விவாகரத்து: முஸ்லிம் பெண் எவ்வளவு காலம் ஜீவனாம்சம் பெறலாம்? 

-சுஷீலா சிங்-

குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CRPC) அல்லது முஸ்லிம் தனிநபர் சட்டம் பிரிவு 125 ஆகிய இரண்டில் ஒரு முஸ்லிம் பெண் விவாகரத்துக்குப் பிறகு எந்தச் சட்டத்தின்படி ஜீவனாம்சம் பெற வேண்டும்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் இந்த விவகாரத்தில் உதவ வழக்கறிஞர் கவுரவ் அகர்வாலை அமிகஸ் கியூரியாக நியமித்தனர்.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முஸ்லிம் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்ததால், இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்றது.

உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கு என்ன?

விவாகரத்துக்குப் பிறகு முகமது அப்துல் சமத் தனது முன்னாள் மனைவிக்கு மாதந்தோறும் ரூ.20,000 ஜீவனாம்சம் வழங்க தெலங்கானாவில் உள்ள குடும்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.

குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 125-ன் கீழ் குடும்ப நீதிமன்றத்தில் ஜீவனாம்சம் கோரி அந்தப் பெண் வாதிட்டார். சமத் தனக்கு முத்தலாக் கொடுத்ததாகக் கூறினார்.

இந்த வழக்கில் பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன, அவை முடிவு செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது, ஆனால் அதே நேரத்தில் மனுதாரர் சமத் ரூ .10,000 இடைக்கால ஜீவனாம்சம் வழங்குமாறு உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, சமத் உச்ச நீதிமன்றத்தை அணுகி, 1986 சட்டம் ஒரு சிறப்புச் சட்டம் என்ற உண்மையை உயர் நீதிமன்றம் புறக்கணித்ததாகவும், குற்றவியல் சட்டத்தின் பிரிவு 125 உடன் ஒப்பிடும்போது இது ஒரு சாதாரண சட்டமாக கருதப்படும் என்றும் கூறினார்.

முகமது அப்துல் சமத்தின் வழக்கறிஞர் வாசிம் காத்ரி பிபிசியிடம் பேசும் போது, “ஒரு இஸ்லாமிய பெண்ணுக்கு வழங்கப்பட்ட விவாகரத்து விஷயத்தில் பிரிவு 125 ஐப் பயன்படுத்த முடியாது. ஆனால் ஒரு இஸ்லாமிய பெண் பிரிந்திருந்தால் அல்லது அவரது கணவர் கவனித்துக் கொள்ளவில்லை என்றால், அவர் இந்த பிரிவின் கீழ் ஜீவனாம்சம் கேட்கலாம்.” என்றார்.

அதாவது, “சிறப்புச் சட்டம் 1986 விவாகரத்து செய்யப்பட்ட இஸ்லாமிய பெண்ணுக்கு பொருந்தும். அதாவது இத்தாத் காலத்தில் மட்டுமே அவருக்கு அந்த ஜீவனாம்சம் வழங்கப்படும். அந்த தொகை அவரது திறனுக்கு ஏற்ப அமையும்” என்றார் .

அதேநேரத்தில், அமிகஸ் கியூரியான கவுரவ் அகர்வால், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் பத்துக்கும் மேற்பட்ட தீர்ப்புகளை மேற்கோள் காட்டி, பிரிவு 125 இன் கீழ் ஒவ்வொரு மாதமும் ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இஸ்லாமிய பெண்கள் ஜீவனாம்சம்

பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஜியா சலாம், மசூதியில் பெண்கள், டில் தலாக் டூ அஸ் பார்ட்: அண்டர்ஸ்டாண்டிங் தலாக்(Till Talaq Do Us Part: Understanding Talaq), டிரிபிள் தலாக்(Triple Talaq) மற்றும் குலா (Khula) போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் “கடந்த 47 ஆண்டுகளில் இந்தியாவின் இஸ்லாமிய சமூகம் எங்கு சென்றடைந்துள்ளது என்பது சிந்திக்க வேண்டிய விஷயம். அப்போது ஷா பானோ ஒரு சிறிய கோரிக்கையை முன்வைத்தார், ராஜீவ் காந்தி அதை நிராகரித்தார். ” என்றார்.

இஸ்லாமிய தனி நபர் சட்டம் இத்தாத் பற்றி பேசுகிறது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். அதே நேரத்தில் இஸ்லாமிய ஆய்வாளர்கள், தன் மனைவி மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் வரை கணவரே மனைவிக்கு பொறுப்பாக வேண்டும் என்று கூறுவதாக அவர் தெரிவிக்கிறார்.

