அதிகார வர்க்கம் சமூக ஊடகங்களுக்கு அச்சப்படுவது ஏன்!

-நஜீப் பின் கபூர்-

‘நமது ஆட்சியாளர்கள் சமூக ஊடகங்களை

கட்டிப் போட மார்க்கம் தேடுகின்ற போது

சர்வதேசம் சமூக ஊடகங்ளை மடக்குவது

மனித உரிமை மீறல் என்று வாதிடுகின்றது’

இன்று உள்நாட்டில் மட்டுமல்ல சர்வதேச அரங்கிலும் சம்பிரதாய ஊடகங்களை சமூக ஊடகங்கள் பாரிய பின்னடைவவைச் சந்திக்க வைத்து விட்டன. இதனால் இந்த உலகத்தில் இரகசியங்கள் அந்தரங்கங்கள் என்று எதுவுமே இல்லை என்ற அளவுக்கு நிலமை மாரி இருக்கின்றது. இதனால் அதிகம் கவலை கொள்கின்ற நாடுகளாக இடதுசாரி அரசுகளும் அடிப்படை வாதத்தை முன்னிருத்தி ஆட்சி செய்கின்ற நாடுகளும் இருக்கின்றன. ஜனநாயகத்தின் பெயரில் சர்வாதிகார ஆட்சி செய்கின்ற ஆட்சியாளர்களும் இதனால் பெரும் அசௌகரிகங்களுக்கு இலக்காகி வருகின்றார்கள்.

இதற்காக சமீபத்திய சில சம்பவங்களை சொல்லலாம். உக்ரைன் போர் தொடர்பில் ரஷ்யா ஆட்சியாளர்களுக்கு இந்த சமூக ஊடகங்கள் தொந்தரவாக இருக்கின்றன. அரசுக்கு எதிரான கிளர்ச்சிகளை சிந்தனைகளை அவை அங்கு ஏற்படுத்தி    வருகின்றன. அதே போன்று அண்மையில் சீன அதிபர் ஜி ஜின் பிங் தொடர்பான இந்த சமூக ஊடகங்கள் வெளியிட்டு வந்த செய்திகள் சீன ஆட்சியாளர்களுக்கு பெரும் தலைவலியாக அமைந்திருக்கின்றன. அதே போன்று; ஹிஜாப் தொடர்பாக எழுந்த போராட்டங்களின் போது இதே சமூக ஊடகங்கள் ஈரானிய இஸ்லாமிய ஆட்சியார்களுக்கு நெருக்கடிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

கடும் போக்கு ஆட்சி நடாத்துகின்ற நாடுகளில் மட்டுமல்லாது ஜனநாயக நாடுகளில் கூட இதே சமூக ஊடகங்கள் இன்று வலுவாக இருக்கின்றன. இதனால் அரச ஊடகங்கள் மற்றும் சம்பிரதாய ஊடகங்கள் அந்த நாடுகளில் கூட வலுவிழந்து நிற்க்கின்றன. சமகாலத்தில் உலகில் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதமாக அணு குண்டுகள் கருதப்படுகின்றன. ஆனாலும் அணு குண்டுகளை விட சக்திவாய்ந்த ஆயுதங்களை உலகில் சில நாடுகள் தயாரித்து இரகசியமாக வைத்திருக்கவும் இடமிருக்கின்றது என்பதும் நமது நம்பிக்கை. இன்று பரீட்சிக்கப்பட்ட மிகப் பெரிய ஆயுதம் என்ற வகையில் இந்த அணு குண்டுகள் விடயத்தில் மக்கள் மத்தியில் மிகுந்த அச்சம் இருப்பது தெரிந்ததே.

அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் மீது வீசிய அணுகுண்டுக்குப்  பின்னர் அதனை இதுவரை எந்த நாடுகளும் களத்தில் பாவித்தது கிடையாது. ஆனால் தொடர்ந்து பரீசோதனைகளச் செய்து வருகின்றன. தற்காலத்தில் நாடுகள் வைத்திருக்கின்ற  இந்த அணு குண்டுகள் ஜப்பான் மீது வீசப்பட்ட அணுகுண்டுகளை விட பல மடங்கு சக்தி வாய்ந்;ததாக இருக்கின்றன என்பதும் தெளிவான விடயம். சமூக ஊடகங்கள் பற்றித் தலைப்பைக் கொடுத்து விட்டு என்ன அணு குண்டகள் பற்றி கதை சொல்லிக் கொண்டிருக்கின்றீர்கள் என்று நீங்கள் யோசிக்கலாம் ஆனால் காரணம் இருக்கின்றது.

