தற்கொலை: சாராவினால் பயிற்றப்பட்ட 16 பெண்கள்

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் கட்டுவாபிட்டி தேவாலயத்தில் குண்டை வெடிக்கச் செய்த மொஹம்மது ஹஸ்தூனின் மனைவியான தற்போதும் மர்மமாக உள்ள சாரா ஜெஸ்மின் அல்லது புலஸ்தினி மகேந்ரனின் கீழேயே, பெண்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டு இஸ்லாமிய தேசமொன்றுக்கான ‘பையத்’ செய்து கொள்ளப்பட்டுள்ளதாக சி.ரி.ஐ.டி எனும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் சாராவின் கீழ் பயிற்சி பெற்று, இஸ்லாமிய தேசம் ஒன்றை உருவாக்க பையத் எனும் உறுதி மொழியை 16 பெண்கள் எடுத்துக் கொண்டுள்ளதாகவும் அவர்களில் 6 பேர், 2019 ஏப்ரல் 26 சாய்ந்தமருது தற்கொலை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்துள்ளமை தெரிய வந்துள்ளதாகவும் சிரிஐ.டி கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகே முன்னிலையில் தாக்கல் செய்துள்ள அறிக்கைகளில் தெரிய வந்துள்ளது.

மீதாமக உள்ள 10 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகே முன்னிலையில் இரு வேறு சந்தர்ப்பங்களில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இஸ்லாமிய இராஜ்ஜியத்தை உருவாக்க பையத் செய்த, நுவரெலியா, காத்தான்குடி மற்றும் ஹம்பாந்தோட்டையில் பயிற்சி பெற்றதாக கூறப்படும் 25 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் 16 பேர் பெண்கள் என தெரியவந்துள்ளது. ஏனைய 9 பேரும் ஆண்களாவர்.

இந்நிலையில் ஏற்கனவே 6 பெண்களை நீதிமன்றில் ஆஜர் செய்து விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுத்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (19) நான்கு பெண்களையும் 4 ஆண்களையும் இது தொடர்பில் நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

ஆதம் லெப்பை மொஹம்மட் இர்பான்,

ரஹ்மதுல்லாஹ் பாத்திமா ஹுஸ்னா,

மொஹம்மட் காசிம் மதனியா,

மொஹம்மட் கலீல் பாத்திமா சஹீதா,

மொஹம்மட் இப்ராஹீம் பர்ளா,

மொஹம்மட் ரியால் மொஹம்மட் இஸ்மத்,

மொஹம்மட் அப்துல் காதர்,

மொஹம்மட் ஜவாஹிர்

ஆகியோரே நேற்று நீதிமன்றில் ஆஜர்செய்யப்ப்ட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களாவர்.

இவர்கள் அனைவரும்

ஹம்பாந்தோட்டை – சிப்பிக்குளம்,

நுவரெலியா – பிளக்வூட்,

காத்தான்குடி – கர்பலா

ஆகிய பகுதிகளில் ஆயுத பயிற்சிகளில் பங்கேற்று, இஸ்லாமிய இராஜ்ஜியத்தை ஏற்படுத்த உறுதி மொழி எடுத்தவர்கள் என விசாரணையாளர்கள் மன்றுக்கு அறிவித்துள்ளனர்.

இவர்கள் தொடர்பில் எடுக்கும் நடவடிக்கை தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள இதன்போது நீதிவான் விசாரணையாளர்களை அறிவுறுத்தியுள்ளார்.

Previous Story

செல்லப் பிராணியும்! செல்லப் பிள்ளையும்!

Next Story

11 பேரை கடத்திக் கொலை செய்த அட்மிரலுக்கு  5 நட்சத்திரங்கள்- பொன்சேகா தகவல்