அசாம்:முஸ்லிம்களின் வெள்ளிக் கிழமை தொழுகை இடைவேளை ரத்து 

அசாம் மாநிலத்தின் சட்டசபையில், வெள்ளிக்கிழமை தொழுகைக்காக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மூன்று மணிநேரம் இடைவேளை வழங்கப்பட்டு வந்தது. அது தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

“சையது சாதுல்லா அறிமுகப்படுத்திய ‘அசாம் சட்டமன்றத்தில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கான மூன்று மணிநேர சபை ஒத்திவைப்பு’ என்ற விதி நீக்கப்பட்டுள்ளது. இனிமேல், சபையில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு இடைவேளை இருக்காது” என்று அசாம் மாநில பாஜக எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளத்தில் தெரிவித்துள்ளது.

ஹிமந்தா பிஸ்வா சர்மா
அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) இதற்குக் கடும் பதிலடி கொடுத்துள்ளதுடன், இது அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் செயல் என்றும் கூறியுள்ளது.

அதே நேரத்தில், பிகாரின் எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் சமாஜ்வாடி கட்சியினர், இந்த விவகாரத்தில் பாஜகவை குறிவைத்துத் தொடர்ந்து விமர்சனங்களையும் கேள்விகளையும் முன்வைத்து வருகின்றனர்.

ஜேடியு மற்றும் ஆர்ஜேடி கட்சிகளின் ஒருமித்த எதிர்ப்பு

அசாம் பாஜகவின் இந்த முடிவுக்கு முதல் மற்றும் கடுமையான எதிர்வினை, மோதி அரசாங்கத்தின் கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் நிதிஷ் குமாரின் கட்சியான ஜேடியு-விடம் இருந்து வந்தது.

ஜேடியு தலைவர் நீரஜ் குமார், “அசாம் அரசின் இந்த முடிவு நிச்சயமாக நாட்டின் அரசியலமைப்பின் அடிப்படை முன்னுரைக்கு எதிரானது. ஒவ்வொரு இந்தியருக்கும் தங்கள் மத நம்பிக்கைகள் மற்றும் மரபுகளைப் பாதுகாக்க உரிமை உண்டு” என்று ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வெள்ளிக்கிழமை இடைவேளைக்குத் தடை விதிக்கிறார். ஆனால் அசாமில், காமாக்யா கோவிலில் ஒவ்வொரு நாளும் யாகங்கள், பலி பூஜைகள் நடத்தப்படுகின்றன. அவரால் அதைத் தடை செய்ய முடியுமா? எவ்வளவு எதிர்ப்பு எழும் என்பது தடை செய்தால் தெரியும்” என்று கூறினார்.

மேலும், “மத வழிபாடுகளுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்க யாருக்கும் உரிமை இல்லை. ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை முறை, உணவு மற்றும் இருப்பிடம் தொடர்பான உரிமைகள் உண்டு. அசாமில் வறுமையை ஒழிக்கவும், வெள்ளப்பெருக்கு தொடர்பான பிரச்னைக்குத் தீர்வு காணவும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் அவர் குரல் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என்றார் ஜேடியு தலைவர் நீரஜ் குமார்.

நீரஜ் குமார்
ஜேடியு தலைவர் நீரஜ் குமார் இந்த முடிவு அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறியுள்ளார்.

மறுபுறம், ஆர்ஜேடி தலைவரும் பிகார் முன்னாள் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ், “மலிவான புகழை அடைவதற்காக அசாம் முதல்வர் இதைச் செய்வதாக” கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “வெறுப்பைப் பரப்பவும், மோதி-ஷாவின் கவனத்தை ஈர்க்கவும், சமூகத்தைப் பிளவுபடுத்தவும், பாஜகவினர் முஸ்லிம் சகோதரர்களைத் தங்களது எளிய இலக்காக வைத்துள்ளனர். சில நேரங்களில் வக்ஃப் வாரிய மசோதா வரும், சில நேரங்களில் சிஏஏ, என்ஆர்சி மசோதா வரும். சமூகத்தில் வெறுப்பை விதைக்க இவர்கள் விரும்புகிறார்கள்” என்றார்.