இந்த அணுகுண்டுகளை வைத்திருக்கின்ற நாடுகள் தனது எதிரி நாடுகளை அச்சுருத்துவதற்காகத்தான் அவற்றை வைத்திருக்கின்றன. நடைமுறையில் அதன் பாவனை இல்லை. ஆனல் அது தொடர்பாக ஒரு பயம்தான் இருந்து வருகின்றது. நாம் இங்கு குறிப்பிடுகின்ற இந்த சமூக ஊடகங்கள்தான் இன்று உலகில் மிகவும் ஆபத்தானதும் வலிமையானதும் ஆயுதம் என்று நாம் அடயாளப்படுத்த விரும்புகின்றோம். நாம் இங்கு குறிப்பிடுகின்ற இந்த சமூக ஊடகம் ஒவ்வொரு மனிதனுடைய கரங்களிலும் இருக்கின்றன. அதனை பாவனையில் வைத்திருப்பவர்கள் முட்டாலாகவோ புத்திசாலியாகவோ ஏன் குழந்தையாக மன வளர்ச்சி குன்றியனாகவோ  இருக்கக் கூடும்.

எனவே இதனைப் பாவிக்கின்ற நபர் அதனை நல்ல வழியிலும் கெட்ட வலியிலும் பாவிக்க முடியும். இதற்கு ஒரு சின்ன உதாரணத்தை இங்கு ஞாபகப்படுத்த வேண்டும் என்று தோன்றுகின்றது. இந்திய-ஆந்திரா கண்ணூர் என்ற இடத்தில் வெரும் 14 வயது கூட நிரம்பாத ஒரு பள்ளிச் சிறுவன் தன்னிலும் மூத்த முப்பதற்கும் மேற்பட்ட பெண்களை நாம் சொல்கின்ற இந்த  ஆயுதத்தை (கையடக்கத் தொலைபேசியை பாவித்து) பாலியல் சேட்டைகளிலும் போதை வியாபாரத்திலும் ஈடுபடுத்தி வந்திருக்கின்றான். இது போன்று தினந்தோரும் பல்லாயிரக்கணக்கான சம்வங்கள் இந்த தொலைபேசி வாயிலாக மட்டும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த விவகாரம் நாம் சொல்ல வருகின்ற கதையில் மிகச் சிறிய ஒரு அம்சம் மட்டுமே.

இதற்கு அப்பால் இணையதளங்கள் வட்சப், யூடீப், டிக் டெக், டுவிடர்  என்று இன்னோரன்ன  எத்தனையோ சமூக ஊடகங்கள் பாவனையில் இருக்கின்றன. இதானல் பல நல்ல காரிங்களும் அதே போன்று மிகவும் பிழையான செயல்பாடுகளும் இன்று உலகில் அன்றாடம் நடந்து வருகின்றன. எனவே உலகில் வாழ்கின்ற 798 கோடி மக்களும் விரும்பியோ விரும்பாமலோ இந்த சமூக ஊடகங்களில் தன்னையும் ஆட்படுத்தி வருகின்றார்கள். இதனை நாம் அனைவரும் அறிவோம். இதனால் நடக்கின்ற ஆரோக்கியமான நிகழ்வுகளுக்கு அப்பால் பெரும் அழிவுகளும் இருக்கின்றன.

கொரோனாவுக்குப் பின்னரான சமூக அமைப்பில் பிஞ்சிக் குழந்தைகள் கூட கல்வித் தேவைகளுக்காக ஒன்லைன் ஊடக இந்த ஊடகங்களைப் பாவிக்க வேண்டி ஏற்பட்டிருக்கின்றன. நாம் ஏற்கெனவே சொன்ன அத்தனை விடயங்களும் இந்த சமூக ஊடகங்களில் சில்லறை விவகாரம்.  இப்போது அரசியல் பொருளாதார கலாச்சார தொழிநுட்ப ரீதியில் இதனைப் பார்ர்போம்.

