எதிர்ப்புகளை மீறி பாக். உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் ஆயிஷா மாலிக்!

பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் நீதிபதியாக நியமனம் செய்யப்பட இருக்கிறார். ஏற்கெனவே பாகிஸ்தானின் லாகூர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருக்கும் ஆய்ஷா மாலிக் தற்போது அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்படவுள்ளார்.

அவரின் நியமனத்துக்கு பாகிஸ்தானின் சட்ட கமிஷன் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் பாகிஸ்தான் உருவானதிலிருந்து இதுவரை அந்நாட்டு உச்ச நீதிமன்றத்துக்கு பெண் நீதிபதி இருந்ததில்லை என்ற வரலாற்று முடிவுக்கு வரவுள்ளது.

யார் இந்த ஆயிஷா மாலிக்? – ஆயிஷா மாலிக் லாகூரில் உள்ள பாகிஸ்தான் சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டப் படிப்பும், ஹார்வர்டு சட்டப் பள்ளியில் தனது சட்டப் படிப்பையும் முடித்திருக்கிறார்.

2012-ல் லாகூர் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெறுவதற்கு முன், முன்னணி கார்ப்பரேட் மற்றும் வர்த்தக சட்ட நிறுவனத்தில் பங்காற்றிய அனுபவம் அவருக்கு இருக்கிறது. நீதிபதிகள் வட்டாரத்தில் மற்றவர்களை விட சொத்துக்களை வெளிப்படையாக வெளியிடுவது என நேர்மைக்கு பெயர் பெற்றவர் ஆயிஷா.

1997-ம் ஆண்டே நீதித்துறைக்குள் வந்துவிட்ட ஆயிஷா, ஆரம்பக்கட்டத்தில் தனது வழக்கறிஞர் வாழ்க்கையை கராச்சி பகுதியில் தொடங்கியுள்ளார். லாகூர் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற பிறகு பெண்கள் பாதுகாப்பு தொடர்பான செயல்களில் ஈடுபட்டுள்ளார். லாகூரில் உள்ள பெண் நீதிபதிகள் பாதுகாப்புக் குழுவின் தலைவராக இருக்கும் இவர், அரசு சாரா அமைப்பான தி இன்டர்நேஷனல் அசோசியேஷன் ஆஃப் வுமன் ஜட்ஜ்ஸ் என்ற அமைப்பிலும் அங்கம் வகித்து வருகிறார்.

ஆயிஷாவை பொறுத்தவரை, அவர் பெயர் கடந்த ஆண்டே பாகிஸ்தானின் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிசீலனை செய்யப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் அவரின் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, அது தாமதமானது. வழக்கறிஞர்கள் அவரின் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க சொன்ன காரணம் தான் சற்று விநோதமானது. பாகிஸ்தானின் 5 உயர் நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகளை விட ஆயிஷா மிகவும் வயது குறைந்தவர் என்பதால் அவரை நியமித்தால் போராட்டம் செய்வோம் என வழக்கறிஞர்கள் முட்டுக்கட்டை போட்டனர்.

இப்போதும் அவருக்கு எதிர்ப்புகள் இருக்கிறது. என்றாலும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குல்சார் அகமது தலைமையிலான பாகிஸ்தான் நீதித் துறை ஆணையம் நடத்திய வாக்கெடுப்பில் ஆயிஷாவுக்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்க, தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இந்தப் பரிந்துரையை எதிர்த்துள்ள பாகிஸ்தான் பார் கவுன்சில் (பிபிசி) ஆயிஷா மாலிக்கை அனுமதித்ததால் நீதிமன்றங்களைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

எதிர்ப்புகளை மீறி உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஆயிஷா மாலிக் நியமிக்கப்படும் பட்சத்தில் ஜூன் 2031 வரை உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றுவார். சுவாரஸ்யமாக, 2031-இல் 65 வயதில் ஓய்வு பெறும் போது ஆயிஷா மாலிக், பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருப்பார்.

Previous Story

ஏன் இந்த மௌனம்!

Next Story

சிங்களம் தமிழ் அவுட் சீனா ஏக அதிக்கம்!