அசாஞ்சேவை நாடு கடத்த அனுமதி?

பிரிட்டன் மேல் முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை அடுத்து, ‘விக்கிலீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் ஜூலியன் அசாஞ்சே, 50. விக்கிலீக்ஸ் இணையதள பத்திரிகை வாயிலாக பல்வேறு நாடுகளின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

கடந்த 2012-ல் சுவீடனில் இரு பெண்களை பலாத்காரம் செய்த வழக்கில் லண்டனில் கைது செய்யப்பட்டார்.ஜாமினில் வெளிவந்த போதிலும் பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஈக்வடார் துாதரகத்தில் தஞ்சமடைந்தார்.ஈராக்கில் அமெரிக்கராணுவ நடவடிக்கைகள் குறித்த ரகசியங் களை வெளியிட்டு அசாஞ்சே அம்பலப்படுத்தியதால் அவர் அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளானார்.

அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக 2019-ல் அவரை ஈக்வடார் அரசு கைவிட்டது. அதனைத் தொடர்ந்து ஈக்வடார் துாதரகத்துக்குள்ளே நுழைந்த லண்டன் போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். தற்போது லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் அசாஞ்சே அடைக்கப்பட்டுள்ளார்.அவரை தங்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்கக் கோரி லண்டன் நீதிமன்றத்தில் அமெரிக்கா சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அசாஞ்சேவை நாடு கடத்த அனுமதி மறுத்து பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:அசாஞ்சே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த அனுமதித்தால் அவர் தற்கொலை செய்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. மேலும் அமெரிக்க சிறையில் அவர் எதிர்கொள்ளும் தனிமையால் அவரது மன அழுத்தம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

இவ்வாறு நீதிமன்றம் உத்தரவில் கூறியது.இந்த தீர்ப்பை எதிர்த்து பிரிட்டன் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அமெரிக்கா மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணையின் அமெரிக்கா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது:அசாஞ்சேவை நாடு கடத்த அனுமதித்தால் அமெரிக்க நீதிமன்றம் விதிக்கும் சிறை தண்டனையை அவரது சொந்த நாடான ஆஸ்திரேலியாவிலேயே அசாஞ்சே அனுபவிக்கலாம்.

மேலும் அசாஞ்சே மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.இதையடுத்து நீதிபதி நேற்று பிறப்பித்த உத்தரவில், ‘மன அழுத்தத்தால் அசாஞ்சே பாதிக்கப்பட்டிருப்பதால் அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த அனுமதிக்க முடியாது என, லண்டன் நீதிமன்றம் கூறியதை ஏற்க முடியாது’ என்றார்.இதனால் அசாஞ்சே அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த தீர்ப்பை எதிர்த்து அசாஞ்சே சார்பில் மேல் முறையீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Previous Story

காத்தான்குடி ஆதார வைத்தியசாலை   மத்திய சுகாதார அமைச்சின் கீழ்.

Next Story

அமைச்சரவைக்கு  2 VIP க்கள்