அதேபோல் பல தசாப்தங்களுக்கு முன்னர் வானெலி தொலைக் கட்சிகள் பத்திரிகைகள் கம்பி மூலமான தொலைபேசிகள்தான் சமூகத் தொடர்பு சாதனங்களாக பாவிக்கபட்டு வந்தன. நாட்டில் ஏதாவது ஒரு இடத்தில் நடக்கின்ற ஒரு சம்பவத்தைபார்க்க வானெலி, தொலைகாட்சி, அல்லது பத்திரிகை செய்தி சொலும் வரை காத்திருக்க வேண்டி இருந்தது. ஆனால் இன்று ஒரு இடத்தில் நடக்கின்ற ஒரு சம்பவத்தை சம நேரத்திலே இந்த சமூக ஊடகங்கள் மக்கள் மயப்படுத்தி விடுக்கின்றன.

இதற்காக பெரிய அறிவோ தொழிநுட்பமோ தெரிந்திருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. அவர் அவர் அறிவுக்கு ஏற்ப சம்பவங்கள் உலகத்தின் பார்வைக்கு சென்றுவிடுகின்றன. இதில் போலியான தகவல்கள் திட்டமிட்டு பரப்பப்படுகின்ற கட்டுகதைகள் என்பனவும் குறிப்பிடத்தக்க தாக்கங்களை சமூகத்தில் செலுத்தி வருகின்றன. நடக்காத ஒரு நிகழ்வை நடந்ததாகச் சொல்லி பெரும் அழிவுகளைக் கூட இதே சமூக ஊடகங்கள் பல சந்தர்ப்பங்களில் ஏற்படுத்தி வந்தும் இருக்கின்றன.

உலக வல்லாதிக்கப் போட்டியிலும் இந்த சமூக ஊடகங்கள் பாரிய தாக்கங்களைச் செய்து கொண்டு வருகின்றன. அமெரிக்க, ரஷ்;யா, சீனா, இஸ்ரேல்  போன்ற நாடுகள் இந்த சமூக ஊடகங்களை பாவித்து பல தில்லு முள்ளு காரியங்களைச் செய்து கொண்டிருக்கின்றன. எனவே சம்பிரதாய ஊடகங்கள் பலயீனப் பட்டிருக்கின்ற உலகத்தில் இந்த சமூக ஊடகங்கள் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கின்ற அதே நேரம் பொறுப்பற்ற விதத்திலும் காரியங்கள் அரங்கேரி விடுகின்றன.

உலக மட்டத்தில் மட்டுமல்ல உள்நாட்டிலும் தமது எதிரிகளுக்கு எதிரான பரப்புரைகளுக்கு இந்த சமூக ஊடகங்கள் பாவிக்கப்பட்டு வருகின்றன. சில சமூக ஊடகவியலாளர்கள் இந்த ஊடகங்களை பாவித்து பில்லியனர்களாகவும் மில்லியனர்களாகவும் மாரி இருக்கின்றார்கள். இன்னும் சில இடங்களில் கோடிக்கணக்கான பணமுகூட இந்த சமூக ஊடக தொழிநுட்பங்களைப் பாவித்து கொள்ளையடிக்பட்டு வந்திருக்கின்றன. இதில் நைஜீரிய நாட்டினர் இன்று முன்னணியல் இருக்கின்றார்கள். இதனால் நிதி நடவடிக்கைகளில் கூட பெரும் குழப்ப நிலை இன்று தோன்றி இருக்கின்றது. யாரோ ஒருவரின்  பெயரில் இருக்கின்ற வங்கிக் கணக்கிலுள்ள பணத்தை கூட தன்னுடைய பணம் போல் கொள்ளையடித்த சந்தர்ப்பங்கள் உலகம் பூராவிலும் தற்போது நடந்து வருகின்றன.