இஸ்லாமிய சட்டம் சொல்வது குறித்து விளக்கி பேசும் அவர், “ பணம் சம்பாதிப்பது ஆணின் பொறுப்பு என்று இஸ்லாமிய சட்டத்தில் எழுதப்பட்டுள்ளது. பெண் பணம் சம்பாதித்தாலும், ஆணிடமிருந்து ஜீவனாம்சம் பெற அவளுக்கு உரிமை உண்டு. ஒரு பெண்ணுக்கு அவள் சம்பாதிக்கும் பணத்தின் மீது முழு உரிமை உண்டு. ஆண்களுக்கு அதில் எந்த உரிமையும் இல்லை” என்று தெளிவுப்படுத்தினார்.

ஒரு ஆண் தன் மனைவியை விவாகரத்து செய்திருந்தால், அவன் அவளுக்கு முறையான ஜீவனாம்சம் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று குர்ஆனில் கூறப்பட்டுள்ளது என்றும் ஜியா உஸ் ஸலாம் குறிப்பிடுகிறார். இருப்பினும், இது வித்தியாசமாக புரிந்து கொள்ளப்படுகிறது.

இஸ்லாமிய பெண்கள் ஜீவனாம்சம்

ஷா பானோ வழக்கு என்ன?

ஷா பானோ வழக்கு இஸ்லாமிய பெண்களின் உரிமைகளுக்கான மற்றும் தனிப்பட்ட சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.

இந்த வழக்கு இஸ்லாமிய பெண்கள் சட்ட உரிமைகளைப் பெறுவதற்கான அடிதளத்தை உருவாக்கிக் கொடுத்தது.

ஷா பானோ வழக்கில் விவாகரத்துக்குப் பிறகு ஜீவனாம்சம் வழங்கும் முடிவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

ஆனால் முஸ்லிம் தனி நபர் சட்டத்தில் நீதிமன்றம் எந்த அளவிற்கு தலையிட முடியும் என்பது குறித்து ஒரு அரசியல் சர்ச்சையும் எழுந்தது.

ஷா பானோவின் வழக்கு இஸ்லாமிய பெண்களுக்கு திருமணத்தில் சம உரிமை மற்றும் நீதிமன்றத்தில் விவாகரத்து வசதி ஆகியவற்றிற்கான கதவைத் திறந்தது.

1978 ஆம் ஆண்டில், ஷா பானோ என்ற 62 வயதான இஸ்லாமிய பெண், தனது கணவர் முகமது அஹ்மத் கானிடமிருந்து விவாகரத்து பெற்ற பின்னர் ஜீவனாம்சம் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஷா பானோ மற்றும் முகமது கான் 1932 இல் திருமணம் செய்து ஐந்து குழந்தைகளைப் பெற்றனர்.

முகமது கான் தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞராக இருந்தார். மேலும் அவர் இஸ்லாமிய சட்டப்படி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து 1978-ம் ஆண்டு இந்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஷா பானோ, மாதம் ரூ.500 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125-ன் கீழ் அவர் ஜீவனாம்சம் கோரியிருந்தார்.

 
இஸ்லாமிய பெண்கள் ஜீவனாம்சம்

ஆனால் இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டத்தின்படி, விவாகரத்துக்குப் பிறகு, கணவர் இத்தாத் காலம் வரை மட்டுமே ஜீவனாம்சம் செலுத்த வேண்டும் என்று முகமது அகமது கான் வாதிட்டார்.

முஸ்லிம் தனி நபர் சட்டத்தின்படி, இத்தாத் என்பது ஒரு மனைவி தனது கணவரின் மரணம் அல்லது விவாகரத்துக்குப் பிறகு செலவிடும் காலமாகும்.

இந்த காலம் மூன்று மாதங்கள் ஆகும். ஆனால் அதை சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம். இந்த காலக்கட்டத்துக்குப் பிறகு, பெண் மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம்.

இந்த வழக்கின் போது, முகமது கானை ஆதரித்த அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ் உள்ள விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறினார்.

இந்த விவகாரத்தில் நீண்ட விசாரணைக்குப் பிறகு, 1985 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. நீதிபதி ஒய்.வி.சந்திரசூட் உயர் நீதிமன்றத்தின் முடிவு சரியானது என்று கருதினார். அதில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவின் கீழ் ஜீவனாம்சம் வழங்குவதற்கான முடிவு வழங்கப்பட்டது.

