் அஜித் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் இணையும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் மாதம் வெளியாகும் படங்கள்

இந்த படங்கள் தவிர அடுத்த மாதம் அதாவது மார்ச் 10ம் தேதி இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ மற்றும் பிரபாஸ்ஸின் ‘ராதே ஷ்யாம்’ ஆகிய படங்களும் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த படங்களுக்கு அடுத்து மார்ச் 25ல் கொரோனா காரணமாக ஜனவரி மாதத்தில் வெளியிட இருந்த இயக்குநர் இராஜமெலியின் ‘RRR’ திரைப்படமும் சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படமும் நேரடியாக திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘RRR’ மற்றும் ‘டான்’ இரண்டுமே லைகாவின் தயாரிப்பு என்பதால் ஒரே நாளில் வெளியிட மாட்டார்கள், ‘டான்’ வெளியீடு தள்ளி போகும் என்ற பேச்சு சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. ஆனால், இது குறித்து படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பல படங்கள் ஏற்கனவே பெரும்பாலும் பணி முடிந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் கொரோனா சூழல் காரணமாக வெளியிட முடியாமல் இருந்தது.இப்போது தளர்வுகள் காரணமாக இதற்கு மேலும் தாமதிக்க வேண்டாம் என முடிவெடுத்து பட வெளியீடு நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Previous Story

உத்தர பிரதேச தேர்தல்

Next Story

அமைச்சர் அருந்திக்கவின் புதல்வர் கைது