அதே போன்று பரம இரகசியங்களை அம்பலப்படுத்தியதன் மூலம் எட்வர்ட் ஸ்னோடென் அமெரிக்காவுக்கு பெரும் சிக்கல்களை உண்டு பண்ணி இருந்தார். இதுவும்  சமூக ஊடகங்களின் ஆதிக்கம் தொழிநுட்பம் சார்ந்த செயல்பாடாக இருந்தது. இதன் காரணமாக எட்வர்ட் ஸ்னோடென்  அமெரிக்கா வேட்டையாட முயன்றது. அவர் ரஷ்யாவுக்குத் தப்பியோடி விட்டார். தற்போது சில தினங்களுக்கு முன்னர் அவருக்கு ரஷ்யா அதிபர் புட்டின் அரசியல் அடைக்களம் கொடுத்தது மட்டுமல்லாமல் ரஷ்யக் குடியுரிமையும் வழங்கி அமெரிக்காவுக்கு அதிரடி காட்டி இருக்கின்றார். இது போன்று உலகலவிய ரீதியில் இந்த சமூக ஊடகங்கள் எத்தனையோ விளையாட்டுக்களை செய்து கொண்டிருக்கின்றன.

இதுவரை ஒரு தெளிவுக்காக சமூக ஊடகங்களின் சில பக்கங்களை அல்லது பொதுவான விடயங்கள் பற்றி குறிப்புக்களைச் சொல்லி வந்தோம். இப்போது நேரடியாக இலங்கை அரசியலிலும் சமூக நடவடிக்கைகளிலும் இந்த சமூக ஊடகங்களின் தாக்கம் பற்றிப் பார்ப்போம். இலங்கையில் அண்மைக்காலம் வரை அரச ஊடகங்களே பெரும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தது. அதன் பின்னர் தோன்றிய தனியார் ஊடகங்கள் அரசு ஊடகங்களின் செல்வாக்கை கனிசமாக செல்வாக்கிழக்கப் பண்ணி விட்டது. ஆனால் பதவிக்கு வருகின்ற அரசாங்கங்கள் ஏதோ வகையில் இந்த தனியார் ஊடகங்களை குறிப்பாக தொலைக் கட்சி சேவைகளத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் வெற்றியும் பெற்றிருந்தது. இது விடயத்தில் பணம் பெரும் ஆதிக்க சக்தியாக திகழ்ந்து வருகின்றது.

இந்த நாட்டில் ராஜபக்ஸாக்களின் அரசியல் ஆதிக்கத்தையும் அரசியல் இருப்பையும் வலுப்படுத்துவதில் இதே தனியார் ஊடகங்கள் கடந்த காலங்களில் பெரும் பங்களிப்புச் செய்து வந்திருக்கின்றன. இன்றும் பல தனியார் ஊடகங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் அவர்களின் துதிபாடுவதில் பெரும் அக்கரை செலுத்தி வருகின்றன. இதற்குக் காரணம் அரசு தொடர்பான விளம்பரங்களுக்கு தன்னை ஆதரிக்கின்ற தனியார் நிருவனங்களுக்கு இவர்கள் பெரும் தொகை பணத்தை வாரி வழங்கி வருவதாகும்.

கடந்த காலங்களில் நாட்டில் இன நல்லுறவு கெட்டுப்போவதற்கு இந்த ஊடகங்கள் ஆற்றிய பங்களிப்பு மிகவும் கவலை தருவதாக அமைந்திருந்தன. போலிய கற்பனைக் கதைகளுக்கு அவர்கள் உயிர் கொடுத்து நாட்டில் வன்முறையையும் ஒருவகையான இன ஒடுக்கு முறையையும் இங்கு ஏற்படுத்தி இருந்ததும் தெரிந்ததே. அதன் தாக்கம் இன்றும் இருந்த வருகின்றது.

ஒரு காட்டத்தில் அதாவது ராஜபக்ஸாக்கள் அதிகாரத்தில் இருந்த போது அரச ஊடகங்கள் மட்டுமல்லாது தனியார் ஊடகங்களும் அவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கி வந்தது. தமது தனிப்பட்ட விளம்பரங்களுக்குக் கூட கொடுப்பனவுகளைச் செலுத்தாது அவர்கள் சம்பிரதாய ஊடகங்களைப் பாவித்து வந்திருந்தது தெரிய வந்தது.  இந்த ஊடக அடக்கு முறையின் பின்னணியில்தான் நாட்டில் சமூக ஊடகங்கள் ஆதிக்கம் பெறத்துவங்கியது. இன்று அரசு முன்னெடுத்து வருகின்ற அடக்கு முறைகளுக்கு எதிராக மக்களுக்குத் தகவல்களைப் பரிமார்வதில் சமூக ஊடகங்கள் பாரிய பங்களிப்பை செய்து கொண்டிருக்கின்றன.