இந்த முடிவுக்குப் பிறகு, அரசியல் களத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் ராஜீவ் காந்தியின் அரசு இஸ்லாமிய பெண்கள் (விவாகரத்து பாதுகாப்புச் சட்டம்), 1986 ஐ நிறைவேற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் விளைவாக, ஷா பானோ வழக்கில் தீர்ப்பு மாற்றப்பட்டு, இத்தாத் காலத்திற்கு மட்டுமே ஜீவனாம்சம் வழங்க முடியும் என்று கூறப்பட்டது.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125 என்ன சொல்கிறது?

குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 பிரிவு 125-ன் படி, புறக்கணிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் சமூக நீதியின் கீழ் வாழ உரிமை உண்டு.

இந்த பிரிவின் கீழ், எந்த மதத்தைச் சேர்ந்தவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125 யார் ஜீவனாம்சம் கோரலாம் என்று குறிப்பிடுகிறது.இஸ்லாமிய பெண்கள் ஜீவனாம்சம்

பெண் எப்போது மனைவியாக கருதப்படுகிறாள்?

இந்து மதத்தில், ஒரு ஆணுடனான திருமணம் சட்டப்பூர்வமாக நிலைக்கும் வரையிலேயே ஒரு பெண் மனைவியாக கருதப்படுகிறாள். இரண்டாவது திருமணம் செல்லுபடியாகாது என்பதால் இரண்டாவது மனைவி ஒரு திருமணத்தில் ஜீவனாம்சம் கோர முடியாது. முதல் திருமணத்தை கணவர் மறைத்திருந்தால் மட்டுமே, இரண்டாவது மனைவி ஜீவனாம்சம் கோரலாம்.

எந்த 3 சூழ்நிலைகளில் ‘மனைவி’ ஜீவனாம்சம் பெற உரிமை இல்லை?

  • அவள் திருமணத்திற்குப் புறம்பான விவகாரங்களில் ஈடுபட்டிருந்தால்
  • போதிய காரணம் சொல்லாமல் அவள் கணவனை விட்டுப் பிரிந்திருந்தால்
  • அவர்கள் பரஸ்பர சம்மதத்துடன் தனித்தனியாக வாழ்ந்து கொண்டிருந்தால்

மேற்கூறிய சந்தர்ப்பங்களில் மனைவிக்கு ஜீவனாம்சம் கோர உரிமை இல்லை.

பெண்கள் உரிமைகள் குறித்து குரல் எழுப்பும் வழக்கறிஞர் சோனாலி கட்வாஸ்ரா கூறுகையில், “பிரிவு 125 ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களின் மதத்தைப் பொருட்படுத்தாமல் ஜீவனாம்சம் பெற உரிமை அளிக்கிறது.” என்றார்.

“ பெண்களுக்கு ஜீவனாம்சம் வழங்குவதற்கு பல்வேறு விதிகள் உள்ளன. இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 24, இந்திய விவாகரத்து சட்டத்தின் பிரிவு 37 மற்றும் சிறப்பு திருமணச் சட்டத்தின் பிரிவு 24 ஆகியவற்றில் இந்த விதிகள் செய்யப்பட்டுள்ளன. குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 125 ஐ இஸ்லாமிய தனிநபர் சட்டத்துக்குள் இருக்கும் பிரிவாக பார்க்க முடியாது என்பதும் தெளிவாகிறது.” என்றார்.

குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 125 -ன் படி, ஒரு முஸ்லிம் பெண், இத்தாத் காலம் கடந்த பிறகும் ஜீவனாம்சம் கோரலாம். ஆனால் அப்போது அவருக்கு இரண்டாவது திருமணம் நிகழ்ந்திருக்கக் கூடாது.

இது தவிர, சட்டப்பூர்வமாக பிறந்த அல்லது திருமணத்திற்கு வெளியே பிறந்த குழந்தைகள் இந்த பிரிவின் கீழ் ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு. அதேநேரத்தில், பெற்றோர்கள் தங்கள் சொந்த அல்லது தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளிடமிருந்து ஜீவனாம்சம் கோரலாம்.

இந்த விவகாரம் குறித்து திங்கள்கிழமை நீண்ட விசாரணை நடந்து வந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை ஒத்திவைத்தது.

Previous Story

காஸா போர் நிறுத்தம்?

Next Story

இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி !- அமைச்சர் ஹரின்