நீதிக்கான நம்பிக்கையை நசுக்கியுள்ள பா.ஜ., அரசு: பிரியங்கா

மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா ஜாமினில் வெளியேவந்ததை அடுத்து, ஆளும் கட்சியின் அதிகாரம் விவசாயிகளின் நீதிக்கான நம்பிக்கையை நசுக்கியுள்ளதாக காங்., பொதுச்செயலர் பிரியங்கா விமர்சித்துள்ளார்.

உத்தர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த அக்டோபர் மாதம் விவசாயிகள் பேரணியில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் கார் புகுந்தது விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கலவரம் வெடித்தது.

இதில் 8 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், ராம்பூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் காங்., பொதுச்செயலர் பிரியங்கா பேசியதாவது:

லக்கிம்பூர் வன்முறை வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவியில் இருந்து நீக்க மத்திய அரசு முன்வர மறுப்பது ஏன்?

இந்த தேசத்தின் மீது பிரதமருக்கு தார்மீக பொறுப்பு இல்லையா? பொறுப்பை நிறைவேற்றுவது அவரது கடமை இல்லையா? அதுதான் அனைத்து தர்மத்திற்கும் மேலானது. விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்த ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் கிடைத்துள்ளது.

இனி அவர் வெளிப்படையாக சுற்றுவார். இதில் அரசு யாரை காப்பற்றியுள்ளது, விவசாயிகளையா?. ஆளும் கட்சியின் அதிகாரம் விவசாயிகளின் நீதிக்கான நம்பிக்கையை நசுக்கியுள்ளது. நாடு முழுவதும் விவசாயிகள் வேதனையுடனும், கோபத்துடனும் இருக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

Previous Story

 சண்முகா விவகாரம் - மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பஹ்­மி­தாவுக்கு ஆதரவு

Next Story

லிபியா பிரதமரை கொல்ல முயற்சி