‘பர்தா’ விவகாரத்தால் கர்நாடகாவில் பதற்றம்!

பெங்களூரு :கர்நாடகாவில் முஸ்லிம் மாணவியர், கல்லுாரிக்கு ‘பர்தா’ அணிந்து வரும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பதற்றமான சூழல் நிலவுவதை அடுத்து, இரண்டு கல்லுாரிகள் நேற்று விடுமுறை அறிவித்தன.கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

இங்குள்ள உடுப்பி அரசு மகளிர் கல்லுாரியில், பர்தா அணிந்து வந்த ஆறு முஸ்லிம் மாணவியரை வகுப்பறைக்கு செல்ல கல்லுாரி நிர்வாகம் தடை விதித்தது. இதையடுத்து அந்த மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் கர்நாடகாவில் பல்வேறு மாவட்டங்களிலும் எதிரொலித்தது. முஸ்லிம் மாணவியர் பர்தா அணிந்து கல்லுாரிக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, ஹிந்து மாணவர்கள் காவி துண்டு அணிந்து கல்லுாரிக்கு வரத் துவங்கினர்.

மாணவர்களுக்கு ஆதரவாக, ஹிந்து மாணவியரும் காவி சால்வை அணிந்து வந்தனர். தலித் மாணவ – மாணவியர் நீல நிற துண்டை தோளில் அணிந்து வந்தனர். இது, கர்நாடகா கல்லுாரிகளில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உடுப்பி குந்தாப்பூரில் உள்ள அரசு கல்லுாரியை சேர்ந்த முஸ்லிம் மாணவியர் நேற்றும் பர்தா அணிந்து கல்லுாரிக்கு வந்தனர். இவர்களை உள்ளே அனுமதிக்க கல்லுாரி முதல்வர் மறுத்தார். அவர்கள் கல்லுாரி வாயிலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அந்த மாணவியர் கல்லுாரிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால், தனி வகுப்பறையில் அமர வைக்கப்பட்டனர். மேலும் இரண்டு கல்லுாரிகளில் இந்த விவகாரம் தொடர்பாக பதற்றம் ஏற்பட்டதை அடுத்து, கல்லுாரி நிர்வாகம் விடுமுறை அறிவித்தது. இந்நிலையில், பர்தா விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முஸ்லிம் மாணவியர் தாக்கல் செய்துள்ள மனு இன்று விசாரணை வருகிறது. விசாரணையில் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, டில்லியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:முஸ்லிம் மாணவியர் கல்லுாரிக்கு பர்தா அணிந்து வரும் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை அனைவரும் அமைதி காக்க வேண்டும்.நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மாநில அரசு நடவடிக்கை எடுக்கும். பள்ளி, கல்லுாரிகளில் எந்தவிதமான உடைகளை அணிய வேண்டும் என அரசியலமைப்பு அறிவுறுத்தி உள்ளது.

மாநில கல்வி சட்டத்திலும் இதுகுறித்து தெளிவான விதிமுறைகள் வகுக்கப்பட்டு .இது கர்நாடகாவில் நடக்கும் பிரச்னை மட்டுமல்ல; கேரளா, மஹாராஷ்டிராவிலும் இது போன்ற விவாதங்கள் எழுந்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.லோக்சபாவில் எதிரொலிபர்தா விவகாரம் நேற்று லோக்சபாவிலும் எதிரொலித்தது. இந்த பிரச்னையை கிளப்பிய காங்., உறுப்பினர் பிரதாபன், இந்த விஷயத்தில் மத்திய கல்வி அமைச்சர் தலையிட வேண்டும் என வலியுறுத்தினார்.

கர்நாடகாவின் உடுப்பி குந்தாபூர் அரசு கல்லுாரி வாயிலில் முஸ்லிம் மாணவியர் பர்தா அணிந்தும், ஹிந்து மாணவ – மாணவியர் காவி துண்டு அணிந்தும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவியது. அப்போது, கல்லுாரி அருகே பயங்கர ஆயுதங்களுடன் ஐந்து பேர் உலவுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், அப்துல் மஜீத், 32, ரஜாப், 41, ஆகியோரை கைது செய்தனர். போராட்டத்துக்குள் புகுந்து மத கலவரத்தை துாண்ட அவர்கள் திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. அவர்களுடன் இருந்த மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Previous Story

இலங்கை- தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் 14 ஆவது பொது பட்டமளிப்பு விழா ஆரம்பமாகியது

Next Story

'அல்லா ஹு அக்பர்''-மாணவி முஸ்கான்