ஹிஜாப் சர்ச்சை: இந்திய அரசியலமைப்பு என்ன சொல்கிறது?

-தில்நவாஸ் பாஷா-

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஒரு கல்லூரியில் தொடங்கிய இந்த சர்ச்சை தற்போது கர்நாடக உயர்நீதிமன்றம் வரை சென்றுள்ளது. ஒற்றை நீதிபதி அமர்வு விசாரித்த இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இடம்பெற்ற மூன்ற நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

மாணவர்களின் மனுக்களை தற்போது கர்நாடக தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ் தீட்சித் மற்றும் நீதிபதி ஜெயபுன்னிஸா மொகிஹூதீன் காஜி ஆகியோர் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை விசாரித்தது. அடுத்த விசாரணை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விஷயம் என்ன?

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு கல்லூரி மாணவிகளை ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2022 ஜனவரியில் தொடங்கிய இவர்களது போராட்டத்திற்கு ஆதரவு கிடைக்கத் தொடங்கியது. உள்ளூர் நிர்வாகமும், கல்லூரி நிர்வாகமும், மாணவிகளின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயன்றும் பலன் கிடைக்கவில்லை.

ஹிஜாப் அணிவதற்கான உரிமை தொடர்பாக மாணவிகள் உயர் நீதிமன்றத்தை அணுகிய நிலையில், தற்போது மூன்று நீதிபதிகள் அமர்வு வழக்கை விசாரித்து வருகிறது.

இதற்கிடையில், சில இந்துத்துவ குழுக்கள், இந்து மாணவர்களை காவி சால்வை மற்றும் மேல்துண்டு அணிந்து வருமாறு வலியுறுத்தின.

கர்நாடகாவில் மாணவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்துள்ளனர். ஒன்று ஹிஜாபை ஆதரிக்கிறது, மற்றொன்று அதை எதிர்க்கிறது.

இந்த விவகாரத்தில் அரசியலும் சேர்ந்து விட்டதால், நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஹிஜாப் தொடர்பான சர்ச்சைகள் எழுந்துள்ளன.

அரசியலமைப்பு என்ன சொல்கிறது?

அரசியலமைப்பு நிபுணரும் ,ஹைதராபாதில் உள்ள நல்சார் சட்டப்பல்கலைக்கழக (NALSAR) துணைவேந்தருமான ஃபைசான் முஸ்தபா, ஹிஜாப் பற்றிய சர்ச்சை, மதத்தை விட, தனிப்பட்ட உரிமையின் விஷயமாகும் என்று கூறுகிறார்.

“அரசியலமைப்பு குடிமக்களுக்கு சில தனிப்பட்ட உரிமைகளை வழங்குகிறது. இந்த தனிப்பட்ட உரிமைகளில் அந்தரங்க உரிமை, மத உரிமை, வாழ்வதற்கான உரிமை. சமத்துவத்திற்கான உரிமை அடங்கியுள்ளன. சமத்துவத்திற்கான உரிமையை விளக்கியுள்ள உச்சநீதிமன்றம், தன்னிச்சையாக செயல்படுவதற்கு எதிரான உரிமையும் இதில் அடங்கும் என்று கூறியுள்ளது. எந்தவொரு தன்னிச்சையான சட்டமும் அரசியலமைப்பின் 14வது பிரிவின் கீழ் சமத்துவத்திற்கான உரிமையை மீறுவதாகும்,”என்று ஃபைசான் முஸ்தஃபா கூறுகிறார்.

கல்வி அமைப்புகள் ஆடைக் கட்டுப்பாடு அல்லது சீருடையை நிர்ணயிக்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. “பள்ளிக்கு அதன் சொந்த ஆடையை நிர்ணயம் செய்யும் உரிமை உண்டு. ஆனால் அப்படி செய்யும்போது எந்த அடிப்படை உரிமையையும் மீற முடியாது,” என்கிறார் அவர்.

எனவே, சீருடை தொடர்பான விதிகளை எந்த கல்வி நிறுவனமும் உருவாக்கி, மாணவர்களைப் பின்பற்றும்படி கட்டாயப்படுத்த முடியுமா?

“கல்விச் சட்டத்தின் கீழ், சீருடைகளை நிர்ணயம் செய்ய கல்வி அமைப்பிற்கு உரிமை இல்லை. ஒரு அமைப்பு விதிகளை உருவாக்கினாலும், அந்த விதிகள் சட்டத்தின் எல்லைக்கு வெளியே இருக்க முடியாது” என்று அவர் விளக்குகிறார்.

அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மத சுதந்திரத்திற்கான உரிமை பற்றிய கேள்வியும் இங்கு உள்ளது.

அதன் வரம்பை விளக்கிய ஃபைசான் முஸ்தபா, “மத சுதந்திரத்திற்கான உரிமையின் அளவு என்னவென்றால், அது பொது நலன், ஒழுக்கம் மற்றும் ஆரோக்கியத்தின் அடிப்படையில் வரையறுக்கப்படலாம்.”என்று குறிப்பிட்டார்.

ஹிஜாப் அணிவது அத்தகைய வரம்பை மீறுகிறதா என்ற கேள்வி இப்போது எழுகிறது.

“ஒருவர் ஹிஜாப் அணிவது ஒழுக்கக்கேடான செயல் அல்ல. எந்த பொது நலனுக்கும் எதிரானது அல்ல. வேறு எந்த அடிப்படை உரிமை மீறலும் இல்லை என்பது தெளிவாகிறது,”என்று ஃபைசான் முஸ்தபா கூறுகிறார்.

இந்த சர்ச்சையில் நீதிமன்றத்தின் முன் உள்ள முக்கியமான பிரச்னை என்னவென்றால், ஒருபுறம் கல்வி அமைப்பின் சுதந்திரம் உள்ளது, மறுபுறம் தனிப்பட்ட சுதந்திரம் உள்ளது.

“எனவே நீதிமன்றம் ஒரு சீரான முடிவை எடுக்க வேண்டும். அதில் முகத்தை மறைக்கும் முழு ஹிஜாபை நாங்கள் அனுமதிக்க மாட்டோம், ஆனால் தலையை மறைக்க அல்லது ஸ்கார்ஃப் அணிவதை அனுமதிப்போம் என்று சொல்லலாம்,”என்றும் ஃபைசான் முஸ்தபா கூறுகிறார்.

இதற்கு முன்பும் ஏற்பட்ட சர்ச்சை

ஹிஜாப் தொடர்பான சர்ச்சைகள் இதற்கு முன்பும் நீதிமன்றத்தை எட்டியுள்ளன.

கேரளாவில் க்ரைஸ்ட் நகர் உயர்நிலை பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணிய பள்ளி விதித்த தடையை எதிர்த்து நீதிமன்றம் சென்றனர்.

2018ஆம் ஆண்டு தனது தீர்ப்பில், கேரள உயர் நீதிமன்ற நீதிபதி ஏ முகமது முஷ்டாக், அனைத்து மாணவர்களும் தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட சீருடைகளை அணிவதை உறுதிசெய்யும் ஒரு பள்ளியின் உரிமையைப் போலவே, மாணவிகள் அவர்கள் விரும்பியபடி ஆடை அணிவதற்கும் அதே அடிப்படை உரிமை உண்டு என்று கூறியிருந்தார்.

கர்நாடக ஹிஜாப் சர்ச்சையின் போது கேரள உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அதிகம் விவாதிக்கப்பட்டு வருவதாக ‘டெக்கன் ஹெரால்டு’ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

திடீரென சூழ்ந்த மாணவர்கள் – தைரியத்துக்காக அல்லாவை அழைத்தேன் – மாணவி முஸ்கான் பேட்டி

முழு கை சட்டை மற்றும் நகாப் அணிந்து பள்ளிக்கு வர தாங்கள் அனுமதிக்கப்படவில்லை என்று ஃபாத்திமா தஸ்னீம் மற்றும் ஹஃப்சா பர்வீன் அப்போது நீதிமன்றத்தில் தெரிவித்தனர். பள்ளியின் ஆடைக் கட்டுப்பாடுகளுக்கு எதிரானது இது என்று கூறி இந்த குற்றச்சாட்டுகளை பள்ளி நிர்வாகம் நிராகரித்தது.

“இந்த வழக்கில் முக்கிய நன்மை கல்வி அமைப்பின் நிர்வாகத்திற்கு செல்கிறது. நிர்வாகத்திற்கு அமைப்பை நடத்துவதிலும் நிர்வாகத்திலும் முழு சுதந்திரம் வழங்கப்படாவிட்டால், அது அவர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகும். அரசியலமைப்பு உரிமையின் நோக்கம், மற்றவர்களின் உரிமைகளை பறித்து ஒருவரின் உரிமையைப் பாதுகாப்பது அல்ல,” என்று நீதிபதி முஷ்டாக் தீர்ப்பளித்தார்.