“நாம் இருக்கும் வரை அவர்களுக்கு (முஸ்லிம்கள்) யாராலும் தீங்கு நேராது” என்றும் தேஜஸ்வி யாதவ் கூறினார்.

உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத்தை சேர்ந்த சமாஜ்வாடி கட்சித் தலைவர் எஸ்.டி.ஹசன், “ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசும்போதெல்லாம், நஞ்சைக் கக்கி, சமூகத்தில் வெறுப்பைப் பரப்புகிறார். அவரது முழு அரசியலும் முஸ்லிம்களுக்கு எதிரான திட்டங்களைச் சார்ந்துள்ளது” என்று கூறினார்.

மேலும், “முஸ்லிம்களை சித்திரவதை செய்து, மத்திய அரசின் தலைவர்களிடம் எப்படி நற்பெயர் பெறலாம் என்று சில மாநில முதல்வர்களுக்குள் போட்டியே நிலவுகிறது. ஹிமந்தாவே காங்கிரசில் இருந்தபோது ஊழல்களில் சிக்கியவர், அதிலிருந்து தப்பிக்கவே இப்படியெல்லாம் செய்கிறார்” என்றார் எஸ்.டி.ஹசன்.

அசாம் முதல்வர் கூறியது என்ன?

முதல்வர் ஹிமந்தா

 கடந்த 1937ல் தொடங்கிய இந்த நடைமுறை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் ஹிமந்தா கூறுகிறார்

அசாம் மாநில அரசின் இந்த முடிவு குறித்துப் பேசிய முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “ஆட்சிக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு, இந்து மற்றும் முஸ்லிம் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும், வெள்ளிக்கிழமை 2 மணிநேரம் இடைவேளை தேவையில்லை என முடிவு செய்துள்ளனர்.

இரண்டு மணிநேரம் ஓய்வு எடுக்காமல் அந்த நேரத்தில் வேலை செய்ய அவர்கள் முடிவு செய்தனர். 1937இல் தொடங்கிய இந்தப் பழக்கம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.

மலிவான புகழைப் பெறவும், குறிப்பிட்ட பிரிவினரைத் திருப்திபடுத்தவும் முயல்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு, “இது எல்லா பிரிவு எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டு, ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு. நான் தனியாக எடுத்தது அல்ல” என்று முதல்வர் ஹிமந்தா கூறினார்.

பாஜக எம்பி தினேஷ் சர்மா கூறுகையில், “இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. மதச்சார்பின்மை மற்றும் அனைத்து மதங்களுக்கும் உரிய மரியாதை கொடுப்பது மற்றும் அனைத்து மதங்களையும் சமமாக நடத்துவது பற்றிப் பேசவேண்டுமெனில், இந்த அரசாங்கம் அதைச் சரியாகச் செய்கிறது என்றே தான் நம்புவதாக” கூறினார்.

வாரிஸ் பதான்
ஏஐஎம்ஐஎம் தலைவர் வாரிஸ் பதான்

மறுபுறம், ஏஐஎம்ஐஎம் (AIMIM) தலைவர் வாரிஸ் பதான், இது முற்றிலும் அரசியலமைப்பிற்கு எதிரானது, மத சுதந்திரத்திற்கான உரிமை மீறல் என்று தான் நம்புவதாகக் கூறியுள்ளார்.

அவர், “அசாமில் இந்த நடைமுறை 1937 முதல் இருந்து வருகிறது, இப்போது திடீரென நீங்கள் இதைச் செய்தது ஏன்?” என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், “இஸ்லாமியர்களுக்கு எதிரான பாஜக அரசும், மாநில முதல்வர்களும், நமது உணவு, உடை, மதரஸாக்கள் மற்றும் இப்போது தொழுகையையும் வெறுக்கிறார்கள்.”

“வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற பிரச்னைகளில் பாஜக அரசு தோல்வியடைந்துவிட்டது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. அவர்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டத்தை எப்படி ஒழிப்பது என்று தெரியவில்லை, எனவே அவர்கள் ஒரே ஒரு விஷயத்தை முன்வைக்கின்றனர். அதாவது முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக முட்டாள்தனமாகப் பேசுவது, பிரிவினையை ஏற்படுத்தி அரசியல் செய்வது” என்றும் காட்டமாக வாரிஸ் பதான் விமர்சித்துள்ளார்.

அசாம் சபாநாயகர் கூறியது என்ன?

பிஸ்வாஜித் திம்ரி
அசாம் சபாநாயகர் பிஸ்வாஜித் திம்ரி

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் செய்தியின்படி, “அசாம் சட்டமன்றத்தின் நடைமுறை விதிகளின்படி, வெள்ளி மற்றும் சனிக்கிழமைகள் தவிர, பொதுவாக காலை 9.30 முதல் பிற்பகல் 2 மணி வரை அவை செயல்படும். வெள்ளிக்கிழமைகளில், காலை 9.30 முதல் 11.30 வரையும், பின்னர் இடைவேளைக்குப் பிறகு மதியம் 3 முதல் 5 வரையும் அவை செயல்படும்.”

இதுகுறித்து அசாம் சபாநாயகர் பிஸ்வாஜித் திம்ரி பேசுகையில், “ஆங்கிலேயர் காலத்தில், சைதுல்லா சாஹேப் முதலமைச்சராக இருந்த காலத்தில், இதுவொரு பாரம்பரியமாக இருந்து வந்ததது. அதனால் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக அசாம் சட்டசபை 11.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது” என்று கூறினார்.

“அப்போது வங்கதேசம் அசாமுடன் இருந்தது, அதன் தலைநகர் ஷில்லாங்கில் இருந்தது. அப்போது இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றும் பல உறுப்பினர்கள் இந்த விதியைக் கொண்டு வந்திருக்கலாம். நான் சபாநாயகர் ஆனதில் இருந்தே கவனித்திருக்கிறேன், வெள்ளிக்கிழமை நேரமின்மையால், விவாதம் நடைபெறாத நிலை இருந்தது” என்று கூறினார் பிஸ்வாஜித்.

தொடர்ந்து பேசிய அவர், “அதுமட்டுமல்லாமல் பிற மதத்தினரும் பிரார்த்தனைகளுக்கு இடைவேளை கேட்க ஆரம்பித்து விட்டார்கள். மற்ற சட்டசபைக் கூட்டங்கள் குறித்து விசாரித்து அங்கு இத்தகைய இடைவேளை இல்லை என்று தெரிந்துகொண்டேன். நாடாளுமன்றத்தில்கூட அப்படி ஒரு விதி இல்லை” என்றார்.

இந்த விவகாரம் தான் தலைவராக இருக்கும் விதிகள் குழுவுக்கு அனுப்பப்பட்டு, அங்கு இந்தப் பாரம்பரியத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது என்று சபாநாயகர் பிஸ்வாஜித் கூறினார்.

அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா முஸ்லிம்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு, பலமுறை தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளார்.

கடந்த மாதம்தான், அசாம் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம் மற்றும் விதிகள் 1935ஐ ரத்து செய்வதற்கான மசோதாவுக்கு ஹிமந்தா அரசு ஒப்புதல் அளித்தது.

இதற்கும் பலத்த விமர்சனங்கள் எழுந்தன. இந்த நடவடிக்கை அசாம் அரசாங்கத்தின் முற்போக்கான நடவடிக்கை என்றும் விவரிக்கப்பட்டது. அதேநேரம் முஸ்லிம் குடும்பங்கள் மத்தியில் இந்த நடவடிக்கை ஒருவித அச்சத்துடன் பார்க்கப்படுகிறது.

Previous Story

றிசாட் பதியுதீன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவா! 

Next Story

காரையே சுற்றி சுற்றி வந்த கணவன்.. தவறான உறவில் மனைவி?