அரசு என்னதான் போலியான செய்திகளை தகவல்களைச் சொல்லி மக்களைப் பிழையான வழியில் கொண்டு செல்ல முயன்றாலும் அவ்வாறான நடவடிக்கைகளை இந்த சமூக ஊடகங்கள் போட்டுடைத்து விடுகின்றன. இதனால் அரசு தமது அரசியல் இருப்புக்காக முன்னெடுத்து வருகின்ற அடக்கு முறைகள் தொடர்பான பிரகடனங்கள் அதற்காக போடுகின்ற சட்டங்கள் போன்றவற்றை இந்த சமூக ஊடகங்கள் தேலுறித்துக் காட்டிக் கொண்டிருப்பதால் அரசு பெரும் நெருக்கடிக்கு இலக்காகி வருகின்றது. இதனால் இந்த சமூக ஊடகங்களை எப்படியாவது கட்டிப் போட வேண்டும் என்று ஆளும் மொட்டுத் தரப்பு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. சில நேரங்களில் பதவியில் இருக்கின்ற அரசுகள் இந்த சமூக ஊடகங்கள் மீது தடைவிதித்த சந்தர்ப்பங்களும் நிறையவே இருக்கின்றன.

நமக்குக் கிடைக்கின்ற தகவல்களின் படி ஜனாதிபதி ரணில் தலைமையிலான அரசு சமூக ஊடகங்களை கட்டிப் போட்டு மக்களுக்கு சம்பிரதாய அரச தனியர் ஊடகங்கள் மூலம் தமது செய்திகளை மட்டும்; சந்தைப்படுத்துகின்ற  ஒரு முயற்சியில் தற்போது இறங்கி இருக்கின்றது. இந்த அரசுக்கு எதிரான மக்களை அணிதிரட்டுவதில் இந்த சமூக ஊடகங்கள் பாரிய பங்களிப்பை செய்து வந்திருக்கின்றன. (குறிப்பாக அரகலையின் போது) அத்துடன் அவற்றை முன்னெடுத்து வருகின்றவர்கள் மீதும் அரசு அண்மைக்காலமாக கடும் போக்குடன் நடவடிக்கைகளில் இறங்கி இருப்பதுடன் அவற்றில் செல்பாட்டாளர்களையும் சிறைகளுக்குத் தள்ளி வருவதும் தெரிந்ததே.

சர்வதேசம் மக்களின் ஜனநாயக உரிமைகள் மதிக்கபட்ட வேண்டும் கருத்துச் சுதந்திரத்திற்கு கட்டுபாடுகள் இருக்கக் கூடாது என்று இலங்கை ஆட்சியாளர்களுக்கு அடிக்கடி எச்சரிக்கை கொடுத்துக் கொண்டிருந்தாலும் பதவியில் இருக்கின்ற ரணில் தலமையிலான மொட்டு அணியினர் சமூக ஊடகங்கள் மீது கட்டுமிராண்டித் தனமாக நடந்து கொள்வதில்தான் ஆர்வத்துடன் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

அரசு கனரக ஆயுதங்கள் முப்படை, விஷேட அதிரடிப்படை பொலிஸ் என்று வைத்திருந்தாலும் இந்த சமூக ஊடகங்கள் மீது மிகுந்த பயத்தில் இருக்கின்றது. அரசு மக்களுக்கு எதிராக இன்று மேற்கொள்ளும் அடக்குமுறை-வன்முறைகளுக்கு எதிராக சமூக ஊடகங்களே பாதுகாவலனாக செயலாற்றிக் கொண்டு வருகின்றது என்று சொன்னால் அது மிகையாகது. இதனால் அதன் முதுகெழும்பை முறித்துப் போட அரசு பல முயற்சிச்களை மேற்கொள்ள முனைகின்றது என்று தெரிய வருகின்றது.

நன்றி:0 2.10.2022 ஞாயிறு தினக்குரல்

 

Previous Story

ஆப்: குண்டு வெடிப்பு19 பேர் உடல் சிதறி பலி

Next Story

ஞானம் கர்ளாவி சவுதி!