அரசியலமைப்பானது முரண்பாடு அல்லது முன்னுரிமை இல்லாமல் அதன் கட்டமைப்பிற்குள் பல நலன்களை ஒருங்கிணைக்க விரும்புகிறது. இருப்பினும், நலன்கள் முன்னுரிமை பெறும் போது, தனிப்பட்ட நலன்களை விட பொது நலன்கள் கவனிக்கப்பட வேண்டும். இதுதான் சுதந்திரத்தின் சாராம்சம்.

“போட்டி உரிமைகளில் உள்ள மோதலை எந்தவொரு தனிமனித உரிமையையும் மீறுவதன் மூலம் அல்லாமல்,கல்வி நிறுவனத்திற்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவை பராமரித்து ஒரு பரந்த உரிமையைப் பேணுவதன் மூலம் தீர்க்க முடியும்,” என்று நீதிபதி குறிப்பிட்டார்.

உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை, நூற்றுக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் முஸ்லிம் கல்விச் சங்கம் (எம்இஎஸ்) உடனடியாக அமல்படுத்தியது.

கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கர்நாடக உயர் நீதிமன்றத்தை கட்டுப்படுத்தாது என்று அரசியலமைப்பு நிபுணர் ஃபைசான் முஸ்தபா கூறுகிறார்.

ஹிஜாப் குறித்து அதிகரிக்கும் சர்ச்சை

கர்நாடகாவின் உடுப்பியில் தொடங்கிய ஹிஜாப் குறித்த சர்ச்சை நாடு முழுவதும் பரவியுள்ளது. டெல்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் ஹிஜாபுக்கு ஆதரவாக புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

“ஹிஜாப் விவகாரம் பெரிய விஷயமாக மாறினால், அது மிகவும் வருந்த வேண்டிய விஷயம். ஏனென்றால் குழந்தைகளின் வேலை படிப்பதே தவிர, அரசியல் செய்வது அல்ல. ஹிஜாபை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் இரு குழுக்களின் வேலையும் படிப்பதுதான்,” என்று ஃபைசான் முஸ்தபா கூறினார்.

கர்நாடகாவின் மாண்டியாவில் இருந்து ஒரு வீடியோவும் வைரலாகி வருகிறது. அதில் இந்து மாணவர்கள் காவி மேல்துண்டு அணிந்து முஸ்லிம் மாணவிக்கு எதிராக முழக்கங்களை எழுப்புகிறார்கள். மாணவியும் அல்லாஹு அக்பர் என்று அவர்களுக்கு பதிலடி கொடுக்கிறார்.

முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் மூலம் தங்கள் அடையாளத்தை வலுப்படுத்த முயல்கிறார்களா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. ஆனால் இது அடையாளத்தை விட விருப்பம் சார்ந்தது என்று ஃபைசான் முஸ்தபா நம்புகிறார்.

“இது மத சுதந்திரத்தை விட தனிப்பட்ட சுதந்திரம். உடை என்பது ஒருவரின் சுயவெளிப்பாட்டின் ஒரு பகுதியாகும். இது ஒரு வகையான வெளிப்பாடு.”என்று அவர் கூறுகிறார்.

“ஷாஹீன் பாக் அல்லது ஹிஜாப் பிரச்சனை எதுவாக இருந்தாலும் சரி, முஸ்லிம் பெண்கள் தங்களின் அரசியலமைப்பு உரிமைகளை வலுவாக நிரூபிக்க முயன்றுள்ளனர்.”

ஹிஜாப் தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது . தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு செல்லமுடியும்.

இருப்பினும், இரு தரப்பினரும் நெகிழ்வுத்தன்மையைக் காட்ட வேண்டும் என்று ஃபைசான் முஸ்தபா நம்புகிறார்.

“இரு தரப்பும் சில விட்டுக்கொடுக்கல்களை செய்யவேண்டும் என்று நான் நினைக்கிறேன். நவீன முற்போக்கான சமூகத்தில், பழமைவாத அணுகுமுறையை கடைப்பிடிப்பது நல்ல விஷயம் அல்ல, “என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Previous Story

FIR

Next Story

வேப்பம் மரத்தை வெட்டி அகற்றிவிட்டு அரச மரத்தை வைத்துள்ள படையினர்