கனடா பிரதமர் ரகசிய இடத்தில் 

ஒட்டாவா-கனடாவில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் போராட்டம் வலுவடைந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடும்பத்துடன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ரகசிய இடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

எதிர்ப்புவட அமெரிக்க நாடான கனடாவில், 30 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 33 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். இதற்கிடையே வைரஸ் பரவலை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.லாரி டிரைவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. லாரி டிரைவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை செலுத்தி இருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தாத டிரைவர்கள் தனிமை முகாமில் தங்க வைக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அங்கு சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு தற்போது கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுஉள்ளன.இந்த புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பதற்றம்தலைநகர் ஒட்டாவாவில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. பதாகைகளை ஏந்தியபடி பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

ஆயிரக்கணக்கான லாரிகளில் ஒட்டாவாவை நோக்கி டிரைவர்கள் படையெடுத்து வருகின்றனர்.இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒட்டாவாவில் உள்ள தன் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து, குடும்பத்துடன் பிரதமர் ட்ரூடோ வெளியேறிவிட்டதாகவும், அவர்கள் ரகசிய இடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று தகவல்கள் வெளியாகின. எனினும் அந்த இடம் குறித்த வேறு எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.நாட்டின் பிரதான பகுதிகளில் அதிக அளவிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால், பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Previous Story

டொலர்தான் 'கடவுளடா'

Next Story

இந்தியாவுடன் ஆழமான நட்பு: இஸ்ரேல் பிரதமர் பெருமிதம்