ஹமாஸ் ராணுவத் தலைவர் கொல்லப்பட்டதை இஸ்ரேல் உறுதி செய்கிறது

ஹமாஸ் ராணுவத் தலைவர் கொல்லப்பட்டதை உறுதி செய்துள்ளதாக இஸ்ரேல் தரப்பு கூறியுள்ளது. கடந்த மாதம் காஸா பகுதியில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் ஹமாஸின் ராணுவத் தலைவர் முகமது டெய்ஃப் (Mohammed Deif) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜூலை 13 அன்று கான் யூனிஸ் பகுதியில் உள்ள ஒரு வளாகத்தில் நடந்த தாக்குதலில் டெய்ஃப் இலக்கு வைக்கப்பட்டார். ஆனால் அவரது மரணத்தை ஹமாஸ் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேலில் நடந்த தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டனர். இந்தக் கோர தாக்குதலைத் திட்டமிட்ட முக்கிய நபர்களில் டெய்ஃபும் ஒருவர் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Israel says Hamas commander Mohammed Deif killed in July air raid on Gaza

புதன்கிழமை, ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே இரானில் கொல்லப்பட்டார். அவரது மரணம் குறித்து இஸ்ரேல் நேரடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை.

ஹமாஸை ஒழிக்கும் முயற்சியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்

ஹமாஸ் ராணுவத் தலைவர் கொல்லப்பட்டதை உறுதி செய்த இஸ்ரேல் தரப்பு

அக்டோபர் தாக்குதலுக்குப் பிறகு காஸாவில் மிகப்பெரிய ராணுவ நடவடிக்கைகளை இஸ்ரேல் மேற்கொண்டது. ஹமாஸை அழிப்பதே நோக்கம் என்று கூறியது.

காஸா முனைப் பகுதியில் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுபடி, இதுவரை குறைந்தது 39,480 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

வியாழனன்று இஸ்ரேலிய ராணுவம் தனது அறிக்கையில், “உளவுத்துறையின் ஆய்வு நடவடிக்கையைத் தொடர்ந்து, ஜூலை 13இல் நடத்தப்பட்ட தாக்குதலில் முகமது டெய்ஃப் கொல்லப்பட்டார் என்பதை உறுதிப்படுத்த முடியும்” என்று குறிப்பிட்டுள்ளது.

காஸாவில் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைப்பின் அதிகாரிகள் அந்த நேரத்தில் விமானத் தாக்குதலில் 90க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகக் கூறினர், ஆனால் இறந்தவர்களில் டெய்ஃப் இல்லை என்று மறுத்தனர்.

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட், முகமது டெய்ஃப்பின் மரணம் ஹமாஸை ஒழிக்கும் முயற்சியில் “ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்” ஆகக் கருதப்படுவதாகக் கூறினார்.

“இந்த நடவடிக்கை ஹமாஸ் சிதைந்து கொண்டிருக்கிறது என்பதையும், ஹமாஸ் பயங்கரவாதிகள் விரைவில் சரணடையலாம் அல்லது அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்பதையும் பிரதிபலிக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

முகமது டெய்ஃப் யார்?

ஹமாஸ் ராணுவத் தலைவர் கொல்லப்பட்டதை உறுதி செய்த இஸ்ரேல் தரப்பு

ஹமாஸ் இயக்கத்தின் ராணுவப் பிரிவான இஸ்ஸெடின் அல்-கஸ்ஸாம் பிரிகேட்ஸின் (Izzedine al-Qassam Brigades) தலைவராக முகமது டெய்ஃப் இருந்தார்.

பல ஆண்டுகளாக அவர் இஸ்ரேலின் மிகவும் தேடப்படும் நபர்களில் ஒருவராக இருந்தார். மேலும் பல படுகொலை முயற்சிகளில் இருந்து தப்பினார், 2002இல் நடந்த தாக்குதலில் அவர் ஒரு கண்ணை இழந்தார்.

அவர் 1989இல் இஸ்ரேலிய அதிகாரிகளால் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் விடுவிக்கப்பட்டவுடன், இஸ்ரேலிய வீரர்களைக் கைப்பற்றும் நோக்கத்துடன் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவுகளுடன் தொடர்பு கொண்டார்.

கடந்த 1996இல் பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்களைக் கொன்ற பேருந்து குண்டுவெடிப்புகளைத் திட்டமிட்டு மேற்பார்வையிட்டதாக இஸ்ரேல் அவர் மீது குற்றம் சாட்டியது, மேலும் 1990களின் நடுப்பகுதியில் மூன்று இஸ்ரேலிய வீரர்களைச் சிறைபிடித்துக் கொன்றதில் அவருக்கு பங்கு இருந்ததாகக் கூறப்பட்டது.

ஹமாஸ் படையினர் காஸாவில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழைவதற்கு சுரங்கப் பாதைகளை அமைப்பதில் பொறியாளருக்கு அவர் உதவியதாகவும் கூறப்படுகிறது.

2002 இல், அவர் ஹமாஸின் ராணுவப் பிரிவின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

இஸ்ரேல் 2014 ஆம் ஆண்டில், காஸாவின் ஷேக் ரட்வான் சுற்றுப்புறத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி டெய்ஃபை கொல்ல முயற்சித்தது, ஆனால் அப்போது டெய்ப்பின் மனைவி விடாத் மற்றும் அவரது பச்சிளம் ஆண் குழந்தை ஆகியோர் கொல்லப்பட்டனர்.

டெய்ஃபையும் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் நினைத்தது, ஆனால் அந்த சமயத்தில் அவர் அந்த கட்டிடத்தில் இல்லை.

ஹெஸ்பொலா தளபதி கொலை

தற்போதைய மோதலின்போது, காஸாவில் உள்ள நிலத்தடி சுரங்கங்களுக்குள் இருந்து ஹமாஸின் ராணுவ நடவடிக்கைகளை டெய்ஃப் வழிநடத்தி இயக்கியதாக நம்பப்படுகிறது.

ஒரு மிகப்பெரிய போர் மூளும் என்ற அச்சத்தைத் தூண்டிய இஸ்ரேல்-காஸா மோதலில் ஒரு கொந்தளிப்பான வாரத்தின் முடிவில் டெய்ஃபின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சனிக்கிழமையன்று, இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட கோலான் குன்று பகுதியில் கால்பந்து மைதானத்தில் நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் 12 இஸ்ரேலிய சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஹெஸ்பொலா அமைப்பு மீது இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

லெபனானை தளமாகக் கொண்ட ஹெஸ்பொலாவை குற்றம் சாட்டிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு “பெரிய விலை” கொடுக்க நேரிடும் என்று எச்சரித்தார்.

செவ்வாயன்று, பெய்ரூட்டில் வான்வழித் தாக்குதல் நடத்தி இஸ்ரேல் பதிலடி கொடுத்தது, இதில் மூத்த ஹெஸ்பொலா தளபதி ஃபுவாட் ஷுக்ர் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே இரானின் தலைநகரான தெஹ்ரானுக்கு பயணம் செய்தபோது அவர் தங்கியிருந்த கட்டடத்தின் மீது நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

Previous Story

ஞானி முட்டாளான கதை

Next Story

தினேஷ் குணவர்தன ரணில் விக்ரமசிங்கவிற்கு